Sri Lanka

ஓய்வு பெற்றவரா? இனிமேல் இல்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது முதியவர்களை மீண்டும் வேலைக்குச் செல்ல வைக்கிறது

வாழ்க்கைச் செலவின் செங்குத்தான அதிகரிப்பை சாமாளிக்க அரசாங்க ஓய்வூதியங்கள் போதுமானதாக இல்லை.

Read this story in

Publication Date

Retired? Not Anymore. Sri Lanka’s Economic Crisis Puts Seniors Back to Work

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

63 வயதான கந்தன் சிறீஸ்கந்தராசா. இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு உருவப்படத்திற்கு நிற்கிறார். 2021ஆம் ஆண்டு அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற சிறீஸ்கந்தராசா. தற்போது தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிகிறார்.

Publication Date

யாழ்ப்பாணம், இலங்கை — 2021 இல் தனது அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், கந்தன் சிறீஸ்கந்தராசா ஓய்வூதியம் பெறுபவராக ஒரு நிம்மதியான வாழ்க்கையை கற்பனை செய்திருந்தார். ஆனால் தற்போது, 63 வயதான அவர், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிகிறார், தினமும் காலை 6:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி, இரவு 7:30 மணி வரை திரும்புவதில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்வது சரியான தேர்வாக இருக்கவில்லை. “ஆரம்பத்தில என்னுடைய மாதாந்த சம்பளத்தில வாழ்க்கைச் செலவுகள பாத்துக்கொள்ள முடிஞ்சுது. ஏனென்டா அப்போது வாழ்க்கைச் செலவு குறைவா இருந்திச்சு“, என்று சிறீஸ்கந்தராசா கூறுகிறார். இப்போது, அவர் உயிர்வாழ உழைக்க வேண்டும்.

சிறீஸ்கந்தராசா மற்றும் அவரைப் போன்ற பலருக்கு ஓய்வு பெறுவது என்பது இனிமேல் பெற்றுக் கொள்ள முடியாத ஆடம்பரமான விடயமாக இலங்கையில் மாறிவருகிறது. 2021 இல் நாட்டைத் தாக்கிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினால் செலவுக்கு நன்றி – கவனமாகத் திட்டமிடப்பட்ட நிதியைக் கொண்டவர்களுக்கு கூட, ஓய்வூதிய இருப்புகள் ஓய்வுக்குப் பிறகு அவர்களை நிதி ரீதியாக தாங்க முடியவில்லை.

“ஆரம்பத்தில் இருந்த பொருட்கள், சேவைகள் அனைத்தினதும் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றன. ஆனால், ஓய்வூதியப்பணம் அதற்கேற்ப மூன்று மடங்கு அதிகரிக்கப்படவில்லை. இதனால் ஓய்வு பெற்றவர்கள் இன்னொரு வேலையை நாடுகின்றார்கள்.” என சிறீஸ்கந்தராசா உட்பட வேலை தேடும் ஓய்வு பெற்றவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் ஊழியர் முகவரான யாழ்ப்பாணத்தின் மெர்கன்டைல் செக்யூரிட்டி சேர்விசஸ் இல் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றும் பரமு செல்வராஜா கூறுகிறார்.

பெரும்பாலான முறையான துறை சார்ந்த தொழிலாளர்கள் 55-60 வயதில் தங்கள் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள், அதன் பிறகு அவர்கள் ஓய்வூதியம் அல்லது சேம நிதியம் மூலம் ஒருவித வருமான பாதுகாப்புக்கு தகுதி பெறுகிறார்கள். ஆனால் ஓய்வூதியங்கள் ஒரு நிலையான தொகையாக இருப்பதாலும், பொதுவாக வாழ்க்கைச் செலவை சரிசெய்தவதாக இல்லாததாலும், இலங்கையில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. “எமது பணத்தினுடைய பெறுமதி இழப்பு காரணமாக ஓய்வூதியத்தினுடைய பெறுமதி குறைந்துள்ளது.“ என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் மேரி டெல்சியா அன்ரனி கிறிஸ்தியான்

பெப்ரவரி 2024 இன் அரசாங்க புள்ளிவிபரங்களின்படி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு இலங்கையருக்கு மாதாந்தம் 16,975 இலங்கை ரூபாய் (55 அமெரிக்க டொலர்கள்) தேவைப்படுகிறது. சிறீஸ்கந்தராசா தனது மனைவி மற்றும் சகோதரியுடன் தனது சகோதரியின் வீட்டில் வசிக்கிறார். அவருக்கு சொந்தமாக வீடு, கார், திறன் பேசி என எதுவுமில்லை’. ஆனால் இந்த மிக அடிப்படையான வாழ்க்கையை வாழ்வது கூட சவாலானது என்கிறார் அவர். அவரது ஓய்வூதியம் மாதம் 24,745 ரூபாய் (83.60 டொலர்கள்). “இதைக் கொண்டு”, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட அவரது மனைவியின் பல உடல்நலச் சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். “என் சகோதரி மற்றும் என் மனைவியின் மருத்துவச் செலவுகளை நான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

“ஆரம்பத்தில் இருந்த பொருட்கள், சேவைகள் அனைத்தினதும் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றன. ஆனால், ஓய்வூதியப்பணம் அதற்கேற்ப மூன்று மடங்கு அதிகரிக்கப்படவில்லை. இதனால் ஓய்வு பெற்றவர்கள் இன்னொரு வேலையை நாடுகின்றார்கள்.”

மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களில் ஏற்படும் கடுமையான பற்றாக்குறை, அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு ஆகியவை நாட்டின் பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கின்றன.

மூன்று பேர் கொண்ட சிறீஸ்கந்தராசா குடும்பத்தின், மாதாந்திர செலவுகள் உணவுக்காக 30,000 ரூபாய் (101 டொலர்கள்), மருத்துவ செலவுகள் மற்றும் சமையல் எரிபொருள் ஒவ்வொன்றுக்கும் 6,000 ரூபாய் (20 டொலர்கள்), மின்சாரத்திற்கு 5,000 ரூபாய் (17 டொலர்கள்), மற்றும் 4,000 ரூபாய் (13.50 டொலர்கள்) திருமணம் மற்றும் இறப்பு போன்ற சந்தர்ப்பங்களுக்கு என அதிகரித்து கொண்டே செல்கின்றன.

நாட்டின் 22 மில்லியன் சனத்தொகையில் சுமார் 12% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2041 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின்படி, அந்த விகிதம் 24.8% ஆக உயரும். இது இலங்கையை உலகில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் சனத்தொகை கொண்ட ஒரு நாடாக மாற்றும்.

சிறீஸ்கந்தராசாவின் கதை நாட்டிலுள்ள பல ஓய்வு பெற்றவர்களின் கதையைப் போன்றது. தெற்காசியாவில், அரசாங்க வேலை என்பதன் முதன்மையான வசீகரம், ஓய்வுக்குப் பிறகு வரும் ஓய்வூதியம் ஆகும். இந்தப் பணம் அவர்கள் இறக்கும் வரை அவர்களை பராமரிக்கும் என்ற உளக்கருத்தைக் கொண்டதாகும். ஆனால் நிலையற்ற பொருளாதாரம் அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது.

சிறீஸ்கந்தராசா அரசாங்கத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் பராமரிப்பு உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசாங்க வேலை என்பதால், ஓய்வூதியத்தில் வாழ்நாள் முழுவதும் வாழலாம் என்று நினைத்தார். அவர் ஓய்வு பெற்ற ஆரம்ப மாதங்களில், அவர் அதைச் செய்யக் கூடியதாக இருந்தது. தனது ஓய்வு நேரத்தில் – விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை பிரதான தொழிலாகக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கைதடி கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்களைப் போலவே – சிறிய அளவிலான விவசாயத்தில் அவர் தனது முயற்சியை மேற்கொண்டார். உறவினர் ஒருவரிடமிருந்து குத்தகைக்கு நிலத்தைப் பெற்று நெல் சாகுபடியைத் தொடங்கினார். அதே 2023-ம் ஆண்டு, அதிக பருவமழையால் நெல் நாற்றுகள் வெள்ளத்தில் மூழ்கி, அவரது பயிர்கள் அழிந்தன.

அதன்பிறகு, அவரிடமிருந்த சேமிப்பை உடனடியாக இழந்ததுடன், அவர் பொருளாதார நெருக்கடியின் கஷ்டத்தை உணரத் தொடங்கினார். ஆடம்பரங்கள் ஒருபுறமிருக்க, அடிப்படைத் தேவைகளுக்காகச் செலவழித்து, அவரது சேமிப்பு வெறுமையாகி, அவரது ஓய்வூதியம் போதாமல் போ போனது. 2023 இல், அவருக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார் – அவர் வேலைக்குச் சென்றார்.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

61 வயதான கோபாலப்பிள்ளை விக்ரமசிங்கம், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள பலசரக்குக் கடையில் பணிபுரியும் போது உருவப்படத்திற்காக அமர்ந்துள்ளார். விக்ரமசிங்கம் 2023 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் அவர் தனது செலவுகளை ஈடுகட்ட மீண்டும் ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த 61 வயதான கோபாலப்பிள்ளை விக்ரமசிங்கம், அரச பணியில் கிராமசேவகராகப் பணியாற்றி 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஜனவரி 2024 முதல், அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பலசரக்குக் கடையில் வேலை செய்து வருகிறார். “எங்கட நாட்டில அரச உத்தியோகத்தில இருந்து ஓய்வு பெற்றால் எந்தவொரு சிறப்புச் சலுகைகளோ, கொடுப்பனவுகளோ கிடைக்கப்பெறாது,” என்று அவர் கூறுகிறார்.

இலங்கையில், முதியோருக்கான நிதியுதவி பல அரசாங்க ஓய்வூதியத் திட்டங்களைக் கொண்டுள்ளது, ஆனால் விநியோகம் மற்றும் செயல்படுத்துவதில் இடைவெளிகள் உள்ளன. ‘எமது சமூக சேவைகள் திணைக்களத்தினூடாகப் குறிப்பாக சமூகத்தில் நலிவுற்றவர்களது நலனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் அரச பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள் தொடர்பில் அவர்களுக்கான நிதிச்சலுகைகளையோ கொடுப்பனவுகளையோ நாம் மேற்கொள்வதில்லை’ என நிதி உதவி வழங்கும் அரச நிறுவனமான வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினுடைய மாகாணப்பணிப்பாளரான அகல்யா செகராஜா கூறுகிறார்.

முதியோர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, நாள்பட்ட நோய்களால் அவதிப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் உடையவர்களுக்கு முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் (84 டொலர்கள்) ஒருமுறை செலுத்தும் வகையில் அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், அரசாங்கத்தால் நடத்தப்படும் உதவி இருப்பிட வசதிகளும் உள்ளன.
‘அவர்களின் திறமைகளை பயன்படுத்தி அவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்புகளை கண்டறியும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஆனால் தற்போது நிலவும் நிதி நெருக்கடியால் அதைச் செய்ய முடியாது“ என முதியோருக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளரான கபில லெனரோல் கூறுகிறார்.

சிறீஸ்கந்தராசாவின் பண நிலைமை அவரால் விடுமுறை எடுக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த விடுமுறை நாட்களில் அவருக்கு சம்பளம் கிடைக்காது என்பதால், எப்படியும் ஓய்வு எடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. “ஒருவேளை எனக்கு பிள்ளைகள் இருந்திருந்தா நான் எனது ஓய்வு காலத்தில வீட்டில இருந்திருக்கலாம். பிள்ளையள் பார்த்திருப்பாங்கள். கடவுள் எனக்கு அந்த வரத்தையும் தரேல“ எனக் கூறுகின்றார் சிறீஸ்கந்தராசா. இப்போதைக்கு வேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்புக் குறிப்பு

ஜொசப்பின் அந்தனி, ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.