Sri Lanka

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஒரு பயண ஒழுங்கமைப்பு செயலி சங்கங்களால் கட்டுப்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளை அகற்றி வருகின்றது

யாழ்ப்பாணத்தில் பிக்மீ செயலியுடன் இணைந்துள்ள ஒவ்வொரு வாடகை முச்சக்கர வண்டி சாரதியாலும் தனது வருமானம் பெருமளவில் அதிகரித்துள்ளதைக் காண முடிகின்றது, எனினும், நீண்ட காலமாக உத்தரவுப் பத்திரத்துடன் இத்தொழிலில் ஈடுபடும் ஒருவரின் வருமானம் சடுதியாகக் குறைந்துள்ளது.

Read this story in

Publication Date

Ride-Hailing App Drives Off Unionized Taxis in Northern Sri Lanka

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

பயணிகளை முச்சக்கர வண்டிகளுடன் இணைக்கும் செயலியான பிக்மீ உடன் இணைந்ததில் இருந்து தனது வருமானம் இருமடங்காக உயர்ந்ததை முச்சக்கர வண்டி சாரதியான பிரஷாந்தன் பிலேந்திரனால் காண முடிகின்றது.

Publication Date

யாழ்ப்பாணம், இலங்கை – இது உலகம் முழுவதும் சுழலும் ஒரு பொதுவான கதையேயாகும்: வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதை ஒரு புதிய செயலி இலகுவானதாகவும் மலிவானதாகவும் ஆக்கும் அத்துடன் அது பாரம்பரியமாக வாடகைக்கு வாகனங்களை வழங்கும் வர்த்தகங்களை சீர்குலைக்கும். இந்நிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும். இப்போட்டியில் பெரும்பாலும் செயலியே வெற்றி பெறும். இதே கதை இலங்கையின் வடக்கு பகுதியில் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

நவம்பர் மாதத்தின் இந்த நாளில், கர்த்தருக்கான ஸ்தோத்திரத்தை அவசர அவசரமாகக் கூறியவாறு தனது முச்சக்கர வண்டியின் சாவியை பக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொள்கின்றார் பிரஷாந்தன் பிலேந்திரன். பின்னர், வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனது வாகனத்தை நோக்கி நடக்கின்றார், பச்சை மற்றும் கறுப்பு வர்ணமான அவரது முச்சக்கர வண்டி அங்கு காத்து நிற்கின்றது. அதன் முன்புறமும் பின்புறமும் “பிக்மீ” (PickMe) என்ற ஸ்டிக்கர்கள் பெரிதாக ஒட்டப்பட்டுள்ளன.

வாடகை வாகனப் பயணங்களைத் தேடும் மக்களை வாகன சாரதிகளுடன் தொடர்பு படுத்தும் பயண ஏற்பாட்டு செயலி யாழ்ப்பாணத்தில் ஆட்சேர்ப்பு செய்துள்ள 1,500 முச்சக்கர வண்டி சாரதிகளில் பிரஷாந்தனும் ஒருவராவார். ஆகஸ்ட் 2023 இல் பிக்மீ செயலியுடன் இணைந்ததில் இருந்து தனது நாளாந்த வருமானம் இருமடங்காக; கிட்டத்தட்ட 4,000 இலங்கை ரூபாய்களாக (12 ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) அதிகரித்துள்ளது எனக் கூறுகின்றார் பிரஷாந்தன்.

“பிள்ளையளுக்கு தேவையான உணவு, பாடசாலைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள் வாங்கிக் குடுக்க முடியுது, என்ர வாழ்க்கை கொஞ்சம் முன்னேறியிருக்கிறதப் பாக்கிறன்” என்கிறார் அவர்.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

யாழ்ப்பாணத்தில் பிக்மீ சேவை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முச்சக்கர வண்டி செலுத்துவதன் மூலம் ஜனார்த்தனன் கனகசிங்கம் பெற்ற வருமானம் அரைவாசியாக குறைவடைந்துள்ளது.

எனினும், இங்கிருந்து அதிக தூரம் இல்லாத ஒரு இடத்தில் உள்ள ஜனார்த்தனன் கனகசிங்கத்தை மகிழ்ச்சியற்றவராகவே எம்மால் காண முடிகின்றது. நவம்பர் 2022 இல் அவர் சந்தித்த ஒரு விபத்து அவரது முச்சக்கர வண்டியை முற்றாக சேதப்படுத்தியதுடன் அவரது இடது காலும் செயலிழக்க வைத்தது. நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்துக்கு அவரது வருமானம் அவசியமானது, எனவே ரூபாய் 23,000 (70 ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) மாதாந்த தவணைக் கட்டணத்துக்கு அவர் புதிய வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்தார். உள்ளூர் சங்கமொன்றின் அங்கத்தவராக கடந்த 30 வருடங்களாக முச்சக்கர வண்டி செலுத்துதல் தொழிலில் ஈடுபட்ட அவரால், பிக்மீ செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செலவுகளை சமாளிக்க முடியவில்லை. அவர் அந்த செயலியுடன் இணையவில்லை, அத்துடன் அவரின் நாளாந்த வருமானம் ரூபாய் 1,500 (5 அமெரிக்க டொலர்கள்) என்ற அளவுக்கு பாதியாக குறைவடைந்துள்ளது.

“எங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம்”, என்கிறார் ஜனார்த்தனன். நாங்கள் ஒன்றும் தனிநபர் அல்ல, எங்களுக்கும் குடும்பங்கள், பொறுப்புக்கள் உள்ளன”, என அவர் மேலும் கூறுகின்றார்.

இவர்கள் இருவரினதும் ஒன்றுக்கு ஒன்று முரணான நிலைகள் யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் முச்சக்கர வண்டிச் சவாரிகளுக்கான சந்தைப் போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களை எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றன. பிக்மீ என அழைக்கப்படும் இந்த செயலி கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் மொபிலிட்டி சொலூசன் (Digital Mobility Solution) என்ற அமைப்பினால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது தனது பரீட்சார்த்த செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் ஜனவரி 2023 இல் ஆரம்பித்தது. யாழ்ப்பாண மக்கள் பிரயாணங்களுக்கு புகையிரதங்கள், பேருந்துகள், உந்துருளிகள் மற்றும் கார்கள் என்பவற்றை பயன்படுத்தி வருகின்றனர். எனினும், அவசரப் பயணங்களுக்கு அவர்கள் முச்சக்கர வண்டிகளை அழைத்து வந்தனர், அவை வழக்கமாக 30 நிமிட காத்திருப்பின் பின்னர் அவர்களை ஏற்றிச்செல்லும். கிலோமீட்டர் ஒன்றுக்கு ரூபாய் 120 (37 ஐக்கிய அமெரிக்க சதங்கள்) என்ற கட்டாய கட்டண விதிப்பை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது, எனினும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் கட்டாயக் கட்டணத்தின் இருமடங்கைக் கோருவதும் கட்டணமானிகளை செயற்படுத்த மறுப்பதும் வழமையாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் எரிபொருள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் பெருமளவு அதிகரித்து உள்ள நிலையில் அரசு விதித்துள்ள கட்டண வீதம் மிகவும் குறைவானது என இந்த ஊடகவியலாளருடன் பேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் கூறினர்.

“எங்கட தொழிலாளிகளும் கஸ்ரப்பட்டுத்தான் உழைக்கிறது”, என்கிறார் யாழ்ப்பாண முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான விஜயராசா இராசமணி.

மலிவான கட்டணங்களால் கவரப்படல்

எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களும் சுமைகளை எதிர்கொண்டனர். செப்டம்பர் 2022 – 2023 காலப்பகுதியில் பணவீக்கம் 73.7% ஆக அதிகரித்திருந்தது.

இலகுவான சந்தை வாய்ப்பொன்று காணப்படுவதை உணர்ந்து கொண்ட பிக்மீ முகாமையாளர்கள் ஆகஸ்ட் 2023 இல் நல்லூர்க் கந்த சுவாமி ஆலய உற்சவ நிகழ்வின் போது இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த காலப்பகுதியில் தமது சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தனர். குறித்த செயலி வாடிக்கையாளர்களுக்கு இரண்டு இலவச பயணங்களை வழங்கியதுடன் முதல் இரண்டு கிலோமீட்டர்கள் தூரத்துக்கும் அரசாங்கம் விதித்துள்ள கட்டணத்தை விடக் குறைவான கட்டணத்தை – ரூபாய் 185 (58 அமெரிக்க சதங்கள்) தொகையை அறவிட்டது, எனினும் அடுத்து வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 95 (30 அமெரிக்க சதங்கள்) கட்டணத்தை விதித்தது. முன்பதிவு செய்து சில நிமிடங்களுக்குள் முச்சக்கர வண்டிகள் வாடிக்கையாளர்களை வந்தடைந்தன. வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானதுடன் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய முச்சக்கர வண்டி சாரதிகள் தமது தொழில் தம் கையை விட்டு நழுவுவதை காண ஆரம்பித்தனர்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, யாழ்ப்பாணத்தின் முச்சக்கர வண்டித் தொழிற்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது, இச்சங்கம் 1,337 முச்சக்கர வண்டி சாரதிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றது. மாநகரசபைச் சட்டமே இச்சங்கத்தின் இருப்புக்கான அடிப்படையாக அமைந்துள்ளது: மாநகர சபையினால் ஒதுக்கப்பட்ட 1,100 தரிப்பிடங்களில் ஒன்றிலேயே ஒரு முச்சக்கர வண்டி சட்டபூர்வமாக நிறுத்தி வைக்கப்பட முடியும், என்கிறார் யாழ்ப்பாண மாநகர ஆணையாளரான ஜெயசீலன் தனபாலசிங்கம். காலியான தரிப்பிடங்கள் அரிதானவை, அத்துடன் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு என ஒதுக்கப்பட்ட நிறுத்தும் இடங்களை அவர்கள் கறுப்புச் சந்தையில் கிட்டத்தட்ட 100,000 ரூபாய்களுக்கு (317 அமெரிக்க டொலர்கள்) விற்கவும் வாங்கவும் செய்கின்றனர் என இவ்விடயத்தின் கூருணர்திறன் காரணமாக தமது அடையாளத்தை வெளியிட மறுத்த மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக, சங்கத்தில் இல்லாத சாரதிகள் 1 மில்லியன் ரூபாய்களுக்கும் (3,420 அமெரிக்க டொலர்கள்) அதிகமான பணத்தைக் கொடுத்து முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்கின்றனர், வழமையாக இத்தொகை தவணை அடிப்படையில் செலுத்தி முடிக்கப்படுகின்றது. மேலும், அவர்கள் கிட்டத்தட்ட 30,000 ரூபாய்கள் (95 அமெரிக்க டொலர்கள்) செலுத்தி கட்டணமானி ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது அத்துடன் 150 ரூபாய்களை (47 அமெரிக்க சதங்கள்) சங்கத்துக்கான மாதாந்த சந்தாவாகவும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு நாளாந்தக் கட்டணமாக 50 ரூபாய்களையும் (16 அமெரிக்க சதங்கள்) செலுத்த வேண்டியுள்ளது, என்கிறார் 30 வருடங்களாக முச்சக்கர வண்டி செலுத்தி வரும் விஜயராசா.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

முதலீட்டாளர்களின் நிதியிடலில் இயங்கும் பிக்மீ சேவை பயணிகளுக்கு பாரிய தள்ளுபடிகளை வழங்குகின்றது, தொழிற்சங்கங்கள் மூலம் ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகளால் அதனுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

முச்சக்கர வண்டிகளை இயக்குவதில் ஏற்படும் உயர்வான மாதாந்த செலவுகளை இவை மேலும் அதிகரித்துள்ளன, இது இவ்வியாபாரத்துக்குள் புதியவர்கள் நுழைவதை இன்னும் சிரமமாக்குகின்றது.

தொழிலுக்கான முதலீட்டுத் தொகையைக் குறைத்தல் அத்துடன் ஒரு தரிப்பிடம் இல்லாமலேயே வாடிக்கையாளர்களை அடைந்து கொள்ளக் கூடிய தொழில்நுட்பத் திறன் கொண்ட சாரதிகளைக் கவருதல் என்பவற்றின் மூலமாக இந்த முறைமையை பிக்மீ தகர்த்துள்ளது.

“முச்சக்கர வண்டித் தொழிலை செய்யும் முறையை பிக்மீ திடீரென மாற்றியமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்கிறார் விஜயராசா.

சங்கத்துடன் இணைந்துள்ள சாரதிகளால் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதற்காக பிக்மீ போன்று பணத்தை செலவிட இயலாமலுள்ளது. இந்நிறுவனம் இயக்கத்துக்கான மூலதனமாக 2018 ஆம் ஆண்டு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றிருந்தது. எனவே பாரம்பரிய முச்சக்கர வண்டிச் சாரதிகள் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

வழக்கமான எதிர்ப்பு

இந்த எதிர்ப்பு நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்கிறார், பிக்மீ நிறுவனத்தின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முகவர் தவதீஸன் அமிர்தலிங்கம். “நாங்கள் கொழும்பில் இந்தச் செயலியை ஆரம்பித்தபோது நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டோம்,” என்கிறார் தவதீஸன். தற்போது யாழ்ப்பாணத்தில் எப்படி பாரம்பரிய ஆட்டோ சாரதிகளால் எதிர்ப்புகள் எழும்புகின்றனவோ அவ்வாறே கொழும்பிலும் இருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் மக்களிடமிருந்து வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது,“ என அவர் மேலும் கூறுகின்றார்.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செயலி சமமான கட்டண வீதத்தை விதிப்பதை சங்கம் விரும்புவதில்லை என்கிறார் தவதீஸன். “அவர்கள் தாமாகவே தமக்கேற்ற வகையில் ஆட்டோ சவாரிகளுக்குரிய பணத்தினை தீர்மானித்து அறவிடுகின்றார்கள். அதாவது ஒருவரின் வெளித்தோற்றத்தை (ஏழை, பணக்காரன்) வைத்து பணத்தை தீர்மானித்திருந்தார்கள்,” என்கிறார் அவர். “ஆனால் எமக்கு அந்த பாகுபாடுகள் இல்லை. எல்லோரும் ஒரே விதத்திலே நடாத்தப்படுகின்றார்கள்,” என அவர் மேலும் கூறுகின்றார்.“

ஸ்மார்ட் போன் ரக கையடக்க தொலைபேசி இன்மை அத்துடன் தொழில்நுட்ப பரிச்சியம் இன்மை போன்ற காரணங்களால் சங்கத்தில் உள்ள வயது முதிர்ந்த சாரதிகளால் எம்முடன் இணைய முடியவில்லை என்கிறார் தவதீஸன். “அதற்கு நாங்கள் பொறுப்பில்லை” எனக் கூறும் அவர் “காலம் நவீன யுகத்தில போகேக்க நாங்களும் மாற வேண்டும். அதற்காக அவர்கள் உழைக்காமல் வீட்டில் இருக்க வேண்டும் எனவும் நாங்கள் கூறவில்லை,“ என்பதையும் கூறுகின்றார்.

எந்த ஒரு சாரதியும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதாக சங்கத்துக்கு முறைப்பாடு கிடைக்குமாயின், குறித்த சாரதி மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டிக்கப்படுவார் எனத் தெரிவிக்கின்றார் சங்கத் தலைவர் விஜயராசா.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

முச்சக்கர வண்டி சாரதிகளின் வருமானத்தில் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு பிக்மீ செயலி சாரதிகளை வாடிக்கையாளர்களுடன் இணைக்கின்றது. தற்போது அவர்களின் வருமானத்தில் 12% த்தினை செயலி பெறுகின்றது.

சங்கத்தைச் சேர்ந்த சாரதிகள் கட்டணமானி ஒன்றைப் பயன்படுத்தியே கட்டணங்களை அறவிட வேண்டும் என சங்கத்துக்கு அறிவுறுத்தியதைத் தவிர்த்து இந்த சந்தைப் போட்டியில் அரசாங்கம் எந்த வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. ஆகஸ்ட் 2023 தொடக்கம் சங்கத்தின் சாரதிகள் கட்டணமானியை பொருத்தியதுடன் அவற்றை பயன்படுத்தியும் வருகின்றனர், எனத் தெரிவிக்கின்றார் சாரதியான ஜனார்த்தனன். வாடிக்கையாளர்களிடம் மேலதிக கட்டணங்களை அறவிடும் எந்த ஒரு சாரதி தொடர்பிலும் சங்கம் விசாரணை செய்வதுடன் அவ்வாறானவர்களை இடை நிறுத்துகின்றது என இது தொடர்பில் விஜயராசா மேலும் தெரிவிக்கின்றார். எனினும், பிக்மீ செயலியின் கட்டண வீதங்கள் கட்டணமானியைப் பயன்படுத்தி அறவிடப்படும் கட்டணங்களை விட குறைவானவையாக காணப்படுவதால் இந்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.

“கட்டணமானியை விட குறைவான பணத்தை எடுக்கும் பிக்மீயை அரசாங்கம் எப்படி அனுமதிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்புகின்றார் ஜனார்த்தனன். “சவாரிக்கான தூரங்கள், எரிபொருள் செலவு, வாகனத்தின் தேய்மானம் என அனைத்து விடயங்களும் கருத்திற்கொண்டே சவாரிக்காக மக்களிடமிருந்து பெறப்படும் பணம் கணிக்கப்பட்டது,” என மேலும் குறிப்பிடுகின்றார் ஜனார்த்தனன்.

யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மற்றும், யாழ்ப்பாணத்தில் உள்ள மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் ஆகிய இருவரும் அரசாங்கத்தின் கட்டணமானி வீதம் அல்லது குறைவான கட்டண வீதத்தை அறவிட பிக்மீ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

‘எனது வாழ்க்கை மாற்றமடைந்துள்ளது’

பிக்மீ சாரதியான பிரஷாந்தன் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்திருந்தார், எனினும் அவர் சங்கத்தின் உறுப்பினராக இல்லாததோடு யாழ்ப்பாணத்தில் அவருக்கு ஒரு முச்சக்கர வண்டித் தரிப்பிடம் இருக்கவில்லை. அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது. “யாரும் சவாரி கேட்டாப் போவன்”, என்கிறார் பிரஷாந்தன். “இல்லாட்டி யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறத்தில களவா நிண்டு வாற சவாரிகள ஏத்தி இறக்குவன்”, என அவர் மேலும் தெரிவித்தார்.

அக்காலப்பகுதியில் ஒரு நாளுக்கான அவரின் வருமானம் 2,000 ரூபாய்களுக்கும் (6 ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) குறைவானதாகவே அமைந்திருந்தது – இது முச்சக்கர வண்டி கொள்வனவு தவணைக் கட்டணங்களை செலுத்துவதற்கு கூட போதுமானதாக இருக்கவில்லை.

“சில நாட்கள் தொலைபேசி அழைப்புக்கள் எதுவுமின்றி சட்டைப்பை வெறுமையாகிய நாட்களும் இருக்கின்றன,“ என தனது கடந்து காலத்தை மீட்டிப் பார்க்கின்றார் பிரஷாந்தன்.

பிக்மீ செயலியில் இணைந்ததில் இருந்து அவரது முச்சக்கர வண்டிக்கு அதிக கிராக்கி நிலவுகின்றது. “பிக்மீ இல இணந்ததன் பின்னர் எனது வாழ்க்கை மாறி விட்டது” என்கிறார் பிரஷாந்தன். “என்னால் அதிக வாடிக்கையாளர்களை பெற முடிகின்றது” எனவும் அவர் கூறுகின்றார்.

பயணமொன்றுக்கு சங்கத்தில் இணைந்துள்ள சாரதிகள் பெறுவதை விட குறைவான பணத்தையே ஜனார்த்தனன் போன்ற சாரதிகள் பெறுகின்றனர், எனினும் அதிக சவாரிகளை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் இந்த இடைவெளியை ஈடு செய்கின்றனர். நாளின் முடிவில், சங்கத்தில் உள்ள சாரதிகள் பெற்றிருந்த தொகைக்கு ஒப்பான பணத்தை அவரால் உழைக்க முடிகின்றது, இருந்த போதும் யாழ்ப்பாணத்தின் மாசடைந்த வீதிகளில் அதிக நேரம் முச்சக்கர வண்டி செலுத்தலில் ஈடுபட்டதன் பின்னரே இத்தொகையை அவரால் உழைக்க முடிகின்றது. தனது தொழில் மீது குறைவான சுய கட்டுப்பாட்டையே ஜனார்த்தனன் கொண்டுள்ளார், நாளொன்றுக்கு ஆகக் கூடுதலாக இரண்டு சவாரிகளை மாத்திரமே அவரால் செயலியில் நிராகரிக்க முடியும். இதற்கு அதிகமாக அவர் நிராகரிக்கும் வேளை அவரின் தரவரிசை பாதிப்படைவதுடன் சவாரிகளின் எண்ணிக்கையும் குறைவடைய ஆரம்பிக்கும், என அவர் கூறுகின்றார். தற்காலத்தில் அவரின் உழைப்பில் 12% பிக்மீ நிறுவனத்தை சென்றடைகின்றது.

சவாரிகள் மலிவானவையாகவும் விரைவானவையாகவும் இருப்பதால் இந்த செயலி தொடர்பில் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; மேலும், முச்சக்கர வண்டிகளின் பயணப்பாதைகள் கண்காணிப்பின் கீழ் காணப்படுவது அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் பொறுப்புக் கூறல் என்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றது. “நான் இரவு நேரங்களில் கூட எனது பிள்ளையுடன் தனியாக பிக்மீ இல் போக்குவரத்துச் செய்வதனை பாதுகாப்பாக உணருகின்றேன்” என்கிறார் பருத்தித்துறை நகரில் வசிக்கும் குடும்பப் பெண்ணான விதுர்ஷன் ஆரணி.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

பேருந்துகளுடன் ஒப்பிடும் வேளை பிக்மீ முச்சக்கர வண்டிகள் விரைவானவையாகவும் வசதியானவையாகவும் இருப்பதால் அவற்றை விக்டோரியா கவிஞன் விரும்புகின்றார்.

தனது மாமியாரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவதை வழமையாகக் கொண்டுள்ள ஆரணி தனது மாதாந்த போக்குவரத்து செலவை குறித்த செயலி பாதியாகக் குறைத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். “எனது குடும்பம் மற்றும் நண்பர்களை இந்த செயலியை பயன்படுத்துமாறு நான் ஊக்குவிக்கின்றேன்”, என்கிறார் அவர். “தற்போதைய பொருளாதார நெருக்கடியில் போக்குவரத்து செலவுகளில் சேமிப்புகளை மேற்கொள்வது முக்கியமானது”, என அவர் மேலும் கூறுகின்றார்.

வல்வெட்டித்துறை நகரில் வசிக்கும் ஒரு விற்பனை செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான விக்டோரியா கவிஞன் 2020 ஆம் ஆண்டில் கொழும்பில் வசித்த போது அந்நகர் மற்றும் மொழிப் பரிச்சியம் அற்றவராக இருந்தார். அக்காலகட்டத்தில் அவர் பிக்மீ செயலியை பயன்படுத்துபவராக காணப்பட்டார். இந்த செயலி யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் அவர் உடனடியாக அதில் இணைந்து கொண்டார். பேருந்துகளை விட பிக்மீ முச்சக்கர வண்டிகள் விரைவானவை மற்றும் பாதுகாப்பானவை என அவர் கூறுகின்றார்.

யாழ்ப்பாண வாடிக்கையாளர்களுக்கு பிக்மீ ஆரம்பத்தில் வழங்கிய மிகவும் குறைவான கட்டண வீதம் அதிகரித்த வரிகள் மற்றும் பெற்றோல் செலவுகளால் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றார் உள்ளூர் முகவரான தவதீஸன். இந்தக் கம்பனி தற்போது முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு 205 ரூபாய்களையும் (64 அமெரிக்க சதங்கள்) அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 105 ரூபாய்களையும் (33 அமெரிக்க சதங்கள்) கட்டணமாக அறவிடுகின்றது – இது 11% அதிகரிப்பாக அமைந்தபோதும் இவ்வீதம் அரசு விதித்த கட்டண வீதத்தை விட இன்னும் குறைவாகவே உள்ளது.

யாழ்ப்பாணத்தின் முச்சக்கர வண்டி சாரதிகளில் 75% த்திற்கும் அதிகமானவர்கள் பிக்மீயுடன் இணைந்துள்ளதாக தவதீஸன் குறிப்பிடுகின்றார், இது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் ஏகபோகத்தை ஆட்டங்காண வைத்துள்ளது. மேலும், விரைவில் அயல் மாவட்டங்களான மன்னார் மற்றும் முல்லைத்தீவு என்பவற்றுக்கும் இச்செயலி விரிவாக்கப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார். “அங்குள்ள மக்களும் இதன் சேவைகளை எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்ள முடியும்”, என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இன் அதீக் சம்சுதீன் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தார்.