Sri Lanka

மழை வந்தது! இலங்கையின் வடக்கிலுள்ள விவசாயிகளின் நெற்பயிர் செய்கை அறுவடையை ஆபத்துக்குள்ளாக்கும் விதமாக.

டிசம்பர் 2018ல் வவுனியா மாவட்டத்தில் பலத்த மழையானது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்ச் செய்கையை அழித்தது. புதிய நடவுப் பருவம் நெருங்கியுள்ள வேளையில் விதை நெல்களை வாங்குவதிலும் தமது நிலத்தை சரியான நேரத்தில் தயார்படுத்துவதிலும் உள்ள ஒரு நிதிப் பிணைப்பை நெல் விவசாயிகள் காணக்கூடியதாக உள்ளது.

Read this story in

Publication Date

Floods in Northern Sri Lanka Endanger Paddy Farmers’ Harvest

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

கனகசுந்தரம் கஜரகன் தனது வயலை உழுகிறார். 6 மாதங்களுக்கு ஒரு தடவை 150,000 ரூபாய் ($853) 2017ல் அவர் வாங்கிய உழவு இயந்திரத்துக்கு கொடுக்கின்றார். தனது உழவு இயந்திரத்தை வாடகைக்கு கொடுத்த போதிலும் வெள்ளத்திற்கு பின்னர் வாடகைக்கு எடுப்பவர்களின் தேவை குறைவடைந்துள்ளது.

Publication Date

நெடுங்கேணி வடக்கு, இலங்கை – இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் காலை நேர குளிர்ச்சியை விரட்டிக் கொண்டு வெள்ளத்தினால் அழிக்கப்பட்ட சரளைச் சாலையில் சூரியன் உதிக்கின்றான்.

கனகசுந்தரம் கஜரகன் காலையில் எழுந்து தனது நெல் வயலுக்கு செல்கின்றார். தனது கைகளை தலைக்கு மேல் வைத்தவாறு தனக்கு முன்னால் உள்ள காட்சியை கூர்ந்து பார்கின்றார்.

‘என்ர விவசாய அனுபவத்தில 20 நாள் பயிர் கூட வெள்ளத்தில அழிஞ்சது இந்த முறை தான்’ என வெள்ளத்தின் அதியுயர் பாதிப்பை குறிப்பிடுகிறார்.

கஜரகன் ஓக்டோபர் 2018ல் நடவு பருவத்தின் ஆரம்பத்தில் 45 ஏக்கரில் நெற்களை
விதைத்தார். ஐந்து ஏக்கர் அவருக்குச் சொந்தமானதாகவும் 40 ஏக்கர் குத்தகைக்கு எடுத்ததாகவும் உள்ளது.

அதன் பிறகு பலத்த மழை வந்தது. அவரது இளம் நெற் பயிர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆகவே, அவர் 25 ஏக்கர் நிலத்தை தயார் செய்யவும் விதை நெல் வாங்குவதற்கும் உள்ளூர் வங்கியில் இலங்கை ரூபாய் 300,000 (அமெரிக்க டாலர் 1,706) கடன் பெற்று மீண்டும் நட்டார். ஆனால், சில வாரங்களுக்கு பிறகு 2018 டிசம்பர் மாத இறுதியில் வவுனியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அவரது பயிர்கள் மீண்டுமாக அழிந்தது.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

கனகசுந்தரம் கஜரகன் மருதோடையிலுள்ள அவரது வயலில் உள்ள நெற்கதிரை பிடித்திருக்கிறார். உள்ளூர் வங்கியிலிருந்து 25 ஏக்கர் நிலத்தை தயார்படுத்தவும் விதை நெல்களை வாங்கவும் கடனை பெற்றுக் கொண்டார். ஆனால், 2018ல் ஏற்பட்ட பாரிய வெள்ளம் அவரது பயிர்களை ஓரளவு அழித்துள்ளது.

கஜரகனுக்கு தற்போது ரூபாய் 1 மில்லியனுக்கும் அதிகமாக (அமெரிக்க டாலர் 5,688) கடன் உள்ளது. அத்துடன், ஏப்ரல் 2018ல் பெற்றுக் கொண்ட இரண்டு வங்கிக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. மாதந்த கொடுப்பனவுகளை ஜனவரி மாதத்திலிருந்து அவர் கொடுக்க முடியாது உள்ள நேரத்தில், ஒக்டோபர் மாதத்தில் புதிய நடவிற்காக எங்கிருந்து தான் பணத்தை பெற்றுக் கொள்வது என அவர் அறியாதிருக்கிறார்.

‘என்னால் இரவில் நித்திரை கொள்ள முடிவதில்லை’ என தளுதளுக்கும் குரலில் அவர் கூறுகின்றார். ‘நான் குழப்பத்தில் இருக்கிறன். இதில் இருந்து எவ்வாறு நான் மீளப் போகிறன் எண்டு எனக்குத் தெரியவில்லை. எங்கட பேர் கெட்டு போகப் போகுது’.

அரசாங்கத்தின் நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின்படி (RRDI), சுமார்1.8 மில்லியன் விவசாய குடும்பங்கள் நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றன, நெல் பயிரிலிருந்து பெறப்படும் அரிசியானது இலங்கையின் பிரதான உணவுப் பயிராகும்.

1948ம் வருடம் சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை அரிசி உற்பத்தியில் சுய நிறைவு அடைய உழைத்தது. வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் புள்ளிவிவர பிரிவின்படி. 2000 ஆண்டுகளின் பெரும்பாலான வருடங்களில் அவ்வாறு சுய நிறைவை அடைந்தது. ஆனால், 2017ல் வெள்ளம் மற்றும் வறட்சி நெல் வயல்களை பாழாக்கியதின் நிமித்தமாக, இலங்கை 700,000 தொன்அரிசியினை இறக்குமதி செய்தது.

இலங்கை விவசாய திணைக்களமும் மற்றும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனமும் (IRRI) இணைந்து இலங்கை அரிசியில் தன்னிறைவை காண்பதற்காக மேம்படுத்தப்பட்ட அரிசி பறிமாற்றங்களையும் புதிய நெல் வர்க்கங்களை உருவாக்குவதிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் அதே வேளையில் நிதி பற்றாக்குறையுடன் இயங்குவது விவசாயிகளின் பொதுவான அவல நிலையாக உள்ளது.

‘விவசாயிகள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கே நிறைய போராடிக் கொண்டிருக்கினம்,’ என வவுனியா மாவட்ட கமக்கார ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவரான சேதுகாவலர் திருசேதுகாவலர் கூறுகின்றார். ‘ஆகவே, அடுத்த வருசம் விதைக்கேக்க இந்த வருச சுமையையும் சேத்து தூக்கிக் கொண்டு போவினம்’.

சுமையைக் குறைக்கும் முகமாக அரசாங்கம் சிறப்புக் காப்பீட்டை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குகின்றது.

என்னால் இரவில் நித்திரை கொள்ள முடிவதில்லை. நான் குழப்பத்தில் இருக்கிறன். இதில் இருந்து எவ்வாறு நான் மீளப் போகிறன் எண்டு எனக்குத் தெரியவில்லை. எங்கட பேர் கெட்டு போகப் போகுது

முழுப் பயிர்ச் செய்கையும் அழிவடைந்த விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ருபாய் 40,000 ஆக (அமெரிக்க டாலர்228) ஐந்து ஏக்கர் வரை நஷ்ட ஈடு வழங்கப்படும் என விவசாயம் மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தில் மாவட்ட உதவி இயக்குனராக பணிபுரியும் மொகமட் ரபீக் மொகமட் சமீர் கூறுகின்றார்.

‘இதுவந்து இலவச காப்புறுதி பசளை மாணியம் எடுத்து வயல் அழிவடைந்தவங்களுக்கு வழங்கப்படும்’ என்கிறார் அவர். ‘இதுக்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. அரசாங்கம் இதை இலவசமா குடுக்குது’.

ஆனால் நிதி உதவியானது விவசாயிகளுக்கு உள்ள வெள்ளத்தையும் வறட்சியையும் குறித்த அச்சத்தை தணிக்காது.

சிவசுந்தரம் சிவசேகரம் கடந்த 45 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். 2007 வருடத்தில், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போர் நெடுங்கேணி வடக்கிலிருந்த அவரது காணியிலிருந்து இடம் பெயர தூண்டியது. 2011ம் ஆண்டு அவர் மீண்டும் திரும்பி வருகையில் அவர் அவ்விடம் மாறியிருந்தது.

‘முந்தி விவசாயம் நல்ல முறையில் செய்யக்கூடிய மாதிரியும் கூடுதல் இலாபத்தை பெறக்கூடியமாதிரியும் இருந்ததது இப்ப அப்பிடி இல்லை. இப்ப எல்லாம் எந்த நேரத்தில மழை பெய்யுது எந்த நேதத்தில வெயிலடிக்கும் எண்டு யாராலையும் சொல்ல முடியாம இருக்கு’.

சமீரின் கூற்றின்படி 429 விவசாயிகள் தெரிந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான காப்புறுதி 2019 யூலையில் வழங்கப்பட்டுள்ளது.

சிவசேகரம் 2017 பெரும்போகத்தில் 70 ஏக்கரில் நெல்லை விதைத்தார். ஆனால், வறட்சியின் காரணமாக அவர் 32 ஏக்கரில் மாத்திரம் அறுவடை செய்தார். 2018ம் ஆண்டு பருவத்தில் 25 ஏக்கரில் பயிரிட அவர் தீர்மானித்தார்: ஆனால், அவ்வருடத்தில் கடும் மழையை அவருக்கு சந்திக்க நேர்ந்தது.

‘விவசாயம் என்பது வெள்ளமும் வறட்சியும் நிலவுமானால் கையாள முடியாததாக போய்விடும்,’ என்கிறார் அவர்.

பொதுவாக, ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு மூடையும் 50 கிலோ (110 இராத்தல்) எடையுள்ள 40 மூடைகளை அறுவடை செய்வதாக அவர் கூறினார். ஆனால், 2018ம் ஆண்டு போகத்தில் ஒரு ஏக்கருக்கு 26 மூடைகள் மாத்திரமே அறுவடை செய்தார்.

நெடுங்கேணி வடக்கிலுள்ள ஏனைய விவசாயிகளைப் போன்று, சிவசேகரமும் சில விதைகளை அடுத்த விதைத்தலுக்காக சேமிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். ஆனால், இவ் வருடத்தில் அடுத்த விதைத்தலுக்கு சேமிக்க போதுமானதாக அவர் வளர்க்கவில்லை.

‘இம்முறை நட்டமாகிட்டு,’ எனும் அவர் ‘அடுத்த முறை கூட கடன் வாங்க வேண்டி வரும்’ என மேலும் கூறுகிறார்.

இலங்கை விவசாய பாடசாலை, வவுனியாவில் விரிவுரையாளராக பணியாற்றும் துஷிதா வடிவழகன் உள்ளூர் விவசாயிகளை, வெள்ளத்தையும் வறட்சியையும் தாங்கும் பாரம்பரிய நெல் விதைகளுக்கு மாறுமாறு ஊக்கமளிக்கின்றார். ஆனால், பாரம்பரிய நெற்கதிர்கள் 2-3 மாதங்கள் அறுவடைக்கு தயாராக மேலதிகமாக எடுத்துக் கொள்ளுவதாவும், நெற் பயிர் ஆராய்ச்சி நிலையங்களால் வழங்கப்படும் புதிய நெற்கதிர்களை விட விளைச்சல் குறைவாக உள்ளதாகவும் கூறுகிறார்.

நெல் விவசாயிகளும் கூட பயிர்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஆர்வமாக இல்லை.

‘தொடர்சியாக அழிவுகளை சந்திருத்து இருந்த போதிலும், அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள், என்றோ ஒரு நாள் நாம் முன்னேறுவோம் என்ற நம்பிக்கையில்’ என கூறுகிறார்.

ஆனால், கஜரகனுக்கு காத்திருப்பதில் விருப்பமில்லை.

அவர் இன்னும் வயல் வெளிக்கு செல்கின்றார். ஆனால், அத்துடன் கறவை மாடுகளை பராமரிக்கும் வேலையிலும் ஈடுபடுகின்றார் – இன்னும் அதிகமாக கறவை மாடுகளை பெற்றுக் கொள்ள உத்தேசித்து உள்ளார். எலக்டிரிசீயனாக பணியாற்றவும் அவர் உள்ளார்.

‘பரம்பரையா விவசாயம் செய்திட்டு வாரோம், என்கிறார் கஜரகன். ‘நான் என்ன கஸ்டப்பட்டும் எங்கட பிள்ளைகளை படிக்க வைச்சு இந்த துறையில இறங்க விடாம விடுறதுதான் நல்லம் எண்டு நினைக்கிறன் எங்களைப் போல அவங்களும் கஸ்டப்படக் கூடாது.’

இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே.