கிரிஸ்தவகுளம், இலங்கை – வெளியில் வயல்வெளிகளில் மழை பெய்துகொண்டிருக்கும்போது மின்விளக்கின் கீழ், சிவேந்திரன் சுபாசினி இரவு உணவிற்கு முன் அவர்களது வீட்டுப்பாடங்களை மீண்டும் பார்ப்பதற்காக தனது பிள்ளைகளுடன் அமர்ந்துள்ளார்.
இந்த சாதாரண காட்சியை அவள் இரண்டு வருடங்களாக கனவு காண்பதிலேயே கழித்தாள்.
மே 2019 இல், அவரது இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டிற்கு குடிபெயர்ந்த மாமியார் மற்றும் கணவருடன் தனது குழந்தைகளை விட்டுவிட்டு, இரண்டு இளம் பெண்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு பணிப்பெண்ணாகவும் குழந்தை பராமரிப்பாளாராகவும் வேலை செய்ய கத்தாருக்கு பறந்தார்.
‘என்ற பிள்ளைய கூட நான் அப்பிடி கவனிச்சு பாத்ததில்லை; எந்த நேரமும் கூடவே இருந்து பாத்துக்கணும்’ என்கிறார் சிவேந்திரன். ‘அது சரியான கவலையா இருக்கும். சில வேளை அதை நினைச்சு அழுதிருக்கன்’
குற்ற உணர்வு மற்றும் கண்ணீருடன் வேலை செய்த அவர், ஒரு மாதத்திற்கு 50,000 இலங்கை ரூபாயை ($ 247) தனது வீட்டிற்கு அனுப்பினார், இது கட்டிட வேலை செய்யும் அவரின் கணவரின் வருமானத்தை விட அதிகமானது. ஆகஸ்ட் மாதத்தில், இரண்டு மாத வருகைக்காக வீட்டிற்கு வந்தார், ஆனால் அவரது 8 வயது மகன் மற்றும் 11 வயது மகளுடன் ஒரு உணர்ச்சிகரமான மறு இணைவுக்குப் பிறகு – மற்றும் பெருந்தொற்றுநோய் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத பட்சத்தில் – வேறொருவரின் குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் அதிக பணம் சம்பாதிப்பதை விட தனது சொந்த குடும்பத்துடன் தங்கி கவனம் செலுத்த வேண்டும் என்று அவள் முடிவு செய்தாள்.
2001 முதல் 2020 வரை, இலங்கையின் வருடாந்த மொத்த உள்நாட்டு வருமானத்தில் சுமார் 8% வெளிநாட்டுப் பிரஜைகள், மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்களாகப் பணிபுரியும் சிவேந்திரன் போன்ற பல்லாயிரக்கணக்கான பெண்கள் உட்பட, வீட்டிற்கு பணம் அனுப்பியவர்களிடமிருந்து வந்துள்ளது. ஆனால் பெருந்தொற்றுநோய் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட குடும்ப முன்னுரிமைகள் ஆகியவற்றின் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் மாதாந்திரப் பணம் அனுப்பும் தொகை வியத்தகு அளவில் குறைந்துள்ளது.
இந்தக் கொடுப்பனவுகளைக் கையாளும் இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 73.6% ஆகக் குறைந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் படி, 2019 இல் வீட்டு வேலைக்காக 61,489 பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்., இந்த எண்ணிக்கை
2020 இல் 15,388 ஆகக் குறைந்துள்ளது, பின்னர் 2021 இல் 25,763 ஆக இருந்தது.
இந்த போக்கு நாட்டிற்கு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, இது சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதியில் பெருந்தொற்றுநோயின் எதிர்மறையான தாக்கத்தை சேர்க்கிறது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கூறுகிறார். வெளிநாடுகளுக்குத் திரும்புவதற்கும், மாதாந்திர பணம் செலுத்துவதைத் தொடங்குவதற்கும் அதிகமான தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நம்பிக்கையில், டிசம்பர் 2021 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் 10 ரூபாய் (.05 சென்ட்) போனஸ் சலுகையை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இன்னும் சில ஆராய்ச்சிகள் குழந்தைகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கல்விப் பெறுபேறுகள் ஆகியவற்றின் அடிப்படையில், தாய்மார்கள் வீட்டிற்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் இலங்கை குடும்பங்கள் பயனடையலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.
2021 இல் ஸ்ரீலங்கா ஜர்னல் ஆஃப் பிசினஸ் எகனாமிக்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒருபுறம் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவழிக்கக்கூடிய குடும்ப வருமானத்தில் அதிகரிப்பு; மறுபுறம் குடும்பப் பிரிவினால் ஏற்படும் உளவியல் செலவு என பெற்றோரின் புலம்பெயர்வு நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டது
2021 ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் உரிமைகள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வரும் பணம், சொந்த நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், ஊட்டச்சத்து மற்றும் பலவற்றை வழங்குகிறது. ஆனால் அதே ஆய்வின்படி, பாகிஸ்தானில், புலம்பெயர்ந்த பெற்றோரின் குழந்தைகள் “‘வயதான குடும்ப உறுப்பினர்களால் கடுமையாக நடத்தப்படுதல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்பட்டுள்ளனர்.”
சிவகுமார் மாரியம்மாவின் இளைய மகளான விதுசா, 2012 ஆம் ஆண்டு 3 வயதாக இருந்தபோது, அவரது கணவர் அவரை விட்டுச் சென்ற பிறகு, முதல் முறையாக வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். அவரது பெற்றோர் தனது நான்கு குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, ஒற்றை பெற்றோராக குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் பணிபுரிந்தார். தனது வருமானத்தை 25,000 ரூபாயிலிருந்து ($123) ஒரு மாதத்திற்கு 60,000 ரூபாயாக ($296) வளர்த்து, மொத்தமாக 700,000 ரூபாயை ($3,455) தன் குடும்பத்தின் தேவைக்காக.
நவம்பரில் இரண்டு மாத விடுப்பில் வீட்டிற்கு வந்தாள், பிப்ரவரியில் மீண்டும் வெளியே செல்ல எண்ணினாள். இருப்பினும், ” நோய் அதிகம் பரவுது அதோட அம்மா அப்பாக்கும் வயசாகிட்டு,” என்று சிவக்குமார் கூறுகிறார், மேலும் தனது நகரத்தில் வன்முறை மற்றும் குழந்தை துஷ்பிரயோகம் ஏற்படும் அபாயம் குறித்தும் கவலைப்படுவதாகவும் கூறினார். “பிள்ளைகள்ட பாதுகாப்பு முக்கியம் நான் அதால வெளிநாடு போற முடிவை கைவிட்டுட்டன்”
“அம்மா என்னோட இருக்கிறது சந்தோசமா இருக்கு,” என்று இப்போது 13 வயதான விதுசா கூறுகிறார், இருப்பினும் அவர் தனது 70 வயது பாட்டியால் பராமரிக்கப்பட்டதை அதிகம் விரும்பியதாவும் அவர் கூறுகிறார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெருந்தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்பதை உணர்ந்து, அரசு நிறுவனங்களும் சமூக சேவைகளும் மாற்று வழிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாட்டில் பணிபுரிந்து திரும்பிய பெண்களுக்கு சிறுதொழில் தொடங்க 50,000 ரூபாய் ($247) ஆரம்ப மூலதனத்தை வழங்குகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் பாடசாலை சேவைகள் அமைச்சகம், தாய்மார்களுக்கு உள்ளூர் வேலைப் பயிற்சியை வழங்குகிறது, இது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லும் அழுத்தத்தை உணராமல் தடுக்கிறது.
சிவகுமார் மற்றும் சிவேந்திரன் ஆகிய இருவருமே ஊக்கத்தொகையை ஏற்றுக்கொண்டுள்ளனர். கோழிப்பண்ணை அமைத்து கோழிகளை வளர்த்து வருமானம் ஈட்ட சிவக்குமார் திட்டமிட்டுள்ளார்; சிவேந்திரன் தையல் இயந்திரம் வாங்கி ஆடைகள் தைப்பவராவதற்கு தையல் தொழிலைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.
கத்தார் நாட்டு முதலாளி தன்னை வாட்ஸ்அப் மூலம் பலமுறை தொடர்பு கொண்டு மனதை மாற்றும்படி வற்புறுத்தினார் என்று சிவேந்திரன் கூறினார். ஆனால் அவள் பதிலளிப்பதை நிறுத்திவிட்டாள். இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் இருந்த போது 600,000 ரூபாயை ($2,960) அவளது குடும்பம் சேமித்து வைத்தது, வீட்டிலேயே தங்கி அடுத்த வருடத்திலாவது வேறொரு வாழ்வாதாரத்தை முயற்சிக்க இது போதுமானது என்று அவர் கூறுகிறார்.
அவரது கணவர் சிவபாலன் சிவேந்திரன், தனது மனைவி அனுப்பும் பணத்தை இழந்தது தனக்கு மன அழுத்தத்தையும் கவலையையும் தந்ததாக ஒப்புக்கொண்டார். 2016 அரசாங்க கணக்கெடுப்பின்படி, ஒரு சராசரி நடுத்தர குடும்ப வருமானமான 43,511 ரூபாவிலும் ($215) அவர்களின் மாத வருமானம் கட்டிட வேலை செய்பவராக அவர் சம்பாதிக்கும் 30,000 ரூபாயாக ($148) மிகக் குறைவாக, உள்ளது.
“நான் தனி ஒருவராக போராடுகிறேன்,” என்று அவர் கூறுகிறார், ஆனால் மேலும் கூறுகையில், “எனது மனைவி வீட்டில் இருப்பது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் மகிழ்சி. வருமானம் குறைவு என்றாலும் ஒரு குடும்பமாக ஒன்றாக வசிப்பது நன்றாக உள்ளது”
தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்புக் குறிப்பு
ஜொசப்பின் அந்தனி, ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.