Sri Lanka

முட்தடையை எதிர்கொள்ளும் ஊர் திரும்பிய யுத்த அகதிகள்

கடினமான அமெரிக்க ஆக்கிரமிப்பு மரம் வடஇலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகிறது.

Read this story in

Publication Date

After Returning Home, War Refugees Face Thorny Obstacle

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சமீபத்தில் தனது சொந்நத இடத்திற்குத் திரும்பிய பாக்கியம் ரவிகுமார் தனக்கு விறகாகப் பயன்படுத்தக்கூடிய பகுதிகளைத் தேர்ந்தெடுத்த பிறகு சீமைக் கருவேல மரங்களின் முட்கள் நிறைந்த எஞ்சிய பாகங்களுக்குத் தீ வைக்கிறார்.

Publication Date

மன்னார், இலங்கை – உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட முகமது சித்திக் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஊருக்குத் திரும்பிய போது, எதிர்பாராத ஊடுருவியொன்று வேரூன்றியிருப்பதைக் கண்டார்.

வடமேல் இலங்கையின் கடலோர மாவட்டமான மன்னாரில் படர்ந்த, முட்கள் நிறைந்த கிளைகளுடனான பசுமையான மரங்கள் நிறைந்த காடுகள் ஏறத்தாள கைவிடப்பட்ட அனைத்து நிலங்களிலும் ஊடுருவி வளர்ந்துள்ளன.

“இந்தா பாருங்களன் என்ர வீட்டடில. வேற மரங்கள் இல்ல. இது மட்டுந்தான் இருக்கு” விவசாயம் மேற்கோள்ளும் சித்திக், வயல்கள், குளங்கள் மற்றும் தெருக்களைக் கூட முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் முட்புதர்கள்களைச் சுட்டிக்காட்டி கூறுகிறார்.

ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா என்ற விஞ்ஞானப் பெயரையுடைய, பேச்சு வழக்கில் “பேய் மரம்” என்றும் அழைக்கப்படுகின்ற சீமைக் கருவேலம் மன்னார் போன்ற வறண்ட பகுதிகளில் செழித்து வளரும் ஒரு பிரபலமான பலம் வாய்ந்த தாவரமாகும். தண்ணீரைத் தேடி 20 மீட்டர் (65 அடி) ஆழத்துக்கு ஊடுருவிச் செல்லக்கூடிய வேர்களைக் கொண்ட இதனுடன் போட்டியிடும் தாவரங்களை விரைவில் தோற்கடித்துவிடும். 26 வருட மோதலின் போது பரவலைக் கட்டுப்படுத்த விவசாயிகள் இல்லாமல் இருந்ததால் இம்மரங்கள் செழித்து வளர்ந்தன.

“அது அழிக்க அழிக்க வந்து கொண்டுதான் இருக்கு,” என கிராம கால்வாயிலிருந்து சீமைக் கருவேல மரக் கிளைகளை அகற்றும் தொழிலாளர்களை மேற்பார்வையிடட்டுக் கொண்டிருக்கும் உள்ளூர் விவசாயக் குழுவொன்றின் தற்போதைய தலைவரான சித்தீக் கூறுகிறார்.

இம்மரம் வெட்ட வெட்ட தொடர்ச்சியாக எப்படி வளரும் என்பதைப் பற்றி 59 வயதான அவருக்கு நன்றாகத் தெரியும். 1990 இல் போரின் போது மன்னாரில் இருந்து தப்பியோடிய தருணத்தில் சீமைக் கருவேல மரஙகளை ஒரு போதும் அவர் பார்த்ததில்லை. அதைத் தொடர்ந்த இலங்கையின் தமிழ் சிறுபான்மையினருக்காக ஒரு தனி நாட்டை உருவாக்க முயன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்க இராணுவத்துக்குமிடையே யுத்தம் தீவிரமடைந்தது. புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து 2010 ல் சித்தீக் கட்டைகாடு கிராமத்திற்கு முதன் முறையாகத் திரும்பிய போதே இம் மரங்களைக் கண்டார்.

அன்று முதல் சீமைக் கருவேல மரங்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடாத்தும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தி வருவதுடன், திரும்பி வந்துள்ளவர்கள் வீடு கட்டுவதற்கு, பயிர் செய்ய மற்றும் கால்நடைகளை வளர்க்கத் தேவையான நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது.

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சில ஆராய்ச்சியாளர்கள் இலங்கை அதன் நன்மைக்காக சீமைக் கருவேல மரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். உதாரணமாக பச்சை காய்கள் மற்றும் தழைகளை கால்நடைகளுக்கு உணவளிக்கலாம்.

இம்மரங்களைப் பிடுங்குவது மிக்க களைப்பையும் செலவையும் ஏற்படுத்துகிறது. சிலர் அதை கைகளினால் பிடுங்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் வேர்களை ஒழுங்காக அகற்றவும், காயம் ஏற்படாமல் தவிர்க்கவும், கிராமவாசிகள் மரம் வெட்டும் இயந்திரங்கள் அல்லது புல்டோசர்களை கூலிக்குப் பெற வேண்டும். இது மீள்குடியேற்றத்தை இன்னும் சவாலாக மாற்றியுள்ளது.

‘காணியில பெருமளவான சீமைக்கருவேல மரங்கள் இருந்ததால உடனே குடியேற முடியேல்ல,” என 2018 ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் மன்னாருக்கு திருப்பி வந்த 23 வயதான சிவபாலன் மோகன் கூறுகிறார்.

1983-2009 காலப்பகுதியில் இடம்பெற்ற போரின் போது அயல் நாடான இந்தியாவுக்கு தப்பிச் சென்ற 85,000 தமிழர்களில் மோகனின் பெற்றோர்களும் அடங்கியிருந்தனர். பத்தாயிரக்கணக்கான மக்கள் சித்தீக் போல உள்நாட்டில் இடம்பெயர்ந்ததுடன், பலர் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தஞ்சம் புகுந்தனர். ஒட்டுமொத்தமாக, 15 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களை தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர வைத்த யுத்தம், 70,000 க்கும் அதிகமான மக்கள் இறக்கவும் 20,000 பேர் காணாமல் போகவும் காரணமாக அமைந்தது.

மோகனும் அவரது மனைவியும் இலங்கைக்கு வந்ததில்லை. இருவரும் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்து அகதி முகாம்களில் வளர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் பெற்றோர்களின் தாய் மண்ணில் தமது திருமண வாழ்க்கையைத் தொடங்க ஆர்வமாக இருந்தனர். ஆனால் சீமைக் கருவேல மரங்கள் எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தி, அவர்கள் செடிகளை அகற்றி பயிர்ச் செய்கையைத் தொடங்க 100,000 இலங்கை ரூபாயை ($500) சம்பாத்தியத்திலிருந்து மீதப்படுத்தும் வரை நண்பர் ஒருவருடன் தங்கும்படி கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

"இந்தா பாருங்களன் என்ர வீட்டடில. வேற மரங்கள் இல்ல. இது மட்டுந்தான் இருக்கு."

மோகனின் பரம்பரைச் சொத்தாகக் கிடைத்த அரை ஏக்கர் காணியில் தென்னோலைக் கிடுகுகளால் வேயப்பட்ட ஒரு சிறிய குடிசையில் இன்று தம்பதியினர் வாழ்கின்றனர். ஜூன் மாத காலைப் பொழுதொன்றில் தனது நிலக்கடலைப் பயிர்களைப் பராமரிப்பதற்கு முன், சில அயலவர்கள் எப்படி சீமைக் கருவேல மரங்களை “அகற்ற முடியாமல் காணிகளுக்குள் அப்படியே வைத்திருக்கிறார்கள்” என்று மோகன் விளக்கினார். ஆனால் “காலப்போக்கில் அவை இன்னும் பெருங்காடுகளாக வளரக்கூடிய சூழ்நிலையே இருக்கு” என்று அவர் கவலைப்படுகிறார்.

சீமைக் கருவேல மரங்கள் முதலில் 1880 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. 1950 களில், அம்மரங்கள் மண்ணை மேம்படுத்தவும் சூழலைப் பசுமையாக வைத்திருக்கவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தேயிலை, ரப்பர் அல்லது தேங்காய் போன்று இலங்கைத் தீவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற தாவரங்களைப் போலல்லாமல், அவை தீவிரமாக பரவுகின்றன. மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து உருவாகிய சீமைக் கருவேல மரங்கள், இப்போது உலகின் அதிகூடிய ஆக்கிரமிப்பு இனங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன் சூடான் மற்றும் கென்யாவிலிருந்து இலங்கை வரையிலான பூர்வீக சூழல் தொகுதிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் மூத்த விரிவுரையாளரான ரியாஸ் அஹமட் கூறுகையில், இப்பிரச்சினை “மரங்களை உடனடியாக அகற்றாவிட்டால் மிகவும் மோசமாகிவிடும்.” ஆக்கிரமிப்பு இனங்களைப் பற்றி ஆராயும் அறிஞரான அவர், அதிக சத்துள்ள உள்நாட்டு தாவரங்களை சீமைக் கருவேலம் வளர விடாமல் செய்வதாகக் கவலைப்படுகிறார். “வயல் நிலங்களை ஆக்கிரமித்தால் நெல் விளைவிக்க இயலாமல் போகும்,” என்று அவர் கூறுகிறார்.

பல ஆண்டுகளாக, பணப் பற்றாக்குறையுள்ள யுத்தத்தற்குப் பின் திரும்பியவர்கள் சீமைக் கருவேலத்துடன் தனியாகப் போராடியுள்ளனர். ஆனால் மே மாதத்தில், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, கூட்டாக அரசாங்கத்தின் உதவியைக் கோரினர்.

மூலதனத்தைத் திரட்டி மரங்களை அகற்றுவதற்கு தனியார் அல்லது தன்னார்வ பங்காளிகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்கான வட மாகாண துணை விவசாயப் பணிப்பாளர் கே. எம். ஏ. சுகூர் கூறுகிறார். ஆனால் இந்தக் கதையை எழுதும் நேரத்தில், கொவிட்-19 அல்லது கொரோனா வைரஸால் ஏற்படும் நோயின் ஒரு புதிய அலை காரணமாக பின்தொடர்ந்த சந்திப்பை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

குடியிருப்பாளர்கள் தங்கள் நிலத்தை சுத்தப்படுத்த ஒரு மணி நேரத்திற்கு 3,000 இலங்கை ரூபாய் ($ 15) செலுத்தி, முட்கள் நிறைந்த மரங்களை அகற்ற தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.

சில ஆராய்ச்சியாளர்கள் சீமைக் கருவேல மர அழிப்பில் உலகின் பிற பகுதிகளில் அதிக செலவானதாகவும், பயனற்றதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவற்றை முற்றாக அழிப்பதை விட ஏனைய வழிமுறைகளையும் பரிந்துரைக்கின்றனர். அதற்கு பதிலாக சீமைக் கருவேல மரங்களின் நன்மைகளைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று அவர்கள் வாதிடுகின்றனர். உதாரணமாக, சீமைக் கருவேலங் காய்கள் கால்நடைத் தீனியாகப் பயன்படுத்தப்படலாம் என பொதுநலவாய வனவியல் மாநாட்டில் வழங்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கை பரிந்துரைத்தது.

“இது ஒரு ஆக்கிரமிப்புத் தாவரம் என வகைப்படுத்தப் பட்டிருந்தாலும், சீமைக் கருவேலம் நிறைய பொருளாதார பயன்பாடுகளைக் கொண்டுள்ளது, இது பற்றி மக்களுக்குத் தெரியாது,” என ஆராய்ச்சி அறிக்கையின் இணை ஆசிரியரும், மத்திய இலங்கையிலுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் அசைபோடும் விலங்குகளின் ஊட்டச்சத்து பேராசிரியருமான நிமல் பெரேரா, குளோபல் பிரஸ் ஜேர்னலிடம் கூறினார்.

மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளரான அசாரக் சகீலாபானுவும் “மதிப்புமிக்க” விறகாக அல்லது உரமாக கருவேல மரத்தை சுட்டிக்காட்டுகிறார். “நாங்கள் [மரங்களை] முழுமையாக அழிக்க வேண்டுமா அல்லது சிலவற்றை வைத்திருக்க வேண்டுமா என்று பார்க்க” மேலும் ஆராய்ச்சி தேவை, எனக் கூறுகிறார் அவர்.

யுத்தத்தின் பின் திரும்பி வருபவர்கள் ஏற்கனவே சீமைக் கருவேல மரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு மரம் வெட்டும் இயந்திரம் மற்றும் மண்ணெண்ணெய் போத்தலுடன், மூக்கையா லோகநாதன், 60, அதிகாலையில் தனது வேலையைத் தொடங்குகிறார். அவர் கத்தியைக் கீழிறக்கி ஒரு முதிர்ந்த பொருத்தமான கிளையை தொப்பென்ற சத்தத்துடன் தரையில் சாய்க்கிறார். அது அவருக்கு சுமார் 300 ரூபாய் ($ 1.50) வருமானத்தைக் கொடுக்கும். அவரது மனைவி விவேகி லோகநாதன் கிளைகளை விற்பனைக்கு சிறுதுண்டு விறகுகளாக வெட்டுகிறார். நல்ல விற்பனையுள்ள ஒரு வாரத்தில், அவர்கள் 300 மரக்கட்டைகளை விற்பார்கள்.

ஆனால் மரம் வெட்டும் லோகநாதன் மற்ற வேலைகளையே விரும்புகிறார். “சீமைக் கருவேல மரம் எனக்கு வருமானத்தைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் இது மிகவும் கடினமான வேலை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்பு புதர்களை அகற்ற வேண்டும்,” என்கிறார் மூக்கையா. “முட்கள் இருப்பதால் ஒன்றை வெட்டுவது கூட ஆபத்து. இந்த மரங்களை அழிப்பதுதான் நல்லது.”

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரத்தை மையமாகக் கொண்ட வெற்றிச்செல்வி சந்திரகலா, குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர்ஷிஹார் அனீஸ், ஜிபிஜே.

Related Stories