பசியினால் ஏற்பட்டுள்ள பெருந்துன்பம்: இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதன் இலவச பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை சிதைத்துள்ளது – அது பல மாணவர்களுக்கு மிகவும் தேவைப்படும் வேளையில்.
யாழ்ப்பாணம், இலங்கை – இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மயில்வாகனம் பவானியின் குடும்பத்தில் நிதிநிலைமையில் சிக்கல் ஏற்பட்டது. இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அவரது கணவர், குடும்பத்திற்காக சம்பாதிக்கும் ஒரே நபர், அவளையும் அவர்களின் நான்கு குழந்தைகளையும் கைவிட்டு பிரிந்தார். யாழ்ப்பாணத்தின் வட மாவட்டத்திலுள்ள தெல்லிப்பழை எனும் சிறிய நகரத்தில் வசிக்கும் மயில்வாகனம் பெரும்பாலும் தனது போராட்டத்தை தனக்குள்ளேயே வைத்திருந்தார்.
‘சிலர் தமது பணக் கஷ்டத்தை, சாப்பாட்டுக் கஷ்டத்தை வெளியில் சொல்லுவார்கள். நாங்கள் யாரிடமும் வெளிப்படையாகக் கூறுவதில்லை’ என்று அன்றைய தினம் தன் பிள்ளைகளுக்கான மதிய உணவாக தேநீர் தயாரிப்பதற்காக விறகு அடுப்பைப் பற்றவைத்தவாறு தழுதழுத்த குரலில் கூறுகின்றார்.
மயில்வாகனம் நிலைமையை சமாளிக்கலாம் என்று நினைத்தார். கணவர் விட்டு சென்ற பிறகு, அவருக்கு வீட்டு வேலை கிடைத்தது. அவரது வேலை மூலமாக நாளொன்றுக்கு 800 இலங்கை ரூபாய் ($2.50) ஊதியம் பெற்றார். அது ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மூன்று வேளை உணவு கொடுக்க போதுமானதாக இல்லை. அவரது பிள்ளைகள் பாடசாலையில் இலவச மதிய உணவை சாப்பிட்டதால் அவருக்கு நிர்வகிக்க கூடியதாக இருந்தது. அதன்பிறகு கொரோனா வைரஸ் பரவியது. அவர் வேலையை இழந்தார். பாடசாலைகள் மூடப்பட்டன. அவர் உணவு பங்கீடு மற்றும் அரசாங்கத்தின் பண உதவியை முழுமையாக நம்பியிருந்தார். நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, இலவச பாடசாலை மதிய உணவுகள் தன் சுமையைக் குறைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் நிம்மதியடைந்தார். ஆனால், 2019 முதல் உருவாகி வந்த பொருளாதார நெருக்கடி மோசமடைந்ததால் அரசாங்கத்திற்கு பணம் இல்லாமல் போனது.
இலங்கையின் நீடித்துவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அரசாங்கம் உணவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. வீட்டில் உணவளிக்க முடியாத குடும்பங்களுக்கு மதிய உணவை இலவசமாக வழங்கியமை, பிள்ளைகளை பாடசாலையில் வைத்திருக்கக் கூடியதாக இருந்தது என நிர்வாகிகளும் உள்ளூர் அதிகாரிகளும் கூறுகின்றனர்.
உலக உணவுத் திட்டம் தொடக்கத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அல்லது பாடசாலையில் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருந்தால், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச உணவை வழங்கும் திட்டத்தை முதலில் நடாத்தியது. 2018 இல், உலக உணவுத் திட்டம் அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. ஆனால் 2019 முதல், நாடு அதன் வெளிநாட்டு இருப்புக்களை 7.9 பில்லியன் டொலராக குறைத்து கிட்டத்தட்ட முழுவதுமாக வெறுமையாக்கியது. இதனால் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆகியவற்றுடன் பெருந்தொற்றுநோய், உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு காரணமாக வருடா வருட பணவீக்கம், மே மாதத்தில் சுமார் 45% இலிருந்து ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 60% ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது. இவை நெருக்கடியை அதிகப்படுத்தி மயில்வாகனம் போன்ற பெற்றோருக்கு வேண்டியதை வாங்கும் உரிமையை அற்று போகச் செய்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, உணவுச் செலவுகளுக்கான பணவீக்கம் அதே காலகட்டத்தில் 58% இலிருந்து 75% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
‘பாடசாலைகளில் மதியஉணவு இடைநிறுத்தப்பட்டது எங்களைப் போன்றவர்களை அதிகம் பாதிக்கும்,’ என மயில்வாகனம் கூறுகின்றார். ‘தற்சமயம் மதிய உணவு, இரவு உணவுக்கான பணத்தை சேமித்து எனது பிள்ளைகளுக்கு காலையுணவை தயார் செய்கின்றேன். ஏனெனில், பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் பசியுடன் போகக் கூடாது.’
யுனிசெப் என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், இலங்கையின் 70% குடும்பங்கள் பொருட்களின் விலைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளபடியால் உணவுப் பொருள் நுகர்வைக் குறைத்திருப்பதாக அறிக்கையிடுகிறது. 2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட 5.7 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா. ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில், 1.7 மில்லியன் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து, தூயகுடிநீர், கல்வி, சுகாதாரம் மற்றும் உளவியல் சேவைகளை 2022 ஆம் ஆண்டு முழுவதும் வழங்குவதற்காக, சர்வதேச நன்கொடையாளர்களிடம் $25.3 மில்லியன் திரட்டி தரும்படியாக யுனிசெப் வேண்டுகோள் விடுத்தது.
மல்லாகம் விசாலாட்சி வித்யாசாலை பாடசாலையின் அதிபர் குமாரசாமி பாலமுருகன் கூறுகையில், இலவச மதிய உணவுக்கு தகுதி பெற்ற 67 மாணவர்களில் பெரும்பாலானோர் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களில் பலர் இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரினால் வறியவர்களாக உள்ளனர் மற்றும் போர் 2009 இல் முடிவடைந்த பின்னரும்கூட அவர்கள் அதிலிருந்து இன்னும் மீளவில்லை. 2021 அக்டோபரில் பெருந்தொற்றுநோய் நிமித்தமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன், பாடசாலை உணவுக்கான நிதி சீரற்றதாக மாறியது என்று அவர் கூறுகிறார். ஜனவரி மாதம், கல்வி அமைச்சு அவருக்கு பணம் அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்தியது. அவர் தனது உணவு வழங்குவோரிடமிருந்து கடன் வாங்கினார் மற்றும் சில சமயங்களில் தனது மாணவர்களுக்கு உணவளிக்க தனது சொந்த பணத்தை செலவழித்தார்.
‘எனக்கு பிள்ளைகளின் கல்வியை விட அவர்களின் பசிக்கு உணவளிப்பதே முக்கியம்’ என்று குமாரசாமி கூறுகின்றார்.
ஜூன் மாதத்திற்குள், அரசாங்கம் தனக்குத் திருப்பித் தரும் என்ற நம்பிக்கையில், தனது சொந்த பணத்திலிருந்து சுமார் 160,000 ரூபாயை ($440) குமாரசாமி செலவிட்டதாகக் கூறுகின்றார். ஆனால் அதற்குள், அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து இலங்கையர்கள் வீதியில் இறங்கியதால், பொருளாதார நெருக்கடி அரசியலாக மாறிவிட்டது. உணவு வழங்குவோர், இனி அவருடைய பாடசாலைக்கான உணவை கடனாக கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உடனடியாக இருந்தன.
‘சில வேளைகளில் காலை நேர ஒன்று கூடலின் போது பாடசாலைக்குச் சாப்பிடாது வரும் மாணவர்கள் மயங்கி விழுவதையும் அவதானிக்க முடிகிறது’ என குமாரசாமி கூறுகின்றார்.
குமாரசாமி கூறுகையில், ஆகஸ்ட் 1 ஆம் திகதி, இலவச மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க அரசாங்கம் தனது பாடசாலைக்கு மாதம் 6,000 ரூபாய் (சுமார் $17) அனுப்பத் தொடங்கியது. அது போதாதென்று மீண்டும் தனது சொந்தப் பணத்தை செலவிட்டார். பெற்றோர்களை தங்கள் பிள்ளைகள் பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் உணவை அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆசிரியர்களும் தங்கள் உணவை பங்கிட்டு வழங்கத் தொடங்கியுள்ளனர்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால் பெயரை வெளியிட விரும்பாத பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர், மதிய உணவு வழங்குவதில் சில அதிபர்கள் நிதிச் சுமையைச் சுமந்து வருவதையும், அவர்களின் பாடசலைகள் கடனில் மூழ்கியுள்ளதை அறிவதாகவும் கூறுகின்றார். யாழ்ப்பாணத்தின் நிர்வாக வலயத்தில் மாத்திரம் பாடசாலைகள் வருடத்தின் முதல் பாதியில் 36 மில்லியன் ரூபா (சுமார் $108,300) கடனுக்கு ஆளாகியுள்ளன. மதிய உணவு வழங்குவதை நிறுத்தியதால், சில மாணவர்கள் சத்தான உணவு கிடைத்த ஒரே இடத்தில் அது கிடைக்காததால் படிப்பை பாதியில் விட்டதாகவும் அதிபர்கள் தன்னிடம் கூறியதாக அவர் கூறுகின்றார்.
‘பாடசாலை பிள்ளைகளுக்கென தயாரித்த நாளாந்த உணவு அட்டையில் உயர் போசணை மட்டம் மிக்க கடலை, கௌப்பி, மீன், முட்டை, பால் முதலியவையே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.’ எனக் கூறுகின்றார்.
எரிபொருள் நெருக்கடி ஓட்டுநர்களை மேற்கொண்டு ஓடவிடாமல் செய்கின்றது
படிக்க கிளிக் செய்யவும்அதிபர்களின் கவலைகளை உயர்மட்ட அரசு அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்றும் அந்த அதிகாரி கூறுகின்றார். இதைக் குறித்து விளக்கம் தெரிவிக்குமாறு கேட்ட கோரிக்கைகளுக்கும் கல்வி அமைச்சு பதிலளிக்கவில்லை.
பாடசாலை மதிய உணவுத் திட்டத்திற்கு அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்க முடியாத நிலையில், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அந்த இடைவெளியை நிரப்ப முயற்சித்தன. ஜூன் மாதத்தில், வன்முறையினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட ‘வொய்ஸ் பொர் வொய்ஸ்லஸ் பவுண்டேஷன் (Voice for Voiceless Foundation) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சூடான மதிய உணவை வழங்கும் சமூக சமையலறைகளைத் திறந்தது. பலர் உலர் உணவுப் பொருட்களைப் பெறுகிறார்கள், ஆனால் எரிபொருள் பற்றாக்குறையால் அவற்றை சமைக்க முடியவில்லை என்பதை அறிந்ததும் உள்நாட்டில் ‘வொய்ஸ்’ என்று அழைக்கப்படும் அமைப்பு சமையலறைகளைத் திறக்க முடிவு செய்ததாக திட்டத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி அசோக்குமார் கூறுகிறார்.
‘இதில் அதிகமாக சிறுவர்களே பங்கெடுக்கின்றார்கள் என அசோக்குமார் கூறுகின்றார். ‘அவர்கள் உணவுண்பதைப் பார்க்கும் போது மகிழ்வாக உணர்கின்றேன்.’
மயில்வாகனம் தனது பகுதியில் இது போன்ற எந்த திட்டமும் செயல்படுவதை காணவில்லை. அவரது மூத்த மகன் 17, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க, இப்போது சிகையலங்கார நிபுணராகப் பணிபுரிகிறார். மயில்வாகனத்தின் மற்ற பிள்ளைகள் இன்னும் பாடசாலைக்குச் செல்கிறார்கள். இருப்பினும் மதிய உணவைச் சாப்பிடாமல் இன்னும் எவ்வளவு காலம் செல்ல முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை. வகுப்பில் நண்பர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், வெற்று மதிய உணவுப் பெட்டிகளுடன் அவர்களை பாடசாலைக்கு அனுப்புகிறார். இந்நிலைமை சரியாகவில்லை என்றால், அவர் அவர்கள் பாடசாலைக்கு செல்வதை நிறுத்தி விடுவார்.
‘பிள்ளைகளைப் பட்டினியாகப் பாடசாலைக்கு அனுப்புவது என்பது ஒரு தாயாக என்னால் தாங்கிக் கொள்ள முடியாததாகும்.’ என்று அவர் கூறுகின்றார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்புக் குறிப்பு
ஜொசப்பின் அந்தனி, ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.