SPECIAL REPORT

சட்டவிரோத இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான போராட்டத்தை குறைக்கும் இலங்கை அரசியல் நெருக்கடி

அத்துமீறி நுழையும் இந்திய இழுவை படகுகள் தங்களுடைய மீன்பிடி உபகரணங்களை அழித்துள்ளதுடன் மீனவத் தொழிலில் இருந்து கிட்டத்தட்ட தம்மை வெளியேற்றியுள்ளதாக இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர். ஆனால் கொழும்பில் குழப்பம் நிலவி வருவதால், அரசாங்கம் தனது சட்ட அமுலாக்கத்தை அதிகரிககுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Read this story in

Publication Date

Publication Date

பருத்தித்துறை, இலங்கை — காலைச் சூரியனின் கதிர்கள் கடலில் பட்டுச் சிதறும் வேளையில், அமிர்தநாதன் ரெஜிராஜ் தனது சிறிய படகில் தரையிறங்கி ஒரு கூடையில் பிடித்த மீன்களை நிரப்புகிறார். அவர் தனது 40 வருடங்களில் பாதியில் இந்தக் காட்சியை திரும்பத் திரும்பச் செய்திருக்கிறார். ஆனால் மீன்பிடிக்கும் கடைசி நாள் நெருங்கிவிடுமா என்று அவர் யோசிக்காமல் கடந்த ஆண்டில் ஒரு நாள் கூடக் கழிந்ததில்லை.

“ஒரு போதும் அந்த நிலைய வார்த்தையால சொல்ல முடியாது,” என்று அவர் தனது கவலையைத் தூண்டிய நிகழ்வைப் பற்றி கூறுகிறார். “அந்த நேரம் என்ட வாழ்க்கையே முடிஞ்சு போன போல இருந்தது.’

ஓராண்டுக்கு முன், முன்னைய தினத்தின் இரவில் திருக்கை மீன் பிடிக்க தான் போட்ட வலைகளை எடுக்க சென்றதாக அமிர்தநாதன் கூறினார். சுமார் 300,000 இலங்கை ரூபாய் ($838) மதிப்பிலான அவரது வலைகளில் பாதியளவு சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது இந்திய மீன்பிடி படகுகள் மூலம் சேதமடைந்திருக்கலாம் என அவர் சந்தேகிக்கிறார். அவர் தனது உபகரணங்களை இழந்ததால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு சராசரியாக 120,000 ரூபாயாக ($335) இருந்த அவரது மாத வருமானம், அடுத்த மாதம் 30,000 ரூபாயாக ($84) குறைந்துவிட்டதாகவும், அதிலிருந்து குறைவாகவே இருக்கின்றதாகவும் அமிர்தநாதன் கூறுகிறார்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்து உள்ளூர் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தும் முறைகளை இந்திய சகாக்கள் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தும் மீன்பிடியை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வட இலங்கை குடும்பங்கள், இந்திய சகாக்களால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைக்க போராடி வருவதாகவும் கூறுகின்றனர். பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தும் இலங்கை மீனவர்கள், இந்தியர்கள் அடிமட்ட இழுவை மீன்பிடி முறையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இம்முறையானது மீன் வளத்தை குறைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

நாடளாவிய ரீதியிலான எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ள இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது மீன்பிடித் துறையில் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. படகுகளுக்கு எரிபொருள் கிடைக்காததால் பல மீனவர்கள் தொழிலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். ஜூலை 9 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்திய பின்னர் நாட்டின் நெருக்கடி நீடிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. அவர் ஜூலை 14 அன்று ராஜினாமா செய்தார். ராஜபக்சவுடன் தானும் ராஜினாமா செய்வதாக உறுதியளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வரை இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இது ஒரு புதிய எதிர்ப்பு அலையைத் தூண்டியதால், அவசரகால நிலையை அறிவிக்க அவர் தள்ளப்பட்டார். ஆனால் ஜூலை 20 அன்று, அவர் நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள 50,310 குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக கடல் மீன்பிடி உள்ளது, மேலும் இப்பகுதியில் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியுள்ளனர் என்று மீன்பிடி அமைச்சகத்தின் 2020 அறிக்கை தெரிவிக்கிறது.

2021 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் ருஹுன பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில், இந்திய மீனவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதாக அறிக்கை ஒன்றை மேற்கோளிட்டுள்ளது. இந்திய மீனவர்கள் வருடாந்தம் 1 ட்ரில்லியன் ரூபாய் (சுமார் 2.8 பில்லியன் டாலர்) பெறுமதியான கடல் வளங்களை கொள்ளையடிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றஞ்சாட்டுகிறார்.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

இலங்கையின் பருத்தித்துறையில் தனது மீன்பிடிப்புடன் கடலில் இருந்து திரும்பிய அமிர்தநாதன் ரெஜிராஜ். இந்திய இழுவைப் படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தனது வலைகளை சேதப்படுத்தியதாகக் கூறும் அமிர்தநாதன் திருக்கை மீன்பிடிப்பதைக் கைவிட்டார்.

‘பாரம்பரிய முறையில் மீன்பிடியில் ஈடுபடும் எமது மீனவர்களைப் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாக்கிறது,’ என்று அன்னலிங்கம் கூறுகிறார். ”இலங்கை கடல் வளத்தை அழிக்கும் அத்துமீறிய இந்திய மற்றும் உள்ளூர் இழுவை மடி தொழிலுக்கு எதிராக உள்ளூர் மீனவர்களின் போராட்டம் தொடரும்.”

இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்கு நீரிணை அத்துமீறி அளவுக்கதிகமாக மீன் பிடிப்பதால் சில இடம்பெயர முடியாத மீன் இனங்கள் அழிந்துவிட்டதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன் கூறுகிறார். மீன்களின் இனப்பெருக்கத்திற்குதவும் பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் ஆகியவற்றை ரோலர் அல்லது இழுவை மடி மீன்பிடி முறையால் அழிக்கப்பட்டுள்ளன, என அருளானந்தன் கூறுகிறார்.

“இலங்கை இந்திய சூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து இம்முறை மூலம் தொடர்ச்சியாக மீன் பிடிக்கப்பட்டு வந்தால் கடல்வளம் எப்படிப் பாதிக்கப்படும் என்பது தொடர்பில் தரவுகளைப் பரிமாறி ஒரு தீர்வுக்கு வருவது சிறப்பாக இருக்கும்” என்று அருளானந்தன் கூறுகிறார்.

ரோலர் முறை, இழுவை மடிப்பு அல்லது கீழே இழுத்தல் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு வலையின் இரு முனைகளிலும் இரும்புச் சங்கிலி அல்லது கம்பியை இணைத்து கடல் தரையில் வலை மூழ்க விடப்படும். ஒரு இழுவைப் படகு இந்த மீன் பிடிக்க வலையை இழுக்கிறது. இந்தியாவில் இழுவை மீன்பிடித்தல் சட்டபூர்வமானது, ஆனால் கடல் சுற்றுச்சூழலுக்கு இது அழிவுகரமானது என்று ஆய்வுகள் கண்டறிந்ததால், 2017 இல் இலங்கை அதை தடை செய்ததாக அருளானந்தன் கூறுகிறார். ஆனால் இலங்கை அரசாங்கம் உள்ளூர் மீனவர்கள் பாரம்பரிய முறைகளுக்கு மாறுவதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்குவதற்காக தடையை அமுலாக்குவதை நிறுத்தி வைத்துள்ளது என்று அவர் கூறுகிறார். ஒரு சில கடற்பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க பயன்படுத்தும் இந்த முறைக்கு இலங்கையின் மீனவர்கள் அனுமதி பெற வேண்டும்.

பாரம்பரிய மீன்பிடி பல்வேறு வலைகள் மற்றும் தூண்டில்களைப் பயன்படுத்துவதுடன் எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த வகையான மீன்கள் கிடைக்கின்றன என்பதைக் கண்டறியும் உபகரணங்களையும் பயன்படுத்துகின்றன. இம்முறையானது மீன்பிடித் தளங்களைத் தவிர்ந்த மற்றைய பகுதிகளில் மீன்கள் இனப்பெருக மற்றும் செழித்து வளர அனுமதிக்கிறது. கடல் உயிரியல் சமநிலை பாதிக்கப்படாது.

இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளின் கடல் தொழிலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய கூட்டுக்குழுவை அமைப்பது குறித்து இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கிறார். ஆனால், கடல் எல்லையைத் தாண்டி, உபகரணங்களை அழிக்கும் இந்திய மீனவர்களைக் கைது செய்ய, இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து கடல் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறுகிறார்.

“எங்கள் கடற்பரப்புக்குள் அவர்கள் எல்லை தாண்டி நுழைந்தால் நாம் அவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.

ஆனால் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைப் பார்க்கும்போது, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றும் அளவுக்கு டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ராஜபக்சவின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்றார். காபந்து அரசாங்கம் அமைந்தவுடன் பதவி விலகுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தனது நாட்டு மீனவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால் பெப்ரவரியில், இந்திய மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் வெளியிட்ட அறிக்கையில் 2021ல் இலங்கை கடற்படையினர் 159 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளதாகவும், 2020ல் வெறும் 74 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். 2010 மற்றும் 2021 க்கு இடையிலான காலப்பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

நாகராசா வர்ணகுலசிங்கம், மத்தியில், அவரது இரண்டு குழந்தைகளான வர்ணகுலசிங்கம் ஹரிகரன், 14, இடதுபுறம், மற்றும் வர்ணகுலசிங்கம் கரிகாலன், இலங்கை ஆகியோர் அரசடி தொண்டைமானாறு பகுதியில் மீன்பிடிக்கத் தயாராகிறார்கள். அவருக்கு 11 வயதாக இருந்தபோது, 60 வயதான நாகராசா தனது தந்தையுடன் கடலுக்குச் செல்லத் தொடங்கினார், ஆனால் இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையால் தனது குடும்பத்தில் தலைமுறைகளாக இருந்து வரும் வணிகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று அஞ்சுகிறார்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் என்று கேட்டுள்ளதாக தமிழ்நாடு இயந்திரமயமாக்கப்பட்ட மீனவர் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகிறார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள கடல் பகுதி மிகவும் குறுகியதாக உள்ளதாகவும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் பிரச்சனை அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்.

“இந்த இழுவை மடி வலைகளுக்கு நான் மிகப்பெரிய எதிரி,” என்று அவர் கூறுகிறார்.

பரம்பரை பரம்பரையாக மீனவத்தொழிலில் ஈடுபட்டு வரும் இலங்கை மீனவர்கள், தற்போது மீன்பிடித் தொழிலைத் தொடர முடியாது எனத் தெரிவிக்கின்றனர். நாகராசா வர்ணகுலசிங்கம் தனது 11ஆவது வயதில் 49 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் கடலுக்குச் செல்லத் தொடங்கினார். தடை செய்யப்பட்ட மீன்பிடி நடைமுறைகளை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவராமை கவலையளிப்பதாக அவர் கூறுகிறார்.

“எமது அடுத்த தலைமுறை இந்த தொழிலை செய்ய முடியாது,” என்கிறார் நாகராசா.

தன்னுடன் மீன்பிடிக்கும் மூத்த மகன், கூலி வேலை கிடைக்குமா என்று யோசித்ததாக அவர் கூறுகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது இளைய மகன், அவர் படிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டார், அதனால் அவர் “எங்களப் போல கஸ்டப்பட கூடாது.” இந்திய மற்றும் இலங்கை இழுவை படகுகள் வளங்களை குறைப்பதாக குற்றம் சாட்டும் நாகராசா, இழுவைக்கு முழு தடை விதிப்பதற்குப் பதிலாக அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு அரசாங்கத்தை கோருகிறார்.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

நாகராசா வர்ணகுலசிங்கம் இலங்கையின் அரசடி தொண்டைமானாறு பகுதியில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு கொள்கலன்களை ஏற்றிச் செல்கிறார்.

இழுவைப் படகுத் தொழில் கடல் வளத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஒப்புக்கொள்ளும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவன விஞ்ஞானி அருளானந்தன் இந்திய மற்றும் இலங்கை இழுவைப் படகுகளை ஒப்பிடுவது நியாயமில்லை என்கிறார்.

“இந்திய மீனவர்கள் ஆறு சிலிண்டர் இழுவை படகுகளை பாரிய பலத்துடன் பயன்படுத்துகின்றனர், இலங்கை மீனவர்கள் இரண்டு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர்,” என்று அவர் கூறுகிறார்.

இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் வலைகளில் மிகச்சிறிய துளைகள் இருப்பதாகவும், அவை கண்மூடித்தனமாக அனைத்து மீன்களையும் பிடிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இழுவை படகுகள் அமிர்தநாதனின் வலைகளை அழித்ததால், அவர் பிழைப்புக்காக தூண்டில் மீன் பிடிக்க மாற வேண்டியிருந்தது என்கிறார். தூண்டில் மீன்பிடிக்க கடலில் இரவில் வலைகளை விட்டுவைக்க வேண்டிய அவசியமில்லை. மீனவர்கள் படகில் தங்கி, மீன்களுக்காகக் காத்திருந்து, முடிந்ததும் வலைகளுடன் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர் ஒவ்வொரு முறை கடலுக்குச் செல்லும்போதும் 10,000 முதல் 15,000 ரூபாய் ($28-$42) வரை தூண்டில் வாங்க வேண்டியிருப்பதால் இந்த முறைக்கான செலவு அதிகம். கடல் வளம் அழிந்துவிட்டதால், 10 ஆண்டுகளுக்கு கடலிலிருந்து 12.5 கிலோமீட்டர் தூரத்தில் முன்பு பிடிபட்ட அதே அளவு மீன்களைப் பிடிக்க இப்போது கரையிலிருந்து 25 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது என்கிறார் அமிர்தநாதன். தன் தொழிலில் தொடர்ச்சியாகப் பிழைக்க முடியாவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை, என்கிறார் அவர்.

“நான் ஏற்கனவே எனது எல்லா சேமிப்பையும் பயன்படுத்தினேன்,” என்று அவர் கூறுகிறார். “அத்துடன் மறுபடியும் தொடங்குவதற்கு என் மனைவியின் நகைகளை அடகு வைத்துள்ளேன்”

தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்புக் குறிப்பு

லோஹித் குமார், ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை தமிழிலிருந்து மொழிபெயர்த்தார்.

Related Stories