வவுனியா. இலங்கை – அமைதியான ஞாயிறு காலைப் பொழுதானது கூச்சலினாலும் நுழை வாயிலை பலமாக அசைத்தலினாலும் உடைவுறுகின்றது. தயாகரன் ஜெயந்திகுமாரி வெளியே எட்டிப் பார்க்கின்றார். உள்ளூரில் கடன் வழங்கும் ஒரு நிறுவனத்தின் கடன் வசூலிக்கும் அதிகாரியை அவரால் காணக்கூடியதாக உள்ளது.
தனது பெயரை அழைப்பதைக் கேட்டு ஜெயந்திகுமாரி வீட்டினுள் உறைந்த நிலையில் நிற்கின்றார். அவரது பக்கத்து வீட்டுக்காரர், அவர் வீட்டில் இல்லாததாக அந்த மனிதனிடம் தெரிவிக்கின்றார்.
‘உங்களுக்கு நான் யாரென்று தெரியும்தானே? எந்ந நேரத்திலும் அவா வீட்டில இல்ல. நான் வந்ததா அவாட்ட சொல்லுங்க!’ என மீண்டும் கூச்சலிட்டுவிட்டு செல்கின்றார்.
உள்ளே, ஜெயந்திகுமாரி நிம்மதிப் பெருமூச்சொன்றை விடுகின்றார்.
‘நாங்கள் இரண்டுக்கதிகமான தவணைகளை செலுத்த தவறும் போது அவர் வீட்டுக்கு வந்து எங்களை கெட்ட வார்த்தைகளினால் திட்டுவார்.” ஏன ஜிபிஜே நிருபரிடம் தெரிவித்தார். ‘எனக்கு இப்போது திருப்பி செலுத்த பணம் இல்லை. ஆகவேதான் நான் வீட்டை விட்டு வெளியே போகவில்லை.”
ஜெயந்திகுமாரி , 29, தனது முதற் கடனான ரூ.50,000ஐ (டொலர் 274) மே மாதம் வரை இயங்கிய தனது சிறிய பலசரக்கு கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பெற்றுக் கொண்டார். அவர் ஜோர்தான் மற்றும் சவுதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண்ணாக சம்பாதி த்த பணமான ரூ.150,000ஐ (டொலர் 823) இக்கடையில் ஏற்கனவே முதலீடு செய்திருந்தார். ஆனால், அவரது அனேகமான வாடிக்கையாளர்கள் உணவு மற்றும் இதர பொருட்களை கடனாக வாங்கினார்கள். பொருட்களை மீண்டும் நிரப்ப வேண்டிய வேளை வந்த போது, அவரிடம் போதிய அளவு பணம் கையிருப்பில் இருக்கவில்லை.
தற்போது, ஜெயந்திகுமாரிக்கு 12 வெவ்வேறு நுண்கடன்கள் செலுத்த வேண்டியுள்ளது. ஏனையவை அவரது தாயார், சகோதரி, மைத்துனி மற்றும் நண்பரின் பெயர்களில் எடுக்கப்பட்டுள்ளன. மார்ச் 2017 முதல் யூலை 2018 வரை, மொத்தமாக ரூ.600,000 (டொலர் 3,290) கடனாக பெற்றுக் கொள்ளப்பட்டது. டிசம்பர் 2018ல் ரூ.492,335 (டொலர் 2,701) வட்டியுடன் செலுத்திய போதும் ரூ.278,665 (டொலர் 1,529) மிகுதியாக மீள செலுத்த வேண்டியுள்ளது.
ஜெயந்திகுமாரியின் கணவர் மாதாந்தம் வீட்டுக்கு அனுப்பும் குடும்ப செலவுக்கான ரூ.30,000ல் (டொலர் 165) கடனை மீள செலுத்துவதென்பது ஒரு சவாலான காரியம். அவரின் கணவர் இலங்கையின் வணிக தலைநகரான கொழும்பில் உணவகமொன்றில் பணிபுரிகின்றார்.
அனேக நேரங்களில் கடன் வழங்கும் நிறுவனங்கள், கொடுக்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை வெளியிடுவதில்லை என இலங்கையின் வட மாகாணத்தில் நுண் நிதிகளை குறித்த கட்டுப்பாட்டிற்காக பிரச்சாரம் செய்யும் நடராசா தேவகிருஷ்ணன் கூறுகின்றார். மேலும் அவர் கூறுகையில், சில சந்தர்ப்பங்களில் வருடத்திற்கான வட்டி விகிதம் 22 முதல் 29 வரை என கூறப்படுகின்றது என்றார்.
“கடனை முழுவதுமாக செலுத்திய பின்னர் அறவிடப்பட்ட வட்டியை கணக்கிட்டு பார்க்கும் போது 50 முதல் 70 வரையிலான விகிதத்தில் வட்டி அறவிடப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது” என தேவகிருஷ்ணன் கூறினார்.
நுண்கடன்கள் பரவலான புகழை, மக்களின் மத்தியிலும், பில் கிளின்டன் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் சர்வதேச அளவில் அனுபவித்துள்ளது. எனினும், கடந்த தசாப்தங்களின் மேலதிக ஆய்வுகள், நுண்கடன் திட்டங்கள் வறுமையை நிவர்த்தி செய்ததை வி ட அதிகரிக்க செய்ததை காட்டுகின்றன. நுண்கடன் திட்டங்கள் உலகம் முழுவதுமுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு எவ்வாறு சிறப்பான முறையில் உதவக் கூடுமென்று சர்வதேச அபிவிருத்தி நிபுணர்கள் மத்தியிலான தொடர் விவாதமொன்று நடைபெற்று வருகின்றது. உலக வங்கியின் ஆய்வாளர்கள், 2017ல் பிரசுரித்த அறிக்கையொன்றில் நுண்கடன்கள், குறிப்பாக தொழில் முனைவோருக்கு துணை போவதை தவிர பாரிய மாற்றங்களை வாழ்க்கை முறையில் ஏற்படுத்தவில்லை என ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கை அமைச்சரவையின் யூலை 2018ல் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று நுண்கடன்களின் வட்டி விகிதம் வருடாந்தம் 40 முதல் 22 வரை வேறுபடுவதாக மதிப்பிட்டுள்ளது. இவ்வகையான கடன்களை, குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீடிய திரும் ப செலுத்துவதற்கான காலம் தரும் அரச வங்கிகளிலிருந்து கடன் பெறுவதை விட இலகுவாக பெற்றுக் கொள்ள கூடுமானதாக உள்ளது.
ஆயிரக்கணக்கான பெண்கள், ஜெயந்திகுமாரி வாழும் வவுனியா மாவட்டத்திலிருந்து நுண்கடன்களை பெற்றுள்ளதாக தேவகிருஷ்ணன் கூறினார்.
‘அவர்கள் இக்கடனை வருமானம் ஈட்டி கட்டி முடித்துவிடாலம் என கற்பனை செய்கின்றார்கள் அல்லது வியாபாரத்தை விரிவாக்கலாம் எனும் ஒரு மாயை உள்ளது, ஆனால் கடைசியில் கடனுக்குள் அகப்பட்டு கொள்கின்றார்கள்,” என அவர் கூறினார்.
முதல் நுண்கடனை மூன்று நாட்களுக்குள் தான் பெற்றுக் கொண்டதாக ஜெயந்திகுமாரி கூறினார். ஆனால், முதலாவது தவணை பணத்தை கட்டுவதற்கு பணம் இருக்கவில்லை அதற்கு பிறகு இன்னுமொன்று, மீண்டுமொன்று என கட்ட இயலவில்லை. கடந்த மே மாதம் கடையை மூடிவிட்டார்.
‘நான் எதற்காக இந்த கடனை எடுத்தேனென யோசித்து ஆற முடியாதுள்ளது” என கூறுகின்றார். ‘நாம் இதை கட்ட முடியாது என உணராமல் பெற்று விட்டோம்.”
இக் கடன்கள் சுரண்டுபவையாக இருந்த போதிலும், அவரது சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, முதலாவதாக நுண்கடன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த வேளையில், பெண்கள் தமது எதிர்ப்பை தெரிவித்ததாக தேவகிருஷ்ணன் கூறினார். ஆனால், அதிக நாட்கள் செல்வதற்கு முன்னர், அனேக பெண்கள் ஜெயந்திகுமாரியை போன்று நம்பிக்கை இழந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.
‘மக்கள் நிலைமைகளை புரிந்து கொண்டுள்ளார்கள்” என கூறினார். ‘மக்கள் சிக்கி கொண்டுள்ளார்கள் மற்றும் தம்மை தாமே விடுவிக்க முடியாதுள்ளார்கள்.”
நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள். கடன் கூட்டுறவு சங்கங்கள், ஏனைய நிதி நிறுவனங்களுடன் நுண்கடன்களை வழங்கும் 90க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி அங்கீகரித்துள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமென தேவகிருஷ்ணன் கூறுகின்றார்.
இந்நாட்டில், நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் மொத்த எண்ணிக்கையை குறித்த பதிவுகள் இலங்கை மத்திய வங்கியிடம் இல்லையெனவும் அத்தோடு வருடத்தில் கடன் வாங்கியவர்கள், வழங்கப்பட்ட கடன் தொகை என எந்தவித பதிவும் இல்லாது உள்ளதாக வங்கியின் உதவி இயக்குனர் அஜானி லியனபடபெண்டி, குளோபல் பிரஸ்ஸின் தொலைபேசி நேர்காணலில் கூறினார்.
யூலை மாதத்தில், அமைச்சரவை ஒரு சிறப்பு நிவாரண திட்டத்தை இலங்கையில் வறட்சியான காலநிலையுள்ள 12 மாவட்டங்களுக்கு, வவுனியா மாவட்டம் உள்ளடங்கலாக வசிக்கும் நுண்கடன்களை பெற்றுக் கொண்ட பெண்களுக்காக அனுமதித்தது. மத்திய வங்கியில் பதிவு செய்யபட்ட நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ரூ.100,000 ஐ (டொலர் 548) அடைக்க உறுதிமொழி அளித்தது.
இத் திட்டத்தினால் எவ்வித பயனையும் உள்ளூர்வாசிகள் இது வரை பெற்றுக் கொள்ளவில்லை என தேவகிருஷ்ணன் கூறுகினார்.
விசேடமாக பெண்களே நுண்கடன்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களாக உள்ளார்களென யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தின் மூத்த வணிக விரிவுரையாளரான பவுலினா மேரி கொட்வின் பிலிப் கூறினார்.
‘அவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது, அதிகமான பெண்கள் வீட்டிலே வேலையற்று,’ இருப்பதாக கூறினார். ‘நுண்கடன்களின் நோக்கம் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை தருவதாகும்.”
வவுனியா மாவட்டத்தில் 254 குடும்பங்கள் கொண்ட சுற்றுப்புறத்தில் 152 குடும்பங்கள் நுண்கடன் களை பெற்றுக்கொண்டதாக, அதாவது பத்தில் ஆறு குடும்பங்கள், என உத்தியோக பூர்வமற்ற ஆய்வுகள் காண்பிப்பதாக பிரதேச அலுவலகத்தின் வெங்கலசெட்டிக்குளத்தின் நிர்வாகப் பகுதி அறிவிக்கின்றது.
அவமானப்படுவதை தவிர்ப்பதற்காக பெண்கள் கடனை நேரத்திற்க்கு மீள செலுத்துவதினால் நுண் கடனளிப்பவர்கள் பெண்கள் தமது வாடிக்கையாளராக இருப்பதை விரும்புகின்றார்கள். சராசரி கடன் தொகையானது ரூ.50,000 (டொலர் 274) என கொட்வின் பிலிப் கூறுகின்றார். அநேக பெறுநர்கள் வறுமைக் கோட்டில் வருடாந்தம் ரூ.56,532க்கு (டொலர் 310) கீழ் வாழுபவர்களாக உள்ளார்கள்.
‘இந்நிலைமையை தமக்கு சாதகமாக நிதி நிறுவனங்கள் பாவிப்பதுடன் மக்களுக்கு பூரண விளக்கம் (கடனை குறித்து) இல்லாத போதிலும் அவர்களை அதை பெற்றுக் கொள்ள ஊக்குவிக் கின்றனர்,” என கூறினார்.
நுண்கடன்களை மீளப் பெறுவது மிகக் கடினமாக காரியமாக இருப்பதனால் மாவட்டத்திலுள்ள சில நிறுவனங்கள் தமது நுண்கடன் வழங்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.
‘தற்போது, கடன்களை மீளப் பெறுவதென்பது மிக மோசமான அனுபவம்’ என கொமர்ஷல் லீஸிங் அன்ட் பைனான்ஸ், வவுனியா கிளையின் முகாமையாளர் அம்புரோஸ் தருமேந்திரன் கூறினார். இக் கிளையானது கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து நுண்கடன் வழங்குவதை நிறுத்தியுள்ளது.
கணவனை இழந்த 58 வயதான விக்னராஜா சுதாமினி, அரசாங்க மானியமாக கொடுக்கப்பட்ட ரூ.550,000, (டொலர் 3,021) தனது வீட்டை கட்டுவதற்காக பயன்படுத்தினார். இம் மானியமானது இலங்கையின் உள்நாட்டுப் போர் நிறைவுற்ற பின்னர் தற்காலிக வதிவிடங்களில் வசிப்பவர்களுக்கு உதவுவதற்கான அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், தனக்கு அப் பணம் போதுமானதில்லை என சுதாமினி கண்டறிந்தார். யூலை 2017 முதல் மே 2018 வரையிலான காலப்பகுதியில், மொத்தம் ரூ.280,000 (டொலர் 1,533) பெறுமதியான மூன்று நுண்கடன்களை பெற்றுக் கொண்டார்.
இப்பொழுது, மாதாந்த கொடுப்பனவான ரூ.20,600ஐ (கிட்டத்தட்ட டொலர் 112) அவரால் கொடுக்க முடியாமல் உள்ளது. அவருக்கு எந்த விதமான முறையான ஆதாயத்திற்கான வழிகள் இல்லை.
இதைப் போன்ற கடன்களை பல பெண்கள் தமது வீட்டை கட்டி முடிப்பதற்காக வாங்கியுள்ளார்கள் என கூறும் சுதாமினி தான் தேவகிருஷ்ணனால் தனது கிராமத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகும் கடன் பெற்றதை குறித்து மனம் வருந்தினார்
‘நிம்மதியாக வாழ்வதற்கு இக் கடன்களை கொடுத்து முடிப்பது நல்லது,’ என சுதாமினி கூறினார்.
இக் கட்டுரையை, தமிழில் மொழி பெயர்த்தவர், ஜொசப்பின் அந்தனி, ஜிபிஜே