யாழ்ப்பாணம், இலங்கை – வட இலங்கையின் இந்த நகரில் ஒரு இளஞ்சூடான காலையில், சுமார் 10 பெண்கள் நிதியா எக்டிவ் குயீன்ஸில் ஒலிக்கும் இசைக்கு ஏற்ப தமது அங்கங்களை அசைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பயிற்றுவிப்பாளர் நிதியா தவராசா ஒரு பெண். நிதியா எக்டிவ் குயீன்ஸ் 2019 ஆம் ஆண்டில் திறக்கும் வரை யாழ்ப்பாணத்தில் அத்தகைய காட்சியைக் காண்பது ஒரு முயல்கொம்பாகவே இருந்தது.
பெரும்பாலான உடற்பயிற்சி மையங்கள் ஆண்களுக்கு சொந்தமானதாகவும், ஆண் பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டவையாகவும் இருந்ததாக நிதியா எக்டிவ் குயீன்ஸின் உரிமையாளரும், நிர்வாகியுமான 26 வயதான தவராசா கூறுகிறார். தொழில்முயற்சி மற்றும் தடகள விளையாட்டு போன்றவை ஆணாதிக்க விடயங்களாகக் கருதப்படும் நாட்டின் பாலின நியமங்களே இதற்கு காரணம் என்று அவர் கூறுகிறார். நிதியா எக்டிவ் குயீன்ஸைத் திறப்பதற்கான தனது திட்டங்களைப் பற்றி தவராசா குடும்த்தினரிடம் சொன்னபோது, அவர்கள் அதனை ஏற்கவில்லை.
”நீ ஒரு பெண். இதில் நிலைத்திருக்க முடியுமா? எதற்கு வீணாக செலவு செய்கிறாய்?” என தொடர் கேள்விகளைத் தொடுத்ததாக குழந்தை பருவத்திலிருந்தே விளையாட்டுகளில் ஈடுபட்ட தவராசா கூறுகிறார்.
அவளுடைய குடும்பத்தினர் இது ஒரு மோசமான முதலீடு என்றே நினைத்தனர். இந்த வியாபாரத்தைத் தொடங்க அவள் அவர்களிடம் கடன் கேட்டபோது, அத்தகைய தொழில் முயற்சிக்கு பணம் இல்லை என்று சொன்னார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு ஸ்தானத்திற்கான தேவை இருப்பதை தவராசா உணர்ந்தாள். பெண்களுக்கான உடற்பயிற்சி மையங்கள் எதுவும் அங்கே இருக்கவில்லை. உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்ட அவளைப் போன்ற பெண்கள் ஆண் பயிற்றுனர்கள் மாத்திரம் இருந்த மையங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடத் தயங்கினர்.
தவராசா யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சமூக நிலையத்திலிருந்து கடன் பெற விண்ணப்பித்தார். ஒரு வருடத்திற்குள், நித்தியா எக்டிவ் குயீன்ஸ் ஆரம்பித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஆணாதிக்கம் நிறைந்த இலங்கை தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் தவராசா அந்தப் போக்கிற்கு எதிராகச் செயற்பட்டு பெண்களுக்கான உடற்பயிற்சி மையங்களைத் திறந்து வழக்கத்திற்கு மாறாக பெண் தொழில்முயற்சியாளராக வளர்ந்து வருபவர்களில் ஒருவராவார்.
இந்த செயல்பாட்டில்பெண்கள் வசதியாக உடற்பயிற்சி செய்யக்கூடிய இடங்களை அவர்கள் வழங்குவதுடன் நாட்டில் பின்தங்கியுள்ள பெண்களின் பொருளாதார பங்களிப்பையும் அதிகரிக்கிறார்கள்.
பெண்களுக்கு கல்வியை வழங்குவதில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், அவர்களில் 34.3% மட்டுமே பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பாக உள்ளதாக நாட்டின் 2020 தொழிலாளர் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் நூறாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த உள்நாட்டுப் போரின் பின்விளைவுகள் இந்த இடைவெளியை குறைப்பதற்கான முயற்சிகளுக்குத் தேவைகளை ஏற்படுத்தியுள்ளன. போரில் தமது கணவரை இழந்த அதிகமான பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு வருமானம் ஈட்டுபவர்களாக மாறினர்.
இப்போது, அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெண்களுக்காக போருக்குப் பின்னரான சுய வேலைவாய்ப்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் சமூக செயற்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் நடராஜா சுகிர்தராஜா கூறுகிறார்.
இந்த உதவியுடன் தையல் கடைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் உட்பட அதிகமான பெண்கள் புதிதாக வியாபாரங்களைத் தொடங்குவதாக நடராஜா கூறுகிறார்.
தவராசா போன்ற பெண்கள் மட்டும் உடற்பயிற்சி செய்யும் மையங்களின் சில உரிமையாளர்கள் இந்த முயற்சிகளிலிருந்து கடன்களைப் பெற்ற அதேவேளை ஏனையவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம்
அமையவில்லை. இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பெண்களுக்கான ஒரே உடற்பயிற்சி மையத்தைத் தொடங்கிய சிவசாயி வர்ணகுலசிங்கம் தனக்கு உடற்பயிற்சி மையமா? திருமணமா? என்ற தேர்வை மேற்கொள்ள வேண்டியிருந்ததாகக் கூறுகிறார்.
“என்னுடைய தங்க நகைகளை அடகு வைத்தும் திருமணத்திற்காக வைத்திருந்த பணங்களையும் வைத்தே ஒரு உடற்பயிற்சிக் கூடத்தைத் தொடங்கினேன்,” 30 வயதான அவர் கூறுகிறார். வர்ணகுலசிங்கத்தின் வருங்கால கணவர் அவளுக்கு உதவியாக இருந்தார்.
இலங்கையில் பெண்களுக்கு ஒரு ஆரோக்கிய வாழ்க்கைக்கான தேவை இருந்தாலும், அவர்கள் ஆண் பயிற்றுனர்களின் கீழ் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்தால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவதாக வர்ணகுலசிங்கம் மேலும் கூறுகிறார்.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சுபஜீவனா விமல்தாஸ் ஒரு ஆண் பயிற்றுவிப்பாளரின் கீழ் பயிற்சி பெறத் தயங்கினார். விமல்தாஸ் 10 வருடங்களாக குழந்தைகளைப் பெற்றுககொள்ள முயற்சித்ததாக கூறுகிறார். கருவுறுதல் சிகிச்சையைத் தொடங்க முன்னர் அவரது உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
“ஒரு பெண்ணை என் பயிற்றுவிப்பாளராக வைத்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனேனில், நாங்கள் எங்களது பிரச்சினைகளைப் பற்றி எந்த பயமோ அல்லது கூச்சமோ இல்லாமல் பேச முடியும். அப்போதுதான் நான் நிம்மதியாக உணர முடியும்,” என்கிறார் 32 வயதான விமல்தாஸ்.
இப்போது, பேஸ்புக் மூலம் கண்டுபிடித்த நிதியா எக்டிவ் குயீன்ஸில் விமலதாஸ் உடற்பயிற்சி செய்கிறாள்.
யாழ்ப்பாணம் மற்றும் பிற மாவட்டங்களில் அதிக உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் செயற்பாடுகளைக் கடினமாக்கியுள்ளது. தனது பயிற்சி அமர்வுகளைத் தற்போது ஆன்லைனில் மேற்கொள்ளும் தவராசா, தொற்று நோயானது வங்கி கடன் பெறுவதற்கான நடைமுறையை குறைத்துவிட்டதாகக் கூறுகிறார்.
உடற்பயிற்சி உபகரணங்களுக்கான போக்குவரத்து மற்றும் இறக்குமதி வரிகளும் அதிகரித்துள்ளன. தொற்றுநோய்க்கு முன், ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு 3 மில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் 15,000 அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என்று வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். இன்று, அதே நிலையத்திற்கு 3.5 மில்லியன் ரூபாய் (சுமார் 17,590 அமெரிக்க டாலர்கள்) செலவாகிறது.
இதற்கிடையில், பெண்களின் உடற்பயிற்சி மையங்களைப் பற்றிய கருத்துக்கள் மெதுவாக மாறிக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஆறு உடற்பயிற்சி மையங்களின் உரிமையாளரான சிவகுமாரன் சிவசங்கர், 43, அவ்வாறான பெண்களுக்கு மட்டுமான உடற்பயிற்சி மையங்கள் காலத்தின் ஒரு தேவை என்கிறார்.
மீன்பிடி சமூகங்களின் இயற்கை, இடைவிடாத கடனுக்கெதிரான
படிக்க கிளிக் செய்யவும்“ஆண் மற்றும் பெண் உடற்பயிற்சி கூடத்தில், ஒரு பெண் உடற்பயிற்சி செய்ய, மற்றும் ஒரு ஆண் பயிற்றுவிப்பாளரிடம் தனது பிரச்சினைகளைச் சொல்லத் தயங்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
மற்றவர்கள் இன்னும் இதனை ஏற்றக்கொள்ளத் தயங்குகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த வாசுகி சுதாகர், பெண்களின் சுயதொழில் முயற்சிகளின் அவசியத்தை ஏற்றுக் கொண்டாலும், வீட்டு வேலைகள் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருந்ததால், பெண்கள் முன்பு உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
52 வயதான அவர் பெண்களுக்கான வீட்டு வேலைகளை எளிதாக்கியுள்ள இலத்திரனியல் சாதனங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.
“இப்போது எல்லாம் மிகவும் கவர்ச்சியாக மாறியுள்ளதால், பெண்கள் உடற்பயிற்சி மையத்திற்குச் செல்வதை (ஒரு) நவீன நாகரீகமாக நினைக்கிறார்கள்,” என்கிறார் சுதாகர்.
வட இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான நடத்தி வரும் குமாரலிங்கம் கோகிலவாணி தனது உடற்பயிற்சி மையத்தை விரிவாக்க நினைத்து வருகிறார்.
“என்னுடைய சொந்த இடமான வவுனியா மாவட்டத்தில் ஒரு நிலம் வாங்கி பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையத்தை அமைக்க வேண்டும் என எனக்கொரு ஆசை,” என்று அவர் கூறுகிறார். “உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதற்கேற்ப நாமும் மாற வேண்டும்.”
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்புக் குறிப்பு
லோஹித் குமார், ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை தமிழிலிருந்து மொழிபெயர்த்தார்.