வவுனியா, இலங்கை – தூரத்திலிருந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள்கள் புதியது போல் மின்னுகின்றன. கூர்ந்து கவனித்தால், அவற்றின் சக்கரங்கள் சேறும் சகதியுமாக இருக்கின்றன, சில இருக்கைகளும் பழுதடைந்த வடுக்களுடன் உள்ளன. ஆனால் இந்த இரண்டாந்தர வண்டிகளின் விலை இப்போது தொழிற்சாலையிலிருந்து வரும் புதிய மோட்டார் சைக்கிள்களை விட அதிகமாகும்.
வாகன விற்பனை “மிகவும் சவாலாகியுள்ளது” என்று நாகேந்திரன் கங்காதரன், இலங்கையின் வடக்கில் உள்ள வவுனியாவில் ஒரு காலத்திலிருந்த தனது உயர்தர காட்சியறையிலிருந்து கூறுகிறார்.
தொற்றுநோய்க்கு முன்னர், அவர் இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனமான மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தார். ஆனால் வீழ்ச்சியடைந்து வரும் வெளிநாட்டு நாணய கையிருப்பைக் காப்பாற்ற அரசாங்கம் வாகனங்கள் முதல் மசாலா மற்றும் பியர் வரையான “அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை” தடை செய்ததிலிருந்து, அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதை நாடினார்.
வழக்கமாக பரபரப்பான வார நாள் மதியத்தில், இரண்டு வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைந்து, வாகனங்களின் விலைகளைப் பார்த்துவிட்டு வெளியேறுகிறார்கள். “அது இப்போது சகஜம்,” என்கிறார் நாகேந்திரன். சுமார் 300,000 இலங்கை ரூபா ($1,500) பெறுமதிக்கு 2020இல் சந்தைக்கு வந்த ஸ்கூட்டர் ஒரு வருட கடும் பாவனைக்குப் பின்னர் இப்போது 500,000 ரூபாய்க்கு ($2,500) விற்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்,
சில வாகனங்களே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதால், இறக்குமதித் தடையால் நாட்டில் வாகனத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகேந்திரனால் விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பெரும்பாலானவை அயல் நாடான இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஆனால் தொடரும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளால், அவரது வியாபாரத்தைப் போன்ற வணிகங்கள் பிழைக்க முடியாமல் திணறி வருகின்றன.
“நாங்கள் இப்போது இரண்டாம்தர வாகனங்களை வாங்குவதற்கு போட்டியிடுகிறோம்,” என்கிறார் நாகேந்திரன். அவரது கடையில் விற்பனை பாதியாகக் குறைந்துள்ளது மற்றும் பணத்தை மிச்சப்படுத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து மூன்றாகக் குறைந்துள்ளார். “விற்பனையாளர்களைச் சந்திக்கவும் வாகனங்களை வாங்கவும் நானே தனிப்பட்ட முறையில் வெளியே செல்கிறேன்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
நாடு முழுவதும், 60% வாகன விற்பனை நிலையங்கள் மார்ச் 2020 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலத்தில் மூடப்பட்டுள்ளதாக லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மதிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30% சிறிய மற்றும் நடுத்தர வாகன இறக்குமதியாளர்களின் வியாபாரங்கள் மூடப்பட்டுள்ள அதேவேளை இத்துறையில் உள்ள சுமார் 20,000 பேர் வேலை இழந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரன்சிகே கூறுகிறார்.
“இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை, வாகனங்களின் விலைகள் தொடர்ந்து உயரும்” என்கிறார் மெரன்சிகே. “இது மிகவும் கடினமான சூழ்நிலை, எங்கள் பிழைப்புக்கு அரசாங்கம் இதுவரை எதுவும் செய்யவில்லை.” அரசாங்கம் தலையிட்டு கடன் தள்ளுபடி மூலம் உதவலாம் என அவர் நம்புகிறார்.
அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியை எதிர்கொண்டதால், இறக்குமதித் தடை என்பது வெளிநாட்டுச் செலவினங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்வாகும். பல தசாப்தங்களாக, இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையில் தங்கியிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு எல்லைகள் மூடப்பட்டதால், சுற்றுலாத்துறையிலிருந்து கிடைத்த வருமானம் நின்று விட்டது. 2019 நவம்பரில் 7.5 பில்லியன் அமேரிக்க டாலராக இருந்த நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இவ்வருட செப்டம்பர் இறுதியில் 2.6 பில்லியன் அமேரிக்க டாலராகக் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் பொருளாதார ஆராய்ச்சியை வழிநடத்தும் சந்திரநாத் அமரசேகர இறக்குமதி தடை மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார். “இல்லையெனில், நாங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 1 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவழிப்போம்,” என்று அவர் கூறுகிறார். அமரசேகர வாழ்வாதாரங்கள் மீதான அழுத்தத்தை ஒப்புக்கொள்கிறார், ஆனால் “டாலர்களைப் பாதுகாக்க வேண்டியதன்” அவசியத்தை வலியுறுத்துகிறார். வாகன இறக்குமதி செலவுகள் மட்டும் 2021 முதல் ஆறு மாதங்களில் 4.4 மில்லியன் அமேரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 273.4 மில்லியனாக அமேரிக்க டாலர்களாக இருந்ததை விட 98% வீழ்ச்சியாகும்.
ஆனால் வியாபாரங்கள் விலை உயர்வுகளை மக்களுக்கு சுமத்துவதால் இலங்கை நுகர்வோர்களும் சிரமப்படுகிறார்கள். கடந்த மார்ச் மாதம் தனது மோட்டார் சைக்கிள் பழுதடைந்த போது, வவுனியா நகரில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் காவலாளியாகப் பணிபுரியும் யோகேஸ்வரன் தனுஷன், வேலைக்குப் பேருந்தில் சென்றார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு புதிய கொரோனா வைரஸ் அலை நாடு தழுவிய பயணத் தடை மற்றும் பொதுப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளைத் தூண்டியது.
புறநகரில் வசிக்கும் தனுஷன் கூறுகையில், “கொரோனா வைரஸைப் பற்றி நான் அச்சமடைந்து ஒரு வாரமாக வேலைக்குச் செல்லவில்லை.” ஆனால் அவருக்கு வருமானம் தேவைப்பட்டதால் ஒரு இரண்டாந்தர மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு தேவைப்பட்டது. இந்த வண்டி 2 வருடங்கள் பழமையானதுடன் 20,000 கிலோமீட்டர்கள் (12,430 மைல்கள்) ஓடியது. மேலும் அந்த வண்டி புதிதாக வாங்கப்பட்ட விலையை விட10,000 ரூபா ($50) அதிகமாகும். “பைக் அடிக்கடி பழுதாப் போகுது, சில வேளை பயணித்துக் கொண்டிருக்கும் போது பைக் இடையில் நிக்குது” என்று யோகேஸ்வரன் கூறுகிறார். “ஆனால் எனக்கு வேறு வழியில்லை.”
மகளிர் உடற்பயிற்சி மையங்கள்- பெண்களுக்கு சொந்தமான வணிகங்களின் புதிய சகாப்தம்
படிக்க கிளிக் செய்யவும்சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரிபவர்களிடமிருந்து வரும் பணம் போன்ற முக்கிய வருமான மூலங்கள் குறைந்து வருவதால், இலங்கை தனது செலவுகளை சமாளிக்கத் தடுமாறுகிறது. அரசாங்கமும் கடனை திருப்பிச் செலுத்துவதில் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. “இது ஒரு பாரிய பின்னடைவு” என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை தலைவரான பேராசிரியர் செல்வரத்தினம் சந்திரசேகரம். சாதாரண மக்களே பாரத்தைச் சுமக்கிறார்கள், என்கிறார்.
தொழிலிழந்த ஊழியர்களை புதிய தொழில்களுக்கு நகர்த்தும் அதே வேளை, நாட்டின் உள்ளூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். “வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கமும் உதவ வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இறக்குமதி கொள்கை தற்போதைக்கு தொடரும் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கிறார். “சில மக்கள் வேலை இழந்துள்ளனர் மற்றும் அவர்களது வியாபாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.” என இலங்கையின் வர்த்தக மையமான கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். ஆனால் “எங்கள் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு உயர்ந்தால், போதுமான டாலர் வருமானம் இருந்தால், எங்கள் முடிவை மாற்றியமைக்க முடியும்” மேலும் “மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகு விஷயங்கள் இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புகிறோம்”, என்றார்.
நாட்டிற்கு வெளியில் சம்பாதித்த டாலர்களைப் பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வியாபாரங்களுக்கான மாற்று வழிகளை மத்திய வங்கி ஆராய்ந்து வருவதாக பத்திரன மேலும் தெரிவித்தார்.
வவுனியா நகர மையத்தில், சிவானந்தன் மயூட்சன் புதிதாகக் கிடைக்கப்பெற்ற இரண்டாந்தர வாகனங்களின் சேவையை மேற்பார்வை செய்கிறார். கடந்த ஆண்டு விற்பனையாளராகவிருந்த அவர் தனது நிறுவனத்தைத் தொடர பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தொழிலில் இறங்கினார்.
“புது மோட்டார் வண்டியை 300,000 ரூபாய்க்கு விற்பனை செய்த எனக்கு, ஒருவர் பாவித்த அதே மோட்டார் வண்டியை 500,000 ரூபாய்க்கு விற்பனை செய்வது கடினமாகவுள்ளது” என்கிறார் ரத்னம் மோட்டார்ஸ் உரிமையாளர் சிவானந்தன். ஆனால் விலைவாசி உயர்வின் பாதிப்பைத் தணிக்க, அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத உத்தரவாதத்தை வழங்குகிறார். “இது கொஞ்சம் நிவாரணம் அளிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்புக் குறிப்பு
லோஹித் குமார், ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை தமிழிலிருந்து மொழிபெயர்த்தார்.