செட்டிகுளம், இலங்கை – ஒரு அழகான மாலைப் பொழுது, சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு, முத்துசாமி செல்வரேத்தினம் தனது வீட்டின் முன் உள்ள தோட்டத்தில் போஞ்சி கொடிகளுக்கிடையில் களையை Mbf;fb பிடுங்கியபடியும் கொடிகளை கொழுகொம்பில் சுற்றிய வண்ணமாக மும்முரமாக வேலையாக இருக்கிறார்.
செல்வரெத்தினம் மூன்று தசாப்தங்களாக இந்த பிராந்தியத்தில் போஞ்சி, தானிய வகைகள் மற்றும் காய்கறிகளை வளர்த்து வந்துள்ளதாக கூறுகிறார். ஆனால் சமீபத்தில், இலங்கையின் இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பரவலான நீர் பற்றாக்குறை அவரது வேலையை கடினமாக்கியுள்ளது.
செல்வரெத்தினம் மேலும் கூறுகையில், இப்பகுதியில் ஆண்டு முழுவதும் அடிக்கடி பலத்த மழை பெய்யும். “நாங்கள் எந்த நேரத்திலும் பயிரிடலாம்,” “இப்போது, மழை குறைவாக இருப்பதால், மழைக்காலங்களில் மட்டுமே பயிரிடுகிறோம்.”
மேலும் சிறு போகப் பருவம் முழுவதும் வறட்சி காரணமாக – மே முதல் ஆகஸ்ட் வரையிலான வறட்சி காலம் – அவரது 1 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட நிலக்கடலை பாதி விளைச்சலையே தந்தாக செல்வரெத்தினம் கூறினார்.
செல்வரெத்தினம் மழைக்காலங்களில் தனது கிணற்றுக்குள் ஊறும் சிறிய அளவிலான தண்ணீரை காலையிலும் மாலையிலும் தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தனது பயிர்களுக்கு அதிக நீரைப் பாவிப்பதற்காக அவர் தனது வீட்டின் கிணற்று நீரைக் கட்டுப்பாடுடன் பாவிக்கிறார். ஆனாலும், அது போதாமையால் தேவையான அளவு நீரைப் பாய்ச்ச இயலாது போராடுகிறார். சில நேரங்களில் அவர் தனது அயலவர்களின் கிணறுகளில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்படுகிறார். பிரதியுபகாரமாக காய்கறிகள் மற்றும் நிலக்கடலைகளை அவ்வப்போது பரிசாக அளித்து நன்றி கூறுகிறார்.
‘முன்பு எங்களுக்கு குளத்தில் தண்ணீர் இருந்தது, இதன் காரணமாக கிணறுகளுக்கு போதுமான தண்ணீர் இருந்தது. இப்போது குளமே வறண்டுவிட்டது, எனவே கிணற்றில் தண்ணீர் எப்படி இருக்கும்? பயிரிடுவது எப்படி? ‘என்கிறார் செல்வரெத்தினம் விரக்தியுடன். ‘அது கஷ்ட்டம்.’
அக்டோபர் 2019 க்குள், நாடு முழுவதும் 634,081 மக்களும், வவுனியாவில் 2,654 மக்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
பிரதேச செயலகங்கள் மக்களுக்குத் தேவையான குடிநீரை வழங்குகிறது. ஆனால் விவசாயிகளுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதில்லை. வறட்சிக் காலங்களில், மாவட்டத்தில் சுமார் 1,000 குடும்பங்களுக்கு குடிநீர் கிடைத்ததாக உள்ளூர் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வளர்ந்து வரும் தனியார் நீர் வர்த்தகம் இப்பகுதியில் முளைத்துள்ளது, சில தனிநபர்கள் நெல் வயல்களுக்கு நெருக்கமான வீடுகளிலிருந்து தண்ணீர் அதிகமாக இருப்பதால், அவர்களிடமிருந்து வாங்குகிறார்கள்.
நடராசா சாந்தமூர்த்தி தனது வருமானத்தை விவசாயத்திலிருந்தே ஈட்டிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் விற்பனை செய்வதாக கூறுகிறார்.
தற்போது, சாந்தமூர்த்தி 200 முதல் 400 இலங்கை ரூபாய்க்கு ($1-$2) 5,000 லிட்டர் (1,1320 கேலன்) தண்ணீரை வாங்குகிறார். பின்னர் அவர் தண்ணீர் தேவைப்படும் மக்களுக்கு 700 முதல் 1,500 ரூபாய்க்கு ($4- $8) விற்கிறார்.
இந்த வியாபாரம் நிலையானது அல்ல. எந்த நேரத்திலும், அவருக்கு நான்கு முதல் 50 வாடிக்கையாளர்கள் வரை எங்கும் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களை நம்பி இருக்க முடியாது எனக் கூறுகிறார்.
‘நீரை வழங்க 7-8 கிலோமீட்டர் (5 மைல்) பயணம் செய்த பிறகு , (வாடிக்கையாளர்கள்) நாங்கள் அதை வேறு இடத்திலிருந்து வாங்கினோம், ‘என்று கூறுவார்கள். ‘சில நேரங்களில் எனக்கு மிகவும் கோபம் வரும்.’
சிறுபோக காலத்தில் நெல் வயல்களில் தீவிர நெல் சாகுபடி, நீர் வளம் குறைந்து வருவதற்கு ஓரளவு காரணம் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கட்டடப் பொறியியற் துறையின் மேலாளர் சிவகுமார் சுப்பிரமணியம் கூறுகிறார்.
வவுனியா மாவட்டத்தில 2019ம் ஆண்டில் சிறுபோக காலப்பகுதியில் நெல் சாகுபடிக்கு 1,519 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பயறு வகைகள், போஞ்சி அல்லது மாம்பழம் போன்ற குறைந்த நீர் தேவைப்படும் தானியங்கள் மற்றும் பயிர்களுக்கு மாறுவதை விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுப்பிரமணியம் கூறுகிறார்.
பயிர்களை மாற்றுவதை விட, சில விவசாயிகள் தங்களுக்கு பொருத்தமான முறைகளைத் தழுவியுள்ளனர்.
60 வயதான குணசேகரம் ஆரியஸ்ரீ தனது 13 வயதிலிருந்து இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், நீர் இழப்பைக் குறைக்க சொட்டு நீர் பாசனத்திற்கு மாறியதாக அவர் கூறுகிறார். ஒரு புதிய நீர்ப்பாசன முறைமையில் 400,000 ரூபாய் ($2,200) முதலீடு செய்த பிறகு, முன்னர் அரை ஏக்கர் நிலத்திற்கு மாத்திரமே நீர் பாய்ச்சிய அவரால், தற்போது சிறு போக பருவத்தில் 2 ஏக்கர் நிலத்திற்கு நீர் பாய்ச்சமுடிகிறது.
“இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் 15 அடி ஆழத்தில் கிணற்றில் தண்ணீர் இருந்தது. இப்போது, 32 அடிக்கு மேல் ஆழத்தில் தரையைத் தோண்டினாலும், தண்ணீரைப் பார்க்க முடியாது,” என்று அவர் கூறுகிறார்.
இலங்கை அரசாங்கம் வறட்சியின் விளைவுகளை எதிர்த்து, கைவிடப்பட்ட குளங்களை மீட்டெடுத்து, அவற்றின் ஆழத்தை அதிகரிப்பதுடன், ஐ.நா.வின் ஆதரவில் இயங்கும் பசுமை காலநிலை நிதியத்தின் உதவியுடன் கால்வாய்களை தோண்டுவதாகவும் வவுனியா விவசாய மேம்பாட்டுத் துறையின் உதவி மாவட்ட ஆணையாளர் ராஜரத்தினம் விஜயகுமார் கூறுகிறார்.
வறட்சி கடுமையாக இருந்தபோதிலும், தனது தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்று செல்வரெத்தினம் கூறுகிறார். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், அவர் தொடர்ந்து பயணிப்பார்.
‘நான் 30 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன்,’ என்று அவர் கூறுகிறார். ‘இது எனக்குத் தெரிந்த ஒரே வேலை. என்ன சவால்கள் இருந்தாலும் நான் தொடருவேன்.’
இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே.