செட்டிகுளம், இலங்கை – தங்கய்யா மகேஸ்வரன் சிறிய மலை போன்ற கோதுமை மாவைப் பிரித்து பாண் இறாத்தல்களை சுட ஆரம்பிக்கும் போது ஜன்னல்களில் அதிகாலை சூரிய ஒளிக்கதிர்கள் பாய்கிறன.
38 வயதான தங்கய்யா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான செட்டிகுளத்தில் மூன்று ஊழியர்களுடன் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் நிஷான் வெதுப்பகத்தை நடத்தி வருகிறார். நல்ல வியாபாரமுள்ள நேரங்களில் அவர்கள் ஒரு நாளைக்கு 120 கிலோகிராம் (265 இறாத்தல்கள்) மாவு மூலம் பாண், ஏனைய சிற்றுண்டிகள், ரஸ்க் மற்றும் கேக்குகள் தயாரிக்கித்து மாலைக்குள் 5,000 இலங்கை ரூபாயை ($15) சம்பாதிக்கிறார்கள்.
காலம் மாறிவிட்டது.
இலங்கையின் இரண்டு மிகப் பெரிய கோதுமை விநியோகஸ்தர்களான ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான மோதலுடன் உள்நாட்டின் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டும் சேர்ந்து மாவுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலை அதிகரிப்பு மற்றும் வெதுப்பகப் பொருட்களை வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வெதுப்பகங்களைக் கொண்ட ஒரு நாட்டில், வெப்பமண்டல காலநிலை காரணமாக கோதுமையை சொந்தமாக பயிர்செய்ய வழியில்லாமல், வெதுப்பக வியாபாரிளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிலைமை மோசமாகிவிட்டது.
உற்பத்தியைக் குறைக்கவும், ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், தனது மூன்று பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க முடியாத நிலையும் நிஷானின் விநியோக தொழிலை விரிவுபடுத்துவதற்காக ஜனவரியில் வாங்கிய 700,000 ரூபாய் ($2,090) முச்சக்கரவண்டிக்கு பணம் செலுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக தங்கய்யா கூறுகிறார்.
“இது எனக்கு ஒரு பெரிய இழப்பு,” என்று அவர் கூறுகிறார். “இங்க எல்லா பொருள்களும் விலை தொழிலும் இப்ப நட்டமா போகுது கடவுளே இந்நிலை தொடரக் கூடாது.”
கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் வெளிநாட்டு ஊழியர்காகப் பணிபுரிந்ந இலங்கையர்கள் தமது நாட்டுக்குத் திரும்பியதாலும், சுற்றுலாத் துறையில் சரிவு ஏற்பட்டதாலும் இலங்கை பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியது. இன்று இலங்கையர்கள் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையுடன் இணைந்த அதிக பணவீக்கத்துடனான போராட்டமும், பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலையும் வளர்ந்து வரும் அரசியல் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன.
உள்நாட்டு அமைதியின்மைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையின் அமைச்சரவை ஏப்ரல் 3 அன்று ராஜினாமா செய்தது; கருத்துத் தெரிவிக்க வர்த்தக அமைச்சை அணுக முடியவில்லை.
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய முக்கிய உணவான கோதுமை மாவின் விலை உயர்வு மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறையால் இலங்கை வெதுப்பக தொழிற்துறை இரட்டிப்பாக பாதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில், சர்வதேச வர்த்தக மையத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மிக அண்மையில் வெளிவந்த தரவுகளின்படி, இலங்கை தனது கோதுமை மற்றும் கோதுமை-கம்பு கலவையான மெஸ்லின் ஆகியவற்றின் 38% ரஷ்யாவிடமிருந்தும் 8% உக்ரைனிடமிருந்தும் பெற்றுள்ளது; இந்த கலவையை இறக்குமதி செய்ய $164.4 மில்லியன் செலவானது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இந்த விநியோகத்தை சீர்குலைத்ததால், இலங்கையில் மார்ச் மாதத்தில் 150 ரூபாயில் ($0.45) இருந்த ஒரு கிலோகிராம் மாவுக்கான விலை ஏப்ரலில் 270 ரூபாயாக ( $0.79) உயர்ந்தது. அதே நேரத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 80 ரூபாயில் ( $0.24) 150 ரூபாயாக ($0.44) உயர்ந்தது.
“பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்த நாள் முதல் நான் பாண் வாங்கவில்லை,” கைப்பைகளை தயாரித்து விற்கும் மூன்று குழந்தைகளின் தாயான ஜெயக்குமார் திலகவதி, 52 கூறுகிறார். “நான் இப்போது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சமைக்கிறேன்.”
அவரது குடும்பம் செலவுகளைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்த்து வருவதுடன் கோதுமைப் பொருட்களை விட உள்ளூரில் இலகுவாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும் அரிசியையே அதிகம் நம்பியிருப்பதாக அவர் கூறுகிறார்.
2021 ஆம் ஆண்டிலிருந்து தொழில்துறையின் மாவு விநியோகம் 40% குறைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட மாஸ்டர் வெதுப்பக சங்கத்தின் செயலாளர் கார்த்திகேசு பாஸ்கரன் உறுதிப்படுத்துகிறார்.
செட்டிகுளத்தில் உள்ள சுரேஸ் வெதுப்பகத்தின உரிமையாளர் தாசன் அசோக்குமார் கூறுகையில், கோதுமையின் விலை உயர்ந்து வரும் நிலையில், தனது மற்றும் தனது இரு ஊழியர்களின் தொழில்களைப் பாதுகாப்பதற்காக உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தவும், உற்பத்தியைக் குறைக்கவும் முயற்சித்ததாகக் கூறுகிறார். ஆனால் ஏப்ரல் 4 ஆம் தேதி, 15 ஆண்டுகளாக நடாத்தி வந்த வெதுப்பக தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான கடுமையான முடிவை அவர் எடுத்தார். கோதுமை விலை நிலையான நிலைக்குத் திரும்பும் வரை தனது குடும்பத்தைக் காப்பாற்ற வாழ்வாதாரத்திற்காக ஏழு ஆடுகளை வாங்க தனது குறைந்து வரும் சேமிப்பைப் பயன்படுத்தினார்.
சுரேஸ் வெதுப்பகத்தில் வேலையை இழந்த நிலையில், காளிமுத்து விக்னேஸ்வரன், 36, கிடைக்கும் அனைத்து தினக்கூலி வேலைகளையும் செய்துவருகிறார்.
“எனது மூன்று பிள்ளைகளுக்கும் சாப்பாடு கொடுப்பதற்கு உழைககிறதே பெரிய கஸ்டமா இருக்கு,” என்று அவர் கூறுகிறார். ““ஒரு நாளைக்கு வேலை கிடைக்கும் ஒரு நாளைக்கு வேலை கிடைக்காது.”
இலங்கையில் ஏற்கனவே “மக்கள் வேதனையான காலகட்டத்தை” அனுபவித்து வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது, என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த பொருளாதார பேராசிரியர் முருகேசு கணேசமூர்த்தி கூறுகிறார்.
“ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தவும், பொருட்களின் விலைகளை உயர்த்தவும் வாய்ப்புள்ளது” என்று முருகேசு கூறுகிறார்.
ரஷ்யாவிற்கு எதிரான உலகளாவிய பொருளாதாரத் தடை தற்போதுள்ள நெருக்கடியை மோசமாக்கும் எனவும், குறிப்பாக ரஷ்யா இலங்கையில் இருந்து தேயிலை மற்றும் பெண்கள் ஆடைகளின் இறக்குமதியை குறைத்து, நாட்டின் கடற்கரைகள் மற்றும் காடுகளில் இருந்து தனது சுற்றுலாப் பயணிகளை நிறுத்துவதன் மூலம் நிலைமை மோசமடையலாம் என அவர் கூறுகிறார்.
உலக மற்றும் தேசிய நிலைமை தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலையில், தங்கய்யா தனது வெதுப்பகத்தின் கதவுகளைத் திறந்து வைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.
“என்ற பேக்கறியை மூடுவதால எனக்கும் எனது பணியாளர்களுக்கும் தொழில் இல்லாம போயிரும்,” என்று அவர் கூறுகிறார். ” எனக்கு வேற தொழில் தெரியாது.”
தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்புக் குறிப்பு
லோஹித் குமார், ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை தமிழிலிருந்து மொழிபெயர்த்தார்.