SPECIAL REPORT

பஞ்சம் அண்மிக்கும் நிலையில், இலங்கையர்கள் வீட்டுத்தோட்டங்களை நாடுகின்றனர்

குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வீட்டுத்தோட்டங்கள் உதவுகின்றன, எனினும் அவை தேசிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக அமையுமா?

Read this story in

Publication Date

Publication Date

மன்னார், இலங்கை – இந்த தீவு நாடு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் தடுமாறும் நிலையில், பணவீக்கம் அதிகரித்து உணவுப் பொருட்களின் விலைகள் எட்ட முடியாத உயரத்தை தொட்டுள்ள நிலையில், குடும்பங்கள் தமது உணவு உட்கொள்கையை குறைத்து பிள்ளைகள் பசியால் வாடும் நிலையில், கொள்கை வகுப்பாளர்கள் இந்த இடைவெளிகளை அகற்றும் வீட்டுத்தோட்டத்தில் தமது கவனத்தை செலுத்துவது அதிகரித்து வருகின்றது. பட்டினி பரவிச்செல்வதை முன் தடுக்கும் எதிர்பார்ப்பில் அண்மைய மாதங்களில் அரச அதிகாரிகள் மற்றும் ஆதரித்து வாதிடும் குழுக்கள் விதைகள் மற்றும் நாற்றுக்களை வழங்குதல், வீட்டுத்தோட்டத்தை ஆரம்பிப்பதற்கான நிதியுதவி வழங்குதல் மற்றும் பயிர்ச்செய்கை பாடநெறிகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஒரு காலப்பகுதியில், அரச பணியாளர்கள் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் நோக்கில் பயிர்ச்செய்கையில் ஈடுபட அரசாங்கம் வெள்ளிக்கிழமைகளில் அவர்களுக்கு விடுமுறையும் வழங்கியது.

இவ்வாறான மோசமான காலப்பகுதியில், குறிப்பாக, இலங்கை குடும்பங்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட தகவல் சேகரிப்பு ஒன்றில் பதில் வழங்கியவர்களில் அரைவாசிப் பேர் மாத்திரமே பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான நிலத்துக்கான அணுகல் தமக்கு உள்ளதாக தெரிவித்த நிலையில், பஞ்சத்தை தடுப்பதற்கு வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடுவது துப்பாக்கி ரவை ஏற்படுத்திய காயத்துக்கு துணிக்கட்டு போடுவது போன்று போதுமான விடயம் அல்ல என்ற உணர்வை ஏற்படுத்தும். எனினும், எதையுமே செய்யாதிருப்பது மிக மோசமானது என ஆதரித்து வாதிடும் நபர்கள் கூறுகின்றனர். “உணவுப் பாதுகாப்பு என்பது இன்னொருவரால் கையாளப்படுகின்ற விடயம் அல்ல,” என்று கூறுகிறார் உணவு உற்பத்தி மற்றும் பட்டினி முன் தடுப்பு என்பவற்றுக்காக செயற்படும் மரியாம்பிள்ளை செல்வின் இரேணியஸ். “மக்கள் சமூகம் தங்களுக்குத் தேவையான உணவை தாமே உற்பத்தி செய்ய வேண்டும். நாங்களே உற்பத்தி செய்து நாங்களே சேமித்து நாங்களே களஞ்சியப்படுத்தி நாங்களே பதனிட்டு நாங்களே பங்கிட்டு நாங்களே விலை தீர்மானித்து எங்கள் இருப்பை நாங்களே உறுதிப்படுத்த வேண்டும்,” என அவர் மேலும் கூறுகின்றார்.

அதிகரித்த கடன் சுமை, சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பவற்றின் காரணமாக இலங்கை 1940 களில் சுதந்திரம் அடைந்த பின்னர் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியினால் தளர்ந்து வருகின்றது. பாரிய ஆர்ப்பாட்டங்களின் பின்னர் ஜனாதிபதி பதவி துறந்தார், எனினும் தலைமைத்துவ மாற்றம் உணவுப் பொருட்களின் விலையுயர்வு மற்றும் வருமானக்குறைவு என்பவற்றை தடுக்கவில்லை, – இவை இரண்டும் குறை போசாக்குக்கு மூலங்களாக அமைகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்பான உலக உணவுத்திட்டம் பண உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது, இவ்வருடம் 3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவும் திட்டத்தினை அது கொண்டுள்ளது, எனினும் கிட்டத்தட்ட இந்த எண்ணிக்கையின் இரு மடங்கானவர்கள் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பற்ற நிலையின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் உதவி வழங்கும் அமைப்பான சேவ் த சில்றன் நிறுவனம் மேற்கொண்ட தகவல் சேகரிப்பு ஒன்றில் 3 இல் 2 இலங்கைக் குடும்பங்கள் தமது குடும்பங்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளன. தமது பிள்ளைகள் உட்கொள்ளும் உணவை குறைந்துள்ளதாக 3 இல் ஒரு குடும்பம் குறிப்பிடுகின்றது. சில குடும்பங்கள் உணவை அடையும் இறுதி முயற்சிகளான கடன் வாங்குதல், பிள்ளைகளை பாடசாலைகளில் இருந்து விலக்குதல், தமது வீடுகளை விற்றல், அல்லது பிச்சையெடுத்தல், களவில் ஈடுபடல் அல்லது பாலியல் தொழிலுக்கு செல்லல் போன்ற விடயங்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றன.

நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள அதிகம் பயன்படுத்தப்படும் தீர்வாக வீட்டுத்தோட்டங்கள் அமைகின்றன: உதாரணமாக, கடந்த நூற்றாண்டில் இடம்பெற்ற உலக யுத்தங்களின் போது ஐக்கிய அமெரிக்காவில் வெற்றி வீட்டுத்தோட்டங்கள் என அழைக்கப்பட்ட வீட்டுத்தோட்டங்கள் வெற்றிகரமானவையாக அமைந்திருந்தன. இலங்கையின் சிவில் யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், பல தசாப்தங்கள் நீடித்த முரண்பாட்டினால் தமது வருமானத்தை அல்லது நிலத்தை இழந்த பல குடும்பங்கள் வாழும் நாட்டின் வடக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான வீட்டுத்தோட்டங்களை அமைப்பதற்கு அதிகாரிகள் உதவினர். குடும்பம் ஒன்றின் ஒட்டுமொத்த போசணைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத போதிலும் அவை “மோசமான உணவு சூழ்நிலைகளில் காணப்படும் பாதுகாப்பு வலையாக” நிரூபிக்கப்பட்டுள்ளதாக IOP மாநாட்டு தொடரின் பூமி மற்றும் சூழல் விஞ்ஞானம் என்ற பிரிவின் கல்விசார் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைபடங்கள், மாட் ஹேனி, ஜிபிஜே

வரைபடங்கள், மாட் ஹேனி, ஜிபிஜே

வரைபடங்கள், மாட் ஹேனி, ஜிபிஜே

“பட்டினியை எதிர்கொள்வதற்காக வீட்டுத்தோட்டங்கள் செய்வதும் ஒரு அங்கம்,” எனக் கூறுகிறார் மீன்பிடி மற்றும் விவசாயம் என்பன மேற்கொள்ளப்படும் மன்னார் பிராந்தியத்தை உள்ளடக்கும் நாட்டின் வடக்கு மாகாணத்தின் விவசாய பணிப்பாளரான செல்வநாயகம் உதயச்சந்திரன். “பயறு கௌபி நிலக்கடலை என்பவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறோம். இந்த உப உணவு உற்பத்தி பட்டினியைப் போக்குவது மட்டுமல்ல போசாக்கான உணவுமாகக் கொள்ளப்படும்,” என மேலும் கூறுகின்றார் உதயச்சந்திரன்.

இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் தேவையில் உள்ள இலங்கையர்களுக்கு உதவும் அரச முகவர் அமைப்பான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கத்தரி, தக்காளி மற்றும் ஏனைய பயிர் விதைகள் மற்றும் ஒரு சிறிய ஊக்குவிப்பு தொகை என்பவற்றை வழங்க ஆரம்பித்திருந்தது. எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறைக்கான பதில் நடவடிக்கையாக இது அமைவதாக இந்த முயற்சியை மன்னர் பகுதியில் மேற்பார்வை செய்யும் அன்ரன் செல்வகுமார் ஆரோன் துரம் கூறுகின்றார். “இன்று நாட்டின் நிலைக்கு உணவு உற்பத்திதான் முதல் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இதை ஊக்கப்படுத்துகிறோம்,” எனவும் ஆரோன் மேலும் கூறுகின்றார்.

கார்த்தீபன் இஸ்திகா இத்திட்டத்தின் ஒரு பயனாளியாவார். 27 வயது நிரம்பிய இவர் மலேசியாவில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் வெளிநாட்டு வாழ்வின் சிரமங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதால் அங்கிருந்து நாட்டுக்கு திரும்பி வந்தார். அவரது கணவர் உள்ளூர் சந்தை ஒன்றில் பணிபுரிகின்றார், எனினும், விலைவாசி அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களை வாங்கும் அவர்களின் இயலுமை குறைவடைந்து வருகின்றது. “கொண்டு வா திண்டு பாப்பம் எண்டிருந்தால் இந்த நாட்டில வாழ்றது கஸ்ரம். கணவரின் உழைப்போடு எனது உழைப்பும் சேர்ந்தால்தான் ஓரளவாவது சமாளிக்கலாம்,” என அவர் கூறுகின்றார்.

ஐந்து அங்கத்தவர்கள் உள்ள – 3 மற்றும் 1 வயது நிரம்பிய அவரின் பிள்ளைகள் மற்றும் கணவரின் தந்தை உள்ளடங்கலாக – அவரின் குடும்பத்துக்கு உணவூட்ட தனது வீட்டுத்தோட்டத்தில் உள்ள பூக்கள் மற்றும் உண்ணக்கூடிய தாவரங்களில் அவர் தங்கியுள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அவருக்கு இரண்டு தொகுதி விதைகள் மற்றும் 1,500 இலங்கை ரூபாய்கள் (கிட்டத்தட்ட 4 அமெரிக்க டொலர்கள்) பணம் என்பன கிடைத்தன – இவை தோட்டம் ஒன்றை புதிதாக அமைக்க போதாத நிலையிலும் உதவியாக அமைந்தன. அவர் பூசணி, கத்தரி, பாகற்காய் மற்றும் வாழை என்பவற்றை செய்கை பண்ணுகிறார். மேலும், இக்குடும்பம் இறால், மணலை மீன் மற்றும் செப்பலி மீன் பிடித்தலிலும் ஈடுபடுகின்றது. இந்நாட்களில் அவர்கள் அரிசியை மாத்திரமே தொடர்ச்சியாக கொள்வனவு செய்கின்றனர்.

expand image
expand slideshow

VETRICHELVI CHANDRAKALA, GPJ SRI LANKA

Seemampillai Sahayaraja harvests vegetables in his home garden in Mannar, Sri Lanka. The garden provides most of his four-person household’s meals.

நாடு சீர்குலைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த நிகழ்ச்சித்திட்டம் எவ்வளவு காலத்துக்கு முன்னெடுக்கப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை. “உள்நாட்டில் பொருளாதார நடவடிக்கை நடைபெறவில்லை. உணவு நெக்கடியைத்தீர்க்க அரசியல் பக்கத்திலிருந்து எந்தவிதமான ஆதரவும் இல்லை,” என்கிறார் சேதன விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாட்டாளரான சிவசரவணபவன் சுந்தரேஸ்வரன். இதன் காரணமாக, சிவில் சமூக குழுக்களும் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பில் இணைந்துள்ளன.

இலங்கையின் பல பாகங்களில் உயிப்பூ என்ற குழு பாடசாலைகளுக்கு ஆயிரக்கணக்கான மரவள்ளி வெட்டுத்துண்டுகளை அன்பளிப்பு செய்தது; வேராகிய கிழங்கில் மாப்பொருளை சேமிக்கும் இந்த மரக்கறி பசி போக்குவதாகவும் இலகுவாக செய்கை பண்ணக்கூடியதாகவும் காணப்படுகின்றது. வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற இன்னொரு குழு மரவள்ளி மற்றும் வாழை என்பவற்றை விநியோகம் செய்கின்றது. அண்மையில், வடகிழக்கில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் இக்குழு 5,000 மரவள்ளி வெட்டுத்துண்டுகளை வழங்கியது. அவற்றை சில மணி நேரங்களுக்குள்ளேயே மக்கள் எடுத்துக்கொண்டனர். “பஞ்சம் வரப்போவதைக்குறித்து மக்கள் உண்மையாகவே பயப்படத் தொடங்கிவிட்டார்கள்,” என்கிறார் இக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான யேசுதாஸ் லக்சிதரன்.

உணவுப்பொருட்களை கொள்வனவு செய்ய வசதியற்ற குடும்பங்களுக்கு வீட்டில் வளர்க்கப்படும் பயிர்களால் போசணையை வழங்க முடியும். 2010 களின் ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் பிராந்திய பல்கலைக்கழக கலாநிதிப் பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் இத்தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் இடையே தகவல் சேகரிப்பு ஒன்றை நடத்தினார். சராசரியாக ஒவ்வொரு வீட்டுத்தோட்ட செய்கையாளரும் ஒரு எக்கருக்கும் குறைவான நிலத்தில் ஒன்பது வகையான பயிற்செய்கைகளை மேற்கொள்கின்றனர், கத்தரி, வெண்டி, பச்சை மிளகாய் மற்றும் பயற்றை போன்ற இப்பயிர்கள் “புதிய மற்றும் போசணைப் பதார்த்தங்கள் செறிந்த” உணவுப்பொருட்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன, மேலும் சிலவேளைகளில் மேலதிக வருமானத்தையும் அவர்கள் ஈட்டுகின்றனர் எனத் தெரிய வந்தது.

மன்னாரைச்சேர்ந்த 60 வயது நிரம்பிய சீமாம்பிள்ளை சகாயராஜா தனது கிராம அலுவலர் பதவியில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தனது நேரம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றின் பெரும்பகுதியை தனது தோட்டத்திலேயே செலவு செய்கின்றார், அவரின் தோட்டத்தில் தக்காளி பழுக்கின்றது, ரோசாக்களின் வாசம் காற்றில் நிரம்பியுள்ளது மற்றும் அண்மையில் பெய்த மழையால் மண் ஈரலிப்பாக உள்ளது. நான்கு உறுப்பினர்களை கொண்ட அவரின் குடும்பத்தின் உணவின் பெரும்பகுதியை இத்தோட்டமே வழங்குகின்றது, கிழங்குகள் அல்லது கரட்டை வாங்கும் தேவை அரிதாகவே ஏற்படுகின்றது. “எங்கள் வீட்டுத்தோட்டம் மற்றும் வயலில் விதைக்கும் நெல் என்பவற்றால் எங்கள் குடும்பம் பட்டினி இல்லாமல் வாழ முடியும்,” என்கிறார் சகாயராஜா – குறைந்த பட்சம் தற்போது அவரால் சமாளிக்க முடிகின்றது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரத்தை மையமாகக் கொண்ட வெற்றிச்செல்வி சந்திரகலா, குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

GPJ இன் அதீக் சம்சுதீன் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தார்.

Related Stories