Sri Lanka

அரசுடனான நில தகராறுகள் இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களை புறக்கணிக்கப்பட்ட நிலைக்கு தள்ளியுள்ளன

இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் சொந்த கிராமங்களை விட்டு வெளியேறினர். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீள் திரும்பியபோது, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கும் திறனை முடக்கி, பலரின் சொத்துக்களை அரசாங்கம் தமது கைவசப்படுத்திருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

Read this story in

Publication Date

Tamil Returnees Fight to Reclaim Seized Land

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

மனோகரன் சரோஜினி தனது காணியில், குச்சிகளைக் கொண்டு வேலி அமைத்துள்ளார். அரசாங்கம் தனது நிலத்தை ஒரு இயற்கை வனம் என்று அதிகாரப்பூர்வமாக நியமித்திருந்தாலும், 2 ஏக்கர் பரப்பளவில் சரோஜினி ஒரு பகுதியில் குடியேறியுள்ளார். குடும்பத்தால் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்பதால், சரோஜினியின் கணவர் வேலைக்காக வேறு பகுதிக்கு சென்றுவிட்டார்.

Publication Date

காஞ்சூரமோட்டை, இலங்கை – இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி 26 ஆண்டுகளுக்குப் பிறகு, மனோகரன் சரோஜினி 2018 இல் தனது குடும்பத்தின் காணிக்குத் திரும்பினார். கத்தரிக்காய், வெண்டி மற்றும் தக்காளி ஆகியவற்றை வளர்ப்பதற்காக தனது 2 ஏக்கரை காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுவதற்கு கற்பனை செய்தாள். கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தனது நாட்களை அங்கே வாழ வேண்டும் என்று கனவு கண்டாள்.

ஆனால் யதார்த்த நிலை மிகவும் சிக்கலானது.

அவள் திரும்பி வந்த சிறிது நேரத்திலேயே, நிலம் இனி அவளுடையது அல்ல என்பதை சரோஜினி அறிந்தாள். அது அரசுக்கு சொந்தமாயிருந்தது.

உள்ளூர் அதிகாரிகள் அதை காடாக மாற்றியிருந்தனர். சட்டத்தின் பார்வையில், அவள் மீண்டும் சொந்த நிலம் இல்லாமல் இருந்தாள்.

‘உங்கள் தாயார் வாழ்ந்த இடம் இதுதான்’ என்று ஒரு உறவினர் தன்னிடம் காண்பித்ததாக கூறினார். ‘இது உங்கள் சொந்த நிலம்.’

காஞ்சூரமோட்டை கிராமத்தில் சுமார் 38 குடும்பங்கள் இதேபோன்ற அவல நிலையை எதிர்கொள்கின்றன, ஆனால் நாடு முழுவதும் பலர் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பார்க்கும் போது, அவர்கள் தனியாக இல்லை.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது, ஆனால் மீள் திரும்பி வருபவர்களுக்கு நில அனுமதி இல்லாதது மற்றும் பயனற்ற நிர்வாகக் கட்டுப்பாடுகள் பல குடும்பங்களை புறக்கணிக்கப்பட்ட நிலைக்கு தள்ளியுள்ளன.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சரோஜினி தனது கிராமம் அமைந்துள்ள மாவட்டமான வவுனியாவின் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட ஒரு வண்டியிலிருந்து தண்ணீரை நிரப்புகிறார். கிராமத்தின் 38 குடும்பங்களுக்கு மின்சாரம் அல்லது தண்ணீர் போன்ற அடிப்படை சேவைகளுக்கான வாய்ப்புகள்இல்லை.

பொருளாதார இஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்துக்கு நிலம் அவசியம் என்பது ஆழமாக பிணைந்துள்ள ஒரு நாட்டில், உடைமையின்றி, வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

கிழக்கு மாகாணத்தின் ஓய்வுபெற்ற நில ஆணையர் கதிர்காமத்தம்பி குருநாதன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக இங்குள்ள கிராமவாசிகளை சந்தித்து உரையாடியுள்ளார், மேலும் தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் தொடர்ந்து தங்கள் மூதாதையர் கிராமங்களுக்குத் திரும்பும்போது, அவர்களது நிலங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டால் பதட்டங்கள் அதிகரிக்கும் என்று கூறுகிறார்.

‘இடம்பெயர்ந்த மக்கள் படிப்படியாகதான் திரும்பி வருவார்கள்’ என்று குருநாதன் கூறுகிறார். ‘தற்போது கிராமவாசிகள் வரத் தொடங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் திரும்பி வரும்போது, அவர்களின் நிலங்கள் அவர்களுக்குக் கிடைக்காது, அது ஒரு பிரச்சனையாக இருக்கும்.’

ஈழத்தின் விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் போராடச் செய்த உள்நாட்டுப் போர், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு 2009 இல் முடிவடைந்தது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், மேலும் 146,000 பேரை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. இதில் பெரும்பாலானோர் சிறுபான்மையினத் தமிழர்கள்.

காஞ்சூரமோட்டை அமர்ந்திருக்கும் வவுனியா போன்ற வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 270,000 பேர் உட்பட இலங்கைக்குள் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இலங்கை அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை, கொண்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்கள் மெதுவாக தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் சரோஜினியும் ஒருவர். 1992 இல் தனது பெற்றோருடன் காஞ்சூரமோட்டையை விட்டு வெளியேறி பல இடங்களில் வசித்து வந்தார். அவரது பெற்றோர் இறந்துவிட்டனர், மற்றும் அவர்களின் காணி உரிமைப் பத்திரம் தொலைந்ததினால், சரோஜினிக்கு சட்டப்பூர்வ உரிமை கோர முடியாமல் உள்ளது.

திரும்பி வரும் பிற குடும்பங்களும் இதேபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றன. சிலர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர், மற்றவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றனர். . முன்னாள் கிராமவாசியும், காஞ்சூரமோட்டை பகுதிக்கான கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கனகர் கணபதிப்பிள்ளை போருக்கு முன்பு 168 குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன. என்று கூறுகிறார்.

expand image
expand slideshow

தயாழினி இந்திரகுலராசா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

மனோகரன் சரோஜினி தனது மூன்று குழந்தைகளுக்கு வீட்டில் உணவு தயாரிக்கிறார். 1990 களின் முற்பகுதியில், இலங்கையின் உள்நாட்டுப் போர் சரோஜினியையும் அவரது பெற்றோரையும் அருகிலுள்ள கிராமத்திற்கு செல்ல கட்டாயப்படுத்தியது. அவர் 2018 இல் மீண்டும் காஞ்சூரமோட்டைக்கு திரும்பினார்

குருநாதன் அரசாங்கம் நிலத்தை வனப்பகுதியாக மாற்றுவதற்கு முன்பு அவை யாருக்குச் சொந்தமானது என்பதைக் காட்டும் ஆவணங்கள் உள்ளன என்று கூறுகிறார்.

வவுனியாவின் மேலதிக மாவட்ட வன அதிகாரியான மொஹமட் அபுபக்கர் நபீஸ் கூறுகையில், அதிகாரிகளுக்கு வேறு வழியில்லை, ஏனெனில் போருக்குப் பின்னர், ஏனையவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து அதை உருவாக்கத் தொடங்கினர். காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்காக அரசாங்கம் இப்பகுதியை ஒரு காடாக அறிவித்தது.

அந்த சொத்துக்களை யார் வைத்திருந்தார்கள் என்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடிந்தால், உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை திரும்பப் பெறுவார்கள் என்று அவர் கூறுகிறார்.

‘காடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் தனியார் காணிகள் ஏதும் இருந்தால், நாங்கள் அந்த நிலத்தை முறையாக கையளிப்போம்’ என்று அபுபக்கர் கூறுகிறார். ‘நாங்கள் அக் காணிகளை விடுவிப்போம்’.

காஞ்சூரமோட்டையில் நிலைமைகள் கடினமானது. இங்கு நீர், பொது போக்குவரத்து, மின்சாரம் மற்றும் பிற அடிப்படை சேவைகள் இல்லை. விவசாயமே வாழ்வாதாரத்திற்கான ஒரே வழி.

அந்தோனி லக்ஸ்மன், அவரது பெற்றோர் இறந்த பிறகு, 2018 இல் காஞ்சூரமோட்டை திரும்பினார். அவர் விவசாயம் செய்யத் திட்டமிட்டார். ஆனால், அரசாங்கத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த முயற்சிகள் இஸ்தம்பிதமாயின.

‘வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை, எனவே நாங்கள் அருகிலுள்ள பகுதிகளில் கூலியாட்களாக பணியாற்ற வேண்டும்’ என்று லக்ஸ்மன் கூறுகிறார். ‘இரண்டு நாட்களுக்கு மேல் வேலை இல்லை என்றால், நாங்கள் பட்டினி கிடக்கிறோம்.’

சரோஜினியின் கணவர் இங்கிருந்து வடமேற்கே 148 கிலோமீட்டர் (92.5 மைல்) தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு கருணா இல்லத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார், மேலும் மாதத்திற்கு இலங்கை ரூபாய் 30,000 இலங்கை ரூபாய் ($ 160) சம்பாதிக்கிறார். அரசாங்கத்தின் சட்ட உதவி ஆணையம் சரோஜினியின் குடும்பம் உட்பட கிராமவாசிகளுக்கு ஆடுகளை வழங்கியுள்ளது.

நம்பிக்கை இருக்கலாம். திரும்பி வரும் கிராம மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 37 வீடுகளை வழங்கியுள்ளதாகவும் மேலும் பலவற்றிற்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் முன்னாள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கதிரமலைநாதன் பரந்தமான் கூறுகிறார்.

யூன் மற்றும் யூலை தொடக்கத்தில் கிராமவாசிகள் போராட்டங்களைத் தொடங்கிய பின்னர், வவுனியாவின் மாவட்டச் செயலாளர் காஞ்சூரமோட்டை குடியிருப்பாளர்களைச் சந்தித்து, காணிப் பிரச்சினையை அடுத்த இரண்டு மாதங்களில் தீர்ப்பதாக உறுதியளித்தார்.

34 வயதான சரோஜினி, அவர்கள் திரும்பி வநத பின்னர், அவரது குடும்பத்தினர் தனது காணியை விவசாயத்திற்காக துப்புரவாக்கத் தொடங்கிய போது, வனத்துறை அவர்களை நிறுத்த உத்தரவிட்டதாக கூறுகிறார்.

சரோஜினி அதிகாரிகளை மீறி, எப்படியாவது தனது காணியில் ஒரு சிறிய பகுதியில் குடியேறினார். தற்போது, அவர் 13, 10 மற்றும் 5 வயதுடைய தனது குழந்தைகளுடன் வசிக்கிறார், மற்ற கிராமவாசிகளைப் போலவே, அவர் தன் நிலத்தை என்றென்றும் இழக்க நேரிடும் என்ற பயத்தில் மீண்டும் வெளியேற மாட்டேன் என்று கூறுகிறார்.

“இது எங்கள் நிலம்,” என்று அவர் கூறுகிறார். “நாங்கள் இதை காட்டுக்கு கொடுக்க முடியாது.”

இந்த கதை முதலாவதாக ஆகஸ்ட் 16, 2020 அன்று வெளியிடப்பட்டது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா என்ற நகரத்தை மையமாகக் கொண்ட தயாழினி இந்திரகுலராசா, குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே. எங்கள் மொழிபெயர்ப்பு செயல்முறை பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.

Related Stories