Sri Lanka

மீன்பிடி சமூகங்களின் இயற்கை, இடைவிடாத கடனுக்கெதிரான

என்றும் முடிவடையா வட்டத்தில், புயல்கள் பெரும்பாலும் கடலில் இருந்து தங்கள் சீவியத்தைத் தேடிக் கொள்ளும் இலங்கையர்களைப் படகுகள் மற்றும் பிற உபகரணங்களைப் பழுது பார்க்க அதிக பணத்தைக் கடன் வாங்க கட்டாயப்படுத்துகின்றன. இந்த அமைப்பு, தங்களுக்கு எதிராக மோசடி செய்வதாக சிலர் கூறுகிறார்கள்.

Read this story in

Publication Date

Fishing Communities Battle the Elements — and Unrelenting Debt

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

புதுமைராசா ஜூரிஸ் லொராட்டா மூன்றாம்பிட்டி கடற்கரையில் வலையில் இருந்து மீன்களைப் பொறுக்கி எடுக்கிறார்.

Publication Date

மன்னார், இலங்கை – மூன்றாம்பிட்டிக் கடற்கரையில், தென்னை மர நிழலில், 42 வயதான புதுமைராசா ஜூரிஸ் லொராட்டா தனது குடும்பப் படகில் அமர்ந்து மீன்பிடி வலைகளில் எஞ்சியிருந்த அன்றைய நாளில் பிடிக்கப்பட்ட மீன்களைப் பொறுக்கி எடுக்கிறார். சிறிது நேரத்தில் அவரது கணவர் காணிக்கைராசா புதுமைராசா, 42, உள்ளூர் சந்தையில் பெரிய மீன்களை விற்பனை செய்துவிட்டு்த் திரும்பி வந்து மனைவியுடன் உலர்த்துவதற்கு உகந்த சிறிய மீன்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அவர்கள் இருவருக்கும் இந்த தினசரி வழக்கம் இடைவிடாமல் உள்ளது. இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள இந்த மீன்பிடிச் சமூகத்தின் பல குடியிருப்பாளர்களைப் போலவே, இந்தத் தம்பதியும் பல ஆண்டுகளாக அவர்களது கடனைத் திருப்பிச் செலுத்த போராடி வருகின்றனர். அவர்கள் வானத்தினளவு உயர்ந்த கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் மாதத்தில் நாட்டிற்குள் நுழைந்த ஒரு வெப்பமண்டல சூறாவளி, படகுகள், வலைகள் மற்றும் பிற உபகரணங்களைச் சேதப்படுத்தி அவற்றைப் பழுதுபார்க்கும் செலவை ஈடுகட்ட இன்னும் அதிகமான பணத்தைக் கடன் வாங்க அவர்களைக் கட்டாயப்படுத்திய போது அவர்களின் (கடனை மீளச் செலுத்தும்) முயற்சிகள் மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டன.

இது மீனவர்களை வறியவர்களாகவும் உள்ளூர் வியாபாரிகளுக்குக் கடன்பட்டவர்களாகவும் வைத்திருக்கும் ஒரு முடிவில்லாத வட்டமாகும். அதிகரித்து வரும் கடுமையான புயல்கள் உட்பட மேலும் தீவிரமான வானிலை அடிக்கடி ஏற்படுவதால் புதுமைராசா மற்றும் ஜூரிஸ் லொராட்டா ஆகியோரைப் போன்ற குடும்பங்களின் சுமைகள் அதிகரித்துக் கொண்டு மட்டுமே செல்கின்றன.

“நாங்கள் நான்கு இடங்களிலிருந்து கடன் வாங்கியுள்ளோம். நாங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தி முடிக்கும்போது, மீன்வலை சேதமடையும்” என்கிறார் புதுமைராசா.

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

ஜூரிஸ் லொராட்டா மற்றும் அவரது கணவருடன் அவர்களது நான்கு மகன்களில் ஒருவர் தங்கள் மீன்பிடி வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்லக் கடன்களை எடுத்ததன் பின்னர் நசுக்கப்பட்ட கடன் சுமையில் போராடுகிறார்கள்.

இத் தம்பதியினர் ஆரம்பத்தில் 600,000 இலங்கை ரூபாயை (சுமார் $3,069) “வாடி” என்று அழைக்கப்படும் உள்ளூர் (மீன்பிடிச்) சந்தையில் இருந்து தங்கள் மீன்பிடித் தொழிலை அமைப்பதற்காக கடன் வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. வாடிகள் என்பது குறிப்பாக ஒரு காலத்தில் வெற்றிகரமான மீனவர்களாக இருந்து பின்னர் இலங்கையின் பல தசாப்தங்களாக நீடித்து 2009 ல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போது அனைத்து சொத்துக்களையும் இழந்த ஜூரிஸ் லொராட்டா மற்றும் புதுமைராசா போன்றவர்களுக்கு இலங்கையிலுள்ள பொதுவான கடன் மூலமாகும்.

ஆனால் இந்த ஒப்பந்தங்கள் பொதுவாக கடன் வாங்குபவர்களுக்கு சாதகமாக இருக்காது. உதாரணமாக, ஒரு வாடியிடமிருந்து பணம் கடன் வாங்கும் மீனவர்கள் தங்கள் மீன்களை அதே வாடியில் மட்டுமே விற்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டமாகும், என்பது இலங்கையில் நியாயமான சந்தை முறையை நிறுவ செயற்பாடுகளை மேற்கொள்ளும் சர்வதேச நிவாரண அமைப்பான ஸோஆ (ZOA) வின் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளரான அந்தோனிப்பிள்ளை ஜோர்ஜ், 52 என்பவரது கருத்தாகும். இந்த கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறும் மீனவர்களுக்கு உள்ளூர் சமூகத்தில் அவர்களது ஸ்திர நிலையைச் சேதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி, அவர்களின் வியாபாரத்தைத் தொடர்ச்சியாகச் செய்வதற்கு வேண்டிய மேலதிக நிதி துண்டிக்கப்படுகிறது. மேலும், வாடி உரிமையாளர்கள் பொதுவாக கடல் உணவை சந்தையில் விற்கப்படும் விலையை விடக் குறைவான விலையிலேயே வாங்குகிறார்கள். இதனால் மீனவர்கள் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் ($26) வரை இழக்க நேரிடுவதாக ஜோர்ஜ் கூறுகிறார். இத்தகைய இழப்புகள் மீனவர்களுக்கு கடன்களை அடைப்பதை மிகவும் கடினமாக்குகிறது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்ன் 2016 தரவுகளின்படி, இலங்கையில் தொழிலாளி ஒருவரின் மாத இடையச் சம்பளம் சுமார் 23,260 ரூபாய் ($118) ஆகும்.

அரசாங்கம் இந்தக் கடன்களைத் தனியார் ஏற்பாடுகள் என்று கருதுகிறது. மேலும் இந்நிலைமை குறித்து கருத்துத் தெரிவிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
மற்றொரு உள்ளூர் மீனவரான கந்தசாமி யோகேந்திரன், 44, தனது கடனை அடைக்க 10 ஆண்டுகள் சென்றதாகக் கூறுகிறார். வாடி உரிமையாளர்கள் மீனவர்களின் நியாயமான சம்பாதிப்பைத் தடுப்பதாகக் குற்றம் சாட்டும் அவர் மன்னாருக்கு வடக்கே சுமார் 118 கிலோமீட்டர் (73 மைல்) தொலைவில் உள்ள இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் கடல் உணவு உள்ளூரில் விற்கப்படுவதை விட உயர்விலையில் விற்கப் படுவதாகக் கூறுகிறார்.

“யாழ்ப்பாணத்தில், (ஒரு கிலோ) நண்டு 1,700 ரூபாய்க்கு ($8.69) விற்பனை செய்யப்படுகின்றது,” என்று அவர் கூறுகிறார். “இங்கே அது 800 ரூபாயாக ($4) உள்ளது.”

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

டிசம்பர் மாத சூறாவளியால் சேதமடைந்த படகை ஒரு மீனவர் பழுது பார்க்கிறார்.

செலவுகள் தொடர்ந்து அதிகரித்ததால், ஜூரிஸ் லொராட்டா மற்றும் புதுமைராசா வங்கிகளிடமிருந்தும், கிராம கடல்சார் அமைப்பிடமிருந்தும் அதிக கடன்களைப் பெற்றனர்.

வாடியிலிருந்து அவர்கள் பெற்ற கடன் உட்பட, அவர்கள் இதுவரை பெற்றுள்ள மொத்தக் கடன் தொகை இறுதியில் 1.4 மில்லியன் ரூபாயையும் ($7,160) தாண்டியுள்ளது.

“இந்த வாரம் ஒரு சதம் கூட வீட்டிற்கு வரவில்லை” என்று ஜூரிஸ் லொராட்டா கூறுகிறார். “நாங்கள் சம்பாதிக்கும் அனைத்தும் கடனை மீளச் செலுத்தவே செல்கின்றன.”

கடல் உணவு ஏற்றுமதி வியாபாரம் ஒன்றை சொந்தமாக வைத்து உள்ளூர் வாடியை நடத்தி வரும் 31 வயதான பொன்னம்பலம் அருந்தவராசா, மீனவர்களுடன் அவர் செய்யும் ஒப்பந்தங்கள் நியாயமானவை என்கிறார். “நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு மீனவருக்கு 400,000 முதல் 500,000 ரூபாய் வரை ($2,046 முதல் $2,557 வரை) கடன் கொடுக்கிறோம்,” என்கிறார்.

ஜூரிஸ் லொராட்டா மற்றும் புதுமைராசா ஆகியோருக்கு அருந்தவராசா கடனை வழங்கவில்லை. ஆனால் அவருக்குக் கடன் ஏற்பாட்டிலிருந்து லாபம் ஈட்ட முடியாவிட்டால் மீனவர்களுக்கு பணத்தை வழங்குவது சாத்தியமில்லை என்கிறார். “வங்கிகளும் வட்டி வீதங்களை வசூலிக்கின்றன, அல்லவா?” அவர் கூறுகிறார்.

மேலும், பண ரீதியாகவும் தான் பாதிக்கப்படுவதாக அருந்தவராசா கூறுகிறார். டிசம்பரில் ஏற்பட்ட புயல் அவரது வாடியின் நுழைவாயிலை முற்றாக சேதப்படுத்தியதால் அதை சரி செய்ய அவர் பணம் செலுத்த வேண்டும். ஆனால் மீனவர்கள் கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறியமை அவரது வளங்களைக் குறைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

“சிறு வயதிலிருந்தே நாங்கள் கடலில் வேலை செய்து ஒரு நல்ல நிலைக்கு வந்தோம். நம்பிக்கையின் பெயரால் எங்கள் மூலதனத்தை வழங்கினோம்; இப்போது அந்த மூலதனமும் இல்லாமல் போய்விட்டது, ” என்று அவர் கூறுகிறார்.

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சூறாவளியின் போது அழிக்கப்பட்ட பொன்னம்பலம் அருந்தவராசாவின் வாடி நுழைவாயில்.

காலநிலை மாற்றம் இலங்கையின் சமூகங்களை எதிர்பார்க்க முடியாத வழிகளில் தொடர்ந்து பாதிக்கக்கூடியதாகவே உள்ளது. இலங்கை மக்கள் தொகையில் கால் பகுதி கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படுகின்ற கடற்கரையிலிருந்து 1 கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவிலேயே வாழ்கின்றனர். இலங்கையில் சூறாவளிகளின் எண்ணிக்கை 20ஆம் நூற்றாண்டில் குறைந்துவிட்டாலும், புயல்களின் தீவிரம் சமீபத்திய தசாப்தங்களில் அதிகரித்துள்ளது.

இருப்பினும், டிசம்பரில் ஏற்பட்ட சிறிய புயல்கள் கூட ஏற்கனவே போராடி வரும் இலங்கையர்களுக்கு பேரழிவை ஏற்படுத்த முடியும். தீவிரமான சூறாவளிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் அதே வேளையில், கடன் என்பது பலரின் வாழ்க்கையுடன் எப்போதும் உள்ள ஒரு விடயம் என்று மூன்றாம்பிட்டியில் மத சேவைகளுக்கு தலைமை தாங்கும் கத்தோலிக்க பாதிரியார் எமிலியானுஸ்பிள்ளை டெனி கலிஸ்டஸ் கூறுகிறார்.

“ஒரு சாதாரண மனித வாழ்க்கையைக் கூட வாழ கடன் ஒரு தடையாகும்” என்று அவர் கூறுகிறார். “நாங்கள் கடன் வாங்கப் பழகிவிட்டோம். கடன் வாங்கினால் மட்டுமே வாழ முடியும். ஒரு கடனைச் செலுத்த மற்றொரு கடனை வாங்குதலாகும். அது ஒருபோதும் முடிவடையாது.”

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரத்தை மையமாகக் கொண்ட வெற்றிச்செல்வி சந்திரகலா, குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்புக் குறிப்பு

லோஹித் குமார், ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை தமிழிலிருந்து மொழிபெயர்த்தார்.

Related Stories