Sri Lanka

விரக்தி, மரணம் மத்தியில் ஆபத்தான கடல்களில் வேலை தேடும் இலங்கையர்

சட்டவிரோதமான வழிகளில் அதிகமான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். பிடிபட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு வீட்டுக்குத் திருப்பியனுப்பப்படுகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அரசாங்க கண்காணிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லாமலே திரும்புகின்றனர்.

Read this story in
Desperation and Death as Sri Lankans Seek Jobs Over Dangerous Seas

மாட் ஹேனி, ஜிபிஜே

யாழ்ப்பாணம், இலங்கை — கிரிதரன் வேணுஜா தனது நான்கு குழந்தைகளில் ஒருவரைக் கவனித்துக் கொண்டு, விற்பதற்காக மாலைகளை கோர்க்கும் போது தனது வீட்டின் முன்புறத்தில் அமர்ந்துள்ளார். அவளுடைய எண்ணங்கள் கடந்த காலத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன.

“என்னுடைய கணவரின் நினைவாக இப்ப என்னட்ட அவரின்ர ஒரு உடுப்புக்கூட இல்லை. எல்லாத்தையும் நான் அவரின்ர கடல் பயணத்துக்கு கொண்டு போகச்சொல்லி கொடுத்திட்டன்“ என்று கூறும்போது அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிகின்றன.

ஒரு வருடத்திற்கு முன்பு, வேணுஜாவின் கணவர் சுந்தரலிங்கம் கிரிதரன் உயிருடன் இருந்தார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களின் சொந்த ஊரான சாவகச்சேரியில் அவர் ஒரு வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார். ஆனால் அவர் தனது குடும்பத்தை பராமரிக்கவும் பழுதுபார்க்கும் கடையை ஆரம்பிக்கவும் கடன் வாங்கி பொருளாதார ரீதியாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்ததால் அக்கடை அவருக்கு உதவவில்லை. அதற்குப் பதிலாக மேலும் சுமையை ஏற்படுத்தியது. இதனால் கனடாவில் ஒரு வாகனம் பழுதுபார்க்கும் வேலை வாய்ப்பைப் பற்றி அவரது நண்பர் ஒருவர் குறிப்பிட்டபோது, வேணுஜாவின் கணவர் அங்கு செல்ல முடிவு செய்தார்.

இந்தத் திட்டத்தை அவர் அவளிடம் தெரிவித்தபோது, முதலில் தான் எதிர்த்ததாக வேணுஜா கூறுகிறார். அவர் தனது இளம் குடும்பத்தை விட்டு வெளியேறுவதைப் பற்றி அவள் கவலைப்பட்டாள். ஆனால் இறுதியில், அவள் அரை மனதுடன் சம்மதித்தாள். இம் முயற்சி வெற்றியளித்தால், அது அவர்களின் குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை வழங்க முடியும். அவளது கணவரின் பயணத்தை ஏற்பாடு செய்யும் முகவர்கள், அவர் கனடாவில் குடியேறியவுடன், அவரது குடும்பத்தை ஒரு வருடத்திற்குள் அங்கு கொண்டு செல்ல முடியும் என்று உறுதியளித்தனர்.

“ஒன்றும் பயப்பிடத் தேவையில்லை என்றெல்லாம் கூறினாங்க. ஆனா இப்ப எங்கட நிலைமையப் பாருங்கோ,” என்று வேணுஜா கூறுகிறார். “அவர் எங்களுக்காக உயிரைப் பணயம் வைத்திருக்கிறார்.”

ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையேயான நிறுவனமான குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் 2020 அறிக்கையின்படி 1980 களில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான இடம்பெயர்வு இலங்கைக்கு அந்நிய செலாவணியின் பெரிய ஊன்றுகோலாக உள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகள் வெளிநாட்டில் வேலை செய்ய உத்தியோகபூர்வமாக வெளியேறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது – 2022 இல் 311,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டில் வேலை செய்யச் சென்றனர். இத்தொகையானது, 2015-2019ம் காலப்பகுதியின் ஆண்டு சராசரியை விட 37 சதவீதம் அதிகமாகும்.

"ஒன்றும் பயப்பிடத் தேவையில்லை என்றெல்லாம் கூறினாங்க. ஆனா இப்ப எங்கட நிலைமையப் பாருங்கோ.“

வேலைக்காக இடம்பெயர விரும்பும் நபர்களுக்கு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் போன்ற உத்தியோகபூர்வ அமைப்புகள் இருந்தாலும், இந்த அதிகாரப்பூர்வ வழிகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1990 களின் நடுப்பகுதியில் தொழில்களுக்காக இடம்பெயர்ந்தவர்களில் 75% பேர் உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களைப் பயன்படுத்தினர் என இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) கூறுகிறது. எனினும் 2018 இல், அந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. சட்டப்பூர்வ இடம்பெயர்வு செயல்முறைகள் பற்றிய தகவலின்மையும் இந்த குறைவுக்கான ஒரு காரணமாகும்.

ஆட்சேர்ப்பு இடைத்தரகர்கள் அல்லது துணை முகவர்கள் பெரும்பாலும் ஏமாற்றும் நடைமுறைகளினால் அதிக ஆபத்தை ஏற்படுத்துவதில் பெறும் பங்கை வகிக்கின்றனர். வேணுஜா தனது கணவருக்கு உதவ முயற்சித்த முகவர் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தாரா என்பது தனக்குத் தெரியாது என்று கூறும் அதேவேளை, வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறிக் கொள்ளையடிக்கும் பயண முகவர்களுக்கு சில இலங்கையர்கள் இரையாகியுள்ளனர். அவர்கள் பெரும் பணத்தைச் செலுத்துவதுடன் ஆபத்தான கடலில் நெரிசலான படகுகளில் அபாயகரமான பயணங்களை முயற்சிக்கிறார்கள். சில நேரங்களில், அதிகாரிகள் இந்தப் படகுகளை இடைமறித்து, பயணிகளை இலங்கைக்கு நாடு கடத்துகிறார்கள். எவ்வாறாயினும், நாடு கடத்தப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் போதுமான அமைப்புகள் இல்லாதது குறித்து குளோபல் பிரஸ் ஜேர்னலுடன் பேசிய ஆதாரங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான யாழ்ப்பாண சமூக நடவடிக்கை மையத்தின் ஒருங்கிணைப்பாளரான நடராஜா சுகிர்தராஜ், இலங்கையில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஏற்கனவே வறுமை காரணமாக சட்டவிரோத குடியேற்றங்கள் நடந்தாலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்த போக்கு 2020ல் மேலும் மோசமடைந்ததாகத் தெரிவிக்கிறார்.

தனது கணவரின் விடயத்தில், முதலில் வருகை விசாவில் விமானம் மூலம் மியான்மருக்குச் செல்வதாகவும், பின்னர் சரக்குக் கப்பலில் கனடா செல்வதாகவும் முகவர்கள் தனது கணவருக்குத் தெரிவித்ததாக வேனுஜா கூறுகிறார். ஆனால் அவருக்கு மியான்மருக்கான விசா, விமான டிக்கெட் மற்றும் முகவருக்கான கட்டணம் செலுத்தப் பணம் தேவைப்பட்டது. அவர் வாகனம் பழுது பார்ப்பவராக இருந்ததால், கப்பலில் பராமரிப்பு சிக்கல்கள் ஏற்பட்டால் அவரது சேவைகள் தேவைப்படும் என்பதால், அவருடைய கட்டணத்திற்கு மானியம் வழங்குவதாக உறுதியளித்தனர். வேணுஜாவின் கணவர் தனது மோட்டார் சைக்கிளை விற்றார். அவர் 400,000 இலங்கை ரூபாயை (1,300 அமெரிக்க டாலர்கள்) உத்தியோகபூர்வ ஆவணங்களுக்காகவும், 1.6 மில்லியன் ரூபாயை (5,198 டாலர்கள்) முகவர்களுக்காகவும் செலவிட்டார்.

அவரது கணவர் வெளியேறிய நாள், அவர்களின் இளைய குழந்தையின் வயது 2 மாதங்களே என வேணுஜா கூறுகிறார். அன்று அவள் கணவன் மகிழ்ச்சியாக இருந்தார். தன்னுடைய தங்க சங்கிலியை மகளுக்கு அணிவித்த பின்னர் அவர் வெளியேறினார். அதுதான் அவள் அவரைக் கண்ட கடைசித் தடவை.

நவம்பர் 6, 2022 அன்று, வியட்நாம் கடலில் மீன்பிடிக் கப்பல் ஒன்று மூழ்கிக் கொண்டிருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்தன. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் அறிக்கையின்படி, கப்பலில் 303 இலங்கையர்கள் இருந்தனர். கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஒரு மீட்புக்கு ஏற்பாடு செய்து அவர்களைத் தற்காலிகமாக வியட்நாமில் குடியமர்த்தியது.

இலங்கை கடற்படையினர் குளோபல் பிரஸ் ஜேர்னலுடன் பகிர்ந்து கொண்ட தரவுகளின் படி மீட்கப்பட்டவர்களில் 151 பேர் டிசம்பர் 2022 இன் பிற்பகுதியிலும், மேலும் 23 பேர் 2023 ஏப்ரல் மாதத்திலும் விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஒரு சிலர் நாடு கடத்தப்படுவதை எதிர்த்ததாகவும், இருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வேணுஜா பின்னர் தகவல்கள் வந்தன. ஒருவர் தற்கொலை முயற்சியில் வெற்றியும் பெற்றார். கொழும்பில் உள்ள வியட்நாம் தூதரகம் தொலைபேசி அழைப்பில் அது தனது கணவரே என வேணுஜா பின்னர் அறிந்து கொண்டார்.

“எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியயேல. கணவர் இறந்த செய்தி கேட்ட போது என்னுடைய முடிவு வேறாக இருந்தது, ”என்று அவர் கூறுகிறார். “நான்கு பிள்ளைகளையும் நினைத்து முடிவை மாற்றிக் கொண்டேன்.”

ஆதரவளிக்காத அரசாங்கம்

சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலுள்ள உள்ளூர் வளங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சுகிர்தராஜ் இந்தப் பயணங்களில் ஈடுபடும் பலருக்கு இதில் உள்ள ஆபத்துகள் ஏற்கனவே தெரியும் எனக் கூறுகிறார். “சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற [பயணங்கள்] பற்றி அவர்களுக்குத் தெரியாமலில்லை.” ஆனால் அவர்களின் பொருளாதார சூழ்நிலைகள் அவர்களுக்கு மிகக் குறைந்த தேர்வையே விட்டு விடுகின்றன, என்று அவர் மேலும் கூறுகிறார். “பொருளாதார நெருக்கடியினால் எதுவுமே இல்லாதவன் தன்னை வாழ வைக்க மாற்று வழிகள் பலவற்றைத் தேடுவான். அதில் ஒன்றுதான் சட்டவிரோத வெளிநாட்டுப்பயணம்.“

ஆனால் வேணுஜாவின் கணவன் இருந்த அதே படகில் இருந்ததாகவும், அதிகாரிகளிடம் சிக்கலில் சிக்குவார் என்ற பயத்தில் தன்னை அடையாளம் காட்டாத யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் விற்பனை அதிகாரி – இதில் உள்ள அபாயங்கள் பற்றி தனக்கு அதிகம் தெரியாது என்று கூறுகிறார். அவர் ஒரு பெரிய சுற்றுலாக் கப்பலில் பயணம் செய்வார் என்றும், அதில் சில நபர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் மட்டுமே தான் தெரிந்து வைத்திருந்ததாக அவர் கூறுகிறார்.

இலங்கையை விட்டு வெளியேறும் முடிவிற்கு முன், அவர் ஒரு ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அவருக்குக் கிடைத்த வருமானம் போதவில்லை. அவர் ஒரு சுற்றுலா விசாவில் மியான்மாருக்கு விமானத்தில் பறந்தார். மீதமிருந்த பயணத்திற்காக அவர் 1.2 மில்லியன் ரூபாயை (3,899 டாலர்கள்) முகவர் கட்டணமாகச் செலுத்தினார். இக்கட்டணம் நபருக்கு நபர் மாறுபடும் என்று அவர் கூறுகிறார். 70 நாட்கள் மியான்மரில் இருந்த அவர் கடல் மார்க்கமாக கனடா செல்வதற்காக காத்திருந்தார். தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளை முகவர்கள் கவனித்துக் கொண்டதாக அவர் கூறுகிறார்.

மியான்மரில் உள்ள குடிவரவு அதிகாரிகளுடன் பிரச்சனையில் சிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அவரது மற்றும் பிற பயணிகளின் கடவுச்சீட்டுகளை சேகரித்த பிறகே முகவர்கள் அவரை ஏமாற்றி விட்டதற்கான அறிகுறிகள் அவருக்குப் புலப்படத் தொடங்கின. படகில் ஏறு முன் GPS மூலம் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக கையடக்கத் தொலைபேசிகளை உடைக்கும்படி பயணிகளிடம் முகவர்கள் சொன்னதாகவும் அந்த நபர் கூறுகிறார். பிறகு அவர்கள் சென்ற படகில் பிரச்சினை ஏற்பட்டது. “அது ஆழ்கடல் பயணத்திற்குரிய பாதுகாப்பான கப்பலாக இருக்கவில்லை. அது ஆறுகளின் கட்டுமாணப் பணிகளுக்கு சல்லி மற்றும் மணல் ஏற்றும் ஒரு வகையான கப்பல்,” என்று அவர் கூறுகிறார்.

கப்பலில் செல்லக்கூடியதை விட அதிகமாக, நூற்றுக்கணக்கான மக்கள் இருந்ததாக அவர் மேலும் கூறினார். ஆனால் மனம் மாறுவதற்கு சற்று தாமதமாகிவிட்டதாக அவர் உணர்ந்தார்.

அடுத்த சில நாட்களை அவர் “பயங்கரம்” என்று விவரிக்கிறார். அது சூடாகவும் வெக்கையாகவும் இருந்தது. பலருக்கு கடலில் செல்வதால் மயக்கம் ஏற்பட்டு படகு முழுவதும் வாந்தி எடுத்தனர். கப்பலில் தூங்குவதற்கு போதுமான இடம் இருக்கவில்லை. கப்பலில் இருந்த அனைவரும் இரண்டு கழிவறைகளை மட்டுமே நம்பியிருந்தனர். உணவு மிகக் குறைவாகவே இருந்தது.

பயணத்தில் சுமார் ஆறு நாட்கள் கடந்த பின்னர், கப்பலில் கோளாறுகள் தொடங்கியது. படகின் தரைத்தளத்தில் உள்ள துளை வழியாக தண்ணீர் உள்ளே புகுந்துகொண்டே இருந்ததாக அவர் கூறுகிறார். இந்தத் துளை தொடர்ந்து பெரிதாகியது. காற்றும் பலத்த அலைகளும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இரவும் பகலும், அவர்கள் முதலில் வாளிகளாலும் பின்னர் ஒரு இயந்திர பம்பியினாலும் தண்ணீரை அகற்றினர். ஆனால் அது மிகவும் கடினமான வேலையாக இருந்ததாக என்று அவர் கூறுகிறார். “எங்களால் அதை செய்ய முடியவில்லை. நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம்.

ஒரு கட்டத்தில், கப்பல் பல நாட்களாக ஒரே இடத்தில் நின்றது. கப்பலில் இருந்தவர்கள் முகவர்களைக் கேள்வி கேட்டபோது, தாம் உணவுப் பொருட்களுக்காகக் காத்திருப்பதாகக் கூறினர். “மியான்மரில் இருந்து 65 பேரை ஏற்றிக்கொள்வதற்காகவே கப்பல் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை பின்னர் அறிந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

அவர் கணிப்பின்படி 29 வது நாளில் கப்பல் மூழ்கத் தொடங்கியது. “நிறைய யோசனை ஓடியது. நீச்சலும் தெரியாது,” என்கிறார்.

அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டாலும், கப்பலுக்குள் இருந்த ஒருவர் செட்லைட் தொலைபேசி ஒன்றின் மூலம் வெளியில் தகவல் அனுப்பினார்.

வியட்நாமிய அதிகாரிகளுக்கு தகவல் சென்றடைந்தது, ஆனால் கடலின் பலமான அலைகள் காரணமாக மீட்புப் படையினருக்கு படகைக் கண்டுபிடிக்க சிறிது காலம் சென்றது. “நாங்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டு வியட்நாம் முகாமில் சில நாட்கள் தங்க வைக்கப்பட்டோம்,” என்று அவர் கூறுகிறார்.

"நிறைய யோசனை ஓடியது. நீச்சலும் தெரியாது."

வேணுஜாவின் கணவரின் மரணம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கத் தயக்கப்பட்டார்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதிலிருந்து, இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று முன்னாள் விற்பனை அதிகாரியான அவர் கூறுகிறார். மாறாக, அரசாங்கம் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறுகிறார். இந்த நேர்காணலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து சில கேள்விகளைக் கேட்டுள்ளார்.

இருப்பினும், புலம்பெயர்ந்தோர் திருப்பியனுப்புதல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு உதவித் திட்டத்தைக் கொண்ட இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM ), தன்னை மீள்குடியேற்ற உதவுவதற்காக 1.2 மில்லியன் ரூபாயைக் (4,550 டாலர்கள்) கொடுத்ததாக அவர் கூறுகிறார்.

இதுபற்றிய கருத்துக்கான பல கோரிக்கைகளுக்கு இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM ) பதிலளிக்கவில்லை.

அவர் மீண்டும் அந்த வகையான பயணத்தை முயற்சிக்க விரும்பவில்லை என்று கூறுகிறார். “இலங்கையில் சட்டவிரோத குடியேற்றம் ஒரு குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும்.

சட்டவிரோதமாக பயணம் செய்து நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு இலங்கை அரசாங்கம் எவ்வித உதவியும் வழங்குவதில்லை எனவும், மாறாக அவர்களை சிறையில் அடைக்கவோ அல்லது கண்காணிக்கவோ செய்வதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கூறுகிறார். “அவர்கள் எப்போதும் பாம்புகளைப் போல் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

சட்டவிரோத பயணத்தின் போது புலம்பெயர்ந்தோர் இறந்தால், நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சி, அவர்களின் உடலை அரசாங்கம் சில சமயங்களில் நாட்டிற்குக் கொண்டு வர மறுப்பதாக அவர் மேலும் கூறினார்.

வேணுஜாவின் கணவருக்கும் இதுதான் நடந்தது. வேணுஜா தனது கணவரின் உடலை அடக்கம் செய்ய, அதனை நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவர நலன் விரும்பிகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. “இறுதியில், என் கணவரின் உடல் மட்டுமே எஞ்சியிருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்படுபவர்களை பொலிசார் கண்காணித்து அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதை உறுதிப்படுத்தினார். கண்காணிப்புக்கான காரணத்தையோ அல்லது அவர்கள் எந்த வகையான தகவல்களை சேகரிக்கிறார்கள் என்பதையோ அவர் குறிப்பிடவில்லை.

சிறந்த பாதுகாப்புகள்

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போலி முகவர்களின் அதிகரிப்புகளானது சிறந்த பாதுகாப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுவதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கிறார்.

“நாட்டிற்குள் உள்ள வணிகங்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாக்கவும் எந்தவிதமான அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் வேலை இழப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக, பலர் வேலைக்காக வெளிநாடு செல்லத் தொடங்கினர்,” என்று அவர் கூறுகிறார். இதனால் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறும் கடத்தல்காரர்கள் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.

சிலர் தெரிந்தே மோசடி முகவர்களுக்கு இலக்காகும் அதே வேளை மற்றவர்கள் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக நாணயக்கார மேலும் கூறுகிறார். ஆனால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, வேலைவாய்ப்பு பணியகம் சமூக ஊடகங்கள் மற்றும் முக்கிய ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருவதுடன் காவல்துறையுடன் நெருக்கமாக செயல்படுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களும் தற்போது மதிப்பாய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக நாணயக்கார தெரிவிக்கிறார். அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான 11 வது குழுவின் அறிக்கையின்படி, திருத்தங்கள் “புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கும், அந்த உரிமைகளை மீறும் நபர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும்” செய்யப்பட்டுள்ளன.

இலங்கையர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகள் தேவை என நாணயக்கார கருதும் அதேவேளை, வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமாயின் சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார். “நீங்கள் சட்டப்பூர்வமாக வேலை விசாவைப் பெற்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும்.”

நாடு கடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கான ஒருங்கிணைப்புத் திட்டம் இலங்கையில் உள்ளதாகவும், ஆனால் பணியகத்தில் பதிவுசெய்து நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு மட்டுமே அது இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். “பல்வேறு காரணங்களுக்காக சட்டப்பூர்வமாகச் சென்று நாடு கடத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே நாங்கள் உதவ முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

எனினும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தின் அவசியத்தை அவர் காண்கிறார். “அதற்கான சட்ட ஏற்பாடுகள் எங்களிடம் இல்லை. இது எதிர்காலத்தில் நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய விடயம்,” என்று அவர் கூறுகிறார்.

மற்றொரு தீர்வாக, யாழ்ப்பாண சமூக நடவடிக்கை மையத்தைச் சேர்ந்த சுகிர்தராஜ் கூறுகையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்தும் கொள்கைகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும், மேலும் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே நிரம்பிய வேலைச் சந்தையில் அதிக பட்டதாரி மாணவர்களை சேர்ப்பதாகவும் கூறுகிறார்.

“நாம் மேலும் பொருளாதார ரீதியாக பலவீனமடைந்து வருவதால், சட்டவிரோத வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன,” என்று சுகிர்தராஜ் கூறுகிறார்.

நல்ல உள் நோக்கங்கள்?

இதே வேளை, வேணுஜாவின் கணவர் சென்ற அதே படகில் தனது மகனும் சென்றதாகக் கூறும் ஒருவர், முகவர்கள் மற்றும் அவர்களின் முறைகள் பற்றி சற்று மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார். கஷ்டப்படும் மக்களுக்கு உதவ மட்டுமே முகவர்கள் முயற்சி செய்வதாக அவர் கூறுகிறார். “எங்கள் வேண்டுகோளின்படியே அவர்கள் மக்களை அனுப்பினர்.”

அவர் தனது மகன் அதிகாரிகளுடன் பிரச்சினையில் சிக்குவார் என்ற பயத்தில் மகனின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அதிகாரிகள் அவரது மகனை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறுகிறார். முகவர்களை நம்பிய ஒரே காரணத்திற்காகவே அவர் தனது மகனை செல்ல அனுமதித்தார். 21 வயதான அவரது மகனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். அந்த இளைஞன் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியையும் இதுவரை பெறவில்லை. ஆனால் IOM தனது மகனுக்கு மீள்குடியேற 37,900 ரூபாய் (123 டாலர்) கொடுத்ததாக தந்தை கூறுகிறார்.

இப்போதைக்கு, அவரது மகன். பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞானம் கற்றுக்கொண்டிருக்கின்றார். நடந்த அனைத்திற்கும் மகன் தன் மீது பழி சுமத்தி விடுவானோ என்று தந்தை கவலைப்படுகிறார். “இது அவரது வாழ்நாள் முழுவதும் அவரை பாதிக்கும்.”

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர்ஷிஹார் அனீஸ், ஜிபிஜே.

Related Stories