செட்டிகுளம், இலங்கை — நாகலிங்கம் நாராயணசிங்கம் தனது தோட்டத்தில் கீழ்காய்நெல்லி, குப்பைமேனி, கொவ்வைஇலை, மற்றும் வேப்பங் கொழுந்து எனும் மருத்துவ மூலிகைகளை பறித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது காலடியில் கோழிகள் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர் மூலிகைகளை அரைத்து விழுதாக ஆக்கி, அரிசி தவிட்டுடன் கலந்து தனது கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்வார்.
“இந்த பாரம்பரிய மருத்துவம் தடிமன் போன்ற நோய்களில் இருந்து கோழிகளை ஓரளவு பாதுகாக்கிறது,” என்று அவர் கூறுகிறார். “ஆனால் இந்த மூலிகைகளை நிறைய வாங்குவது கடினம். மேலும் கோழிகள் சிறு வயதிலிருந்தே பழக வேண்டும், இல்லையெனில் அவை சாப்பிடாது.’
கடையில் வாங்கும் முட்டையின் விலையை இருமடங்காக உயர்த்தியுள்ள நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி தங்கள் வீட்டு முற்றத்தில் கோழிகளை வளர்க்கும் கிராமப்புற இலங்கையர்களில் நாராயணசிங்கமும் ஒருவர். கடந்த ஆண்டு 124,763 பேர் கோழிகளை வளர்த்தனர், இது 2017 இல் பெருந்தொற்றுநோய்க்கு முன்னர் இருந்த உச்சபட்ச்சத்தை விட 8.5% அதிகமாகும் என்று இலங்கையின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொல்லைப்புறக் கோழிகள் சுதந்திரமாக இருப்பதுடன், சமையலறை கழிவுகளை உண்கின்றன, மேலும் மருத்துவ மூலிகைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன, இதனால் உள்ளீ ட்டு செலவுகள் குறையும். இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த நெருக்கடியின் போது முட்டைகளை சாப்பிடுவதற்கும் உள்நாட்டில் விற்பனை செய்வதற்கும் கொல்லைப்புறக் கோழிகளை வளர்க்கிறார்கள், இது சத்தான உணவுக்கான அணுகலைக் குறைத்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வவுனியா நகரைச் சேர்ந்த மருத்துவர் செல்வராசா மதுராகன் கூறுகையில், ‘ஊட்டச்சத்து நிபுணர்கள் முட்டையில் உள்ள புரதத்தைமிக முக்கியமான புரதமாக கருதுகின்றனர். ‘இறைச்சி, மீன் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ள நிலையிலே, முட்டைகள் இன்னும் முக்கியமானவை, ஏனெனில் அவை மற்ற புரத உணவுகளை விட குறைவான விலையில் கிடைக்கின்றன.’
21 வருடங்கள் வவுனியாவில் வசித்து வந்த 72 வயதான நாராயணசிங்கம், 2019 இல் தனது ஓய்வு காலத்தில் கோழிப்பண்ணை ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்தார். அவர் சுமார் 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில் உள்ள சொந்த ஊரான செட்டிகுளத்திற்கு இடம் பெயர்ந்து 60 முட்டையிடும் கோழிகளை வாங்கினார்.
பின்னர் கோழிப்பண்ணை தொழிலில் தொடர் அவலங்கள் ஏற்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று 2020 இல் தொடங்கியது. அடுத்த ஆண்டு, அரசாங்கம் இரசாயன உரங்களுக்கு தடை விதித்தது, கோழி தீவனத்தின் விலை உயர்ந்தது. மேலும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கடன் மற்றும் வெளிநாட்டு இருப்புக்கள் குறைந்ததால் பொருளாதாரம் சரிந்தது. கோழித் தீவனம், மருந்துகள் மற்றும் பிற விவசாயப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை உயர்ந்தது. பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை பண்ணைகள் மூடப்பட்டு, பெரிய பண்ணைகள் உற்பத்தியை குறைத்துள்ளன என்று செட்டிக்குளத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவ அலுவலகத்தின் கால்நடை மருத்துவர் கிருபானந்தகுமாரன் சிவபாதசுந்தரலிங்கம் கூறுகிறார். 2022ல் 1,000க்கும் குறைவான கோழிகளுடன் 28,061 முட்டை பண்ணைகள் இருந்தன, இது 2017ல் இருந்து 28% குறைந்துள்ளது என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்ட அறிக்கையின்படி, சில மாவட்டங்களில், 80% கோழி மற்றும் முட்டை பண்ணைகள் மூடப்பட்டுவிட்டன.
”பொருளாதார நெருக்கடியானது, தன்னிறைவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த கோழிப் பண்ணையாளர்களின் எதிர்காலத்தையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது.” என்கிறார் சிவபாதசுந்தரலிங்கம்.
நாராயணசிங்கமும் பாதிக்கப்பட்டார். கடந்த மே மாதம் இரத்தக் கழிச்சல் நோயால் 12 கோழிகள் நோய்வாய்ப்பட்டபோது, நாராயணசிங்கத்தினால் உள்ளூரில் அதற்கான மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தீவிரமாக வவுனியாவில் உள்ள கடைகளில் தேடினார்.
“நகர்புறத்தில் மருந்துகளை தேடி தேடி வாங்க எனக்கு ஒரு நாள் ஆனது, ஆனால் அதுக்குள்ள பல கோழிகள் இறந்திட்டு,” என்று அவர் நினைவு கூர்ந்தார். “நான் கோழிகளை அவைகள் சிறியதாக இருக்கும் போதிலிருந்து வளர்த்து வந்தேன், அது எனக்கு ஒரு பெரிய இழப்பாக உணர்ந்தேன்.”
பின்னர் அவர் கோழி வளர்ப்பில் பாரம்பரிய முறைகளுக்கு மாறுவதன் மூலம் பிரச்சனைகளை சமாளித்தார். அவர் தனது கோழி வளர்ப்பினை 30 குஞ்சுகளாகக் குறைத்தார். தனது கோழிகளை நோயிலிருந்து பாதுகாக்க பாரம்பரிய மூலிகைகள் பற்றி அறிய யூடியூப்பில் தேடினார். அவர் ஒரு உள்ளூர் ஆலையில் இருந்து மாதம் 3,500 இலங்கை ரூபாய்க்கு (11 அமெரிக்க டொலர்கள்) வாங்கும் அரிசி தவிட்டை அவைகளுக்கு ஓரளவு ஊட்டுவதுடன் மீதி உணவை அவரது வளவினுள் தேடிக் கொள்கின்றன. இந்த குறைந்த உள்ளீட்டு பண்ணை வளர்ப்பின் மூலம், கோழிகள் வாரத்திற்கு 35 முதல் 55 முட்டைகள் இடுகின்றன – கடந்த ஆண்டு இருந்த அதிகளவிலான கோழிகளுடன் ஒப்பிடும்போது வாரத்திற்கு 60 முதல் 80 முட்டைகள் வரை குறைந்துள்ளது என நாராயணசிங்கம் கூறுகிறார். அவர் மாதம் சுமார் 10,000 ரூபாய் (32 டொலர்கள்) சம்பாதிக்கிறார்.
“பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி அதிகளவு கோழிகளை இம்முறையில் வளர்க்க முடியாது சிரமம்,” என்று அவர் கூறுகிறார். ஆனால் அவர் அதை செய்வதில் மகிழ்ச்சியடைகிறார். “இந்த வேலையை என்னால் தனியாகச் செய்ய முடியும், என் நேரத்தைச் செலவிட இது ஒரு நல்ல வழியாகும்.”
கோழி வளர்ப்பில் ஏற்பட்ட நெருக்கடி இலங்கையில் முட்டை தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்தது. 2022 இல் 1.8 பில்லியன் முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 5% குறைந்துள்ளது. நாட்டிற்கு தினசரி 7 மில்லியன் முட்டைகள் தேவைப்பட்டாலும், 5.2 மில்லியன் முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெருக்கடியால் முட்டை விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. செட்டிகுளத்தில் உள்ள நியூ அம்மன் டிரேடர்ஸ் வியாபார நிலையத்தில் வாரந்தோறும் 50 முட்டைகள் மட்டுமே விற்பனையாகிறது. 2021 இல் 250 முட்டைகள் விற்பனையாகியது என்று கடைக்காரர் அந்தோணிப்பிள்ளை நாகராசா கூறுகிறார். ஏப்ரல் மாதத்தில் ஒரு முட்டையின் விலை 44 ரூபாய் (14 சென்ட்கள்); இரண்டு ஆண்டுகளுக்கு முன், 19 ரூபாய் (6 சென்ட்கள்) ஆக இருந்தது. அதாவது மக்கள் குறைவான முட்டைகளை உட்கொள்கிறார்கள் என்று அந்தோனிப்பிள்ளை கூறுகிறார். ‘தற்பொது சாதாரண மக்கள் தனது கடையில் முட்டை வாங்குவது அரைவாசியாக குறைந்துள்ளது’ என்று அவர் கூறுகிறார்.
பற்றாக்குறையை தீர்க்க குடும்பங்களை சொந்தமாக கோழிகளை வளர்க்குமாறு அரசாங்கம் உந்தித் தள்ளுகிறது. 2022 ஆம் ஆண்டில், விவசாய விரிவாக்கத் திணைக்களத்தின் இலங்கை ஹதபிம அதிகாரசபை, தேவையுடைய 1,800 குடும்பங்களுக்கு 18,000 குஞ்சுகளை விநியோகித்தது. ஆண்டு இறுதிக்குள் 480,000 முட்டைகளை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதமும் 2,000 குஞ்சுகளை விநியோகிக்க திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அனைத்து குடும்பங்களும் தங்கள் வீட்டு முற்றத்தில் குறைந்தபட்சம் 20 கோழிகளையாவது வளர்த்து தங்கள் குழந்தைகளுக்கு தேவையான முட்டைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார் கால்நடை மருத்துவர் சிவபாதசுந்தரலிங்கம். இது நாட்டின் பற்றாக்குறையை தீர்க்காது என்றாலும், தனிநபர்கள் தன்னிறைவு அடைய உதவும், என்கிறார்.
வவுனியா மாவட்டத்தில், 2009 இல் முடிவடைந்த இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட 32 பெண் தலைமைத்துவமான குடும்பங்களுக்கு 30 நாட்டுக் கோழிகளை சமூக நீதிக்கான இலாப நோக்கற்ற அமைப்பான நீதிக்கான மக்கள் அமைப்பு விநியோகித்துள்ளது.
‘எங்கள் வாழ்வாதார உதவித் திட்டங்களின் பிரதான நோக்கம் போசாக்காண உணவை உறுதிப்படுத்தல் ஆகும் ‘ என்கிறார் இலாப நோக்கமற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வடமலை ரவீந்திரகுமார். ‘பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.’
அவர்கள் தங்கள் அயலவர்களுக்கு அதிகப்படியான முட்டைகளை விற்கலாம், சிறிய வருமானத்தை ஈட்டலாம், என வடமலை கூறுகிறார்.
கோழிப்பண்ணையாளர் ஜோன்ரீகன் அருளம்மா தனது கணவரின் கூலி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு உணவளிக்க இந்த வருமானத்தை நம்பியுள்ளார். அவர் 2019 இல் தனது தோட்டத்தில் கோழிகளை வளர்க்கத் தொடங்கினார், இப்போது 15 கோழிகள் உள்ளன. அவர் சமையலறை கழிவுகளை அவற்றிற்கு உணவாக அளிக்கிறாள். அவ்வப்போது ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்குகிறாள் மேலும் முட்டையிலிருந்து குஞ்சுகளை பொரிக்கச் செய்வதால் அவளுடைய உள்ளீட்டு செலவுகள் குறைவாக உள்ளது.
அவரது ஆறு பேர் கொண்ட குடும்பம் வாரத்திற்கு 20 முட்டைகளை உட்கொள்கிறது, மீதியை அவள் அயலவர்களுக்கு விற்கிறாள். முட்டையின் விலை உயர்ந்து வருவதால், அவர் தனது பண்ணையில் இருந்து மாதம் 5,000 ரூபாய் (16 டொலர்கள்) சம்பாதிக்கிறார்.
அவரது வழக்கமான வாடிக்கையாளர்களில் ஒருவரான ஞானச்சந்திரன் சங்கீதா, 26, ஜோன்ரீகனின் முட்டைகள் கடையில் உள்ளதை விட மலிவானவை என்கிறார். ‘எங்கள் வருமானம் குறைவான இந்தநிலையில முட்டை வாங்கிறது கஸ்டம் தான்’ என்கிறார் ஞானச்சந்திரன்.
அவர் ஒவ்வொரு வாரமும் 20 முட்டைகளை வாங்குகிறார். ஆனால் ஜோன்ரீகனின் வெற்றியையும், முட்டையின் விலை விண்ணைத் தொடுவதையும் பார்த்து, தானும் விரைவில் கோழிகளை வளர்க்க வேண்டும் என்று ஞானச்சந்திரன் நினைக்கிறார்.
தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்பு குறிப்பு
இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர், ஜோசபின் ஆண்டனி, ஜிபிஜே.