Sri Lanka

போருக்குப் பிந்தைய இலங்கையில், அபாயகரமான தூண்டுதலி்ல் சட்டவிரோத மதுபான பாவனை

மூத்த உள்நாட்டுப் போர் வீரர்கள் ஆபத்தான, சட்டவிரோத மதுபான பாவனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.

Read this story in

Publication Date

Economic Crisis and Unregulated Alcohol Collide

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மீனவர் விஜயகுமார் வேலாயுதம் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததால் கையை இழந்தார்.

Publication Date

மன்னார், இலங்கை – இலங்கை உள்நாட்டுப் போரில் விஜயகுமார் வேலாயுதம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் போராடினார். அவர் ஒரு கையை இழந்தார்; சிறையில் அடைக்கப்பட்டார், விசாரிக்கப்பட்டார் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டார். இறுதியில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடனான வீட்டுக்குத் திரும்பியதும், அவர் தன் வாழ்வின் கொடூரங்களை மறக்க கடுமையாக முயன்றார்.

அவர் தனது குடும்பத்தை நடாத்துவதற்கு வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள வீட்டில் ஒரு மீனவனாக வேலை செய்யத் தொடங்கினார், ஆனால் அவர் புதிய மாற்றத்தை அனுசரிக்கப் போராடினார். அவரது காயத்தின் வலி மற்றும் போர்க்கால நினைவுகள் அவரை தூங்க விடாமல் தடுத்தன. இதனால் அவர் மது அருந்த ஆரம்பித்தார்.

“தொழிலுக்குப் போயிற்று வந்தால் அலுப்பா இருக்கும். நித்திரை வராது. பழைய நினைவுகள்தான் வரும். கொஞ்சம் சாராயம் குடிச்சியெண்டால் நிம்மதியா நித்திரை கொள்ளுவாய் குடி என்று பிரண்ட்ஸ் தந்தாங்கள். அப்பிடியே குடிச்சுக்குடிச்சுப் பழகிற்று”
2018 ஆம் ஆண்டில், அவர் தனது வளர்ந்து வரும் குடிப்பழக்கத்திற்கு பணமின்றிப் போராடினார், எனவே அவர் சீனி, கனிந்த பழங்கள், மற்றும் மதுவம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட கசிப்பு என்ற சட்டவிரோத மதுபானத்திற்கு மாறினார். சட்டப்பூர்வ மதுவை விட சட்டவிரோத அற்ககோல் மலிவானது மற்றும் இலகுவாகக் கிடைக்கக்கூடியது. இது கட்டுப்பாடற்றது மற்றும் சட்டப்பூர்வ அற்ககோலின் அதே தரக் கட்டுப்பாட்டுத் தரங்களுக்கு உட்பட்டது அல்ல. எனவே இது பெரும்பாலும் மத்திய நரம்புத் தொகுதியை அழித்து குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மெதனோல் என்ற நச்சுப் பொருட்களை உள்ளடக்கியது.

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவடைந்ததில் இருந்து, பெண்களை விட அதிகமான ஆண்கள் மது அருந்துவதுடன் மதுவின் நுகர்வு மற்றும் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதில் 40 சதவீதமான மது சட்டவிரோதமானது. மோதலுக்குப் பிறகு மதுவில், குறிப்பாக சட்டவிரோத மதுவில் தங்கியிருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது ஏற்கனவே வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான மறுவாழ்வுத் திட்டங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

நான்கு பிள்ளைகளின் தந்தையான விஜயகுமார் வேலாயுதம், சட்டவிரோதமான மது அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தத் திட்டத்தை முடித்தார். இந்த திட்டம், அவரது வாழ்க்கையை மாற்ற உதவியதுடன் குடிப்பழக்கத்தை நிறுத்த உதவியதாகவும் அவர் கூறுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்க விரும்பிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே நடந்த 26 ஆண்டுகால மோதலில் பல விடுதலைப் புலிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். மனித உரிமைகள் கண்காணிப்பு (ஹைப்பர்லிங்க்) நிறுவனத்தின் அறிக்கையின்படி சிலர் சித்திரவதை செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் வீடு அல்லது வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் இடம்பெயர்ந்தனர்.

விடுதலைப் புலிகளின் போராளியான வேலாயுதம் 2007 ஆம் ஆண்டு தனது வலது கையை இழந்தார். அவர் வெடிமருந்துகளைக் கொண்டு சென்றபோது படையினர் அவரைச் சுட்டதில் 240 துண்டுகள் அவரது உடலில் புகுந்தன.

“அவை என் தோலுக்கு அருகில் வரும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது,” என்று அவர் தனது உடலிலுக்குள் உள்ள உலோகத் துண்டுகளைப் பற்றி கூறுகிறார்.

அவர் மூன்று மாதங்கள் பொலிஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர் 2011 வரை தடுத்து வைக்கப்பட்டார். வழக்கமான விசாரணைகள் மற்றும் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டதாக அவர் கூறுகிறார்; அந்த நினைவுகள் அவரை இன்னும் வாட்டுகின்றன.

“காயப்பட்டது கையில்லாமல் போனதுகூடக் கவலை இல்லை. ஆறாம் மாடிக்குக் கொடுத்தபிறகு அங்கே செய்த சித்திரவதைகள்தான் சரியான கவலை,” என்று வேலாயுதம் கூறுகிறார். “காயத்திலயே சித்திரவதை செய்தாங்க. ஊசியாலைகுத்தினாங்க. ஸ்குரு ட்ரைவரால குத்தினாங்க.”

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

யாழ் போதனா மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் சிவதாஸ் சிவசுப்ரமணியம், இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, பிரச்சினைக்குப் பின்னரான மனவடு காரணமாக அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டதாகக் கூறுகிறார்.

“நான் பாத்துக்கொண்டிருக்கும்போதே ரெண்டு பெண்பிள்ளைகள் மோசமாகிப்போனது,” என்று நான்கு குழந்தைகளின் தந்தை துக்கம் தாங்க முடியாமல் வார்த்தைகளின்றி கண்கள் கலங்கி அழ ஆரமபிக்க முன் கூறுகிறார். “நடந்துமுடிந்த சம்பவங்களை மறக்க முடியவில்லை. இத்தின ஆண்டுகள் ஆகீற்று ஆனால் நித்திரைக்கு கண்ணை மூடினால் அந்த நினைவுகள் வந்திருது.”

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வேலாயுதத்தின் வீட்டில் கசிப்பு இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டு சமூக சீர்திருத்த உத்தரவு வழங்கப்பட்டது, இதன் போது அவர் 100 மணிநேர ஆலோசனை அமர்வில் கலந்து கொள்ள வேண்டும். மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் சமூக சீர்திருத்தப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி முஹம்மது அனஸ் கூறுகையில், இக்குற்றங்களுக்கு அபராதம் பலனளிக்காது எனவும், சிறைச்சாலையானது குற்றவாளிகள் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதைத் தடுக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சிறைக்கு அனுப்புபவர்கள் அல்ல. சிறைசெல்லாமல் தடுப்பவர்கள்,” என்று அனஸ் கூறுகிறார்.

சீர்திருத்தத் திட்டமானது குற்றவாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன் அவர்களை பொதுச் சேவை செய்யவும் பணிக்கிறது, அத்துடன் இந்தத் திட்டத்தில் பங்குபற்றுபவர்களுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படுகின்றன.

“2021 ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருக்கு 25,000 ரூபாய்க்கு நண்டு வலை வழங்கினோம்,” என்று மன்னார் மாந்தை மேற்கு அரசாங்க அதிகாரி டிலக்சன் சந்திரகேசன் கூறுகிறார். ஆனால் அத்தகைய முயற்சிகளுக்கு அரசாங்க நிதி போதுமானதாக இல்லை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டு, புனர்வாழ்வுக்குப் பின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முயற்சிப்பவர்களில் ஒருவருக்கு உதவுவதற்காக அரசாங்கம் 50,000 இலங்கை ரூபாவை ($140) மாந்தை மேற்கு பிரதேசத்திற்கு ஒதுக்கியது.

இத்திட்டம் நடைமுறையில் இருந்தபோதிலும், மன்னாரில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021 இல் 84 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட போதிலும் 2022 இன் முதல் இரண்டு மாதங்களில் அந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

expand image
expand slideshow

வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

மேடையில் வைத்தியர் சிவதாஸ் சிவசுப்ரமணியம் மற்றும் அவரது வலது புறத்தில் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் சமூக சீர்திருத்தப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி முகம்மது அனஸ் ஆகியோர் போதைப்பொருள் மற்றும் மதுபான துஷ்பிரயோகம் தொடர்பான செயலமர்வுக்கு தலைமை தாங்கினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கடந்த 20 வருடங்களாக மனநல மருத்துவராகவும், சுகாதார அமைச்சின் மனநல ஆலோசகருமான வைத்தியர் சிவதாஸ் சிவசுப்ரமணியம் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், பிரச்சினைக்குப் பின்னரான மனவடு காரணமாக பாதிக்கப்பட்ட அதிகமான நிகழ்வுகளைக் கண்டதாகக் கூறுகிறார். சீர்திருத்தத் திட்டங்களின் சாதகமான முடிவுகளைக் காணும் அதேவேளை, இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தத் திட்டங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தனக்கு கவலை இருப்பதாக அவர் கூறுகிறார். இலங்கையானது தாங்க முடியாத கடன் மற்றும் மிகவும் நிச்சயமற்ற பொருளாதாரக் கண்ணோட்டத்தை எதிர்கொள்கிறது.

“பணத்தில் தங்கியுள்ள திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்படும், ஆனால் தன்னார்வ அடிப்படையில் செயல்படும் திட்டங்கள் பாதிக்கப்படாமல் தொடரலாம்” என்கிறார் சிவசுப்ரமணியம். “ஆயினும், பொருளாதார நெருக்கடி தொடர்வதால், மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக அல்லது மனச்சோர்வடைந்தவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். … இது தன்னார்வ செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கும்.” பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தன்னார்வலர்களின் எண்ணிக்கை குறைகிறது. இது ஒரு பயமுறுத்தும் நிலை” என்றார்.

மறுவாழ்வு வகுப்புகளுக்கு தலைமை தாங்கி, மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிவசுப்ரமணியம் இந்த முயற்சியில் அதிகமானோர் ஈடுபட வேண்டும் எனக் கூறுகிறார்.

“கடந்த 20 ஆண்டுகளாக போரின் விளைவுகளை அனுபவித்து வரும் ஒரு சமூகத்துடன் பணிபுரிந்த எனது அனுபவத்தின்படி, நீண்ட கால நோக்கமுள்ள சமூகமாக மக்கள் ஒன்றிணைந்து செயல்படாதபோது முயற்சிகள் குறைவான பலனையே தருகின்றன.”
சீர்திருத்தத் திட்டம் வேலாயுதத்தின் வாழ்க்கையை நல்வழிக்குத் திருப்ப உதவியது. மீன்பிடித்தல் மற்றும் தோட்டக்கலை போன்ற தனது குடிப்பழக்க சலனங்களில் இருந்து அவரைத் தடுக்கும் மற்றும் அவரது குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை வழங்கும் நடவடிக்கைகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இப்போது அவர் மது அருந்துவதில்லை.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரத்தை மையமாகக் கொண்ட வெற்றிச்செல்வி சந்திரகலா, குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர்ஷிஹார் அனீஸ், ஜிபிஜே.

Related Stories