செட்டிகுளம், இலங்கை – கிருஸ்னகுமார் சுமத்திரா தனது இரு பிள்ளைகளுக்கும் கோழிக் கறியை சமைத்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் மிக விருப்பமான உணவு வகையை தாயாரித்து அவர் தன் பிள்ளைகளை மதிய உணவு வேளையில் ஆச்சரியப்பட வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமைகள் தனக்கு சந்தோஷமான நாட்கள் என அவர் கூறுகின்றார். அவர் ஆடைத் தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் வேலை செய்கின்றார். தான் மாதாந்தம் இலங்கை ரூபாய் 16,000ஐ (கிட்டத்தட்ட அமேரிக்க டொலர்கள் 91) சம்பாதிப்பதாக கூறும் அவர் ரூபாய் 20,000 வரை (கிட்டத்தட்ட அமேரிக்க டொலர்கள் 113) மேலதிக வேலை செய்வதற்கன கொடுப்பனவுகளால் பெற முடியுமென கூறுகின்றார்.
தனது முன்னைய தொழிலான முன்பள்ளி ஆசிரியராக சம்பாதித்த ரூபாய் 1,500ஐ (கிட்டத்தட்ட அமேரிக்க டொலர்கள் 8.50) விட தனது தற்போதைய சம்பளத்தை குறித்து சந்தோஷப்படுவதாக சுமத்திரா கூறுகின்றார். 2007ம் வருடத்தில், சுமத்திரா தனது இரண்டாவது பிள்ளைக்காக ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த வேளையில், அவரது கணவர் குண்டு வெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
அக்கால கட்டத்தில், இலங்கை தேசமானது உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில் இருந்தது. தன் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் அயலவர்களின் நன்கொடைகளில் வாழ்ந்ததாக சுமத்திரா கூறுகின்றார். மேலும் அவர், முன்பள்ளி வேலையில் தான் பெற்றுக் கொண்ட பணம் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட போதுமானாதாக இருக்கவில்லை என கூறினார்.
2009ல் நிறைவுக்கு வந்த உள்நாட்டுப் போரானது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்டத்தில் பாரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது.
‘வேலையின்மை என்பது பாரிய பிரச்சினை மற்றும் அது பெண்களை அதிகமாக பாதிக்கின்றது’ என யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் விரிவுரையாளர் சுப்ரமணியம் ஜீவசுதன் கூறுகின்றார். ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆய்வுகளின்படி வடக்கிலுள்ள பெண்களின் மத்தியில் இப்பிரச்சினை குறிப்பிட்ட அளவில் உயர்வாக இருப்பதுடன் – அது ஆண்களின் வேலையின்மையை விட ஐந்து மடங்கு அதிகமானதாக உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
விவசாயம் மற்றும் ஏனைய சேவைகளில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அவை மிகக் குறைவான ஊதியத்தையே தருகின்றன என அவர் கூறுகின்றார். அநேக நேரங்களில். அவை தற்காலிக வேலைகளாக இருப்பதுடன் போதியளவு ஊதியத்தை தருவதில்லை.
ஆனால், ஆடைத் தொழிற்சாலைகள் நிரந்தர வேலைகளை தருவதுடன் மாதச் சம்பளத்துடன் ஓய்வு ஊதியம் மற்றும் சலுகைகளை அரசாங்கத்தின் கட்டாயப்படுத்துதலில் தருவதாக ஜீவசுதன் கூறுகின்றார்.
சுமத்திராவின் ஆடைத் தொழிற்சாலை, தற்போது இப் பகுதியிலுள்ள இரு முக்கிய வியாபார தலங்களில் ஒன்றாக உள்ளது. இரு தொழிற்சாலைகளும் ஏறத்தாழ 3,000 பெண்களை வவுனியா மாவட்டத்திலிருந்து வேலைக்கமர்தியுள்ளன. 2018ம் ஆண்டில், குளோபல் பிரஸ் நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் அளித்த தகவல்களின்படி, அவர்களது மொத்த தொழிலாளர்களான 3,658 பேரில் 73% பெண்களாக உள்ளார்கள். (தனது வேலைக்கு ஆபத்து வராத வண்ணமாக தான் வேலை செய்யும் ஆடைத் தொழிற்சாலையினை அடையாளம் காண்பிக்க வேண்டாமென சுமத்திரா குளோபல் பிரஸ் ஜெர்னலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்)
வவுனியாவைச் சேர்ந்த பெண்ணான நாரயணன் நந்தினி உள்நாட்டு போரின் இறுதி காலக் கட்டத்தில் சில தொழில்கள் மாத்திரமே அப் பகுதியில் இருந்ததாக கூறினார். அத் தொழில்களும் மிகச் சொற்ப சம்பளத்தையே வழங்கின. மேலும், 2008ம் ஆண்டில் உள்ளூர் நிறுவனமொன்றில் தான் வேலை செய்ததாகவும், மாதம் ரூபாய் 5,000 சம்பாதித்ததாகவும் (கிட்டத்தட்ட அமேரிக்க டொலர்கள் 28) கூறினார். அவ் வருட இறுதியில் இலங்கையின் வர்த்தக தலைநகரமான கொழும்பிற்கு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்ய சென்றார். அங்கே தான் மாதச் சம்பளமாக ரூபாய் 19,000ஐ சம்பாதித்ததாகவும் (கிட்டத்தட்ட அமேரிக்க டொலர்கள் 107) கூறினார்.
“குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதும் கொழும்பில் தனியாக வேலை செய்வது, பயத்தையும் கவலையையும் தரும் விடயமாகும்’ என அவர் கூறுகின்றார்.
அத் தொழிற்சலையில் கிட்டத்தட்ட மாதம் ரூபாய் 30,000ஐ (அமேரிக்க டொலர்கள் 170) சம்பாதித்ததாகவும் கூறினார். அப்போது வவுனியாவில் தனது பெற்றோரின் வீட்டிற்கு அருகாமையில் ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட போவதாக கேள்விப்பட்டார். 2018 மீண்டும் வவுனியாவுக்கு வந்த அவர் தற்போது மாதம் ரூபாய் 25,000 (அமேரிக்க டொலர்கள் 141) சம்பாதிக்கின்றார்.
கண்களில் பெருமை மிளிர தான் எவ்வாறு தனது திருமண செலவுகளுக்கான பணத்தையும், மணப்பெண் திருமணம் செய்யப் போகம் ஆணுக்கு உயர்ந்த விலையாகவும் சம்பிரதாயமாகவும் கொடுக்கும் சீதனம் உட்பட தான் சேமித்ததையும் கூறுகின்றார். டிசம்பர் 2018ல் திருமணம் செய்து கொள்வதற்காக நந்தினி தனது வேலையிலிருந்து விலகினார்.
சம்பாதித்து சேமித்தாலும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வது களங்கமான விடயமாக கருதப்படுகின்றது என நந்தினி கூறினார்.
நந்தினி கூறுவதாவது ‘நாம் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்கிறோம் எனும்போது மக்கள் எம்மை கேலியாக பார்க்கின்றார்கள். ஏன் என்று தெரியவில்லை’.
தொழிற்சாலைகளில் உள்ள வேலைகளின் தரத்தினை அறியக்கூடிய விழிப்புணர்வு இல்லாமை இவ்வாறான சமூக பார்வையை தோற்றுவித்துள்ளது என்கிறார் மாயழகு சிவக்குமார்.
அநேக நேரங்களில் தொழிற்சாலைகளில் உள்ள வேலைகளை குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடுவதாக சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் உருவாக்குநர்கள் (SEED) எனும் நிறுவனத்தின் நிகழ்ச்சி மேலாளர், சிவக்குமார் கூறுகின்றார்.
‘ஆடைத் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்ற பிறகு ஒரு சிறிய மாற்றம் அவர்களின் நடவடிக்கையில் ஏற்படுகின்றது’ என சிவக்குமார் பெண் பணியாளர்களை குறித்து கூறுகின்றார். ‘அவர்களின் உடுத்தும் உடையில், அலங்காரத்தில், கையடக்க தொலைபேசிகளில் மற்றும் அவர்கள் பாவிக்கும் வீட்டு உபகரணங்களில் மாற்றங்கள் உள்ளன’.
பெண்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்வதன் மூலமாக உடைகளிலும் ஏனைய பொருட்களிலும் தமது குடும்பம்பத்திலுள்ளவர்கள் தெரிந்து எடுப்பதை விட தாம் தெரிந்து எடுப்பவற்றில் பணத்தை செலவளிக்க முனைகின்றனர், என சிவக்குமார் கூறுகின்றார்.
‘சமூகத்தில் இதை முற்றாக புரிந்து கொள்ள சந்தர்ப்பம் இல்லை’ என கூறுகின்றார்.
தொழிற்சாலைகள் அநேக நேரங்களில் உயரமான சுவர்களினால் வேலியடைக்கப்பட்டு உள்ளே பாரிய இடங்களாக உள்ளபடியினால் சமூகத்தினர் உள்ளே நடைபெறுவதை காண முடியாதுள்ளது. வேலை செய்பவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் முன் கேட்டிற்கு பிறகு அனுமதிக்கபடுவதில்லை என்கிறார் அவர்.
‘அதிகாலையில் ஒரு பேரூந்து அவர்களை ஏற்றிய பின்னர் பின்நேரத்தில் கொண்டு வந்து விடும்’ என சிவக்குமார் தொழிற்சாலைகள் தமது தொழிலாளர்களுக்கு வழங்கும் போக்குவரத்து சேவையினை குறித்து விளக்குகின்றார். ‘இப்படியாகத்தான் அவர்கள் போவதும் வருவதுமாக இருப்பார்கள். ஆண்கள் இத் தொழிற்சாலைகளில் வேலை செய்வதால் மக்கள் அங்கே பிரச்சினை உள்ளதென்ற ஒரு கோணத்தை உருவாக்கியுள்ளார்கள்’.
தொழிற்சாலைகளில் வேலை செய்வோரைக் குறித்த இவ்வாறான இழிவான விமர்சனங்களை தான் பொருட்படுத்த போவதில்லை என தீர்மானிதுள்ளதாக சுமத்திரா கூறுகின்றார். இப் பிரதேசங்களில் ஆணையும் பெண்ணையும் குறித்த கலாச்சார எதிர்பார்ப்புகளும் திருமணமாகாத பட்சத்தில் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதைக் குறித்து கடுமையான சமூக விலக்குகளும் உள்ளன. தொழிற்சாலைகளில் ஒன்றாக வேலை செய்தாலும் ஒரு திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒன்றாக வேலையில் ஈடுபடும் வேளையில் பாலியல் ரீதியான துர்நடத்தை ஏற்படுகிறதென ஊகிக்கப்படுகின்றது.
‘சில மனிதர்கள் வெளியிலிருந்து பார்த்து, பிழையாக கதைக்கின்றார்கள்’ என சுமத்திரா கூறுகின்றார். ஆனால், அப்படியொன்றும் அங்கே நடைபெறுவதில்லை. வியர்வை வழிய நாம் கஷ்டப்பட்டு வேலை செய்கின்றோம்.’
தொழிற்சாலைகள் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன ஆனால், அவை திறன்களை அபிவிருத்தி அடையச் செய்வதில்லை என சில உள்ளூர் மக்கள் கவலை கொள்கின்றனர்.
தொழிற்சாலைகள் பெண்களுக்கு உயரிய சம்பளத்தை தந்தாலும், அவை பிரதேசத்தின் சிறு தொழில்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளார், ஜீவசுதன் கூறினார்.
‘அநேக பெண்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் ஈர்க்கப்பட்டு அங்கு வேலை தேடுவதால், உணவு தயாரிக்கும் இடங்கள், சிறிய அளவிலான விவசாயங்கள் மற்றும் சிறிய வீட்டுத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள’ என கூறுகின்றார்.
வவுனியா நகரத்தில் அமைந்துள்ள பொன் வீடியோ ஸ்டுடியோ மற்றும் டிஜிட்டல் வண்ண ஆய்வகத்தின் உரிமையாளரான சின்னப்பு சுபாஸ்சிங்கம் தனது வேலைத்தளத்தில் தன்னால் நான்கு முக்கிய பதவிகளை நிரப்ப முடியாது உள்ளதாக கூறுகின்றார்.
‘ஆடைத் தொழிற்சாலைகள் இங்கு வந்த பிறகு, எங்கட கடையில வேலை செய்ய ஆள் தேடுவது கடினமாக உள்ளது’ ‘இப்போதும் கூட வேலைக்கு ஆள் தேடுகின்றோம்.’
மாத சம்பளமாக ரூபாய் 12,500 (கிட்டத்தட்ட அமேரிக்க டொலர்கள் 70) வழங்க தான் முன் வருவதாகவும், இவ் வேலையானது தொழிலாளர்களின் திறன்களை அபிவிருத்தி செய்யவும் மேலாண்மை அனுபவத்தை அதிகரிக்க செய்யுமெனவும் சுபாஸ்சிங்கம் கூறுகின்றார்.
‘ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு எவ்வித பயிற்சியும் தேவையில்லை’ என கூறுகின்றார். ‘அவர்களுக்கு ஆடையில் ஒரு பகுதி மாத்திரமே கொடுக்கப்படுகின்றது. அதனால் அவர்களுக்கு தங்களை விருத்தியாக்க வழி இல்லை. அவர்கள் ஆடைத் தொழிற்சாலை வேலையிலிருந்து நின்றால், வேறு ஒரு வேலையும் தெரியாது.’
ஆனால் தங்களுக்கு நிறைவான நிதிநிலை கொண்ட எதிர்காலத்தை ஆடைத் தொழிற்சாலை தருவதாக கூறும் அவர், தங்களுக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக இலவச போக்குவரத்து வசதியும், இலவச காலை மற்றும் மதிய உணவு கிடைப்பதாகவும் கூறினார்.
‘அநேகர் இதில் சம்பாதித்து தமது தேவைகளை சந்திக்க பூர்த்தி செய்து கொள்ள
கூடியதாக உள்ளது’ ‘எனக்கு இந்த வேலையில்லாவிட்டால் மிகக் கஷ்டமாக இருக்கும்’ என மேலும் கூறினார்.
இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே.