Sri Lanka

பொருளாதார நெருக்கடியில் பட்டினி, மந்தபோஷணையை எதிர்கொள்ளும் இலங்கையின் குழந்தைகள்

ஒரு சத்தான உணவின் விலை 156 சதவீதம் உயர்ந்துள்ளது, மேலும் பல குடும்பங்களுக்கு, புரதம், மாப்பொருள், இரும்பு மற்றும் கல்சியம் போன்ற அடிப்படை ஊட்டச்சத்துக்கள் ஆடம்பரமாக மாறியுள்ளன.

Read this story in

Publication Date

Amid Economic Crisis, Sri Lanka’s Children Face Hunger, Malnutrition

தயாழினி இந்திரகுலராசா

சுபானி வினோதரன், இலங்கையின் முகத்தான்குளத்தில் உள்ள தனது வீட்டில், எடை குறைவாக இருக்கும் தனது 1 வயது மகனை வைத்துக்கொண்டு வாழைத்தண்டு கறி தயார் செய்கிறார்.

Publication Date

முகத்தான்குளம், இலங்கை – செல்வம் நிறைந்த இலங்கையர்களின் வீடுகளை ஒரு நாள் சுத்தம் செய்த பிறகு, வினோதரன் சுபானி இரவு உணவிற்காக தனது குடும்பத்தினரிடம் விரைகிறார். கடந்த சில மாதங்களாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதால், ஒவ்வொரு நாளும் தனது மூன்று இளம் குழந்தைகளுக்கு உணவளிக்க ஒரு போராட்டம் போல் உணர்கிறாள். வினோதரனின் கொத்தனார் கணவர் தனது வேலையை இழந்தார். 28 வயதான வினோதரன், தோட்ட மற்றும்  துப்புரவாக்கும் வேலைகளைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் மளிகை பொருட்கள் நகைகளைப் போன்று மிகவும் விலை உயர்ந்தவை. அவளது குடும்பம் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தியது. குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டடுமே முட்டை கிடைக்கும். குழந்தைகளுக்கு தேவையான காய்கறிகளும், சாதமும் மட்டுமே இருக்கும் சில சமயங்களில் வினோதரன் பசியோடு தூங்குகிறார்.

அவளது இரண்டு இளைய குழந்தைகளில் திரிபுகள் தெளிவாகத் தெரிகின்றன. அவர்களின் கைகள் மற்றும் கால்கள் குச்சிகள் போல மெல்லியதாக இருக்கின்றன. அவரது 1 வயது மகனின் எடை 6.5 கிலோகிராம் (14 இறாத்தல்கள்), ஆனால் அவர் 10 கிலோகிராம் (22 இறாத்தல்கள்) எடையுடன் இருக்க வேண்டும். அவளுடைய இரண்டு வயது மகளின எடையும் அதிகம் இல்லை. அவளது குடும்பம் இலங்கையின் வட மாகாணத்தில், நாட்டின் வணிக மையமான கொழும்பிலிருந்து வடக்கே சுமார் 260 கிலோமீட்டர் (162 மைல்) தொலைவில் உள்ள குளங்கள் மற்றும் வயல்களுக்கு மத்தியில் வாழ்கிறது. அவளது சமையலறையில் நின்று கொண்டு, வினோதரன் வாழைத்தண்டு கறி மற்றும் சாதம் செய்ய அடுப்பைப் பற்றவைக்கிற வேளை அவளது இளைய மகள் அவளது இடுப்பைச் சுற்றிக் கொண்டு அழுகிறாள். “என்ன செய்ய?” கவலை தோய்ந்த கண்களுடன் சொல்கிறாள். “ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவளிப்பது எங்களுக்கு கடினமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நாங்கள் எப்படி ஊட்டச்சத்து உணவுகளை வழங்க முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.’

அதிக கடன் சுமை, வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பும் பணம் குறைவடைந்ததன் விளைவாக இந்த வருடத்தின் பெரும்பலான காலப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி இலங்கையை வாட்டி வதைத்துள்ளது. மக்களின் வருமானம் வீழ்ச்சியடைந்து பணவீக்கம் அதிகரித்ததால் சமையலறையில் அலமாரிகள் காலியாகி குழந்தைகளின் உணவை கொள்ளையடித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7.5 சதவீதமாக இருந்த மிதமான எடை குறைவாக உள்ள 5 மற்றும் அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொதுவாக, குழந்தைகள் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை விட குறைவான வைட்டமின்கள் மற்றும் கனியபொருட்களையே சாப்பிடுகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் கொண்டைக்கடலை, மீன், பால் மற்றும் முட்டை வழங்கும் பாடசாலை மதிய உணவுத் திட்டத்திற்கான நிதியையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

தயாழினி இந்திரகுலராசா

அதிகரித்து வரும் பணவீக்கம் இலங்கை முழுவதும் சமையலறை அலமாரிகளை காலி செய்கிறது. செட்டிகுளத்தில் உள்ள சுரேந்திரன் கடையில், மக்கள் மிகக் குறைந்தளவு பொருட்களையே வாங்குகிறார்கள். முன்பு ஒவ்வொரு வாரமும் பொருட்களை வாங்கி மீள நிரப்பும் உரிமையாளர், இப்போது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே வாங்குகிறார்.

ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக உணவுத் திட்டம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு மற்றும் பண உதவிகளை வழங்கியுள்ளதுடன், பசியுள்ள மக்களுக்கு உணவளிக்கும் புதிய திட்டங்களை இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஆனால் இலங்கையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள சரியான முறையில் உணவளிக்கப்படாவிட்டால் குழந்தைகளுக்கான உதவி மிகவும் தாமதமாக வரலாம். ஏற்கனவே நான்கில் ஒரு பகுதியினர் முகம் கொடுக்கும் உணவுப் பாதுகாப்பின்மையால் குழந்தைகளுக்கு சரியான முறையில் உணவளிக்கப்படாவிட்டால் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி ஆபத்தில் இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர்களால் “தங்க ஜன்னல்” என்று அழைக்கும் காலமான ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டாவது பிறந்த நாள் வரையான சாப்பாடு அவர்களின் நல்வாழ்வுடன் நெருக்கமாக தொடர்புபட்டது. ஊட்டச்சத்து குறைபாடு நோயெதிர்ப்புச் சக்தயை பலவீனப்படுத்துகிறது, மூளை வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் நீண்ட காலத்தில் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் அகால மரணத்திற்கான அபாயத்தை அதிகரிக்கும். இலங்கையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறுவர் மருத்துவ விரிவுரையாளரான வைத்தியர் விஷ்ணுகுமார் சிவபாதம் இது பற்றிக் கூறும் போது;”நமது சமூகத்தில் சிறந்த தலைமுளறயாக மாறுதற்கான வாய்ப்புகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சற்று குறைவாக இருப்பது கவலைக்குரிய விஷயம்,” என்கிறார்.

ஆனால், குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களைப் பெறுவது நாளுக்கு நாள் கடினமாகிறது. ஆரோக்கியமான மூளை மற்றும் எலும்புகளின் கட்டுமானத் தொகுதிகளான புரதம், மாப்பொருள், இரும்பு மற்றும் கல்சியம் நிறைந்த சத்தான உணவின் விலை 156 சதவீதம் உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை கூறுகிறது. இந்த உணவுகள் ஆடம்பரப் பொருளாக மாறியுள்ளது. முகத்தான்குளத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள செட்டிகுளம் என்ற சிறிய நகரத்தில் சுரேந்திரன் முருகன் மளிகைக் கடை நடத்தி வருகிறார். விலை அதிகரித்ததால், அவரது கடையில் விற்பனை குறைந்துள்ளது. அவர் வழமையாக ஒவ்வொரு வாரமும் விற்பனையால் காலியான பொருட்களை வாங்கி நிரப்புவார். ஆனால் இப்போது மக்கள் மிகக் குறைவாக வாங்குவதால் ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே அவ்வாறு நிரப்புவதாக அவர் கூறுகிறார்.

ஒரு நாள் அருகிலுள்ள சண்முகபுரத்தில் , பத்மநாதன் அரசிலக்குமாரி தனது 2 வயது மகனுக்கு ஊட்டுவதற்காக பருப்புடன் சோற்றைப் பிசைகிறாள். குறுகுறுப்புக் கண்களுடன் விரல்களை வாயினுள் வைத்துக்கொண்டிருந்த அவனது எடை 7 கிலோகிராம் (15 இறாத்தல்கள்) ஆகும். இது அவன் கொண்டிருக்க வேண்டிய எடையை விட 2 கிலோகிராம் (4 இறாத்தல்கள்) குறைவாகும். அவளது கணவர் இப்போது அரிதாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கொத்தன் வேலை செய்கிறார்; அவள் வேலை எதுவும் செய்யவில்லை. சமீபத்திய மாதங்களில், இந்தத் தம்பதியினர் ஒரு நாளைக்கு அவர்களின் மகன் மூன்று வேளை சாப்பிடுவதற்காக அவர்கள் இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டுள்ளனர். பால் விலை அதிகம் என்பதால் தேநீர் மட்டுமே குடிக்கிறார்கள். அப்படியிருந்தும், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் முளைக்கும் கீரைகளை வாங்குவதற்கு அவர்கள் சில சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரரிடம் பணத்தைக் கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு முடியாவிட்டால் அருகில் உள்ள ஆற்றில் மீன் பிடிக்கின்றனர். “என்ற பிள்ளைக்கு முட்டை என்டா பிடிக்கும், ஆனால் எனக்கு வாங்கிக் குடுக்க வசதி இல்லை. வைத்தியர்கள் பிள்ளைக்கு குடுக்க குழந்தைப் பால் மா எழுதித் தந்தாங்க. அதை வாங்கிக் குடுக்க  எங்கள்ட காசில்ல,” என்கிறார் 32 வயதான.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா

பத்மநாதன் அரசகுமாரி, இலங்கையின் சண்முகபுரத்தில் உள்ள தனது வீட்டில் தனது 2 வயது மகனுக்கு உணவு தயாரிக்கிறார்.

பத்மநாதன். “ஒவ்வொரு மாதமும் நிறை பாக்கிற கிளினிக்ல பிள்ளைட நிறை கூடாததால நான் குறுகி நிக்கிறன், ” என்று கூறும்போது அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிகின்றன.

அதிகரித்து வரும் பட்டினியால் இலங்கை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சர் கலாநதி கெஹலிய ரம்புக்வெல்ல ஒரு நேர்காணலின் போது, அரசாங்கம் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்காக “வளர்ப்பு பெற்றோர் திட்டத்தை” அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார். “அடிப்படையில், சில பெற்றோர்கள் அல்லது ஆதரவாளர்கள் அடுத்த மூன்று மாதங்களில் உணவு வழங்கல் மேம்படும் வரை குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள் மற்றும் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்வார்கள்,” என்று அவர் கூறுகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஆற்றிய உரையில் உணவு தேவைப்படும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பண உதவி வழங்குவதாக உறுதியளித்தார். சிவில் சமூகக் குழுக்கள் கூட, உணவு விநியோகம் மற்றும் வீட்டுத் தோட்டங்களைத் தொடங்க விரும்பும் மக்களுக்கு விதைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குகின்றன.

இன்னொரு இடமான சண்முகபுரத்தில், ஜோன் தோமஸ் பவிதா தனது 1 வயது மகளுக்கு பப்பாளி துண்டுகளை மதிய உணவாக ஊட்டுகிறார். கன்னத்தில் பப்பாளி சாறு ஓடும்போது சிறுமி சிரிக்கிறாள். ஜோன் தோமஸ் , 30, தனது கணவரிடமிருந்து சிறிய உதவியையே பெறுகிறார். அவர் தொழில் செய்யவில்லை, ஆனால் அவர் அவர்களின் மகளைக் கவனித்துக் கொள்ளவும் மாட்டார். இது காரணமாக ஜோன் தோமஸாலும் தொழில் செய்ய முடியாது. கௌபி மற்றும் அவரை வகைகளை அவர்களால் வாங்க முடியாத அளவுக்கு பணம் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. அவர்களின் மகள் சாதாரண எடையுடன் இருக்கும்போது, அவளுடைய இதயத்தில் உள்ள துளையை சரிசெய்ய சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தார். அவளுக்கு சத்தான உணவுகளை உண்ணாமல் இருப்பது அவள் குணமடைந்து மீணடு வருவதைப் பாதிக்கலாம் என ஜோன் தாமஸ் அஞ்சுகிறார். அண்மையில், அவள் ஒருபோதும் நினைக்காத ஒரு காரியத்தைச் செய்தாள்: அவள் தனது மோதிரத்தையும் மாலையையும் ஒரு அடகுக் கடைக்கு எடுத்துச் சென்று அதில் கிடைத்த பணத்தை தன் சமையலறைக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கப் பயன்படுத்தினாள்.