மன்னார், ஸ்ரீலங்கா – கடந்த 10 வருடங்களாக, மனுவல் உதயச்சந்திரா தனது காணாமால் ஆக்கப்பட்ட மகனுக்காக மதிய உணவை பரிமாறி வைக்கின்றார். கண்களில் கண்ணீரோடு, தன் மகன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு தான் சூடான சோறு மற்றும் கறிகளை சிறு கிண்ணங்களில் சமையலறையில் பரிமாறி வைப்பதாக அவர் கூறினார்.
‘நான் வீட்டில் இல்லாத போதும், எனது மகள்மார் தங்களது சகோதரனுக்காக உணவை பரிமாறி வைப்பார்கள்’ என சந்திரா என அழைக்கப்படும் உதயச்சந்திரா கூறுகின்றார். ‘எனது பேரப்பிள்ளைகளும் தங்களது மாமாவுக்கு முதலாவதாக உணவு பரிமாறி வைக்கப்பட்டுள்ளதா என பார்ப்பார்கள்.’
அவரது மகன், அன்ரன் சனிஸ்ரன் பிகிறாடோ வயது 24, 2008ல் காணாமால் ஆக்கப்பட்டார். இவர், ஸ்ரீலங்காவின் அரசாங்கத்திற்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் நடந்த உள்நாட்டு போர் காலத்தில் காணாமால் ஆக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோரில் ஒருவராவார்.
சந்திரா 2011ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தை தலைமை தாங்கி வழி நடத்த ஆரம்பித்தார்.
இச் சங்கமானது, 26 வருடங்களாக நீடித்த போரில் தமது குடும்பங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுபவர்களை ஒருங்கிணைக்கின்றது. இம் முரண்பாடான காலங்களில், அரசாங்கப் படைகளானது ஆட்களை கடத்தி காணாமலாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 16,000க்கு மேலானோர் காணாமால் ஆக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மதிப்பீடு செய்துள்ளது.
2014 முதல், மனித எச்சங்களோடு இரு பாரிய புதைகுழிகள் மன்னாரில் நடந்த கட்டுமானா பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகள் பரவும் வேளையில், குடும்ப அங்கத்தவர்கள் தமது அன்புக்குரியவர்களின் எச்சங்கள் அதிலுள்ளதா என அறிந்து கொள்வதற்காக அதிகாரிகளிடம் விரைந்து செல்வார்கள்
இத்தகைய உணர்வுகளின் வலிகளை போக்குவதற்காகவே சந்திரா செயற்படுகின்றார். அனேகமானோர் காணாமால் ஆக்கப்பட்டுள்ளார்கள் எனும் உண்மைக்கு கவனத்தை ஈர்ப்பதுடன் அதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டு காணாமால் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியையும் சமாதானத்தையும் கொண்டு வருவதே அவரின் நம்பிக்கையாவுள்ளது.
சந்திராவின் சங்கப் பணியானது – அதாவது சாலையோர போராட்டங்கள், மனுக்களை ஆயத்தப்படுத்தி சமர்ப்பித்தல் மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் போன்றவை, ஸ்ரீலங்காவின் வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிற்கும் விரிவடைந்துள்ளன. சங்கத்தின் பணியை குறித்த கவன ஈர்ப்புக்கு இவர் ஒரு கருவியாக அமைந்துள்ளதாக மற்ற சமூக உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
தனது மகன் காணாமால் ஆக்கப்பட்ட ஆரம்பத்தில் எவ்வாறு அவரை தேடுவது என்பதை குறித்து சந்திரா போராடியுள்ளார்.
‘தனியாக, நானே தேடினேன். அப்போது, ஒரு தாய்கூட முன்வரவில்லை. எனது இதயத்தில் தேட வேண்டுமென்று நினைத்தாலும், அதற்கான தைரியம் எனக்கு இருக்கவில்லை’ என கூறினார்.
2011 தை மாதம், சந்திரா காணாமால் ஆக்கப்பட்டவர்களின் ஐந்து தாய்மார்களை சந்தித்தார். இவர்கள் உள்ளுர் அரசாங்க அலுவலகமொன்றின் முன் ஒன்று கூடி இரண்டு மணித்தியால போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்விரு மணித்தியாலங்களில் 62 தாய்மார் இணைந்து கொண்டனர்.
‘இவ்வாறு இவர்கள் இணைந்து கொண்ட வேளையில், இன்னும் அதிகமான தாய்மார்கள் (காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின்) இருப்பதையும் அவர்களையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அறிந்தோம்’ என சந்திரா கூறினார்.
மற்ற தாய்மார்களுடன் ஸ்ரீலங்காவின் 25 மாவட்டங்களிற்கு சென்றார். ஏனைய காணாமால் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களை அழைத்து சந்தித்தார்.
‘நான் இரண்டு வருடங்களாக ஐந்து மாவட்டங்களிற்கு பொறுப்பாகவிருந்தேன்’ ‘அதன் பிறகு, ஏனைய மாவட்டங்களிலுள்ள ஆர்வலர்களை சந்தித்து அவர்களை நியமித்தோம்’ என கூறினார்.
தற்போது, சங்கமானது எட்டு மாவட்டங்களில் எட்டு தலைவர்களை கொண்டுள்ளதுடன், தமது காணாமால் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் முகமாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனுக்களை சமர்ப்பித்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றது.
ஆனால் புதிதாக ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்பானது காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்கக்கூடிய சாத்தியங்களின் நம்பிக்கையில் புதிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
ஓக்டோபர் 26ம் திகதி, ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி அவர்கள், கடமையிலிருந்த பிரதம மந்திரியை வெளியேற்றிவிட்டு முன்னைய ஜனாதிபதி, மகிந்த இராஜபக்சவை நாட்டின் புதிய பிரதம மந்திரியாக நியமித்தார். புதிய பிரதமர் பாராளுமன்றத்தில் முறையாக அங்கீகரிக்கப்படாமை மற்றும் 2019ம் ஆண்டில் பொதுத் தேர்தலுக்கான ஜனாதிபதியின் அழைப்பு உச்ச நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்பம் தொடர்கின்றது. ஒரு தீர்வு அல்லது இணக்கப்பாட்டிற்குள் வர முடியாத நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் நாற்காலிகள் மற்றும் மிளகாய் தூளை ஒருவர் மேல் ஒருவர் வீசியது ஒழுங்கற்ற குழப்பமான நிலையை தோற்றுவித்தது.
‘காணாமல் ஆக்கப்பட்டோரை குறித்து மறுமொழிகளை தருவதில் பாரிய மாற்றமொன்றும் அரசியலில் மாற்றம் ஏற்ப்பட்டாலும் ஏற்ப்பட போவதில்லை’ என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் நீதி பீடத்தின் தலைவரான குமரவடிவேல் குருபரன் கூறுகின்றார்.
மேலும் அவர் 2015ல் ஆட்சியிலிருந்த கூட்டணி அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோரை குறித்த பிரச்சினைகளை தீர்க்க சொற்ப முயற்சியே செய்தது என கூறுகின்றார்.
“காணாமல் ஆக்கப்பட்டோரை குறித்த மக்களின் போராட்டம் வீணாக போகாத வேளையில் போராட்டங்களினால் ஏற்படும் கவன ஈர்ப்பு முக்கியமானது என நான் நம்புகின்றேன்’ என அவர் கூறுகின்றார். ‘குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரை குறித்த கவனத்தை ஈர்ப்பது மாத்திரமில்லாமல் யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட ஏனைய பிரச்சினைகளை குறித்தும் அது கவனத்தை ஈர்த்துள்ளது.’
ஸ்ரீலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணமற்போனோருக்கான காரியாலயம் என பல நிறுவனங்கள் காணாமலாக்கப்பட்டோரை குறித்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
மன்னாரிலுள்ள FORUM எனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மன்றம் 303 பேர் அம் மாவட்டத்தில் மாத்திரம் காணாமல் போயுள்ளதாகவும், அதில் காணாமல் போன 172 பேர் 19 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களெனவும் கூறுகின்றது.
செப்டம்பர் 2008ல் உள்ளூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து போதிய ஆதாரங்கள் இல்லாமையால் அது மேற்கொண்டு எடுத்து செல்லப்படவில்லையெனவும் சந்திரா கூறினார். ஆனால், 2015 ம் ஆண்டு அதில் ஒரு மாற்றம் ஏற்ப்பட்டது: கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை யின் தைப் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக புகைப்படமொன்றை தமிழ் இணையத்தளமொன்று வெளியிட்டது.
அதில் தனது மகன் கூட்டத்தில் நிற்பதை கண்டதாக சந்திரா கூறினார்.
அதன் பிறகு ஆட்கொணர்வு வழக்கொன்றை புதியதாக தாக்கல் செய்துள்ளார். பொலிஸ், நீதிமன்ற அறைக்கு தனது மகனல்லாத வேறொருவரை அழைத்து வந்தனர்.
அடுத்த இரு வருடங்களும், தனது மகனை தேடும் முயற்சியில், எல்லா 23 சிறைச்சாலைகளிலும் தேடியதோடு 55 தடவைகளுக்கு மேலாக உள்ளூர் பொலிஸ் நிலையத்திற்கும் சென்றுள்ளார்.
‘நான் செல்லாத ஒரு இடமுமில்லை’ என சிறைச்சாலைகளை குறித்து கூறினார்
அவரது அர்ப்பணிப்பு மற்றவர்களுக்கு ஒரு அகத்தூண்டுதலாகவுள்ளது.
சுபலட்சுமி எனப்படும் இராசதுரை சுபலட்சுமி தன்னை சந்திராவின் துணைத் தலைவர் என கூறுகின்றார். அவரது மகன் 2009ம் ஆண்டு வவுனியா மாவட்டம் செட்டிகுளத்தில் இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இராமநாதன் முகாமிலிருந்து காணாமல் போனார்.
‘சந்திரா மிகுந்த பொறுமையுள்ளவர். ஆனால், அவருக்கு எந்தவித பலனுமில்லை. அவரின் பொறுமையை பெரிய காரியமாக நான் காண்கின்றேன்’ என சுபலட்சுமி கூறுகின்றார்.
ஒக்டோபரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புக்கு முன்னர், தனக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்ததாக சந்திரா கூறுகின்றார்.
‘எனது மகன் இன்று அல்லது நாளை வருவான், வாசற்படியில் நின்று என்னை அம்மா என்று கூப்பிடுவான்’ என சந்திரா ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் , ஜிபிஜேக்கு கூறினார்.
ஆனால் அந்த நம்பிக்கை அற்று போய்விட்டது. நிச்சயமற்ற அரசியல் அவரின் மகனை குறித்த பதிலுக்கான நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டது.
‘யாரை நம்புவது என எமக்கு தெரியவில்லை’ அரசாங்கத்தையோ அல்லது
அரசியல்வாதிகளையோ நம்புவதில் எந்த வித பிரயோசனமுமில்லை’. அப்படியே அரசாங்கம் மாறினாலும் என்ன பிரயோசனம்’ ஆட்சியில் இருக்கும் போது என்னத்தை எமக்கு செய்தார்கள்’ என கூறினார்.;
ஜொசப்பின் அந்தனி ஜிபிஜே, இக் கட்டுரையை தமிழிலில் மொழி பெயர்த்தார்.