Sri Lanka

பேரழிவுச் சூறாவளியால் நிலையற்றுத் தடுமாறும் விவசாயிகள்

தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்தை மூழ்கடித்த வெள்ளத்தை மோசமாக்கியது. இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பிறகும் தங்களைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும்.

Read this story in

Publication Date

Devastating Cyclone Leaves Farmers on Unsteady Ground

பாஷ்னா அலிஸ்டன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

விஜயசேகரம் சந்திரவதனா டிசம்பர் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் சூறாவளியின் போது வெள்ளத்திலெ மூழ்கியிருந்த தனது நெல் வயல்களில் உரத்தை விசுருகிறார்.

Publication Date

அல்லைப்பிட்டி, இலங்கை – லோகநாதன் விஜயமோகன் ஏற்கனவே தனது உடைமைகள் அனைத்தையும் இரண்டு முறை இழந்துவிட்டார்.

முதன்முறையாக 1990 ல் அவர் இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சென்ற போது இழந்தார். இரண்டாவது முறையாக 2006 ல், போர் மீண்டும் அவரை வெளியேற கட்டாயப்படுத்திய போது இழந்தார்.

டிசம்பர் தொடக்கத்தில், அவர் மீண்டும் எல்லாவற்றையும் இழந்தார். இந்த முறை, புரேவி சூறாவளி அவரது 2 ஹெக்டேயர் (5 ஏக்கர்) நெல் வயல்களின் மீது ஒரே நாளில் குறைந்த பட்சம் 245 மில்லிமீட்டர் (சுமார் 10 அங்குலங்கள்) மழை பெய்து, அவரது வயல்களை பயனற்றதாக மாற்றியது.

அது, “முன்னெப்போதும் நடைபெற்றிராத ஒரு பேரழிவு” என்று அவர் கூறுகிறார்.

இந்தப் புயல் குறைந்த பட்சம் 620 ஹெக்டேயர் (1,532 ஏக்கர்) நெல் வயல்களை அழித்து இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 25,500 குடும்பங்களையும் 85,139 மக்களையும் பாதித்ததாக யாழ்ப்பாண மாவடட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புரேவி சூறாவளி இரண்டு பேரைக் கொன்றதுடன், 3,084 வீடுகளை ஓரளவு சேதப்படுத்தியதாகவும், மேலும் 96 வீடுகளை முற்று முழுதாகத் தரைமட்டமாக்கியதாக மாகாண விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புரேவி சூறாவளி பல ஆண்டுகளாக மீண்டும் கட்டியெழுப்ப உழைத்த விவசாயிகளின் வாழ்க்கையைத் தலைகீழாக்கியது. அத்துடன் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களின் தொடர் அபாய விளைவுகள் ஒரு தசாப்தத்தில் ஒரு முறை ஏற்படும் புயலின் சேதத்தை அதிகரித்த ஒரு பிராந்தியத்தில் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை இது வெளிப்படுத்தியது.

expand image
expand slideshow

பாஷ்னா அலிஸ்டன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சங்கரப்பிள்ளை ரவீந்திரன் தனது வெள்ளம் நிறைந்த நெல் வயல்களில் நிற்கிறார். எதிர்பாராத வானிலை தனது ஒரு வாழ்க்கைச் சம்பாத்தியத்தைத் தடுக்கும் என்று அவர் கவலைப்படுகிறார்.

விஜயமோகன் யாழ்ப்பாணத்தின் வேலனைத் தீவில் 2,300 பேர் வசிக்கும் கரையோர கிராமமான அல்லைப்பிட்டியில் வசிக்கிறார். இந்தக் கிராமம் 26 ஆண்டுகால யுத்தத்தின் போது பெரும் கொந்தளிப்பைக் கண்டது. இந்த யுத்தம் 1990 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மக்களை வேறு இடங்களுக்குச் செல்ல நிர்பந்தித்ததாக அல்லைப்பிட்டி விவசாயிகள் அமைப்பின் செயலாளர் ராமகிருஷ்ணன் சந்திரா கூறுகிறார். போர் 2009 ல் முடிவடைந்ததிலிருந்து, அல்லைப்பிட்டி மக்கள் சமாதானத்தை அனுபவித்து வருவதாக சந்திரா கூறுகிறார். இப்போது, விவசாயிகள் இயற்கையின் சீற்றங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்.

போர் 2009 ல் முடிவடைந்ததிலிருந்து, அல்லைப்பிட்டி மக்கள் சமாதானத்தை அனுபவித்து வருவதாக சந்திரா கூறுகிறார். இப்போது, விவசாயிகள் இயற்கையின் சீற்றங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்.

ஊர்காவற்துறை மற்றும் வேலனை பிரதேச செயலக பிரிவுகளில் 931 விவசாயிகள் 770 ஹெக்டேயர் (1,903 ஏக்கர்) பரப்பளவில் 2020 ஆம் ஆண்டில் நெற்செய்கையில் ஈடுபட்டதாக வேலனை விவசாய சேவை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 126.5 ஹெக்டேயர் (313 ஏக்கர்) அழிக்கப்பட்டதாக இந்த மையம் கூறுகிறது.

விவசாயிகள் அமைப்பின் தலைவராக இருந்த தனது 13 ஆண்டுகளில் “சில சந்தர்ப்பங்களில், அசாதாரண வானிலை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது” என்று சந்திரா கூறுகிறார். “2020 போன்ற பேரழிவை வேறு எந்த வருடமும் பார்த்ததில்லை.”

டிசம்பர் 1-6 வரை சுமார் 630 மில்லிமீட்டர் (25 அங்குல) மழை பெய்தது. இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான புயலாக இருந்தது, மேலும் இது வெள்ளத்துடன் சக்திவாய்ந்த காற்றையும் உயர் அலைகளையும் ஏற்படுத்தியது.

காடழிப்பு, கடற்கரை மணல் அகழ்வு மற்றும் நதிப் படுக்கைகளில் சட்டவிரோதமான கட்டுமானங்கள் ஆகியவை வெள்ளத்தை மோசமாக்கியதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிராந்திய வானிலை கண்கானிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி தர்மரதங்கம் பிரதீபன் கூறுகிறார்.

இவை இலங்கையில் புதிய பிரச்சினைகள் அல்ல. கடற்கரையோர மணல் அகழ்வானது 2004 ல் சுனாமியின் விளைவுகளை அதிகப்படுத்தியது. மேலும் 2010 முதல் 2019 வரை, யாழ்ப்பாணம் பெற்றதை விட ஐந்து மடங்குக்கும் அதிகமான காடுகளை இழந்ததாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

expand image
expand slideshow

பாஷ்னா அலிஸ்டன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

டிசம்பர் தொடக்கத்தில் புரேவி சூறாவளி யாழ்ப்பாணம் வழியாகச் சென்ற பின்னர் அவர் இழந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக விஜயசேகரம் சந்திராவதனா பாய்களை விற்க வேண்டும்.

இதே வேளை, இலங்கையின் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நதிகள் சட்டவிரோதமான மணல் அகழ்விற்குள்ளாகியுள்ளன. இவ்வாறு பெறப்படும் மணல் பிரதானமாக கட்டுமானத்திற்காகப் பயன்படுததப் படுகின்றது, அத்துடன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மணலில் பாதிக்கும் அதிகமான அளவு சட்டவிரோத மூலங்களிலிருந்தே பெறப்படடதாக நீர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வலையமைப்பான குளோபல் வாட்டர் பார்ட்னர்ஷிப் அறிக்கை தெரிவிக்கின்றது.

இலங்கை நீர் கூட்டாண்மை என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தின் படி சட்டவிரோத மணல் அகழ்வானது ஆற்றங்கரைகளை அழிக்கிறது, உயிர்ப் பன்முகத் தன்மையைக் குறைக்கிறது, நிலச்சரிவுகளுக்கு வழிவகிக்கின்றது, அத்துடன் சமூகங்களை வெள்ளத்தால் அதிகமான பாதிப்புக்குள்ளாக்குகிறது.

நெல் விவசாயிகள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் பயிரிடத் தொடங்குவார்கள். அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக, 51 வயதான விஜயமோகன், உணவுப் பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படுவதாகவும், அது தனது வழக்கமான 3 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடுவதற்குப் பதிலாக 2020 ஆம் ஆண்டில் 2 ஹெக்டேயர் (5 ஏக்கர்) நிலப்பரப்பில் பயிரிடத் தூண்டியதாகவும் கூறுகிறார்.

பயிரிட ஆரம்பித்தபோது மழை இருக்கவில்லை என அவர் கூறுகிறார். ஆனால் இறுதியில் மழை வந்தது. “நாங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைந்தோம்.”

அதன் பின்னர் சூறாவளி வந்தது.

“எல்லாம் இப்படி அழிந்துவிடும் என்று நாங்கள் ஒரு போதும் நினைக்கவில்லை,” என திருமணம் முடித்து மூன்று குழந்தைகளையுடைய விஜயமோகன் கூறுகிறார். “என் குழந்தைகளை வளர்ப்பதற்கு நான் என்ன சிரமங்களைத் தாங்குகிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.”

மஞ்சள் விவசாயிகளின் நாட்டில் பந்தயம் கட்டும் அதிகாரிகள் கதைகளை வாசிக்க கிளிக் செய்யவும்

அவர் தனது குழந்தைகளின் பள்ளி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். அத்தடன் 350,000 இலங்கை ரூபாய் ($1,790) வங்கிக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்தப் போகிறார் என்பதும் அவருக்குத் தெரியாது.

மற்றொரு விவசாயியான இரு பிள்ளைகளின் குடும்பத் தலைவித் தாயான விஜயசேகரம் சந்திரவதனா 2 ஹெக்டேயர் (5 ஏக்கர்) நெல் வயல்களை பயிரிட்டார். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை அரிசியை அவரால் அறுவடை செய்ய முடியும், இதனால் அவர் 250,000 ரூபாயைச் ($1,279) சம்பாதிப்பார்.

நெற்பயிர்ச்செய்கை அவரது குழந்தைகளின் செலவுகளைக் கவனித்துக்கொள்ள பணத்தை வழஙெகியது. அத்துடன் வயது கூடிய குழந்தையின் பள்ளிப்படிப்புக்கும் நிதியளித்தது. டிசம்பரின் வானிலைப் பேரழிவானது அவரது அந்த வருமானத்தை இல்லாமல் செய்து விட்டது. இப்போது, மாலை நேரங்களில், அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க வீட்டில் பாய்களை விற்கிறார்.

தனது நெற்பயிர்ச் செய்கையைத் தொடங்க அவர் எடுத்த கடனை மீளச் செலுத்த முடியாமல் போய்விடுமோ என அவர் கவலைப்படுகிறார்.

“இந்த ஆண்டின் நெற்செய்கை எனக்கு மிகுந்த விரக்தியையும் பொருளாதாரக் கஷ்டத்தையும் அளித்துள்ளது” என்று சந்திரவதனா கூறுகிறார்.

அறுபத்து மூன்று வயதான சங்கரப்பிள்ளை ரவீந்திரனுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் பாடசாலையில் கல்வி கற்கின்றனர். தனது வயதில், எதிர்பாராத வானிலை (மாற்றங்கள்) அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் போதுமான வருமானத்தையும் தடுக்கும் என்று அவர் அஞ்சுகிறார்.

“மக்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும்போது வங்கிகள் காப்புறுதி வழங்குகின்றன. ஆனால் இது போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட மாட்டாது என அவர்கள் கூறுகிறார்கள்” என்கிறார் அவர்.

அரசாங்கம் இன்னும் அல்லைப்பிட்டி விவசாயிகள் குறித்த தரவுகளை சேகரித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 12,500 ரூபாய் (64 டாலர்) நஷ்ட ஈடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் கிராமிய பொருளாதார விவகார அமைச்சின் விவசாய அபிவிருத்தி அதிகாரி நாகேந்திரம் முருகதாஸ் கூறுகிறார்.

அந்த நஷ்ட ஈட்டு நிதியை அரசாங்கம் எப்போது செலுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அப்பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கும் அதேவேளை அவர்கள் 2021 பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

நெற்செய்கையைக் கைவிடுவது ஒரு தெரிவு அல்ல என விஜயமோகன் கூறுகிறார்.

“நாங்கள் நெற்செய்கையைக் கைவிட்டால் குடும்பத்தின் வருமான ஆதாரம் என்னவாக இருக்கும்?” அவர் கேட்கிறார். “இந்த ஆண்டும் ஒரு பேரழிவை எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன நடக்கும் என்று யோசிக்க நாங்கள் பயப்படுகிறோம்.”

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட பஸ்னா அலிஸ்ரன், குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர், ஷிஹார் அனீஸ், ஜிபிஜே.