Sri Lanka

புகையிலை அவர்களது விலைமதிப்பற்ற பயிர். இலங்கை அரசு அதை தடை செய்ய உள்ளது.

வரவிருக்கும் புகையிலை உற்பத்திக்கான தடையை எதிர்கொள்ளும் இலங்கை விவசாயிகள் மாற்று பயிர்களை தமது வாழ்வாதாரத்திற்காக கண்டுபிடிப்பதில் இக்கட்டை எதிர்கொள்ளுகின்றார்கள். அநேகர், புகையிலைக்கான தடையானது முழுமையாக செயற்படுத்தப்படுமிடத்தில், தம்மை தக்க வைத்துக் கொள்ள போதுமானதாக இருக்காது என்பதை குறித்து கவலைப்படுகின்றனர்.

Read this story in

Publication Date

Tobacco is Their Prized Crop. The Sri Lankan Government Is About to Ban It

விஜயதர்சினி விஜயக்குமார், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சாமியேல் பத்திநாதன், புகையிலை விவசாயி, இலங்கை தனது பயிர்களுக்கு நீரை ஊற்றுகின்றார். அநேக விவசாயிகள் வரவிருக்கும் புகையிலைத் தடை தமது வாழ்வாதாரத்தை அகற்றிப் போடுமென கவலையடைகின்றனர்.

Publication Date

உடுவில், இலங்கை – இந்த அமைதியான நகரத்தில் புகையிலை விளைநிலப்பரப்புகள் உயிர் துடிப்புடன் நிரம்பியுள்ளன.

இது சாகுபடி காலம் மற்றும் விவசாயிகள் தமது பச்சை நிறத் தாவரங்களில் கவனம் செலுத்தியும், மண்வெட்டி மூலம் தோண்டியும், உரங்களை தூற்றியும் செழிப்பாக்க முனையும் காலம். வழக்கமாக அவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான காலம். ஆனால், இவ் வருடத்தில், இதுதான் புகையிலைச் செடிகளை வருடும் கடைசி முறையாக இருக்குமோ எனும் கவலையுடன் தமது வேலையில் ஈடுபடுகின்றனர்.

தீவிரமான புகையிலைய பாவனையினால் ஏற்படும் உடல்நல பின்விளைவுகளை குறிக்கோளாக கொண்டு இலங்கையின் புகையிலை பயிர்ச்செய்கையை தடை செய்வதற்காக எடுக்கப்படும் படிகள் – பயிர்ச்செய்கைக்கு மட்டுமன்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

25 வருடங்களாக புகையிலை செய்கையில் ஈடுபட்டவரும் யாழ். புகையிலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவருமாகிய சாமியேல் பத்திநாதன் ‘மக்களை மரணத்தின் வாயிலுக்கு அழைத்து செல்வதற்கு எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை’ என கூறுகின்றார். ‘புகையிலைக்கு ஈடான தகுந்த ஒரு மாற்றுப் பயிரை (வருவாய் ரீதியில்) அரசாங்கம் எமக்குப் பெற்றுத்தருமாயின் புகையிலை பயிர்ச்செய்கையை நாம் கைவிடத் தயார்.”

expand image
expand slideshow

விஜயதர்சினி விஜயக்குமார், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

ஏறத்தாழ பத்தில் ஒரு விவசாயி வறண்ட காலநிலையை கொண்ட யாழ்ப்பாணத்தில் புகையிலையினை வளர்க்கின்றார். வரவிருக்கும் புகையிலைத் தடையின் நிமித்தமாக மாற்றுப்பயிர்களை அரசாங்கம் பரிந்துரைத்தாலும், அவை ஏற்றதும் இலாபகரமானதுமல்ல என விவசாயிகள் கூறுகின்றனர்.

1600களில் போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியின் போது முதன்முறையாக புகையிலை அறிமுகப்படுத்தப்பட்டது. தீவின் காலநிலையும் மண்வளமும் புகையிலையினை வளர்ப்பதற்கு மிகப் பொருத்தமாக அமைந்தமையினால், இலங்கையின் வடக்கில் வாழும் விவசாய சமூகத்திற்கு பாரிய வருவாயை பெற்றுத்தரும் பிரதானமாக பயிராக மாறியது. யாழ் மாவட்ட காரியாலயம் கூறுவதின்படி தற்போது, யாழ். மாவட்டத்தில் ஏறத்தாழ 10க்கு 1 விவசாயி, புகையிலையை பயிர் செய்கின்றார்கள்

ஆனால் 2017 ஜுன் மாதத்தில், சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்கள், புகையிலை பாவனையை குறைப்பதற்கான முயற்சியாகா நாட்டின் புகையிலை உற்பத்தி 2020ம் ஆண்டு இறுதியில் தடை செய்யப்படும் என அறிவித்தார்.

2020 வேகமாக நெருங்குகின்ற வேளையில், விவசாயிகள் தமக்கு மாற்றுப் பயிர் அல்லது பயிர்கள் அவசியமென கூறுகின்றனர். ஆனால், அது விதைகளை மாற்றுவதைப் போன்ற இலகுவான காரியமல்ல.

‘மாற்றுப் பயிர்களை பயிரிட விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆனால் புகையிலையை போன்று அது இலாபத்தை தருமெனில் மாத்திரமே’ என சுன்னாகத்தில் 40 வருடங்களுக்கு மேல் புகையிலையை பயிரிட்ட கந்தையா தியாகலிங்கம் கூறுகின்றார்.

புகையிலை என்பது குறைந்த உற்பத்தி செலவையும் உயர் விற்பனை மதிப்பையும் கொண்ட ஒரு இலாபகரமான பயிராகும்.

ஒரு புகையிலைத் தாவரத்தை உற்பத்தி செய்வதற்கு இலங்கை ரூபாய் 45 (அமெரிக்க நாணயங்கள் 26) செலவிடும் வேளையில் அதை வியாபாரிகளுக்கு இலங்கை ரூபாய் 150க்கு (அமெரிக்க நாணயங்கள் 85) விற்கலாமென பத்திநாதன் மதிப்பிடுகின்றார். அரசு முகவர் நிறுவனங்கள் முன்மொழியும் மாற்றுப்பயிரான 1 கிலோ உருளைகிழங்கை (2.2 இராத்தல்) பயிரிட ரூபாய் 65 (அமெரிக்க நாணயங்கள் 37) முதல் ரூபாய் 75 (அமெரிக்க நாணயங்கள் 43) வரை செலவிட வேண்டியுள்ளது. ஆனால், அரசாங்கத்தால் தற்போது ஒரு கிலோ (2.2 இராத்தல்) உருளைக்கிழங்குக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ஏறத்தாழ ரூபாய் 40 (அமெரிக்க நாணயங்கள் 23) ஆகும். இதன்படி, விவசாயிகளின் உற்பத்தி செலவானது உற்பத்தி விலையைவிட அதிகமானதாகும்.

மற்ற பயிர்கள் பருவகாலம் சார்ந்திருக்கம் வேளையில் புகையிலையானது ஆண்டு முழுவதும் பயிரிடக்கூடியதொன்றாகும்.

‘ஏனைய பயிர்களை கருத்தில் கொள்ளும் வேளையில் அவற்றின் விலைகள் பருவத்திற்கேற்ப ஏற்ற இறக்கம் உடையவை’ என யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பாளராகிய சண்முகம் சசீபன் கூறுகின்றார். ‘ஆனால் புகையிலை எப்போதும் அதிக வருமானம் ஈட்டும்’.

expand image
expand slideshow

விஜயதர்சினி விஜயக்குமார், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

புகையிலைக்கு மாற்றுப்பயிராக அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உருளைக் கிழங்குகளை விவசாயிகள் நடுகின்றனர்.

அத்துடன் புகையிலையினை பயிரிடுவதற்கு குறைந்த அளவிலான நீரே தேவைப்படுதல் , வறண்ட யாழ்ப்பாண தீபகற்பத்தில் பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மிளகாய் மற்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுப் பயிர்களுக்கு அதிகளவு தண்ணீர் நாளந்தம் ஏழு மாதங்கள் வரை தேவைப்படுதல் புகையிலைக்கான தண்ணீர் ஊற்றும் வேளைகளை விட மூன்று மடங்கில் மிஞ்சியதாக உள்ளது என பத்திநாதன் கூறுகின்றார். விவசாயிகளுக்கு இவ் வித்தியாசமானது, வரையறுக்கப்பட்ட அளவிலேயே தண்ணிர் கிடைப்பதனால். சிக்கல் மயமானதாக உள்ளது.

மாற்றுப்பயிர் கண்டுபிடிக்கப்பட்டாலும், இத் தடையின் தாக்கமானது விவசாயிகளுக்கும் அப்பால் உள்ளதொன்றாகும். வியாபாரிகள் புகையிலை கன்றுகளை வளர்ப்பவர்கள், மற்றும் உள்ளூர் சுருட்டுத் தொழிலாளிகள் போன்றவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

சபாபதிப்பிள்ளை நித்தியானந்தன், யாழ்ப்பாணத்திற்கு வடக்கிலுள்ள இணுவில் எனும் கிராமத்தில் புகையிலையை பயிர் செய்வதுடன் சிறிய அளவிலான சுருட்டு தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகின்றார். தேங்கியுள்ள வியாபாரத்திற்கு புகையிலைத் தடையினை குற்றஞ்சாட்டுகின்றார்.

‘புகையிலைத் தடையினால், மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வது குறைவடைந்துள்ளது;’ என்கிறார் அவர். ‘உள்நாட்டு போர் நடக்கும் வேளையிலும் கூட நாம் புகையிலையினை ஏற்றுமதி செய்தோம்.’

நித்தியானந்தன், ஒரு காலத்தில் 15 தொழிலார்களை தனது சுருட்டு வியாபாரத்தில் வேலைக்கமர்த்தியிருந்தார் எட்டு பேரை அவருக்கு விட்டுவிட வேண்டியிருந்தது.

இதற்கிடையில், புகையிலை, விவசாயிகளின் வீடுகளில் குவியலாக அடுக்கப்பட்டுள்ளது. எதிர்வர இருக்கும் தடையினை குறித்து அதிகரித்துள்ள விழிப்புணர்வின் நிமித்தமாக புகையிலையினை வாங்குபவர்களும் விற்பவர்களும் தயக்கம் காட்டுவதனால், கடந்த பயிர்ச் செய்கை காலத்தின் சாகுபடிகளை விவசாயிகள் விற்க முடியாது உள்ளது. தாம் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாது விவசாயிகள் தத்தளிப்பதாக பத்திநாதன் கூறினார்.

ஏனைய மோசமானா பழக்கவழக்கங்கள் உள்ள வேளையில் அரசு புகையிலையினை மாத்திரம் தடை செய்வதில் கவனம் செலுத்துவது விவசாயிகளை விரக்தி அடையச் செய்துள்ளது.

‘பல விதமான சிகரெட்கள், மதுபானம், கஞ்சா மற்றும் ஏனைய போதைப் பொருட்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளன’ என தியாகலிங்கம் கூறினார் ‘ஆனால் அவற்றிற்கு தடை விதிக்காமல், தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கான உள்நோக்கம் (புகையிலைத் தடையினூடாக) உள்ளது.’

புகையிலை விவசாயிகள் அமைதியான தெரு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு கடிதங்கள் எழுதியுமுள்ளனர். ஆனால், இவற்றுக்கான பதிலளித்தல் மிகக் குறைவாக உள்ளது. இந்நிலை தொடருமானால், தமது ஆர்ப்பாட்டங்களை பாரிய அளவில் இக். குழுவினர் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக கூறினார்.

expand image
expand slideshow

விஜயதர்சினி விஜயக்குமார், ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

நன்றி கந்தையா குலேந்திரன் மற்றும் சபாபதிப்பிள்ளை நித்தியானந்தன் ஆகியோர் இலங்கையின் வடக்கிலுள்ள இணுவில் எனும் கிராமத்தில் சுருட்டு சுற்றுகின்றார்கள். நித்தியானந்தன் ஒரு காலத்தில் 15 வேலையாட்களை தனது சுருட்டு தொழிலுக்காக பணிக்கமர்தியிருந்தார் ஆனால், எட்டு பேரை விட்டு விட வேண்டியிருந்தது.

புகையிலைத் தடையானது வடக்கிலுள்ள விவசாயிகளுக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துமென அரசாங்கம் அறிந்துள்ளது என சசீபன் கூறுகின்றார். மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்துவது கடினமான காரியம் எனவும் இலகுவான கடன் வசதிகளையும் மானியங்களையும், புகையிலை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென தான் நம்புவதாக அவர் ஒப்புக் கொள்கின்றார்.

‘அரசாங்கம் சில நிலைமைகளை விவசாயிகளின் பொதுநலம் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சுமூகமாக கையாள முயற்சி செய்கின்றது’ என அவர் கூறுகின்றார்.

2020ம் ஆண்டின் புகையிலைத் தடைக்கு ஆயத்தப்படுத்தும் முகமாக புகையிலை பயிர்ச்செய்கையினை ஊக்கப்படுத்தாத போதிலும், தற்போதைய புகையிலை பயிர்ச்செய்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் கூறினார்.

விவசாய திணைக்களத்தின் கமநல சேவைகள் நிலையத்தின் விவசாய போதனாசிரியராக கடமையாற்றும் புஸ்பராஜா சாருஜன், மாற்றுப் பயிர்களை புகையிலை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த முனையும் குழுவில் ஒருவராவார்.

புகைப்பது தீங்கு விளைவிக்கும் என்பதால் தாம் சந்திக்கும் சில விவசாயிகள் புகையிலைத் தடையினை ஏற்றுக் கொண்டு வரவேற்பதாக கூறுகின்றார். ஆனால், சிகரெட்டுகள் இத்தடையில் உள்ளடக்கப்படாமை இலங்கையில் புகைத்தலை குறைக்கும் திட்டத்திற்கு முரண்பாடான ஒன்றாக உள்ளதாக கூறுகின்றார்.

‘புகையிலைப் பாவனையினையும் மற்றும் ஏனைய நாடுகளுக்கு (புகையிலையினை) ஏற்றுமதி செய்வதினையும் கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் இந்நிலைமை மாற வேண்டும்’ என்கிறார் அவர்.

இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே.