Sri Lanka

சிறு வணிகங்கள், பெரிய விற்பனை: இலங்கையின் எழுச்சியூட்டும் கலை மற்றும் கைவினையின் புத்தெழுச்சி

பெருந்தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவை கைவினைத் தொழிலை நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது. இப்போது, பல பெண்களின் கண்கள் விரிவடைகின்றன.

Read this story in

Publication Date

Small Businesses, Big Sales: Sri Lanka’s Inspiring Arts and Crafts Resurgence

தயாழினி இந்திரகுலராசா

“யாழ்ப்பாணத்தில் ஒரு கண்காட்சியில் விற்பனை செய்வதற்காக சோபனா நிஷாந்தன் மற்றும் அவரது சகபாடிகள் கைவினைப் பொருட்களை நெய்கின்றனர்.” 2023 இல் அவர்களின் கைவினைப் பொருட்களுக்கான தேவை அதிகரித்தது.

Publication Date

கன்னாட்டி, இலங்கை — நான்கு பெண்கள் வட்டமாக தரையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் கைகள் உலர்ந்த வாழை நார்களை வேகமாக பின்னுகின்றன. இடையில் முடிக்கப்பட்ட பொருட்களின் ஒரு சிறிய குவியல்: பாய்கள், செருப்புகள் மற்றும் கூடைகள். சோபனா நிஷாந்தனை மக்கள் ஒர்டருக்காக அழைக்கும் போதோ அல்லது கைவினைக் கண்காட்சிகளில் பங்கேற்பதற்காக அழைக்கும் போதோ அவரது தொலைபேசியால் தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது. ‘ஒக்டோபர் மட்டுமே 6 கண்காட்சிகளில் பங்குபற்றியுள்ளேன். நவம்பரில் 6 கண் காட்சிகள் உள்ளன. என்னால் எல்லாவற்றுக்கும் போக முடியாது. அதிகளவு பொருள்களை உற்பத்தி செய்ய நேரம் காணாது. அதோட மழை காரணமா மூலப்பொருள் பெற்றுக் கொள்வது கடினம்’

நிஷாந்தன் ஒரு கைவினைப்பொருள் உற்பத்தியாளர் ஆவார். அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த 10 பெண்களுடன் மேசை விரிப்பு கூடைகள், பைகள் மற்றும் பிற அலங்காரங்கள் மற்றும் வீட்டுப் பொருட்களைத் தயாரிக்கிறார். வாழைத்தண்டுகளிலிருந்து நார்களை பிரித்தெடுக்க அவர்கள் பயன்படுத்துகின்றனர். அவை கடுமையான வெயிலில் உலர்த்தப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. மூலப்பொருள் ஒரு கயிறு போல முறுக்கப்படுகிறது அல்லது முடியைப் போல பின்னப்படுகிறது. நிஷாந்தன் பொருட்களை விற்பனை செய்கிறார். இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிக தேவை உள்ளது; 2023 இல் அவரது மாத வருமானம் 30,000 இலங்கை ரூபாயாக (96 அமெரிக்க டொலர்கள்) மூன்று மடங்காக அதிகரித்தது. அவர் தனது விற்பனையில் 25% தனது வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘இப்படி வருமானம் கூட வாரது எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு,’ என்று அவர் கூறுகிறார். ‘என்னுடைய குடும்ப செலவையும் பார்த்து ஒரு சிறிய அளவு தொகையை என்னால் சேமிக்க கூடியதாக உள்ளது. இந்த உலகத்துல யார் என்ன கைவிட்டாலும் என்ன இந்த தொழில் கை விடாது என்ற ஒரு 100% நம்பிக்கையை எனக்கு இந்த தொழில் தருகிறது.’

கன்னாட்டியில் உள்ள மற்ற கைவினைஞர்களும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் 2022 இல் உச்சத்தை அடைந்த உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளாக இருந்த மந்தநிலைக்குப் பிறகு, மக்களின் செலவழிக்கக் கூடிய வருமானத்தைக் குறைத்ததன் மூலம் தங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். கைவினைஞர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பிற நெரிசலான சுற்றுலா மையங்களில் கண்காட்சிகளில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த உதவியதாக அரசாங்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 30,000 முதல் 50,000 ரூபாய் வரை (சுமார் 96 முதல் 160 டொலர்கள் வரை) விற்பனைக் காட்சி அரங்குக்கான கட்டணத்தை அரசாங்கம் செலுத்துகிறது.

expand image
expand slideshow
expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா

சோபனா நிஷாந்தனும் அவரது சகாக்களும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை பின்னுகிறார்கள். 2023 இல் அவர்களின் கைவினைப் பொருட்களுக்கான தேவை அதிகரித்தது. சோபனா நிஷாந்தன் தனது வீட்டின் பின்புறத்தில் வாழையின் தண்டினை வெட்டிக் கொண்டிருக்கிறார். அவள் அதை கைவினைப்பொருட்கள் செய்ய பயன்படும் இழைகளாக பதப்படுத்துவாள்.

நிஷாந்தன் 2022 இல் 10 கண்காட்சிகளிலும், 2023 இல் மூன்று மடங்கு அதிகமான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். அவர் 900,000 ரூபாய் மதிப்புள்ள தயாரிப்புகளை (2,751 டொலர்கள்) விற்றபோது, அது 2022ம் ஆண்டின் இலாபத்தை விஞ்சியது.

இலங்கையில் கைவினைப் பொருட்கள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் 2,832 கைவினைஞர்கள் தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது உள்நாட்டு கைவினைப் பொருட்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசாங்க நிறுவனமாகும். தமிழ் பேசும் மாவட்டமான வவுனியாவில், பதிவு செய்யப்பட்ட 100 கைவினைஞர்கள் – பெரும்பாலும் பெண்கள் – பெட்டிகள், கூடைகள், பைகள், அலங்காரங்கள், தேநீர் கோப்பைகள் மற்றும் பிற பொருட்களை தயாரிக்கின்றனர் என்று மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இவர்கள் பனை ஓலை, வாழை நார், புல், களிமண், உலோகம், தேங்காய் மட்டை, துணி போன்ற மூலப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

கைவினைப் பொருட்கள் கிராமப்புறக் குடும்பங்களுக்கு முக்கியமான தொழில் மற்றும் வருமான உருவாக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின் பொருளாதார துறை விரிவுரையாளர் மேரி டெல்சியா ஆண்டனி கிறிஸ்டியன். இந்த தயாரிப்புகள் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன, இது நாட்டிற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவருகிறது என்று கூறுகிறார்.

நிஷாந்தன் தனது குடும்பத்தை தாங்க வேண்டியதன் காரணமாக தனது தொழிலை ஆரம்பித்தார். வட இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பான்மை சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக குருதி தோய்ந்த, தசாப்த கால உள்நாட்டுப் போர் காரணமாக 1990 இல் அவரது பெற்றோர் இலங்கையை விட்டு வெளியேறினர். நிஷாந்தன் இந்தியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில், குடும்பம் வவுனியா மாவட்டத்தில் உள்ள கன்னாட்டியில் கிராமத்தில் உள்ள தமது பூர்வீக வீட்டிற்கு மீண்டும் இடம்பெயர்ந்தது.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா

சோபனா நிஷாந்தன் வாழை நார்களாலான ஒரு பையை பின்னுகிறார். இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் அவள் இதை கற்றுக் கொண்டாள்.

நிஷாந்தன் 2015 இல் வவுனியாவில் உயர்தரப் பள்ளியை முடித்தாள். அவள் பனை ஓலைகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களைத் தயாரித்து விற்கத் தொடங்கினாள். மாதம் 5,000 ரூபாய் (15 டொலர்கள்) சம்பாதித்தாள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இந்தியாவில் கற்றுக்கொண்ட ஒரு கைவினைப்பொருளான வாழை நார் பொருட்களுக்கு மாறினார்.

2017 ஆம் ஆண்டில், நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சிக்கு பொறுப்பான அரசாங்க அமைப்பான கைத்தொழில் அபிவிருத்தி சபையால் நடத்தப்படும் 12 நாள் பட்டறையில் அவர் சேர்ந்தார். அவரது கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கலந்து கொண்டனர். பட்டறைக்குப் பிறகு, அவர் 10 பெண்களுடன் அவர்களின் பொருட்களை சந்தைப்படுத்தவும் விற்கவும் ஒப்பந்தம் செய்தார்.

அவரது உற்பத்தியாளர்களில் ஒருவரான பிரதாப் ஜெபதர்சிகா, 2023ல் தனது மாத வருமானம் இருமடங்காக 20,000 ரூபாயாக (61 டொலர்கள்) அதிகரித்ததாக கூறுகிறார். தினசரி கூலித் தொழிலாளியான தனது கணவரின் சம்பாத்தியத்தின் குறையை அவர் நிரப்புகிறார்.

பிரதாப்பின் குடும்பமும், 2006ல் அகதிகளாக இந்தியாவுக்குச் சென்று, போர் முடிந்து திரும்பியது. பனை ஓலைகளால் பெட்டிகள், கூடைகள், நூடுல்ஸ் தயாரிக்கும் தட்டுகள், பைகள் மற்றும் மாலைகள் ஆகியவற்றை அவள் செய்கிறாள்.

தயாழினி இந்திரகுலராசா

ஜெபதர்சிகா பிரதாப் பனை ஓலைகளால் வண்ணமயமான கூடையை பின்னுகிறார் ர். கண்காட்சிகளில் அவரது பொருட்களுக்கு அதிக கோரிக்கை உள்ளது.

‘இந்த வேலையால் நான் மிகுந்த திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்,’ என்று அவர் கூறுகிறார், ‘கண்காட்சிகளால் இப்ப விற்பனை கூடியிருக்கு.’
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, இந்த கிராமப்புற வேலைவாய்ப்பு கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. ‘பொருளாதார நெருக்கடி காலப்பகுதி மிகவும் பாதிப்பாக இருந்தது,’ என நிஷாந்தன் கூறுகிறார், ‘போக்குவரத்து பிரச்சினை என்பன காணப்பட்டதால் என்னால் மூலப் பொருட்களை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியவில்லை, எரிபொருள்கள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டது.’

அரசாங்கமும் பயிற்சித் திட்டங்களை நிறுத்த வேண்டியிருந்தது என வெங்கல செட்டிகுளம் பிரதேசசெயலகத்தில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணி புரியும் சுமித்ரா செந்தில்குமரன் கூறுகிறார்

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா

சோபனா நிஷாந்தன் பறையனாளங்குளத்தில் உள்ள அரசாங்க கைவினைப் பொருட்கள் கண்காட்சியகத்தில் கையால் செய்யப்பட்ட கூடை ஒன்றை பிடித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆனால் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து பயிற்சிகள் மற்றும் கண்காட்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்று அவர் கூறுகிறார். ‘தற்போது அதிகமான கண்காட்சிகள் பலதரப்பட்ட அரசு அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படுகிறது,’ என்று அவர் கூறுகிறார். ‘ இங்கிருந்து பெண்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு சென்று கண்காட்சிகளில் பங்குபற்றலாம்.’
அவரது அமைச்சு 2023 இல் 15 கண்காட்சிகளுக்கு நிதியுதவி செய்தது, என்று அவர் கூறுகிறார். மேலும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பாலின சமத்துவத்திற்கு பொறுப்பான ஐ.நா பெண்கள் இணைந்து, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 32 சிறுதொழில் புரியும் பெண்களை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சிக்காக தேர்ந்தெடுத்தனர்.

ஒன்லைனில் தனது பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தனது வாழை நார் கைவினைப் பொருட்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக நிஷாந்தன் கூறுகிறாள். அவள் சமீபத்தில் ஒரு பயிற்சி பட்டறையில் பங்கேற்றாள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விற்பனையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளாள். அவர் தனது வணிகத்தை பதிவு செய்துஇ தனக்கு உற்பத்திகளை வழங்கும் பெண்களை வேலைக்கு அமர்த்தவும் திட்டமிட்டுள்ளார். ‘இந்த வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நான் போராடுகிறேன்,’ என்று அவள் கூறுகிறாள். ‘பெண்களின் வாழ்வாதாரத்திற்கு மாத சம்பளம் வழங்க முயற்சிக்கிறேன்.’

தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர்ஜோசபின் ஆண்டனி, ஜிபிஜே.