Sri Lanka

இலங்கையில், பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கான முயற்சிகளை தொழில்முனைவோர் சாதகமாகக் கொண்டுள்ளனர்

பருத்தித்துறையில், உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக, பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொதியுறைகளின் பயன்பாட்டைக் குறைப்பதன் அவசியத்தைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கழிவுகளை குறைப்பதற்கான இந்த அழைப்புகளுக்கு பொதுமக்கள் பதிலளிப்பதன் நிமித்தமாக, தமது வருவாயினை அதிகரிக்கும் நபர்களில் தையற்காரர்கள் மற்றும் வாழை விவசாயிகள் உள்ளனர்.

Read this story in

Publication Date

How Does a Community Profit From Plastic Waste? Ask Sri Lanka’s Entrepreneurs.

பூங்குழலி பாலகோபாலன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

பண்டாரம் திருப்பரஞ்சோதி இலங்கையின் நீர்வேலியில் அமைந்துள்ள தனது பண்ணையில் வாழை இலைகளை ஆய்வு செய்கிறார். பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க வாழை இலைகளை பயன்படுத்தும் நபர்கள் மூலமாக அவர் ஒரு நாளைக்கு $44 வரை சம்பாதிக்க முடியும்.

Publication Date

பருத்தித்துறை, இலங்கை – கணநாதன் ரேகா ஒரு பார்வையாளரை தனது வீட்டிற்குள் அழைக்கும்போது, கேட்கும் முதல் ஒலி அவரது இடுப்பில் இருக்கும் குழந்தையுடையதல்ல. மாறாக, சிமென்ட், மரக் குச்சிகள் மற்றும் சிப்போர்ட்டினால் ஆன அவரது வீட்டின் இரண்டு சிறிய அறைகளில் ஒன்றில் அமர்ந்திருக்கும் தையல் இயந்திரத்தில் இருந்து எழும்பும் உரத்த சத்தமாகும்.

பெருமையுடன் புன்னகைக்கும் ரேகா, இந்த இயந்திரம் தனது குடும்பத்தின் செல்வளத்தை மாற்றியுள்ளது என்று விளக்குகிறார். அவளும் அவரது கணவர் கணநாதனும் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை தம்பசிட்டி என்ற கிராமத்தில் நிலவும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளை மாற்றீடு செய்வதற்காக துணிப்பைகளை தயாரிக்கிறார்கள்.

கணநாதன் குடும்பத்தினர் இலங்கை ரூபாய் 15000 ($83) மாத சம்பளத்தில் வாழ்ந்து வந்தனர். அது அவர்களின் செலவுகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. ‘இந்த மிஷின் இப்ப இருக்கிறதால என்ர வாழ்க்கையிலயும் கொஞ்சமாச்சும் வெளிச்சத்த காணக்கூடியதாயிருக்கு, முதல்ல மூண்டு நேரச் சாப்பாட்டுக்கே சரியான கஷ்டம். இப்ப சாப்பாடாச்சும் ஒழுங்கா சாப்பிடக்கூடியதாயிருக்கு.’ என கணநாதன் ரேகா கூறுகிறார்.

அவர்களின் தொழில்முனைவோர் முயற்சி, அவர்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், நிலப்பரப்புகளில் நிரம்பி வழியும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல் உயிரினங்களையும் நில விலங்குகளையும் மூச்சுத்திணறச் செய்யும் செயற்பாட்டிற்கு எதிராக, வளர்ந்து வரும் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியான மீற்சுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பேண்தகமைகளை நோக்கமாகக் கொண்ட தெரிவுகளின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த உலகளாவிய விழிப்புணர்வு விரிவடைந்து வருகிறது. இப் பிரச்சினை பாரிய விடயமாக உள்ளது. 2018 ஐ.நா. சுற்றுச்சூழல் அறிக்கையில் ஒவ்வொரு நிமிடமும் 1 மில்லியன் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் வாங்கப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி எறிந்துவிடக் கூடிய பிளாஸ்டிக் பைகள் 5 டிரில்லியன் பயன்படுத்தப்படுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

expand image
expand slideshow

பூங்குழலி பாலகோபாலன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

கணநாதன் ரேகா இலங்கையின் பருத்தித்துறை நகரில் உள்ள தனது தையல் இயந்திரத்தில் ஒரு துணிப்பையை தைத்துக் கொண்டிருக்கிறார். துணிப்பைகள் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பொருட்களை வாங்கப் பயன்படுத்தப்படலாம். ரேகாவும் அவரது கணவரும் உள்ளூர் கடைக்காரர்களுக்கான துணிப்பைகளை தயாரிக்கும் ஒரு வெற்றிகரமான தொழிலைத் தொடங்கியுள்ளனர்

கணநாதன் எடுத்த துணிகரமான முயற்சியின் நேரம் நன்றாக இருந்தது, ஏனெனில் செப்டம்பர் 1, 2017 அன்று இலங்கையில் பிளாஸ்டிக் கொள்கலன்கள், தட்டுகள், கோப்பைகள் மற்றும் கரண்டிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இருந்த போதிலும், மத மற்றும் அரசியல் விழாக்களில் பதாகைகள் மற்றும் அலங்காரங்களுக்காகாகாக இவற்றைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க குறைப்பைக் கவனிக்கவில்லை.

தனது கணவர் தங்கள் திட்டத்தை தொடங்கினார் என்று ரேகா கூறுகிறார். வேலாயுதம் தனது மனைவி தையலில் ஆர்வம் கொண்டிருப்பதை அறிந்திருந்தார். மேலும், அதற்கான பாடங்களைப் படிக்க ஊக்குவித்தார். ஒரு சிங்கர் தையல் இயந்திரத்தை வாங்குவதற்காக அவள் சில நகைகளை அடமானம் வைக்கக் கொடுத்தாள். விரைவில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க, நுகர்வோருக்கு உதவும் ஒரு திட்டமாக துணிப்பைகளை பார்த்த அவளது கணவரின் ஆலோசனையின்படி அவற்றை தயாரிக்க இயந்திரத்தைப் பயன்படுத்தினாள்.

இந்த ஜோடியின் சிறு வணிகம் இப்போது ஒவ்வொரு மாதமும் குறைந்தது 300 பைகளுக்கான செயற்கட்டளைகளைப் பெறுகிறது. மேலும் விடுமுறைகள் மற்றும் உள்ளூர் கோவில் விழா நேரங்களில் இது அதிகமாக பெறப்படுகிறது.

இந்த பைகள், இலங்கையர்கள் தங்கள் சமூகங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நிவர்த்தி செய்ய செயல்படும் ஒரு வழியாகும் – சில சந்தர்ப்பங்களில், இதை பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் காரணியாக பார்க்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டில், சமூக அக்கறையுடைய பிரஜைகள் குழுவொன்று பிளாஸ்டிக் ஜீரோ மன்றத்தை (Plastic Zero Forum) உருவாக்கி, பாலித்தீன் பயன்பாடு குறித்து குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியது. ஆரம்பத்தில் 10 உறுப்பினர்களை கொண்ட இக்குழு தற்போது 60 க்கும் மேற்பட்டவர்களாக வளர்ந்துள்ளது. மேலும், அதன் முகநூல் பக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்ட ‘லைக்குகள்’ உள்ளன என இக்குழுவை ஆரம்பித்து வழிநடாத்தி வருபவர்களில் ஒருவரான கந்தசாமி ராகுலன் கூறுகிறார்.

பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த முறைசாரா உரையாடல்களிலிருந்து இந்த குழு வளர்ந்ததாக ராகுலன் கூறுகிறார். ‘ஆனால் சிலர் எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட செயல்களில் தானாக முன்வந்து பங்கேற்பதைக் காணும்போது, நாங்கள் பெரிதும் உந்துதல் பெறுகிறோம்,’ என்று அவர் கூறுகிறார்.

வடமேற்கு இலங்கையில் உள்ள மன்னார் வளைகுடாவில் இருந்து இழுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு குறித்து தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தரவுகளை தனது குழு பகிர்ந்து கொள்கிறது என்று ராகுலன் கூறுகிறார். 2018 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி, நாட்டின் வடமேற்குப் பகுதி, வேறு எந்தப் பகுதியையும் விட மைக்ரோபிளாஸ்டிக் மூலம் அதிக மாசுபட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஜீரோ மன்றம் (Plastic Zero Forum) கடற்கரைகளை துப்புரவாக்கும் பணிக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அதை பின்தொடர்பவர்களை அணிதிரட்டுகிறது. இந்த குழு கடை உரிமையாளர்களுக்கு அவர்களது வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகளை வழங்க ஊக்குவிக்கிறது, மேலும் இது கழிவுகளை குறைப்பதற்கான பிற நிலையான வழிகளை ஊக்குவிக்கிறது – வாழை இலைகளை பொருட்களை பொதி செய்ய பயன்படுத்துதல் போன்றவையாகும்.

வாழை இலைகள் ஒரு காலத்தில் உரமாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கருதப்பட்டன. ஆனால் பண்டாரம் திருப்பரஞ்சோதி போன்ற உள்ளூர் விவசாயிகள் பொதி உறைகளென புதிய பயன்பாட்டின் மூலமாக பயனடைகிறார்கள். ‘முன்பு நான் வாழைக்குலை மற்றும் வாழைப்பழங்களை விற்பனை செய்தேன். ஆனால் இப்போது, அதிகமான மக்கள் வாழை இலைகளைக் கேட்கிறார்கள், ‘ என்கிறார் திருப்பரஞ்சோதி. இலைகளிலிருந்து மட்டும் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் ($27.50) முதல் 8,000 ரூபாய் ($44) வரை சம்பாதிக்க முடியும் என்று இந்த விவசாயி கூறுகிறார். ‘என்னிடம் 4,000 வாழை மரங்கள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதே எனது முக்கிய நோக்கம்.’

expand image
expand slideshow

பூங்குழலி பாலகோபாலன், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

வாழை விவசாயி பண்டாரம் திருப்பரஞ்சோதி இலங்கையின் நீர்வேலி என்ற இடத்தில் தனது நிலத்தில் பயிர் செய்கிறார். பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இலைகளை பொதி செய்ய பயன்படுத்துவதற்கான தேவை அதிகரித்து வருவதால், அவர் தனது 4,000 வாழை மரங்களுக்கு மேலதிகமாக கன்றுகளை சேர்க்கிறார்.

பிளாஸ்டிக் பொதிகட்டுதலை மாற்றி வாழை இலைகளை கொண்டு பொதிகட்டுதலை அதிகரிப்பது என்பது இலங்கையில் காணப்படும் எண்ணற்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை குறைக்க உதவும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய கலாநிதி.திருமதி. அனந்தினி நந்தகுமாரன் கூறுகிறார்.

‘அழியாத கழிவுகள் மகத்தான விவசாய சிக்கல்களைத் தூண்டுகின்றன’ என்று நந்தகுமாரன் கூறுகிறார். ‘முறையாக மீள்சுழற்சி செய்யப்படாத மற்றும் விவசாய நிலங்களில் புதைக்கப்படாத கழிவுகள் சிதைவடையாது, மேலும் பயிர்களுக்கு தண்ணீரை இறைக்கப் பயன்படும் ஆழ்துளைகளைத் தடுக்கலாம்.’

பிளாஸ்டிக் கழிவுகளும் விலங்குகளுக்கு அச்சுறுத்தலாகும் என சமீபத்தில் பொலித்தீன் எச்சங்களை விழுங்கி செரிமான அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பசுமாடு இறந்த விடயத்தை நந்தகுமாரன் கூறுகிறார்.

பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களின் ஆபத்துகள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கைகளை பரப்புவோம் என்று பிளாஸ்டிக் ஜீரோ மன்றத்தின் (Plastic Zero Forum) உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

‘எதிர்காலத்தில் ஒவ்வொரு உள்ளூர் அரசாங்க பகுதிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்’ என்று ராகுலன் கூறுகிறார். ‘மேலும், பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக ஏராளமான போட்டிகளை அறிவிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.’

இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி, ஜிபிஜே.