Sri Lanka

பல வருடங்களில் முதன் முறையாக, இலங்கையின் சில புராதன குளங்கள் வற்றி விட்டன

இந்த கோடை காலத்தில் மழைவீழ்ச்சி குறைவடைந்த வேளை, விவசாயிகள் தமது பயிர்களுக்காக குளங்களின் தன்னீரை காலியாக்கி விட்டனர். மீன்பிடி பருவகாலம் ஆரம்பமான போது, அங்கு நீர் எதுவும் இருக்கவில்லை.

Read this story in

Publication Date

For the First Time in Years, Some of Sri Lanka’s Ancient Irrigation Reservoirs Ran Dry

தயாழினி இந்திரகுலராசா

செட்டிக்குளம் குளத்தில் மீனவர் ஆறுமுகம் ரங்கசாமியின் படகு அசையாமல் நிற்கின்றது, கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலான காலப்பகுதியில் முதன்முறையாக இக்குளம் கிட்டத்தட்ட வற்றி விட்டது.

Publication Date

செட்டிக்குளம், இலங்கை — இந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் ஒரு பார்வையில் அழகாகத் தென்படும் செட்டிக்குளப் பிரதேசத்தின் குளத்தின் சேற்றினை நோக்கி நாரைகள் கூட்டம் பறப்பது ரம்மியமாக உள்ளது. எனினும், மீனவர் ஆறுமுகம் ரங்கசாமி கவலை நிரம்பியவராகவே காணப்படுகின்றார். அழுகும் மீன்களின் துர்நாற்றம் காற்றை நிரப்புகின்றது. இறந்து போன பாம்புத்தலை முரல் மற்றும் திலாப்பியா மீன்கள் கரை முழுவதும் பரவிக் கிடக்கின்றன. தற்போது இக்குளத்தில் கிட்டத்தட்ட 3 அடிகள் உயரத்துக்கு நீர் உள்ளதாகவும், மீன்கள் நிறைந்ததாகவும் இருந்திருக்க வேண்டும், எனினும் இந்த நாளில், நீர் முழுவதும் கிட்டத்தட்ட வற்றிக் காணப்படுகின்றது. கடந்த 15 வருடங்களில் நீர் கிட்டத்தட்ட வற்றிப் போனது இதுவே முதன் முறையாகும்.

“எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உணவளித்த குளம்,“என்கிறார் அவர். ”இதுதான் எனது பிரதான தொழில்” ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததை பாத்தபோது எனக்கு இரவில நித்திரை வரல. ஒரு மரணத்துக்கு நிகரான கவலை மனதில் ஏற்பட்டது”

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் உலர் பிரதேசமான வடக்கில் நீர்ப்பாசனத்தை உருவாக்க புராதன மன்னர்களால் கட்டப்பட்ட இணைக்கப்பட்ட குளங்களின் தொகுதியின் பகுதியொன்றாகவே வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம் குளம் காணப்படுகின்றது. இக்குளத்தொகுதியின் சில குளங்கள் மழைநீரை சேகரிக்க ஒரு அடுக்கில் இயங்குகின்றன, அவற்றில் சேரும் நீர் நீர்ப்பாசனக் கால்வாய்கள் மூலம் நெல்வயல்களுக்கு நீரை பாய்ச்சுகின்றன, அதன் பின்னர் நீரை குளங்களுக்கு கொண்டு வருகின்றன. அவற்றில் சில மீன்பிடிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மழைநீர் சேகரிப்பு அடுக்கின் பகுதிகள் உள்ளடங்கலாக, செட்டிக்குளத்தில் உள்ள 43% குளங்கள் இந்த கோடைகாலத்தில் வற்றிவிட்டன. உலகின் பரந்த இடங்களில் உயர் வெப்பநிலை மற்றும் வரட்சியை ஒத்த சூழ்நிலைகளை ஏற்படுத்தும் எல்-நினோ காலநிலை நிகழ்வால் இலங்கையின் வட பகுதியும் பாதிக்கப்படுவதால் இந்நிலை ஏற்படுகின்றது. கடந்த ஜூன் மாதம் முதல் செட்டிக்குளத்தின் வானம் வெறுமையானதாக காணப்படுவதுடன் வெப்பநிலைகள் ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் உயர்வாகக் காணப்பட்டன, இது பயிர்கள் வாடுவதற்கும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுத்தது. செட்டிக்குளத்தில் தாம் மீன்பிடிக்கும் குளங்களில் 57% ஆனவை வற்றி விட்டதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் மோசமான நீர் முகாமைத்துவத்தால் இந்நிலை ஏற்பட்டதாக அவர்கள் குறை கூறுகின்றனர். எனினும், இவ்வருடம் காலநிலை எதிர்பாராததாக அமைந்ததாக விவசாயிகள் மற்றும் விவசாய முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வரட்சி மட்டம் அதிகரித்துள்ளது,” என்கிறார் வவுனியா மாவட்டத்துக்கான மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் பொன்னையா அற்புதச்சந்திரன். “மழைவீழ்ச்சி பாரிய அளவில் குறைவடைந்துள்ளது. பயிர்கள் மாத்திரமல்ல, நீருடன் தொடர்புடைய அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. நன்னீர் மீன்பிடியும் அவற்றில் ஒன்று.”

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா

செட்டிக்குளம் குளத்தின் காய்ந்து பிளவடைந்துள்ள அடிப்பகுதியை பார்வையிடுகின்றார் ஆறுமுகம் ரங்கசாமி; வழமையாக இக்குளத்தில் குறைந்தது 3 அடி தண்ணீர் நிறைந்திருக்கும்.

எல்-நினோ என்பது ஒவ்வொரு இரண்டு தொடக்கம் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் காலநிலையுடன் தொடர்புடைய தோற்றப்பாடாகும், இது பசுபிக் சமுத்திரம் வெப்பமாவதால் ஏற்படுகின்றது. இது காலநிலையை உலகளாவிய ரீதியில் பாதிப்பதுடன் தெற்காசியாவின் பகுதிகளில் கடுமையான் வரட்சிகளையும் ஏற்படுத்துகின்றது. மழைக் காலத்தின் போது சிற்றாறுகள் தோன்றி மறையும் இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள நிலத்தால் சூழப்பட்ட வவுனியா மாவட்டத்தில் விசேடமாக இக்காலநிலைத் தோற்றப்பாடு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. ஏப்ரல் தொடக்கம் ஒக்டோபர் வரை நிலவும் வரட்சிக் காலத்தில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நிலக்கீழ் நீரிலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட 719 குளங்களின் வலையமைப்பிலும் தங்கியுள்ளனார். வவுனியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள செட்டிக்குளத்தில் 87 குளங்கள் காணப்படுகின்றன, செட்டிக்குளத்தின் கமநல சேவைகள் நிலையத்தின் தகவல்களுக்கு ஏற்ப, செப்டம்பர் மாதத்தில் அவற்றில் 38 குளங்கள் வற்றி விட்டன.

செட்டிக்குள மீனவர்கள் இக்குளங்களில் 14 குளங்களை பயன்படுத்துவது வழமையாகும் எனினும், அவற்றில் எட்டு குளங்கள் செப்டம்பர் மாதத்தில் வற்றி விட்டன. எஞ்சிய குளங்களில் நீரின் அளவு சாதாரண நிலையை விடக் குறைந்து விட்டது, அது குறைவான மீன்பிடிக்கு வழிவகுத்துள்ளது என உள்ளூர் மீனவர்கள் குளோபல் பிரஸ்ஸுக்கு தெரிவிக்கின்றனர். புராதன நீர்ப்பாசன அடுக்கின் பகுதியாக உள்ள செட்டிக்குளம் கூட வற்றி விட்டது.

“எனது அனுபவத்தில இந்த குளம் இப்படி வத்தினது இதுதான் முதல் முறை,” என்கிறார் ரங்கசாமி. “இதுதான என்ட பிரதான தொழில்”

மே மாதம் கிடைத்த மேலதிக மழைவீழ்ச்சியினால், செட்டிக்குளம் மற்றும் ஏனைய குளங்கள் நீரினால் நிரம்பின. மே தொடக்கம் ஆகஸ்ட் வரையான பயிர்ச்செய்கை காலப்பகுதியில் எந்த அளவு பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது என்பதை உள்ளூர்க் குளங்களின் நீர்மட்டத்தின் அடிப்படையிலேயே விவசாயிகள் தீர்மானிக்கின்றனர், என்கிறார் பொன்னையா. பருவகால மழைவீழ்ச்சி எதிர்வு கூறலை அவர்கள் கருத்திற்கொள்ள தவறி விட்டனர்.

இந்த வருடம், செட்டிக்குளத்தின் நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் 2022 ஆம் ஆண்டை விட 30 ஏக்கர்கள் அதிகமாக பயிரிட தீர்மானித்தனர், என்கிறார் அந்த பிரதேச வயல்களுக்கான நீர்ப்பாசனத்தை முகாமைத்துவம் செய்யும் விவசாயியான சாமுவேல் பெனில்டஸ். எனினும், ஜூன் தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் எதிர்பார்த்ததை விட குறைவான மழைவீழ்ச்சியே கிடைத்தது.

“இப்ப எல்லாம் எப்ப மழை வரும் வராது என்று சொல்ல ஏலாம இருக்கு சில மாதங்கள் எதிர்பாராம மழை வருது. சில மாதம் நினைக்கமுடியாத வெப்பமா இருக்கு. இது இப்ப மட்டும் இல்ல கடந்த சில வருடங்கலா இருக்கு” – என்கிறார் சாமுவேல் பெனில்டஸ்,”மே மாதத்துக்கு பின் மழை பொய்த்தது இது நாம் எதிர்பாரதது”

தயாழினி இந்திரகுலராசா

செட்டிக்குளத்தின் பெரியபுளியாளங்குளத்தின் அடிப்பகுதியில் நீர்மட்டம் அளவிடும் கருவி இடது புறத்திலும், இறந்து போன மீன் வலது புறத்திலும் காணப்படுகின்றது.

அண்மைய வருடங்களில் கோடைகால மழைவீழ்ச்சி எதிர்வு கூறப்பட முடியாமல் இருப்பதை வவுனியா நீர்ப்பாசன திணைக்களம் வழங்கிய மழைவீழ்ச்சி தரவுகள் காண்பிக்கின்றன. கடந்த தசாப்தத்தில் இப்பருவ காலத்தில் சராசரியாக 333 மில்லிமீட்டர்கள் மழை கிடைத்துள்ளது – இது 1961 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட சராசரியான 177 மில்லிமீட்டர்களை விட அதிகமாகும்.

எனினும், இதன் மாறுபடும் தன்மையை இச்சராசரி மறைத்து நிற்கின்றது. ஜூலை 2022 போன்ற சில மாதங்களில் அதிக மழை கிடைத்துள்ளது. இந்த வருடம் ஜூன் தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலப்பகுதி போன்ற ஏனைய மாதங்களில் எதிர்பாராத விதத்தில் வானம் வரண்டதாகக் காணப்படுகின்றது.

இந்த மழை காணப்படாதது ஜூலையில் ஏற்பட்ட எல்-நினோவின் வருகையுடன் தொடர்புபடுத்தப்பட முடியும், என்கிறார் பொன்னையா. அக்காலப்பகுதியில், விவசாயிகள் பயிரிடலை ஏற்கனவே முடித்தவர்களாகக் காணப்பட்டனர். வெப்பநிலை அதிகரித்தது, அது குளங்களின் நீர் ஆவியாதலை அதிகரித்ததுடன் அதனை ஈடு செய்வதற்கான மழைவீழ்ச்சியும் கிடைக்கவில்லை. பயிர்களைக் காப்பற்ற சாமுவேல் தொடர்ச்சியாக நீரை வழங்கினார். விரைவில், செட்டிக்குளம் நீரற்றுப் போனது.

”இவ் வருடம் மழை இன்மையால் திந்த குளத்தை மூடவே முடியவில்லை,” என்கிறார் சாமுவேல். “பல விவசாயிகளின் நெற் பயிரைக் காப்பாற்ற குளத்தின் நீர் முழுமையாக திருப்பிட வேண்டி ஏற்பட்டது.”

expand image
expand slideshow

வரைபடங்கள், மாட் ஹேனி, ஜிபிஜே

கடந்த 2016 ஆம் ஆண்டு எல்-நினோ கோடை கால மழை வீழ்ச்சியைக் குறைத்ததால் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு ஒத்ததாக இவ்வருட நிகழ்வுகள் அமைகின்றன. 2017 இல், அது 40 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட உயர் வரட்சியை ஏற்படுத்தியதுடன் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டனர். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் வவுனியாவில் வரட்சி ஏற்பட்டது.

இந்த வருடம், மீனவர் ரங்கசாமி மீன்பிடிப்பதற்காக பயிர்ச்செய்கை காலம் முடிவடையும் வரை அமைதியாகக் காத்திருந்தார். எனினும், ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் அவருக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்ட போது, குளம் வற்றியதுடன் மீன்கள் இறக்க ஆரம்பித்தன.

அவரின் சகபாடியான லோகேஸ்வரன் ராசநாயகம் பெரியபுளியங்குளத்தை இவ்வருடம் மீன்பிடி குத்தகைக்கு எடுத்திருந்தார். எனினும், அக்குளமும் வற்றி விட்டது.

“இந்தக் குளத்தில் மீன்கள் பெருக காலம் எடுக்கும் என்பதால் எனக்கு இந்தக் குளத்தில் இருந்து அடுத்த சில வருடங்களுக்கு வருமானம் கிடைக்காது,” என்கிறார் ரங்கசாமி.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா

இவ்வருடத்தின் ஆரம்பத்தில், மீனவர்கள் ஆறுமுகம் ரங்கசாமி, இடது புறம், மற்றும் சண்முகநாதான் வீரையா ஆகியோர் தமது மீன்பிடிப் படகை குளத்தில் இருந்து அகற்றுகின்றனர், இக்குளத்தில் மீன்கள் பெருக இன்னும் மூன்று வருடமாகும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

செட்டிக்குளம் கிராமத்தின் மீன் வியாபாரியான சண்முகநாதன் வீரையா நாளாந்தம் 40 கிலோகிராம்கள் (88 இறாத்தல்கள்) மீன்களை விற்பனை செய்பவராவார். தற்போது, வழங்கல் பற்றாக்குறை காரணமாக, மீன் கொள்வனவுக்காக ஏனைய வியாபாரிகளுடன் போட்டியிட வேண்டியுள்ளதுடன் ஒவ்வொரு நாளும் 15 கிலோகிராம்கள் (33 இறாத்தல்கள்) மாத்திரமே அவரால் கொள்வனவு செய்ய முடிகின்றது.

குளங்கள் வற்றுவதற்கு முன்னர் அதிகளவான மீன்களை பிடிக்குமாறு அதிகாரசபைகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன, என்கிறார் வவுனியா மாவட்டத்தின் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரியான நிசாந்தன் யோகநாதன்.

செட்டிக்குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஏனைய ஐந்து மீனவர்கள் ஏனைய வேலைகளுக்கு சென்று விட்டதாக கூறுகின்றார் ரங்கசாமி. குளம் பழைய நிலைக்கு திரும்ப மூன்று வருடங்கள் எடுக்கும் என எதிர்வு கூறும் அவர் விற்பனைக்காக கத்தரி பயிரிட ஆரம்பித்துள்ளார்.

“குளம் பழையபடி மாற அதிக காலம் எடுக்கும்,” என்கிறார் அவர். “நான் பயிர்செய்கையைத் தான் இனி முழுவதுமாக நம்பியுள்ளேன்.”

தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இன் அதீக் சம்சுதீன் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தார்.