Sri Lanka

எரிபொருள் நெருக்கடி ஓட்டுநர்களை மேற்கொண்டு ஓடவிடாமல் செய்கின்றது

இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு பெரும்பாலான ஓட்டுநர்களை மிகக் குறைந்த அளவிலான எரிபொருள் பாவனைக்கு கட்டுப்படுத்துகிறது. இது வாடகை வண்டி ஒட்டுநர்களுக்கு உயிர்வாழ போதாமல் உள்ளது.

Read this story in

Publication Date

Country’s Fuel Crisis Runs Drivers Off the Road

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

இலங்கையின் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நூற்றுக்கணக்கான முச்சக்கர வண்டிகள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கின்றன. ஒரு நெருக்கடியான பற்றாக்குறை ஏற்படும்போது ஓட்டுநர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் அவ்வாறு காத்திருந்த போதும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் எரிபொருள் அவர்களின் தொழிலை நடத்த போதுமானதாக இல்லை.

Publication Date

ஒட்டாரக் குளம், இலங்கை – எட்டு ஆண்டுகளாக, பொன்னுத்துரை பாஸ்கரன் தனது முச்சக்கர வண்டியை ஓட்டுவதின் மூலமாக வாரத்தில் ஆறு நாட்கள் அந்தி சாயும் வரையிலும் வேலை செய்துள்ளார். இப்போது, அவர் தனது எதிர்காலத்தை குறித்து கரிசனை கொள்ளும் அதே வேளையில், அந்த வண்டி அவரது வீட்டிற்கு வெளியே பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

‘இது முற்றிலும் நம்பிக்கையற்ற நிலைமை,’ என்று அவர் தனது வாகனத்தை சுத்தம் செய்யும் போது கூறுகிறார். இவ் வாகனம் பொதுவாக பள்ளி மாணவர்களையும் பயணிகளையும் கிராமங்களுக்கு இடையில் மற்றும் வட மாகாணத்தில் உள்ள வவுனியா நகரத்திற்கு கொண்டு செல்லும்.

இலங்கையில் வழக்கமான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்ட சுமார் 300,000 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களில் பொன்னுத்துரையும் ஒருவர். பலர் வீதிகளில் வாகனங்களை மேற்கொண்டு ஓட்ட முடியாத கட்டாயத்தில் உள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்ப்பாளர்கள் தனக்கு முன் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பொருளாதார அழிவைத் தடுக்கவும் இலங்கையர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் பணியாற்றி வருகிறார். பிரதம மந்திரி விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து, இலங்கையில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. பெருந்தொற்றுநோய்க்குப் பிந்தைய சுற்றுலா மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணம் வருவதில் ஏற்பட்ட கடுமையான சரிவு யாவும் இலங்கையை கடன் தீர்க்க வகையில்லாத விளிம்பு நிலைக்கு தள்ளியுள்ளன. எரிபொருளின் பற்றாக்குறை, அதை வாங்குவதற்கு நிதி பற்றாக்குறை மற்றும் உக்ரைனில் நடந்த போர், எரிபொருள் விலையில் உயர்வை ஏற்படுத்தியதால், பாடசாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன் போக்குவரத்து போன்ற பல தொழில்கள் செயல்பட முடியாமல் உள்ளன.

இலங்கையின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மோட்டார்வண்டிகளை வைத்திருப்பதால், எஞ்சியவர்கள் பேருந்துகள் அல்லது முச்சக்கர வண்டி போன்ற வாடகை வண்டிகளை நம்பியிருக்கிறார்கள். இந்த நெருக்கடியால் போக்குவரத்துத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாகனங்களை இயக்க தேவையான எரிபொருள் இல்லாமல் வேலை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இங்கு வாழும் பலர் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர் மற்றும் இடர்பாடான சூழ்நிலைகளில் மக்கள் சிக்கித் தவிப்பதுடன் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

தசரதன் சிந்துஜா வசிக்கும் வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் வேலை செய்வதை நிறுத்தியுள்ளன. சிந்துஜாவின் 2 வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வேளையில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டபோது, அவளுக்கு போக்குவரத்து வசதிகள் இருக்கவில்லை. சாதாரணமாக இடைவிடாத வாகன ஒலியில் சலசலக்கும் அவள் வாழும் பகுதி ஒரு வினோதமான அமைதியால் மாற்றப்பட்டு இருந்தது.

உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றது<br />
படிக்க கிளிக் செய்யவும்

‘அவசர நேரத்தில் கூட வாகனம் எதுவும் கிடைக்காததால், எனது குழந்தையை 2.5 கிமீ (1.5 மைல்) தூக்கிச் சென்றேன்’ என சிந்துஜா கூறினார். அவரது மகன் பூரண குணமடைந்துள்ளார்.

இதற்கிடையில், பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். எரிபொருள் நெருக்கடியால் ஜூலை மாதம், ஒரு மாதத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த பின்னர் பாடசாலகள் மீண்டும் அமர்வுக்கு வந்துள்ளன. ஜூன் மாதத்தில், நெருக்கடியில் உள்ள இளைஞர்களுக்கு உதவும் ஐக்கிய இராச்சியம் அடிப்படையிலான இலாப நோக்கமற்ற சேவ் தி சில்ட்ரன், பல பெற்றோர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு ‘இரண்டு நாட்கள் வரை – அல்லது 50 மணிநேரங்களுக்கு மேல்’ வரிசையில் நிற்க வேண்டியிருந்தது, இது அவர்கள் வேலை செய்வதைத் தடுக்கிறது மற்றும் ‘மேலும் நிதி அழுத்தத்தை உருவாக்குகிறது.’ என்று கூறுகிறது.

பொன்னுத்துரையின் அன்றாட முதல் வேலை வழக்கமாக காலை 7:30 மணிக்கு ஐந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதாகும். அதன் பின்னர் அவர் தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் ஓட்டத்திற்குத் தயாராக வாடகை வண்டி தரிப்பிடத்திற்கு செல்வார். அவர் மாதம் 65,000 இலங்கை ரூபாய் (டொலர் 180) சம்பாதித்தார். ஆனால் நாட்டின் 80% எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அத்தியாவசிய சேவைகளுக்கென எரிபொருளை மட்டுப்படுத்தியதால், அவரது தொழிலுக்கு போதுமான எரிபொருளை பெற முடியவில்லை.

சிறிய, தனியார் எரிபொருள் நிறுவனமான லங்கா ஐஓசி, கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனால் தேவையை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இல்லாமல், வாடிக்கையாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை எதிர்கொண்டனர். பொன்னுத்துரை தனது வீட்டிலிருந்து 28 கிலோமீட்டர் (17 மைல்) தொலைவில் உள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெறும் 4 லிட்டர் எரிபொருள் (1.06 கேலன்) பெறுவதற்காக மூன்று இரவும் பகலும் காத்திருந்தார். அவர் சந்தித்த இக்கட்டான சூழ்நிலை அவரை மேலும் எந்த முயற்சிகளையும் எடுப்பதை தடுக்க போதுமானதாக இருந்தது. அவரது தொழிலை மேற்கொண்டு செய்ய முடியாத நிலைக்கு தள்ளியது.

‘எனது எட்டு வருட அனுபவத்தில், எனது வருமானம் முதன்முறையாக கணிசமாகக் குறைந்துள்ளது, என் மகளை பள்ளிக்குக் கொண்டு செல்வதற்கு என்னால் என் வாகனத்தை நம்ப முடியவில்லை, நான் அவளை என் சைக்கிளில் அழைத்துச் செல்ல வேண்டும்.’

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

பொன்னுத்துரை பாஸ்கரன் இலங்கையில் உள்ள ஒட்டாரக் குளத்தில் உள்ள தனது வீட்டில் முச்சக்கர வண்டியை சுத்தம் செய்கிறார். ஒவ்வொரு வாரமும் அவருக்கென அனுமதிக்கப்பட்ட குறைந்த எரிபொருளில் போதுமான பணம் சம்பாதிக்க முடியாததால், எரிபொருள் நெருக்கடி இந்த தந்தை தனது தொழிலை மேற்கொள்ள முடியாமல் செய்துவிட்டது.

ஜூலை 21 அன்று, அரசாங்கம் கட்டுப்பாடுகளை நீக்கியது மற்றும் வாகனத்தைப் பொறுத்து வரம்புகளுடன் அனைத்து வாகனங்களும் எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதித்தது. முச்சக்கர வண்டிகள் வாரத்திற்கு 2,000 ரூபாய் (டொலர் 5.50) மதிப்புள்ள எரிபொருளை வாங்க அனுமதிக்கப்படுகின்றன. இது பொன்னுத்துரை தனது குடும்பத்திற்கு உதவுவதற்கு தேவையானதில் நான்கில் ஒரு பங்கு அதாவது 5 லிட்டர்களுக்கு (1.3 கேலன்கள்) போதுமானதாகும்.

எரிபொருளானது அத்தியாவசியப் பொருளாகும். அதன் தட்டுப்பாடு முழுத் தீவுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளாதார விரிவுரையாளர் கமலகுமாரி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

‘தற்போதைய சூழ்நிலையால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் வேலை இழக்க நேரிடுகிறது; அது அவர்களின் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை கடுமையாகப் பாதிக்கும்’ என்று கருணாநிதி கூறுகிறார். எரிபொருள் நெருக்கடி நாட்டின் பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் மற்றொரு எடையாக இருக்கும் என்று ஒப்புக்கொள்கிறார். ‘எரிபொருட்களைப் பயன்படுத்தும் உற்பத்தியாளர்கள் குறைந்த எரிபொருள் இருப்பு காரணமாக வரையறுக்கப்பட்ட உற்பத்தியை மட்டுமே கொண்டிருக்கக்கூடும். எனவே, உள்நாட்டு உற்பத்தியில் இது நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜனவரி மாதத்தில் ஒரு லிட்டர் (0.26 கேலன்) பெட்ரோலின் விலை 177 ரூபாயில் (49 காசுகள்) இருந்து 450 ரூபாயாக (டொலர் 1.23) உயர்ந்துள்ளதாக முச்சக்கர வண்டி ஓட்டுநர் இராசதுரை குகன் கூறுகிறார். வாடகை வண்டி ஓட்டுநராகப் பணிபுரிந்த இரண்டு தசாப்தங்களில் தான் அனுபவித்த மிகக் கடுமையான பொருளாதாரப் பின்னடைவு இது என்று அவர் விவரிக்கிறார்.

‘பெட்ரோல் இல்லாததால் ஆட்டோ ஓட்டுவதில்லை என்பதில் இப்போது உறுதியாக இருக்கிறேன்; நான் இப்போது பணம் சம்பாதிப்பதற்காக வீட்டுத் தோட்டத்தை வளர்க்கிறேன்.’ என்று கூறும் இராசதுரை, எரிபொருள் பற்றாக்குறை தனது புதிய முயற்சிக்கு சவால்களை முன்வைக்கிறது.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

பொன்னுத்துரை பாஸ்கரன், ஜூலை 7, 2022 அன்று, இலங்கையில் உள்ள ஒட்டாரக் குளத்தில் தனது தோட்டத்தை பராமரிக்கும் போது ஓய்வெடுக்கிறார். இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறையால், முச்சக்கர வண்டி ஓட்டுநரான பொன்னுத்துரை, நிலக்கடலையை பயிரிட்டு தனது வருமானத்தை நிரப்ப வேண்டியுள்ளது.

இயந்திரங்களை இயக்குவது மற்றும் தனது விளைபொருட்களை விற்க வேண்டியிருக்கும் போது. ‘என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய கடன் வழங்கியுள்ளது. ஆனால் அது நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி அரசாங்கம் அறிமுகப்படுத்திய க்யு ஆர்-குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே மக்கள் இப்போது உள்ள வரையறுக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தை அணுக முடியும். தங்கள் வாகனத்தைப் பதிவுசெய்து குறியீட்டைப் பெறுபவர்கள் வாராந்திர எரிபொருள் கொடுப்பனவை வாங்குவதற்கு எரிபொருள் நிலையத்தில் அலகிடு செய்யலாம். இந்த நடவடிக்கை எரிபொருள் நிலையங்களில் கூட்டத்தை குறைக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் 65% பேர் தங்கள் வாகனத்தைப் பதிவு செய்யவதற்கான இணைய அணுகல் இல்லாதவர்களுக்கு இது மற்றொரு எரிபொருள் கட்டுப்பாடாகும்.

இராசதுரை தனது வாகனத்தைப் பதிவுசெய்து அவருக்கான க்யு ஆர் குறியீட்டை அச்சிடுவதற்கு உள்ளூர் கடை உரிமையாளருக்கு 150 ரூபாய் (42 காசுகள்) செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் ஏற்கனவே தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்படும்போதும் இது ஒரு தவிர்க்க முடியாத செலவாக உள்ளது..

மின் மற்றும் வலுசக்தி அமைச்சு இதைக் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
பொன்னுத்துரை மற்றும் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு, நிலைமை மிகவும் அவநம்பிக்கையானது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வரிசையில் நிற்க வேண்டும், ஆயிரக்கணக்கானோர் இன்னும் வாழ்க்கையை நடத்த போராடுகிறார்கள்.

பொன்னுத்துரையும் விவசாயம் பக்கம் திரும்பியுள்ளார். அவர் போதுமான நிலக்கடலை அல்லது வேர்க்கடலையை பயிரிட்டு இலாபம் ஈட்டி தனது குடும்பத்தை ஆதரிக்க முடியும் என்று நம்புகிறார்.

‘நிலைமை சீராகும் வரை வாழ்வதற்கு வருமானம் தேவை, ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றது’

தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்புக் குறிப்பு

ஜொசப்பின் அந்தனி, ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.

Related Stories