வவுனியா, இலங்கை — அடுத்த 24 மணி நேரத்திற்குள் ரோஹினி செல்வரூபன் முதல் முறையாக தனது நாட்டை விட்டு வெளியேற இருந்தார். செப்டம்பர் 2022 இல், அவரது விமானம் முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூற அவருக்கு வேலையைப் பெற்றுக்கொள்ள உதவிய முகவர் அன்று காலை அழைத்தார். குறுகிய நேர அறிவிப்பைப் பற்றி அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை; இது அவளது குடும்பம் வறுமையிலிருந்து மீள ஒரு வாய்ப்பாகும்.
அவள் மூன்று ஜோடி ஜீன்ஸ், டி-சர்ட், ஒரு வசதியான உடை, சில உள்ளாடைகள் மற்றும் ஏனைய ஆடைகளைப் பொதி செய்தாள். தனது சகோதரியிடமிருந்து கடனாக வாங்கிய 50,000 இலங்கை ரூபாய் (168 அமெரிக்க டாலர்கள்) பணம் அவளது பணப்பையில் இருந்தது. அடுத்த நாள் காலை, ஒரு ஆட்சேர்ப்பு செய்பவர் அவளை இலங்கைப் பெண்கள் பெரும்பாலும் பணிப்பெண்களாக வேலைக்குச் செல்லும் பணக்கார வளைகுடா நாடான ஓமானுக்குச் செல்லும் விமானத்திலேற்றி விட்டார்.
மத்திய கிழக்கு முழுவதும் 2.1 மில்லியன் புலம்பெயர்ந்தோர் வீட்டுத் தொழிலாளர்களாக வேலை செய்வதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பிடுகிறது. இப்பிராந்தியத்தில், குறிப்பாக ஓமானில், தொழிலாளர் சட்டங்கள் பலவீனமாக இருப்பதாலும், அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் இருப்பதாலும் வீட்டுப் பணியாளர்கள் மனித கடத்தல் மற்றும் சுரண்டலுக்கு ஆளாவதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இது செல்வரூபனும் மற்ற பெண்களும் எப்படி நல்ல சம்பளம் மற்றும் விரும்பத்தக்க வேலைகள் என்று பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மனித வியாபாரிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள், மற்றும் அவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதைப் பற்றிய கதை.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி, வளைகுடா நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்ய 2022 ஆம் ஆண்டில் 70,989 பெண்கள் சட்டப்பூர்வமாக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், செல்வரூபனைப் போன்று இன்னும் பலர் கடத்தப்பட்டு, ஏமாற்றி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டவர்கள் இந்த உத்தியோகபூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. வவுனியாவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற மனித வியாபாரத்துக்கு எதிர்ப்பு நிறுவனமான ரஹாமா என்றழைக்கப்படும் மீள் கட்டுமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மனிதாபிமான முகாமைத்துவ நிறுவனத்தின் தகவல் படி, இலங்கையில் இருந்து பெண் தொழிலாளர்களின் வியாபாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை விட அதிகரித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வும், வேலையின்மையும் பெண்களை வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்குப் பதிவு செய்யத் தூண்டுவதாக வவுனியா மாவட்ட செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவலிங்கம் கிருஷ்ணகுமார் தெரிவிக்கிறார்.
2022 முதல், தானோ தனது குடும்ப உறுப்பினர்களோ மனிதவியாபாரத்துக்கு உள்ளானமை தொடர்பில் 117 பேர் இந்த இலாப நோக்கற்ற நிறுவனத்தை அணுகியுள்ளனர். இலங்கை அரசாங்கம் 2022 இல் ஆட்கடத்தலில் நாட்டைவிட்டு அழைத்துச் செல்லப்பட்ட 72 பேரைத் திருப்பி நாட்டுக்குக் கொண்டு வந்ததாகக் கூறுகிறது. நவம்பர் 2022 இல், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் 330 பெண்கள் தம்மைத் தாயகத்திற்குத் திருப்பியனுப்பக் கோரியதாக கூறியது. “பல்வேறு துன்புறுத்தல்கள் உட்பட பெரும் சிரமங்களை” எதிர்கொள்ளும் வீட்டுப் பணியாளர்களிடமிருந்து “தினமும் அதிக எண்ணிக்கையிலான முறையீடுகளை” பெறுவதாக தூதரகம் கூறியது.
“ஏஜெண்டுகள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வது இலகுவாக இருப்பதால் மனித வியாபாரம் அதிகரித்துள்ளது,” என்கிறார் ரஹாமாவின் பொதுச் செயலாளர் மொஹமட் பலீல் மரிக்கார். “பெண்கள் வெளிநாடு செல்வதற்கு சரியான வழிகளைத் தேர்வு செய்யாமல், திணறலுக்கு ஆளாகி, சொத்துக்களை விற்று கடனில் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.”
செல்வரூபன் உட்பட இவ்வாறு பயணத்தை மேற்கொண்ட ஆறு பெண்களிடம் குளோபல் பிரஸ் ஜேர்னல் உரையாடியது.
அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதையும், அவர்களது கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்டதையும், 40 பெண்கள் ஒரு குளியலறையைப் பகிர்ந்து கொண்ட தங்குமிடத்தில் தங்கவைக்கப்பட்டதையும், தாக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படாததையும் விவரித்தார்கள். இவை இறுதியில் அவர்களது குடும்பங்களைக் கடனில் தள்ளியது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சட்டவிரோத வேலை வாய்ப்பு குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக இலங்கையின் இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிக்கிறார்.
“பல நேரங்களில், நேர்மையற்ற முகவர்கள் மற்றும் பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் காரணமாக, ஒழுங்கற்ற வழிகள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறுகிறார். அத்துடன் சட்டவிரோதமாக வெளிநாட்டில் வேலை செய்தவர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களின் “நலன்களை” அரசாங்கம் கவனிக்கும் என்கிறார்.
ஆட்சேர்ப்பு
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தை உள்ளடக்கிய வட மாகாணத்தில் பலருக்கு அது தாங்க முடியாததாக உணரப்பட்டது.
செல்வரூபனின் குடும்பம் போராடி வந்தது. இவரது கணவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய முடியாமல் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 29 வயதான செல்வரூபன் நிலக்கடலை பிடுங்கியும், விவசாயிகளுக்கு களைகளைப் பறித்தும், ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் (3 டாலர்கள்) சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் வேலை தேடுவது என்பது தமிழ் முதுமொழி குதிரைக்கொம்பு போல் அரிதாக இருந்தது. அவளது பெண் குழந்தைகள் அடிக்கடி பசியுடன் இருந்தார்கள். மற்றும் சுண்ணாம்பு பூசப்படாத மற்றும் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்படாத அவர்களது வீடு மழை பெய்யும் போது கசிந்தது.
தனது பிரச்சனையிலிருந்து நீங்க ஒரு வழியைத் தேடி, செல்வரூபன் உள்ளூரில் “ஏஜெண்ட்” அல்லது முகவர் என அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு வேலை தேடிக் கொடுப்பவரை தனக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளம் கிடைக்கும் தொழிலுக்காக அணுகினார். அது சட்டப்பூர்வமானது என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அவளைப் பதிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியதை செல்வரூபன் நினைவு கூர்ந்தாள். அவளுக்கு இலங்கையில் ஒரு பணிப்பெண்ணுக்கு அதிக மாதாந்த சம்பளமாக வழங்கப்படும் 100,000 ரூபாய் (337 டாலர்கள்) கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
“நீங்கள் வேலை செய்ய உள்ள குடும்பம் உங்களை கூட்டிடுட்டு போகும்.,” என்று முகவர் தன்னிடம் சொன்னதை அவள் நினைவு கூர்ந்தாள். “உடுப்பில இருந்து எல்லம் தந்து நன்றாக கவனித்துக் கொள்வார்கள். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் பார்த்துக்கொள்வோம்,” என்றார்.
அவள் பணத்தை சேமித்து வீட்டிற்கு அனுப்பி, அவளுடைய பெண்கள் சரியான உணவை சாப்பிட்டு, அவளுடைய குடும்பம் காப்பாற்றப்படுவதாக அவள் கனவு காண ஆரம்பித்தாள்.
குறைந்த சம்பளத்திற்கு உலக நாடுகளுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர் 2014-2020 க்கு இடையில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% பங்களிப்பை வழங்கினர். இரண்டு தசாப்தங்களாக நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையில் 80 சதவீதத்தை வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பிய பணம் நிரப்பியதாகவும், இது காரணமாக இந்த வருமானம் நாட்டின் மீளெளும் திறனின் முக்கிய தூண் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது. ஜூன் 2023 இல் மட்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 475.7 மில்லியன்அமெரிக்க டாலர்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.
2022 இல் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த 5 பேரில் ஒருவர் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்கள் சட்டப்பூர்வமாக, வேலைக்கான விசாவுடன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்த பிறகு சென்றனர்.
ஆனால் முறையான இடம்பெயர்வு முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இலங்கையில் பல பெண்கள் எளிதான வழியாக தொழிலுக்கு உறுதியளிக்கும் ஒரு ஆட்சேர்ப்பாளரைக் கண்டுபிடித்துள்ளனர் என்று ரஹாமாவின் மரிக்கார் கூறுகிறார். இப்பெண்கள் கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.
அவர்களின் அனுபவங்கள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாதவை. ஆனால் வெளிநாடுகளில் உள்ள சட்டப்பூர்வ வீட்டுப் பணியாளர்கள் கூட சுரண்டலை எதிர்கொள்ளலாம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சட்டப்பூர்வமாகப் புலம்பெயர்ந்த வீட்டுத் தொழிலாளர்களிடமிருந்து துன்புறுத்தல், அதிக வேலைப்பளுவைச் சுமக்க வைத்தல் அல்லது முன்கூட்டியே பணிநீக்கம் செய்தல் குறித்து 578 முறைப்பபாடுகளைப் பெற்றுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2023 மனிதக் கடத்தல் அறிக்கையின் படி ஓமானில் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் முதலாளிகளால்.
“ஊதியம் வழங்கப்படாமை; நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு; உடல், வாய்மொழி மற்றும் பாலியல் துன்புறுத்கல்கள்; ஒப்பந்த மாற்றங்கள்; அதிகப்படியான வேலை நேரம்; மருத்துவ பராமரிப்பு, உணவு மற்றும் ஓய்வு நாட்களுக்கான மறுப்பு; கடவுச்சீட்டுப் பறிமுதல்; மற்றும் பலத்தைப் பயன்படுத்துதல், கைது செய்தல் மற்றும் காவல் துறையினரால் காவலில் வைப்பது போன்ற அச்சுறுத்தல்கள், போன்ற கடத்தலின் குறிகாட்டிகளுக்கு ஆளாகின்றனர்.
“இந்த ஆட்கடத்தல் குறிகாட்டிகள் இருந்தபோதிலும், இந்த விடயங்களில் பெரும்பாலானவற்றுக்கு அரசாங்கம் குற்றவியல் விசாரணைக்கு ஆணையிடவில்லை” என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மனித வியாபாரத்தை எதிர்ப்பதற்கான ஓமானின் தேசியக் குழு குளோபல் பிரஸ் ஜேர்னலுக்கு மின்னஞ்சலில், அக்டோபர் 2023 முதல், தொழிலாளர் கடத்தலைத் தடுப்பதற்காக பார்வையாளர் விசாக்களை ஓமானுக்குள் வேலை விசாவாக மாற்ற தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை என்று கூறியது. ஓமான் ஆட்சேர்ப்பு செய்பவர்களையும் கண்காணித்து வருவதாகவும், 2023 ஆம் ஆண்டில், ஓமான் அதிகாரிகள் 424 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர பரிந்துரைத்ததுடன் ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தடுப்பதற்கான சில பொறுப்புகள் அந்ந நிறுவனங்கள் செயற்படும் நாடுகளிடமும் உள்ளது என்று கூறியது. “ஆள் கடத்தல் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஓமான் விசாரிக்கிறது” என்று அந்தக் குழு கூறியது. கொழும்பில் உள்ள ஓமான் தூதரகம், “பாதிக்கப்படக்கூடிய நபர்கள் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை சகித்துக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ள இந்த சூழ்நிலையின் தீவிரத்தை ஒப்புக்கொள்கிறோம்” என்று கூறியது.
வெளிநாட்டில் வழக்கு
செல்வரூபன் பயணித்த விமானம் ஓமானில் தரையிறங்கியபோது, கடத்தல்காரர்கள் அவளையும் இன்னும் நான்கு பெண்களையும் சோஹார் என்ற நகருக்கு வாகனத்தி்ல் கூட்டிச் சென்றதை அவள் நினைவு கூர்ந்தாள். பெண்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்து, ஒரு தங்கும் விடுதி்யைக் காண்பித்தனர். அதில் ஒரு சிறிய ஜன்னல், இணைக்கப்பட்ட குளியலறை இருந்தது, ஏற்கனவே நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 45 பெண்கள் தங்கியிருந்ததாக செல்வரூபன் கூறுகிறார். அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை சோறு மற்றும் பட்டாணிக் கடலை வழங்கப்பட்டது.
“நாங்கள் நியூஸ் பேப்பரை தரையில விரிச்சி, ஒன்றாக படுத்துக் கொண்டோம்,” என்று அவள் கூறுகிறாள். “குளிக்கிறது மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்த நாங்கள் ஒரு வரிசையில் காத்திருப்போம்.”
சில பெண்கள் செல்வரூபனிடம் ஆறு மாதங்களாக இருப்பதாகக் கூறினார்கள். மற்றவர்கள் இலங்கையை விட்டு வெளியேறிய முடிவைப் பற்றிப் புலம்பினார்கள். செல்வரூபன் தன் மகள்களை நினைத்துக் கதறி அழுதார்.
“நான் செத்திட்டன் என்டு நினைச்சன்.,” என்று அவள் நினைவு கூர்ந்தார்.
முகவர் நிலையம் அவளுக்கு 200,000 ரூபாய் (673 டாலர்கள்) பணத்தைக் கட்டணமாக நிர்ணயித்தது. அவள் 20 நாட்களுக்குப் பிறகு மூன்று பேர் கொண்ட குடும்பத்தால் பணியமர்த்தப்பட்டாள் – ஆனால் அவள் வேறு மதத்தைப் பின்பற்றுகிறாள் என்று தெரிந்தவுடன் அவள் விரைவாக நீக்கப்பட்டாள் என்று செல்வரூபன் கூறுகிறார்.
பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அவள் வேறு ஒரு குடும்பத்தில் வேலைக்குச் சேர்ந்தள். அங்கு அக்குடும்பத்தின் 5 வயது சிறுமி குத்தியதாகவும், உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவள் கூறுகிறாள். செல்வரூபனின் தலையில் தண்ணீர் மற்றும் நிலத்தைத் துப்புறவு செய்யும் இரசாயன திரவத்தை சிறுமி ஊற்றியதையடுத்து, வேலையை விட்டு மீண்டும் ஏஜென்சிக்குத் திரும்பினாள்.
வேலை தேடிக் கொடுக்கும் ஓமானியப் பெண் கோபமடைந்து செல்வரூபனை கன்னத்தில் அறைந்ததுடன் தாக்கியதாக அவள் கூறுகிறார். அந்தப் பெண், தமிழ்ப் பெண்கள் பெருமைக்குரியதாகக் கருதும் தன் நீண்ட தலைமுடியைப் பிடித்து அறுத்துவிட்டதாக அவள் கூறுகிறாள்.
“அவளைப் பார்த்தாலே எனக்கு நடுக்கம் வந்தது. அவள் ஒரு பொல்லாத பேய்,” என்று செல்வரூபன் நினைவு கூர்ந்தார்.
அடுத்த மாதம், செல்வரூபன் ஓமானில் அவருக்கு வேலை தேடிய முகவரின் குடும்பத்திற்குச் சம்பளமின்றி வேலை செய்ய வைக்கப்பட்டார். பின்னர் அவர் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் 20 நாட்கள் பணியமர்த்தப்படாமல் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.
கடனில் சிக்கித் தவிப்பு
மற்ற பெண்களும் இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டில், நடராஜ்கண்ணா, களங்கத்திற்கு பயந்து தன் கடைசி பெயரால் மட்டுமே அடையாளம் காண விரும்புகிறாள், வவுனியாவில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் மாதம் 60,000 ரூபாய் (202 டாலர்) சம்பளத்திற்கு வேலை செய்தார். ஆனால் 700,000 ரூபாய் (2,357 டாலர்கள்) கடனில் இருந்த அவரது குடும்பத்திற்கு அது போதுமானதாக இல்லை.
உள்ளூர் ஆட்சேர்ப்பு செய்பவரை அணுகி, துபாய் செல்ல உதவுமாறு கேட்டாள். ஆனால் விமான நிலையத்தில், ஆட்சேர்ப்பு செய்பவர் துபாய்க்குப் பதிலாக பார்வையாளர் விசாவில் ஓமானுக்குச் செல்லுமாறு கூறினார்.
நடராஜ்கண்ணாவை 500 ஓமான் ரியால்கள் (1,300 டாலர்கள்) தருவதாகக் கூறி ஓமான் பெண் ஒருவர் வேலைக்கு அமர்த்தினார். அவள் குழந்தையைப் பார்த்து, சமைத்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைச் சுத்தம் செய்து, அதிகாலை 3 மணி வரை விழித்திருந்து வேலை செய்ததை அவள் நினைவு கூர்ந்தாள். ஆனால் மாத இறுதியில், அவள் இலங்கையில் சம்பாதித்த அதே தொகையே அவளுக்குக் கிடைத்தது.
அவள் வேலையை விட்டு விலகிய பின்னர், ஆட்சேர்ப்பு செய்பவரின் அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டாள். அங்கு பணியில் இருந்த முகவர் அவளை அச்சுறுத்தியதாக அவர் கூறுகிறார்.
“உன்னை ஓமனுக்கு எடுக்க நான் 1.5 மில்லியன் ரூபாய் குடுத்தது எனக்கு நஷ்டம்,” என்று அந்த மனிதன் சொன்னதை அவள் நினைவு கூர்ந்தாள். “நீ நாட்டுக்கு போகனும் எண்டா, நீ 600,000 ரூபா தர வேணும். இல்லாட்டி நான் உன்னை ஒரு விபச்சார விடுதிக்கு விற்றுவிடுவேன்.”
அவரது கணவர் கடன் வாங்கி வவுனியாவில் உள்ள உள்ளூர் ஆட்சேர்ப்பாளரிடம் பணம் கொடுத்தார். அவர் ஜனவரி 2023 இல் வீடு திரும்பினார், இப்போது மீண்டும் ஆடைத் தொழிற்சாலைக்கு செல்வதுடன் ஒரு பண்ணையில் சிறிய வேலைகளையும் செய்து வருகிறார். அவர் வேலைக்குப் புலம்பெயர்ந்ததால் அவரது குடும்பத்தின் கடன் 1.3 மில்லியன் ரூபாயாக (4,377 டாலர்கள்) உயர்ந்துள்ளது.
“இனி நான் வேலைக்கு வெளிநாட்டிற்கு போக மாட்டேன்,” என்று அவள் கூறுகிறாள்.
அங்கீகரிக்கப்பட்ட இடம்பெயர்வு
குளோபல் பிரஸ் ஜேர்னல் உரையாடிய ஆறு பெண்களில் மோகன்ராஜ், களங்கத்திற்கு பயந்து தன் கடைசி பெயரால் மட்டுமே அடையாளம் காண விரும்புகிறாள், மட்டுமே சட்டப்பூர்வமாக வெளிநாடு சென்றவர். ஆனால் அவளும், வெளிநாட்டில் தங்கியிருந்த போது ஏற்பட்ட கஷ்டத்தை நினைவு கூறினாள். ஆனால் மற்றவர்களைப் போலல்லாமல், அவளுக்கு ஓமானுக்கான இலங்கைத் தூதரகத்தை நாடக்கூடியதாக இருந்தது.
மோகன்ராஜ் குவைத் செல்வதற்குக் கோரினார், ஆனால் ஏப்ரல் 2022 இல், ஆட்சேர்ப்பாளர் அவளை ஓமானுக்கு அனுப்பினார்.
ஆறு முதலாளிகள் தன்னைச் சுரண்டியதால் அல்லது கூலி கொடுக்காததால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓமானி தலைநகர் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு இல்லத்தில் தான் தஞ்சமடைந்ததாக அவள் கூறுகிறாள். பாதுகாப்பு இல்லங்கள் பதிவு செய்யப்பட்ட பெண் புலம்பெயர்ந்தோருக்கு தஞ்சம் கொடுக்குமிடமாகும்; சட்டவிரோதமாக புலம்பெயரும் பெண்கள் அவற்றை அணுக முடியாது.
ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லம், உணவு சமைக்க போதுமான மளிகைப் பொருட்கள் கூட இல்லாமல் மோசமாக இருந்ததாக மோகன்ராஜ் கூறினார்.
அவளை வீட்டிற்கு அனுப்பும் திட்டம் எதுவும் தூதரகத்திற்கு இருக்கவில்லை என்றாள் மோகன்ராஜ். மூன்று மாத காத்திருப்புக்குப் பிறகு, தூதரகத்திற்கு வெளியே எதிர்ப்புத் தெரிவித்து, தாயகம் திரும்பக் கோரும் பாதுகாப்பு இல்லத்தைச் சேர்ந்த சில பெண்களுடன் அவளும் இணைந்தாள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஓமான் போலீசார் கைது செய்தனர். ஓமான் அரசாங்கம் அவளை ஜூலையில் நாடு கடத்தும் வரை அவள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக மோகன்ராஜ் கூறினாள்.
கைது செய்யப்பட்ட பெண்கள் குறித்து ஓமானில் உள்ள இலங்கைத் தூதுவர் ஓமான் அதிகாரிகளுடன் “தொடர்ந்து தொடர்பிலிருந்ததாக“ இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் பாலசூரிய தெரிவித்தார். “ஆனால் அவர்கள் (ஓமான்) எங்களுக்காக தங்கள் விதிகளை மாற்றுவார்கள் என்று அர்த்தமல்ல,” என்று அவர் கூறியதுடன் ஓமானுக்கான இலங்கைத் தூதரால் அபராதத்தைத் தள்ளுபடி செய்ய முடிந்தது என்று கூறினார்.
சட்டவிரோதமாக குடியேறும் அனைத்து பெண்களையும் நாட்டிற்குத் திருப்பி அனுப்ப தூதரகத்திடம் நிதி இல்லை என்றும், எளிதாக திருப்பி அனுப்புவது சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் ஆட்கடத்தலை அதிகரிக்கும் என்றும் பாலசூரிய கூறுகிறார். “ஒரு நாட்டுக்கு சட்டவிரோதமாகச் சென்றால், அந்த நாட்டிலிருந்து இலங்கைக்கு அரசாங்கம் அவர்களுக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் வகையில் ஏதாவது ஒரு காப்புறுதி இருப்பதாக மக்கள் நினைப்பார்கள்,” என்று அவர் கூறினார்.
தமது அரசசார்பற்ற நிறுவனமான ரஹாமா மனித வியாபாரத்தை குறைப்பதற்காக, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அறிவூட்டுவதற்காக அரசஅதிகாரிகள் சமூகமட்ட அமைப்புகளின்உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடுகளில் சுரண்டப்பட்ட பெண்கள், போன்றோரை உள்ளடக்கி 198 மனித வியாபார எதிர்ப்பு குழுக்களை உருவாக்கியுள்ளது என்கிறார் மரிக்கார்
ஆனால், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஆட்சேர்ப்பு செய்பவர்கள் மூலம் செல்வதன் ஆபத்துக்களை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என வவுனியா மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கூறுகிறார்.
“மக்களுக்கு நிதானமாக யோசிக்க நேரமில்லை,” என்று கூறினார். உள்நாட்டில் வேலை இல்லை, வெளிநாடு சென்று, விரைவா வேலை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.”
வீடு திரும்பல்
செல்வரூபனின் குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து வர கடுமையாக போராடினர். அவரது சகோதரிகளும் தாயும் செட்டிகுளத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையை அணுகினர். காவலர்கள் முகவரை வரவழைத்ததுடன் செல்வரூபனின் குடும்பத்தாரிடம் விமானம் மூலம் வீட்டிற்கு வருவதற்கான பணத்தை வழங்குமாறும் கேட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்பதால் பெயர் குறிப்பிட விரும்பாத செட்டிகுளம் காவல்துறையை சேர்ந்த ஒருவர், பொதுவாக தவறு செய்ததற்கு நிரூபிக்கக்கூடிய ஆதாரம் இல்லாத நிலையில் இதுபோன்ற வழக்குகளை கையாள்வது சவாலானது என்று கூறினார்.
செல்வரூபனின் கணவர் உள்ளூர் வட்டிக்காரர்களிடம் இருந்து 160,000 ரூபாய் (539 டாலர்கள்) கடனாகப் பெற்றார். அவர்களின் மொத்தக் கடன் 530,000 ரூபாயாக (1,784 டாலர்கள்) அதிகரித்தது.
முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு செல்வரூபன் நாடு திரும்பினார்.
“எனக்கு நிம்மதியாக இருந்திச்சு, நான் உயிருடன் திரும்பி வந்து என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தேன்.” எனக் கூறினாள்.