Sri Lanka

மஞ்சள் விவசாயிகளின் நாட்டில் பந்தயம் கட்டும் அதிகாரிகள்

பிரபலமான செடியின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் மஞ்சள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது. மாற்றம் எளிதானதாக இருக்கவில்லை.

Read this story in

Publication Date

Officials Bet on a Country of Turmeric Growers

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

மஞ்சள் செடிகளை விற்பனை செய்வதால் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளலாம் என மதனவேந்தன் சந்திரா நம்புகிறார். இலங்கை இறக்குமதியைத் தடுத்த பின்னர் மஞ்சளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தனது திறந்தவெளி வீட்டிற்கு வெளியே அவள் அவற்றை வளர்க்கிறாள்.

Publication Date

மன்னார், இலங்கை – தோட்ட உபகரணங்கள், நாய் மற்றும் பூனை ஆகியவற்றால் சூழ்ந்துள்ள சஞ்சோன் சலமோன் துரம் நுண்ணுயிரிகள் பற்றிய தனது புத்தகங்களைத் தூசு தட்டுகிறார். வீடு அமைதியாக இருக்கிறது; பல மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை இழந்த 76 வயதான அவரும் இறக்க விரும்பினார்.

ஆனால் மஞ்சள் குமிழ்கள் அவரது காப்பாளனாகி விட்டன. அவர் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற அதே வேளை, எண்ணிக்கையில் அதிகரித்து வரும் வீட்டுத் தோட்டக்காரர்களைப் போல, சமீபத்தில் இஞ்சி போன்ற தாவரத்தையும் (தனது தோட்டத்தில்) சேர்த்தார்.

பலா மரங்கள் மற்றும் நெல் வயல்கள் நிரம்பிய நாட்டின் தொலை வடக்கின் நீட்சியாகவுள்ள இப்பிரதேசம் வறட்சி காரணமாக ஆண்டுதோறும் வறண்டு போகிறது. ஆனால் மண்ணின் பச்சை முளைகளாகவுள்ள புதிய மஞ்சள்

செடிகள் இந்த மிதமான மண்டலத்திற்கு உகந்தவையாகவும் சலமோனின் தோட்டத்தின் நிழல் பகுதியில் செழித்தும் வளர்கின்றன. “வாற வருசம் நான் ஒரு ஏக்கர் செய்யலாம் என்று யோசிக்கிறன்,” என எரியும் வெயிலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கசங்கிய வெள்ளை தொப்பியை அணிந்திருந்த அவர் கூறுகிறார்.

ஏனைய இலட்சியமுள்ள தோட்டக்காரர்களும் இதனை பின்பற்றுவார்கள் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது. பல இலங்கை மக்களின் உணவு மற்றும் சடங்குகளில் இன்றியமையாததாகக் கருதப்படும் மஞ்சளின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அதிகாரிகள் 2019 டிசம்பரில் அதன் இறக்குமதிக்குத் தடை விதித்தனர். இந்தத் தடை புதிதாக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள தோட்டக்காரர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளதுடன், மஞ்சளுக்குப் பற்றாக்குறை ஒன்றையும் ஏற்படுத்தி கடத்தலுக்கும் மதிப்புமிக்க செடியின் விலையைக் கூட்டவும் வழி கோலியுள்ளது.

இந்த (கொரோனாவைரஸ்) தொற்றுநோய் காலத்தில் மஞ்சளின் தேவை மேலும் அதிகரித்துள்ளது. பல இலங்கையர்கள் அதன் துடிப்பான செம்மஞ்சள் வேரை வீட்டு வைத்தியமாகவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதைப் பணப் பயிராக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி ஒரு கடினமான யதார்த்தத்தை சந்திக்கிறது: விவசாயிகளால் கேள்வியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மஞ்சளுக்காக நாடு தவழ்கிறது.

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சஞ்சோன் சலமோன் துரம் வடக்கு இலங்கையில் உள்ள தனது மஞ்சள் செடிகளுக்குள் இருக்கிறார். அவரைப் போன்ற ஆர்வமுள்ள தோட்டக்காரர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மஞ்சள் இறக்குமதியை செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

வீட்டுத் தோட்டங்களில் மஞ்சள் வளர்ப்பதில் மக்களின் “வலுவான ஆர்வம்” குறித்து அதிகாரிகள் பந்தயம் கட்டுவதைப் போல அதிகமாக நம்பியுள்ளதாக ஏற்றுமதி விவசாயத்துறைப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி.ஹீன்கெண்டா கூறுகிறார். “ஜனவரி முதல் மே வரை பெரிய அளவிலான பயிர்ச் செய்கையுடன் … [வீட்டுத் தோட்டக்காரர்கள்] 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தன்னிறைவு அடைய எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

2019 ஆம் ஆண்டில் மஞ்சள் இறக்குமதிக்காக அரசாங்கம் 1.2 பில்லியன் இலங்கை ரூபாயை (சுமார் 6.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிட்டது. 2020 ஆம் ஆண்டில், தடையின் காரணமாக, நாடு எதையும் இறக்குமதி செய்யவில்லை.

இலங்கை தனது சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆண்டுக்கு சுமார் 6,000 மெட்ரிக் தொன் மஞ்சளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஹீன்கெண்டா கூறுகிறார். நாடு தற்போது அந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கையே உற்பத்தி செய்கிறது.

மஞ்சள் இலங்கை சமுதாயத்துடன், குறிப்பாக தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் பிணைந்துள்ளது. மஞ்சள் இல்லாத சமையலறைகளே இல்லை. மக்கள் அரைதத மஞ்சளை ஒரு தொற்று விரட்டியாகத் தமது மேனிகளுக்குப் பூசுகின்றனர், அதன் தூளைக் கறிகளில் சேர்க்கின்றனர். வீடுகளுக்கும், வீட்டைச் சுற்றியும் தொற்று நீக்கியாகத் தெளிக்கிறார்கள்.

அம்மை மற்றும் சரும நோய்களைக் குணப்படுத்த இலங்கையர்கள் ஒரு தீர்வாக அரைத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் மஞ்சள் தூளை சூடான எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட விரல் நகங்கள் அல்லது பிற காயங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் காய்கறிகளைக் கழுவுவதற்கும், மசாலாவாகப் பயன்படுத்தி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது உடம்பை வெது வெதுப்பாக வைத்திருக்கப் பயன்படுத்துவர். கோயில்களிலும், பிற மத நிகழ்வுகளிலும் இந்துக்கள் மஞ்சள் நீரில் தங்களைத் தூய்மைப்படுத்துகிறார்கள்.

விலை அதிகரிப்பு மஞ்சள் விற்பனையை ஒரு கிலோவுக்கு (2.2 இறாத்தல்கள்) 750 ரூபாய்க்கு (சுமார் 4 அமெரிக்க டாலர்கள்) கட்டுப் படுத்த அரசாங்கத்திற்கு வழி வகுத்தது. ஆனால் அது மக்கள் தமது வீடுகள் தோறும் பூக்கன்றுகள் வளர்ப்பதைப் போலவே மஞ்சள் செடிகளையும் வளர்ப்பதைத் தடுக்கவில்லை.

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

தீவின் வடக்கே மன்னாரில் உள்ள ஒரு பண்ணையில் மஞ்சள் பயிர்ச் செய்கையில் ரெனில் லூஜியா உதவுகிறார். மஞ்சள் இலங்கையின் உணவு மற்றும் சடங்குகளுடன் ஒருங்கிணைந்ததாகும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு தீர்வாக இது தொற்றுநோயின் போது இன்னும் பிரபலமாகியுள்ளது.

மதனவேந்தன் சந்திராவின் வேயப்பட்ட கூரையுடனான திறந்தவெளி வீட்டிற்கு அடுத்ததாக உள்ள சிறிய தோட்டத்தில் சுமார் 50 மஞ்சள் கன்றுகள் மண்ணிலிருந்து வெளிவந்து எட்டிப் பார்க்கின்றன. இரண்டு சிறுமிகளின் தாயான அவர் கன்று ஒன்றைத் தலா 70 ரூபாய்க்கு (0.37 அமெரிக்க டாலர்கள்) விற்கிறார்.

“மஞ்சள் மலரின் வாசனை நன்றாக உள்ளது. நான் தோட்டத்திற்குள் நடந்து செல்லும்போது அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று முகத்தில் ஒளிரும் பெருமையுடன் அவள் கூறுகிறாள். சந்திரா மஞ்சள் செடியை மாத்திரம் வளர்க்கும் தோட்டத்துடன் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று கனவு காண்கிறாள்.

ஆனால் சந்திரா போன்றவர்களின் முயற்சிகளால் பற்றாக்குறையை இன்னும் ஈடுசெய்ய முடியவில்லை. கஞ்சா கடத்தல் நடவடிக்கைகளுக்காக முன்பு கடற்கரையில் ரோந்து சென்ற அதிகாரிகள் இப்போது மஞ்சள் கடத்தல்களை மடக்கக் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து மன்னார் வளைகுடாவுக்கான மஞ்சள் கடத்தல், குறிப்பாக மன்னாரில், பரவலாக இடம்பெறுகிறது. அக்டோபர் மாதம் கடலோரப் பகுதிகளில் 6,000 கிலோ கிராம் (13,227 இறாத்தல்கள்) உலர்ந்த மஞ்சளை இலங்கை கடற்படை கைப்பற்றியது. செப்டம்பர் விசாரணைகளில் 3,000 கிலோகிராம் (6,614 இறாத்தல்கள்) கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போருக்குப் பிறகு மீண்டும் காடுகளை ஏற்படுத்த ஊக்குவிக்கின்றனர் கதைகளை வாசிக்க கிளிக் செய்யவும்.

விற்பனையாளர்கள் கலப்படம் செய்து உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் தூளை தரமானதாகக் காட்டி விற்பனை செய்கின்றனர். இலங்கை நுகர்வோர் அதிகார சபை கடந்த ஆண்டு ஏராளமான வர்த்தகர்களிடமிருந்து கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளைக் கைப்பற்றியதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மக்களில் சிலர் அரசாங்கத்தின் தன்னிறைவு வாக்குறுதி பற்றி சந்தேகம் கொண்டுள்ளனர். “மஞ்சள் பயிர்ச்செய்கை எங்கள் பகுதிக்குப் புதிது,” என மன்னார் விவசாயி மரியாராஜா நிக்சன் கூறுகிறார். “அவசரமாக [இறக்குமதியை] தடை செய்ய வேண்டிய அவசியமில்லை”.

இலங்கை அதன் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றுக்காக அடுத்தவர்களை நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் வாதிடுகிறது. பயிற்சி அளிப்பதன் மூலமும், நூற்றுக்கணக்கான நாற்றுகளைக் கொண்ட பைகளைக் குறைந்த விலையில் வழங்குவதன் மூலமும் மக்கள் இத்தாவரத்தை வளர்ப்பதை எளிதாக்குவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

” அநேகமான வீடுகளில் 100 இற்கு 95 வீடுகளி;ல் ஒன்றாக மஞ்சள் இருக்கிறது. அவ்வாறு பார்த்தால் ஏறக்குறைய 20000-25000 வரையான நாற்றுகள் உள்ளன,” என்று வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் தோட்டக்கலை விவசாய பாடத்திட்ட அதிகாரியான இருதயநாதன் அல்ஜின் குரூஸ் கூறுகிறார். “பலசரக்குக் கடைகளில் மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்ட நாட்களிலேயே மக்கள் பயிரிடலில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார்கள். எதிர்காலத்தில் குடிசைக் கைத்தொழிலாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.”

இலங்கை மஞ்சளின் எதிர்காலம் குறித்து பந்தயம் கட்டும் சீமாம்பிள்ளை ஜெயபாலனையும் இந்த ஆர்வம் பிடித்திருக்கிறது.

அருட்தந்தை ஜெயபாலன் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 14 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற ஒரு பயிற்சி பண்ணையை மன்னாரில் நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வாழைப்பழங்கள், கொய்யா மற்றும் மாதுளை ஆகியவை நிறைந்துள்ளன. மஞ்சள் செடிகள் இப்போது மா மரங்களின் நிழலில் வளர்கின்றன.

“நாங்கள் கவலைப்படவில்லை” என்று (இறக்குமதித்) தடையை ஆதரிக்கும் ஜெயபாலன் கூறுகிறார். “மற்றவர்களில் தங்கியிருப்பதால் நாடு வளர்ச்சியுராது.”

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரத்தை மையமாகக் கொண்ட வெற்றிச்செல்வி சந்திரகலா, குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர், ஜொசப்பின் அந்தனி, ஜிபிஜே.

Related Stories