Sri Lanka

செய்தித்தாள் வீழ்ச்சியின் பாதிப்பை உணரும் வயோதிப இலங்கையர்கள்

செய்தித்தாள்கள் குறைந்துள்ளதால் முதியோர்கள் தங்கள் சமூகத்துடன் குறைந்த தொடர்பைக் கொண்டுள்ளனர். அத்துடன் அவர்கள் அறிமுகமில்லாத இணைய உலகில் தவறான தகவல்களின் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

Read this story in

Publication Date

Elderly Sri Lankans Feel the Brunt of the Newspaper Decline

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

பரராஜசிங்கம் துவாரகன், இலங்கை யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையம் அருகே செய்தித்தாள்களை விற்கிறார். குறைவான மக்களே அவற்றை வாங்குவதாக அவர் கூறுகிறார்.

Publication Date

யாழ்ப்பாணம், இலங்கை — கடந்த 30 வருடங்களாக, ஓய்வுபெற்ற தேயிலை தொழிற்சாலை அதிகாரியான தம்பையா பராபரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இணுவில் கிராமத்திலுள்ள உள்ளூர் நூலகத்தில் தனது மாலைப் பொழுதைச் செய்தித்தாள் வாசிப்பதில் கழித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு முன்பு, நூலகத்தில் அவர் படிக்க, பல்வேறு உள்ளடக்கங்களை வெளியிடுகின்ற, ஏராளமான செய்தித்தாள்கள் இருந்தன. 80 வயதில், பராபரம் தனது உடல்நிலையைப் பற்றி அடிக்கடி சிந்திக்கிறார் மற்றும் பெரும்பாலும் உடல்நலம் தொடர்பான உள்ளடக்கத்திற்காக செய்தித்தாள்களை நம்பியிருந்தார். ஆனால் இப்போது அதெல்லாம் மாறிவிட்டது.

‘இப்பவெல்லாம் தினமும் மருத்துவ கருத்துக்கள் வெளிவருவதில்லை,” எனக் கவலையுடன் கூறுகின்றார் பராபரம்.

செய்தித்தாள்கள் படிப்பதைத் தாண்டி, நூலகத்திற்குச் செல்வது பராபரத்திற்கு பாரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அவரைப் போன்றே அந்த நூலகத்திற்கு வருகை தந்த மற்ற முதியவர்களுடன் தொடர்பில் இருக்க இது ஒரு வழியாகும். நூலகத்தில் வாசிப்பது, பேரக்குழந்தைகளுடனா பிணைப்பை அதிகரிப்பதற்கான ஒரு வழியாகவும் இருந்தது.

“அவை [செய்தித்தாள்கள்] சிறுவர் கதைகளை முழுப் பக்கங்களில் வெளியிடும். நான் அவற்றைப் படித்து என் பேரக்குழந்தைகளுடன் தினமும் பகிர்ந்துகொண்டேன்,” என்று அவர் கூறுகிறார்.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இலங்கையில் சில செய்தித்தாள்கள் வெளியீட்டை நிறுத்தியுள்ளன, மற்றவை அச்சிடும் பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, சிறுவர் கதைகள் உட்பட வெளியிடும் உள்ளடக்கங்களைக் குறைத்துள்ளன. அவரது பாரம்பரியத்தைத் தொடர, பராபரம் தனது கற்பனையைப் பயன்படுத்தி கதைகளை உருவாக்குகிறார், பின்னர் அவர் அவற்றை தனது பேரக்குழந்தைகளுக்கு விவரிக்கிறார்.

நூலகத்தில் அவர் வாசித்த சில செய்தித்தாள்கள் இணையப் பதிப்பாக மாறியுள்ளன, ஆனால் பராபரம் ஆன்லைன் தளங்களைப் படிப்பதில் சவாலை எதிர்கொள்கிறார்.

“என்னிடம் தொலைபேசி இருந்தாலும், செய்திகளை தொலைபேசியில் பார்க்குமளவுக்கு தொழில்நுட்ப அறிவு எனக்கில்லை“ என்று அவர் கூறுகிறார்.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

தனது பேரக்குழந்தைகளுடன் படிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்திய சில சிறுவர் கதைகளை செய்தித்தாள்கள் குறைத்துவிட்டதாக தம்பையா பராபரம் கூறுகிறார்.

டென்மார்க்கை தளமாகக் கொண்ட மோதலைக் குறைக்க மற்றும் ஊடகங்களின் திறனை வலுப்படுத்த செயற்படும் இன்டர்நெஷனல் மீடியா ஸப்போர்டின் 2019 கணக்கெடுப்பு மற்றும் அறிக்கையின்படி, சுமார் 77 சதவீத இலங்கையர்கள், செய்திகளை மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றனர். அதே கணக்கெடுப்பில் 39% இலங்கையர்கள் செய்தித்தாள்களை தொடர்ந்து வாசிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் குறைந்த விளம்பர வருமானம் மற்றும் விற்பனை போன்ற காரணங்களினால் ஏனைய நாடுகளில் வீழ்ச்சியடைந்துள்ள இந்தத் தொழில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் தனித்துவமான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், அந்நியச் செலாவணியின் வீழ்ச்சி மற்றும் பாரிய கடனின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும்
இலங்கையின் முக்கியமான வர்த்தக பங்காளிகளான உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் மேலும் நிலைமையை மோசமாக்கியது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து இலங்கை தனது அச்சு காகிதத்தை இறக்குமதி செய்கிறது. இந்தக் காரணிகள் அனைத்தும் அச்சிடும் காகிதத்தின் இறக்குமதி மற்றும் விலையைப் பாதித்தன.

இதன் விளைவாக, இலங்கையில் அச்சு ஊடகங்கள் வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ளது மற்றும் ஒரு கவனிக்கப்படாத விளைவு எழுந்துள்ளது. டிஜிட்டல் ஊடகத்திற்கான குறைந்த அணுகல் மற்றும் தகவல் மற்றும் சமூக இணைப்புகளுக்கு அச்சு செய்தித்தாள்களை நம்பியிருக்கும் முதியோர்கள், அச்சு செய்தித்தாள்கள் மிகவும் விலை உயர்ந்து விட்டதால் அல்லது கிடைக்காததால் சிரமப்படுகின்றனர்.

கொழும்பைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யாழ் தினக்குரல் என்ற தேசியப் பத்திரிகை அதன் பக்கங்களை 24லிருந்து 10 ஆகக் குறைத்துள்ளதுடன், காகிதத் தட்டுப்பாடு காரணமாக சில நிருபர்களை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் இணை ஆசிரியர் ஆறுமுகராஜா சபேஸ்வரன் தெரிவிக்கிறார். அதிக இறக்குமதி வரி மற்றும் கப்பல் போக்குவரத்திலுள்ள தாமதம் காரணமாக இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சபேஸ்வரன் கூறுகிறார்.

“நாங்கள் முன்னர் அரசியல்சார் விடயங்களை விசேட கட்டுரைகளாகப் பிரசுரித்திருந்தோம். இப்போது அவற்றை பிரசுரிப்பதில்லை,” என்கின்றார் சபேஸ்வரன்.

முன்பு சபேஸ்வரனின் ஊடக நிறுவனம் ஒரு வருடத்திற்கான அச்சு காகிதத்தை இறக்குமதி செய்து வந்தது. இப்போது அதே பணத்திற்கு ஒரு மாதத்திற்கு மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் எனவும் விலை நாளுக்கு நாள் மாறுவவதாகவும் சபேஸ்வரன் கூறுகிறார். 5,000 மெட்ரிக் தொன் அச்சிடும் காகிதத்தின் விலை, தொற்றுநோய்க்கு முன்னர் 20,000 தொன் காகிதத்தின் விலைக்கு சமமாக உள்ளது என்று அவர் கூறுகிறார். விளம்பரங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லை.

சில பத்திரிகைகள் தங்கள் சிறப்புப் பதிப்புகளை நிறுத்த வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக, 2021 மற்றும் 2022 க்கு இடையில், முன்னணி தமிழ் நாளிதழான வீரகேசரி, அதன் சிறப்புப் பதிப்புகளான சோதிட கேசரி, சுகவாழ்வு, மித்திரன், விடிவெள்ளி மற்றும் மெட்ரோ போன்ற பதிப்புகளை அச்சுத் தாள் பற்றாக்குறையால் நிறுத்தி விட்டதாக என்று முகாமையாளர் சிவசுப்ரமணியம் நக்கீரன் தெரிவித்தார்.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

செல்லையா பரமன் யாழ்ப்பாணத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது செய்தித்தாள் ஒன்றை வாசிக்கிறார்.

பொருளாதார நெருக்கடி அச்சு ஊடகத் தொழில்துறை ஏற்கனவே எதிர்கொண்ட சவால்களை அதிகப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஊடக நிலைத்தன்மை சுட்டெண் படி, ஏற்கனவே உலக சந்தையில் அதிகரித்து வந்துள்ள அச்சிடுவதற்கான விலையுடன் இறக்குமதி செய்தித்தாள் மீதான வரியை அதிகரிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவானது 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அச்சிடுவதற்கான செலவை இரட்டிப்பாக்கியது.

தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முன்பே, 2017 இல் தி நேஷன் மற்றும் 2018 இல் ரிவிர மற்றும் லக்பிம நியூஸ் உட்பட சில செய்தித்தாள்கள் ஏற்கனவே அச்சுப் பதிப்பை நிறுத்திவிட்டன.

யாழ்ப்பாணத்தின் அண்மையிலுள்ள கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 58 வயதான வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பாலேஸ்வரி தெனாரன்ஸ், தனது பதின்ம வயதிற்கு முன்பே செய்தித்தாள்களைப் படிக்கத் தொடங்கினார்.

“வீட்டில், என் கணவர், குழந்தைகள் மற்றும் நான் செய்தித்தாள்களைப் படிக்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய சிறந்த தகவல்களைப் பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் நான்கு வகையான செய்தித்தாள்களை வாங்குவார்கள், ஆனால் விலைகள் அதிகரித்துள்ளன. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் இப்போதைய நிலையில் நான்கு செய்தித்தாள்களை வாங்குவது ஒரு ஆடம்பரமான விடயமாகவுள்ளது. ஒரு கட்டத்தில், அவர்கள் தங்கள் மூன்று அண்டை வீட்டாருடன் செய்தித்தாள்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் செலவைக் குறைக்கவும் முயன்றனர். சர்வதேச ஊடக ஆதரவு அறிக்கையின்படி, வட மாகாணத்தில் உள்ள பெரும்பாலான வாசகர்கள், சுமார் 77 சதவீதத்தினர், செய்தித்தாள்களை சொந்தமாக வாங்குவதை விட தம்மிடையே பகிர்ந்து கொள்வதாக இன்டர்நெஷனல் மீடியா ஸப்போர்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

“இப்போது நாம் அதையும் நிறுத்திவிட்டோம்,” என்கிறார் பாலேஸ்வரி.

அவர்கள் இப்போது தொலைபேசி அல்லது வானொலி மூலமாகத் தங்கள் செய்திகளைப் பெறுகிறார்கள், ஆனால் மற்ற தளங்களில் இல்லாத சில தனிப்பட்ட உள்ளடக்கம் செய்தித்தாள்களில் இருப்பதாக பாலேஸ்வரி கூறுகிறார். உதாரணமாக, அவரது குடும்பம் மரண அறிவிப்புகளுக்கு செய்தித்தாள்களையே நம்பியிருந்தது.

“ஆரம்பத்தில் எமக்குத் தெரிந்தவர்கள் இறந்தால் பத்திரிகைகளில் மரண அறிவித்தல் மூலம் அறிந்துகொள்வோம். இப்போது பத்திரிகைகளை வாங்குவதை நிறுத்திய பின்னர் எமக்குத் தெரிந்தவர்கள் இறந்தால் கூட தெரிவதில்லை,” என்று அவர் கூறுகிறார்.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையம் ஒன்றின் அருகே மக்கள் செய்தித்தாள்களை வாசிக்கிறார்கள். பெரும்பான்மையான இலங்கையர்கள், ஏறத்தாழ 77 சதவீதத்தினர் செய்திகளை மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றனர்.

சில செய்தித்தாள்கள் இணையத்திற்கு மாறுவரும் நிலையில், இலங்கையில் ஒப்பீட்டளவில் அதிக இணைய அணுகல் – மொத்த மக்கள் தொகையில் சுமார் 52.6 சதவீதத்தினர் – இருப்பதால், பாலேஸ்வரிக்கு ஆன்லைனிலும் பெறலாம். ஆனால் டிஜிட்டல் ஊடகம் முற்றிலும் மாறுபட்டது. அவருக்கு குறைந்த அணுகலே உள்ளது மற்றும் பல்வேறு காரணங்களுக்காக ஆன்லைன் ஊடகத்தை அவர் உண்மையில் விரும்பவில்லை. ஒரு செய்தித்தாளை தொட்டுணரக்கூடியது என்பது அவற்றில் ஒரு காரணமாகும். தனது கைகளில் அதன் உணர்வை விரும்புவதாக அவர் கூறுகிறார்.

பாலேஸ்வரிக்கு இணையத்தில் அதிக நம்பிக்கை இல்லை. ஏனெனில் இது மிகவும் கட்டுப்பாடற்றது. இதனால் சில நேரங்களில் சாலை விபத்துகளின் தணிக்கை செய்யப்படாத புகைப்படங்களைக் காண்பித்தல் போன்ற வன்முறையான விடயங்களுக்கு வழி வகுக்கும் என்கிறார் அவர். ஏற்கனவே, அவர் விளைவுகளை உணர்கிறார்.

“செய்தித்தாள்களைப் படிப்பதை நிறுத்திவிட்டு இணையதளங்கள் அல்லது ஃபேஸ்புக்கில் செய்திகளைப் படிக்கத் தொடங்கியதிலிருந்து, நான் உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கிறேன். செய்தித்தாள்கள் ஊடகக் கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் அப்படியல்ல” என்கிறார்.

செய்தித்தாள்கள் இல்லாத நிலையில், செய்திகளுக்காக இப்போது பலர் நம்பியிருக்கும் டிஜிட்டல் தளங்கள் சில ஒழுக்க நெறிமுறைகளை நிலைநிறுத்தத் தவறினால், வயதானவர்களிடையே தவறான தகவல், மனச்சோர்வு மற்றும் அதிக மன அழுத்தம் ஏற்படுகல் குறித்து பாலேஷ்வரி கவலைப்படுகிறார்.

“செய்தித்தாள்களைப் படிப்பதை நிறுத்திவிட்டு இணையதளங்கள் அல்லது ஃபேஸ்புக்கில் செய்திகளைப் படிக்கத் தொடங்கியதிலிருந்து, நான் உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கிறேன். செய்தித்தாள்கள் ஊடகக் கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் அப்படியல்ல”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் பூங்குழலி ஸ்ரீசங்கீர்த்தனனும் இதனை ஒப்புக்கொள்கிறார். இணைய அணுகல் உள்ள வயதான பெரியவர்களுக்கு ஆன்லைனில் உலாவ டிஜிட்டல் கல்வியறிவு எப்போதும் இருப்பதில்லை. இது தவறான தகவல்களை அவர்கள் பெறுவதற்கான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார்.

பாலசுப்ரமணியம் தனபாலனின் கவலை சற்று வித்தியாசமானது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் கல்வி உளவியல் விரிவுரையாளரான அவர் நாளிதழ்கள் குறைவடையத் தொடங்கியதிலிருந்து, அவரது கட்டுரைகள் அரிதாகவே பிரசுரிக்கப் படுவதாகக் கூறுகிறார்.

ஆனால் நாளிதழ்களுக்கான அணுகல் குறைவால் வயதானவர்களுக்கு என்ன நடக்கும் என்பதில் அவர் அதிக அக்கறை கொண்டுள்ளார். இது சமூகத்தின் மற்ற மக்களிடமிருந்து அவர்களைத் துண்டித்துவிடும் என்று அவர் கூறுகிறார்.

“நான் மிகவும் கவலையாக இருக்கிறேன்.”

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர்ஷிஹார் அனீஸ், ஜிபிஜே.