Sri Lanka

அவர்களது கணவன்மார் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். யாழின் பெண்கள் தங்களது குடும்பங்களுக்காக மீனவர்களாக மாறுகின்றார்கள்.

இலங்கையின் அநேக பாகங்களில், பெண்கள் தாம் வாழ்வதற்காக மீன் பிடிப்பதில்லை. ஆனால் அநேக ஆண்கள் மரித்து, காயப்பட்டு அல்லது உள்நாட்டு போரில் காணாமல் போன யாழில், இராசதுரை சரோஜாதேவி தனது மீன் பிடிக்கும் திறமைகளை பாவித்து, மீன் பிடிப்பதின் மூலமாக குடும்பத்தை தாங்கும் 20 பெண்கள் கொண்ட குழுவை தலைமை தாங்கி நடாத்தி வருகின்றார். மழை கூட தங்களுக்கு ஒத்துழைப்பு தராத வேளையில், இந்த உள்ளூர் பெண்கள் தமது குடும்பங்களுக்காக வருவாய் ஈட்டுவதில் தலைமை தாங்குகின்றார்கள்.

Read this story in

Publication Date

Their Husbands Casualties of War, Jaffna Women Fish for Their Families

பாஷ்னா அலிஸ்டன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

எவ்வித கருவிகளுமில்லாமல் தனது கைகள் மற்றும் மீன் கூடையுடன் மாணிக்கம் பூலட்சுமி தண்ணீரில் சிரமத்துடன் நடந்து மீன் மற்றும் நண்டு பிடிப்பதற்காக தயாராகின்றார்.

Publication Date

யாழ்ப்பாணம், இலங்கை – இராசதுரை சரோஜாதேவி, அதி காலையில், சூரியன் உதிக்கும் முன்னர், மிகக் கவனமாக சத்தமேதும் எழுப்பாது, நித்திரை கொள்ளும் தனது இரு பிள்ளைகளும் விழித்தெழமல் இருப்பதற்காக, ஒரு நிழல் போன்று தன் வீட்டிற்குள் செயற்படுகின்றார்.

தான் வேலைக்கு செல்வதற்கு முன்னர் தனது பிள்ளைகளோடு நேரம் செலவிட இயலாது, விரைவாக உணவுகளை தயார் செய்த பின்னர், அவசரமாக தனது தொழிலுக்காக வீட்டை விட்டு வெளியேறுகின்றார் – தொழில்– 33 வருடங்களாக அவர் செய்துவரும் கடினமான தொழில்.

சரோஜாதேவி, பொன்னாலை கிராமத்தை சேர்ந்த இன்னும் 20 பெண்களோடு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இங்கு வழக்கமாக ஆண்கள் மாத்திரம் ஈடுபடும் தொழிலில் சரோஜாதேவியும் அவருடன் இணைந்தவர்களும் தமது மீன்பிடிப்பில் தமது குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் சந்திக்க போதுமான அளவு சம்பாதிக்கின்றார்கள். அவர்களின் வருமானம் அவர்களின் தொழிலை இலகுவாக்கக் கூடிய, விலை உயர்ந்த மீன்பிடி உபகரணங்களை வாங்க போதுமானதாக இல்லை.

மீன்களை தமது வெறுங்கைகளினால் பிடிக்கின்றார்கள்.

‘சில வேளைகளில், மழைக்காலங்களில் கழுத்தளவு நீரில் நின்று மீன் பிடிக்கும் நேரங்களும் உள்ளன’ என சரோஜாதேவி கூறுகின்றார்.

அது மாத்திரமல்ல அவர்கள் சந்திக்கும் சவால்.

கவ்வாட்டி என்பது கடலின் கீழ் வளரும் பாறைகளில் ஒரு வகையாகும்.

expand image
expand slideshow

பாஷ்னா அலிஸ்டன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

இலங்கையில், பொதுவாக உள்ளூர் பெண்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதில்லை. போரில் கணவனை இழந்த பல பெண்களுக்கு, வெறும் கைகளினால் நண்டை பிடிப்பது இலாபகரமான முயற்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘வாளைப் போன்று கூரானது. அதை நாங்கள் மிதித்தால் அது காலை ஆழமாக கிழித்து விடும். உயிர் போவது போன்று வலிக்கும்’ என சரோஜாதேவி கூறுகின்றார். ‘நாங்கள் ஆஸ்பத்திரிக்கு போவதில்லை. வீட்டுக்கு வந்த பின்னர் செத்தல் மிளகாயை அரைத்து காயத்தில் பூசி தையல் ஊசியால் தைப்போம்.’

நண்டு கடித்தாலும் அதே முறைதான். பெண்கள் தமது தொழிலின் போது ஏற்படும் காயங்கள் நிமித்தமாக வைத்தியசாலைக்கு சென்றால் அவர்களுக்கு பல நாட்கள் அங்கு தங்க வேண்டி நேரிடும். அது அவர்களின் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அற்று போகச் செய்துவிடும்.

‘அதனால், எங்களுக்கு நாங்களே சிகிச்சை செய்து கொள்கிறோம்’ என சரோஜாதேவி கூறுகின்றார்.

வராலற்றின்படி, பெண்கள் இத் தொழிலில் ஈடுபடுவது வழக்கத்திற்கு மாறானது. நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தொழில் சார்ந்த ரீதியில் மீன் பிடிக்கும் தொழிலில் பெண்கள் ஈடுபடுவதில்லை. எனினும், இலங்கையின் இப்பாகத்தில் அநேக பெண்கள் தமது ஆண் துணை காணாமலாக்கபட்டதனால், போரில் காயப்பட்டதனால் அல்லது இறந்து போனதால் தமது குடும்பங்களுக்காக வருவாய் ஈட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சரோஜாதேவி, ஒரு தொழில் முனைவோர் தலைவராக அவரது சமுதாயத்தில் மற்ற பெண்களுக்கு மத்தியில் உருவாகியுள்ளார்.

இத் தொழில் எனது இரத்தத்தில் ஊறியது, எனது தாயாரும் மீன் பிடித்தார் என சரோஜாதேவி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ‘எனது தந்தை சுகவீனமாக இருந்தார். அவரது வருமானம் போதுமானதாக இல்லாதபடியினால் எனது தாயார் மீன் பிடிக்க சென்றார்’. எனது படிப்பை 12 வயதில் நிறுத்தி விட்டு நான் எனது தாயாருடன் சென்றென்’.

expand image
expand slideshow

பாஷ்னா அலிஸ்டன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

நவம்பரில் எதிர்பார்த்திருந்த மழை வராத வேளையில், பெண்கள், இராசதுரை சரோஜாதேவி போன்றவர்கள் தமது மீன்பிடி தூண்டில்களை ஒரு புறமாக வைத்துவிட்டு உள்ளூர் வீடுகளில் சமைப்பதிலும் சுத்தப்படுத்துவதிலும் தங்களை ஈடுபடுத்தியுள்ளார்கள்.

சில வாரங்களுக்கு முன்னரைப் போன்று, காலநிலை ஒத்துழைக்காது மழை பெய்யும் வேளைகளில், மீன் பிடித்தலும் சாத்தியமாகாத தருணங்களில், இப் பெண்கள் தம்மை தாங்கக் கூடிய வேறு தொழில்களை தேடிக் கொள்வார்கள். 26 வருட கால உள்நாட்டு போரின் நிறைவுக்கு பின்னர், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கத்தின் 2016ம் ஆண்டின் தகவல்களின்படி, யாழ் மாவட்டத்தில் 21 சதவீதம் குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்குபவையாக அமைந்துள்ளன.

எனது கதை இங்குள்ள அநேக பெண்களின் கடந்த காலத்தை நினைவூட்டும் கதையாக உள்ளது என சரோஜாதேவி கூறுகின்றார். 1985ம் வருடம் எனது காலை தேநீரை அருந்தும் வேளையில் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது. எனது கணவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காலில் குண்டடிபட்டார். அக் காயம் தற்போதும் அவரது வேலை செய்யும் திறனை பாதிக்கின்றது.

அவரது கணவர் மீனவராக தொழில் புரியும் வேளையில், ஒரு நாளைக்கு இலங்கை ரூபாய் 1,500 முதல் 2,000 வரை சம்பாதித்தார். (அமெரிக்க டொலர் 8 முதல் 11 வரை). அவர் காயத்திற்கு உள்ளாகிய பின்னர், பணம் சம்பாதிப்பதற்காக குடும்பம் போராடியது.

‘எமக்கு ஒரு வேளை உணவு கூட இருக்கவில்லை’ என சரோஜாதேவி கூறினார். ‘எனது இரு பிள்ளைகளுடன் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.’

அதனால் அவர் ஏற்கனவே தான் அறிந்த தொழிலை முன்னெடுத்து, கடந்த 33 வருடங்களாக மீன் பிடித்து வருவாய் ஈட்டுகின்றார்.

ஆனால், பருவகாலங்களில் நீர் மட்டத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும் வேளைகளில், தனது வருவாயில் பாதிப்பு ஏற்படுவதாக அவர் கூறினார்.

expand image
expand slideshow

பாஷ்னா அலிஸ்டன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சிறிய மற்றும் பெரிய நண்டுகள், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏராளமாக கிடைப்பதினால் உள்ளூரை சேர்ந்த மீன்பிடிக்கும் பெண்கள், நாளாந்தம் குறைந்தது அமெரிக்க டொலர் 9ஐ சம்பாதிக்க கூடியதாக உள்ளது.

கோடை காலங்களில் நீர் மட்டம் குறைவாக உள்ளபோது, சொற்ப மீன்களே உள்ளன, அதனால் வருவாயும் குறைகின்றது. அவ் வேளைகளில் நானும் மற்ற பெண்களும் ஒரு நாளைக்கு ரூபாய் 200 முதல் 500 வரை (அமெரிக்க டொலர் 1.17 முதல் 2.92 வரை) மாத்திரமே சம்பாதிப்போம். ஆனால் நவம்பர் மாதத்தில், நீரின் மட்டம் அதிகரிக்கும் வேளையில், அதிக மதிப்புள்ள நண்டு போன்றவைகள் பிடிபடும். வருடத்தின் இக்காலப் பகுதியில் நாளாந்த வருவாய், ரூபாய் 1,500ஐ (அமெரிக்க டொலர் 9) விட அதிகரிக்கும்.

அவர்கள் தாம் பிடித்த மீன்களை ஏலத்திற்காக சந்தைக்கு எடுத்து செல்வார்கள். அதை தரகர்கள் கொள்வனவு செய்வார்கள். சிலவேளைகளில், மீன்கள் விலை போகாதவிடத்தில், அவற்றை வீடு வீடாக சென்று விற்பார்கள்.

சரோஜாதேவியுடன் இணைந்து மீன் பிடிக்கும் பொன்னாலையை சேர்ந்த சின்னத்தம்பி நீலாட்சி, பெண்கள் ஆண்களைவிட வெவ்வெறு உத்திகளை பிரயோகிப்பார்கள் என கூறினார். சில வேளைகளில் நிலைமைகள் கடினமாயிருக்கும். அப்போது இரு பெண்கள் வலையை இரு புறம் பிடித்துக் கொண்டு நிற்க்கும் போது, மற்ற பெண்கள் தண்ணீரை தமது கைகளினால் கலக்கி மீன்களை வலைக்குள் அனுப்பி ஒரு குழுவாக மீன் பிடிப்பார்கள்.

‘அவற்றை எமது வெறுங் கைகளினால் பிடித்து எமது இடுப்பில் கட்டியுள்ள கூடைக்குள் போடுவோம் என அவர் கூறுகின்றார். ‘ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அளவு மீனை அவரவர் எடுத்த பிறகு மிகுதியை நாம் விற்ப்போம். சரோஜாதேவி பணத்தை எமக்கு சமமாக பங்கிடுவார்.’

தனது கணவர் இறந்த பிறகு எவ்வாறு தனது குடும்பத்தை நடாத்தி செல்வதென தான் கலக்கமடைந்திருந்ததாக நீலாட்சி கூறினார்.

‘மீன் பிடித்தொழிலில் சரோஜாதேவியின் முயற்சிகள் எனக்கு ஊக்கமளித்தன,’ என அவர் கூறினார்.

இக் கட்டுரையை, தமிழில் மொழி பெயர்த்தவர், ஜொசப்பின் அந்தனி, ஜிபிஜே