தொடர்வடிவங்கள் வவுனியா, இலங்கை – தனது கைவேலைப்பாட்டு மூலம் அலங்கரிக்கப்பட்ட துணிகளை அணிவதில் உள்ள மந்திரத்தில் நம்பிக்கை கொண்டவராக சித்ரா செல்லத்துரை உள்ளார். துணியின் மீது மெழுகு மற்றும் சாயத்தை பயன்படுத்தி நுட்பமான வடிவமைப்புகளை உருவாக்கும் பத்திக் உருவாக்க தொடர் செயன்முறையில் அவரை வசீகரிக்கும் பகுதியாக இது அமைந்துள்ளது.
”இது எனக்கு பிடிச்ச வேலை. படம் வரையிரது எனக்கு எப்பவும் பிடிக்கும்,“ எனக் கூறுகின்றார் அவர்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு தொழிற்துறைகள் அமைச்சு பத்திக் உருவாக்கம் பற்றிய பயிற்சிப் பாடநெறிகளை நடத்திய போது பத்திக் துணிகளை எவ்வாறு உருவாக்குவது என சித்ரா கற்றுக் கொண்டார். கடந்த ஏழு வருடங்களாக, தனது குடும்பத்தாருடன் இணைந்து அவர் பத்திக் துணிகளை உருவாக்கி வருவதுடன் அவர் வாழும் இடமான வவுனியா மாவட்டத்தின் சமயபுரத்தில் ஒரு சிறிய துணிக்கடையையும் நடத்தி வருகின்றார்.
பல நூற்றாண்டுகள் தொன்மை மிக்க இக்கலை மீது அவர் கொண்டுள்ள விருப்புக்கு மத்தியிலும், 2022 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. 2022 ஆம் ஆண்டு, பாரிய கடன் சுமை, அந்நியச் செலாவணி வீழ்ச்சி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பின்னரான தாக்கங்கள், அத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே வெடித்த யுத்தம் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட காரணிகளின் காரணமாக பல தசாப்த காலங்களாக இலங்கை ஒரு போதும் சந்தித்திராத மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.
இந்த பொருளாதார நெருக்கடி வாழ்க்கைச் செலவை அதிகரித்தது மாத்திரமன்றி உற்பத்தித் துறைக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியது. இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களில் முழுமையாக தங்கியிருக்கும் தொழிற் துறைகள் இறக்குமதிகளுக்கான அதியுயர் செலவு மற்றும் அதன் நிலையற்ற தன்மை காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டன, என்கிறார் வவுனியா பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான ரவீந்திரகுமாரன் நவரட்ணம். இதன் விளைவாக, உற்பத்திச் செலவு அதிகரித்ததுடன் உற்பத்தியின் அளவு குறைவடைந்தது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு ஏற்ப, இலங்கையின் தொழிற்துறை உற்பத்தி நவம்பர் 2021 உடன் ஒப்பிடும் வேளை நவம்பர் 2022 இல் 23.9% ஆல் வீழ்ச்சி அடைந்தது. இலங்கையின் ஆடைத் தொழிற்துறை இந்த அதிர்ச்சியினால் மிகவும் தாக்கமடைந்தது. நவம்பர் 2021 மற்றும் நவம்பர் 2022 இடையான காலப்பகுதியில் இத்துறையின் உற்பத்தி 56.2% ஆல் குறைவடைந்தது.
மூலப் பொருட்களுக்கான உயர் செலவை இந்த வீழ்ச்சிக்கான காரணமாகக் கூறுகின்றார் சித்ரா செல்லத்துரை. பத்திக் துணி உருவாக்கத்தை தொடர்வதற்கு அவர் அதிகமாக செலவிட வேண்டிய நிலை காணப்பட்டது. மே 2022 இல், 1 கிலோகிராம் மெழுகைக் கொள்வனவு செய்ய சித்ரா 800 இலங்கை ரூபாய்களை (கிட்டத்தட்ட 3 அமெரிக்க டொலர்கள்) செலவிட வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது அதன் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக மாறியுள்ளது. 250 ரூபாய்களாக (அமெரிக்க டொலரில் கிட்டத்தட்ட 80 சதங்கள்) இருந்த 1 மீட்டர் துணியின் விலையும் தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, சித்ரா செல்லத்துரை மற்றும் ஏனைய பத்திக் உற்பத்தியாளர்கள் உற்பத்தியினைக் குறைத்து தமது உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது, இதனால் ஒரு சிலர் மாத்திரமே பத்திக் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நிலை உருவாகியதுடன் விற்பனையும் பாதிக்கப்பட்டது. இந்நிலை காரணமாக அவர்களின் வருமானம் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார நெருக்கடிக்கு முன்னர், சித்ராவினால் மாதமொன்றுக்கு 50,000 ரூபாய்களை (163 அமெரிக்க டொலர்கள்) வருமானமாக ஈட்ட முடிந்தது. தற்போது அவரால் அத்தொகையின் கால்வாசியையே வருமானமாக பெற முடிகின்றது. இத்தொகை அவரின் மகனுக்கான ஆதரவுகளை வழங்குவதற்கு கூட போதுமானதாக இல்லை.
19 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்த காலநித்துவ அதிகாரிகளால் இலங்கைக்கு பத்திக் கலை அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் மேற்குடி மக்களின் பொழுது போக்கு அம்சமாகக் காணப்பட்ட இக்கலை பின்னர் கைவினைக் கலைஞர் வகுப்புகளைச் சேர்ந்த மக்களிடையேயும் பரவலடைந்தது. திரையோவியங்கள், பிராந்தியங்களுக்கான கொடிகள் மற்றும் பாரம்பரிய ஆடைகளை உருவாக்க அவர்கள் இக்கலையைப் பயன்படுத்தினர்.
1970 களின் இறுதிக் காலப்பகுதி வரை பெரும்பாலும் இக்கலை ஒரு சிறிய அலகு தொழிற் துறையாகவே காணப்பட்டது. இக்கால கட்டத்தில் இலங்கையின் சுற்றுலாக் கலாச்சாரம் வளர்ச்சியடைந்த பொழுது பத்திக் உருவாக்கம் உள்ளடங்கலாக உள்ளூர் கைவினை உற்பத்திகளுக்கு இலங்கை ஒரு உந்து சக்தியை வழங்கியது. அரசாங்கத்தின் பல்வேறுபட்ட முகவர் அமைப்புகளின் ஊடாக வழங்கப்பட்ட ஆதரவு பத்திக் கலைஞர்களின் தலைமுறை ஒன்றை புதிய வடிவங்கள் மற்றும் உத்திகளை உருவாக்கவும் அவற்றை பரீட்சிக்கவும் ஊக்குவித்தது. தற்காலத்தில், பத்திக் இலங்கையின் உள்ளூர் மரபுகளில் ஒன்றாக மாறியுள்ளதுடன் இதன் வடிவமைப்புகள் மற்றும் தொடர்வடிவங்கள் என்பன உள்ளூரில் மாத்திரமன்றி சர்வதேச சந்தைகளிலும் அங்கீகாரம் பெற்றனவாகத் திகழ்கின்றன.
அரசாங்கத்தில் பதிவு செய்த பத்திக் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை 327 ஆகக் காணப்படும் வேளை, பதிவு செய்யாத உற்பத்தியாளர்களையும் கருத்திற் கொள்ளும் வேளை உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை இதனிலும் உயர்வாக இருக்கும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மதிப்பீடு செய்கின்றது. இத்துறை கிட்டத்தட்ட 200,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் அதே வேளை அவர்களில் அதிகமானோர் பெண்களாவர்.
எவ்வாறாயினும், இந்த தொழிற்துறை அதற்குரிய சவால்களையும் கொண்டதாகவே உள்ளது. கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் (1983 – 2009) இத்தொழிற் துறையை முடக்கி விட்டதாக இந்தியக் கலைஞர் மற்றும் எழுத்தாளரான ப்ரீத்தி சம்யுக்தா கூறுகின்றார்.
இத்துறையை மீட்டெடுக்க அரசாங்கத்தினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் யுத்தம் இத்துறை மீது ஏற்படுத்திய சேதத்தை சரி செய்வதற்கு அவை அனைத்தும் போதாத நிலையே காணப்பட்டது. உள்ளூர் பத்திக் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கிலும் புதிய உற்பத்தியாளர்களை இத்துறையை நோக்கி கவர்ந்தெடுப்பதற்காகவும் ஏப்ரல் 2021 இல் அரசாங்கம் பத்திக் இறக்குமதியைத் தடை செய்தது. உள்ளூரில் ஆடை உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை விட்டுச் செல்லும் அந்நியச் செலாவணியின் அளவைக் குறைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது. 2021 இல், பத்திக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்திப் பொருட்கள் இராஜாங்க அமைச்சு கிட்டத்தட்ட 1,200 பத்திக் உற்பத்தியாளர்களைப் பயிற்றுவித்தது.
மேலதிகமாக, கைத்தறி நெசவு மற்றும் பத்திக் உள்ளடங்கலாக ஆடைத் தொழிற்துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கம் 2022 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1 பில்லியன் ரூபாய்களை (3.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒதுக்கியது.
இந்த முயற்சிகள் சிறிதளவு மீட்சியை ஏற்படுத்திய போதும், அவை முன்னெடுக்கப்பட்ட காலத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடி மிகச்சிறிதளவான மாற்றத்தை ஏற்படுத்தியது அல்லது எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை எனக் கூற முடியும், என்கிறார் சித்ரா செல்லத்துரை.
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான நிறுவனத்தினால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் மிக்க தொழிற்துறை தற்போதைய நெருக்கடியில் இருந்து மீட்சியடையாமல் போகலாம் என சிலர் கவலை கொள்கின்றனர். மூலப் பொருட்களுக்கான செலவை தாங்க முடியாத அல்லது இத்தொழிற்துறை மூலம் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத கைவினைக் கலைஞர்கள் ஏற்கனவே இத்தொழிற்துறையைக் கைவிட ஆரம்பித்துள்ளனர். உதாரணமாக, தேசிய அருங்கலைகள் பேரவையின் தகவல்களுக்கு ஏற்ப, 2021 ஆம் ஆண்டு வவுனியா மாவட்டத்தில் பத்திக் பயிற்சி பெற்ற 60 பெண்களில், 15 பேர் மாத்திரமே உற்பத்தியில் ஈடுபடுவதாகத் தெரிய வருகின்றது.
பத்திக் கலையை கைவிட்டவர்களில் ஒருவராக ஜெயலட்சுமி ராமசாமி உள்ளார். 43 வயது நிரம்பிய விதவையான அவரே தனது குடும்பத்தின் ஒரேயொரு வருமானமீட்டும் நபராக உள்ளார். மூலப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டதாக அவர் கூறுகின்றார். தனது இரண்டு பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக அவர் தற்போது ஒரு விவசாயத் தொழிலாளியாக வேலை செய்கின்றார்.
”சொந்த தொழில்ல இருந்திட்டு வெயில்ல போய் கூலி வேலை செய்யுறது கவலையான விடயம். பழையபடி பொருற்கள் விலை குறைஞ்சா தெழிலை தொடர்ந்து செய்வேன்,” என்கிறார் விஜயலட்சுமி.
கிருஷ்னன் சத்தியம்மாள் கடந்த 10 வருடங்களாக பத்திக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் அத்துடன் இந்த புராதனக் கலை அழிவடைந்து போய்விடும் என அவர் கவலை கொள்கின்றார். 60 வயது நிரம்பிய இவர் வவுனியா நகரில் பத்திக் தயாரிப்பினைக் கற்பித்து வருகின்றார். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னர் வரை, அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு பெண்கள் ஆர்வத்துடன் காணப்பட்டதாக அவர் கூறுகின்றார். எனினும், மூலப் பொருட்களின் விலை இவ்வாறாக அதிகரித்துள்ளதால் இந்நிலை மாற்றமடைந்து வருவதாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த நிலை தொடர்ந்தால், தற்போது பத்திக் தொழிலில் ஈடுபடுவோர் மாத்திரமே அந்த அறிவைக் கொண்டவர்களாக இருப்பர்.
பத்திக் துணித் துண்டு ஒன்றை உருவாக்குவதற்கு பல மணி நேரம் எடுக்கும், அது அழகானதாகவும் அணிவதற்கு சௌகரியமானதாகவும் காணப்படும், என்கிறார் ஒரு பத்திக் உற்பத்தியாளரான மலர்விழி சண்முகம். பொருளாதார சிரமங்களுக்கு மத்தியிலும் ஏதோ ஒரு வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி தொடர்ச்சியாக பத்திக் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சிலரில் ஒருவராக அவர் உள்ளார். தற்போது, கோரல்களை வழங்கும் வாடிக்கையாளர்களின் கேள்வியின் அடிப்படையில் மாத்திரம் அவர் பத்திக் துணிகளைத் தயாரிக்கின்றார்.
“மூலப் பொருள்கள் விலை கூடினதால முன்பு போல இப்ப இந்த தொழிலில் இலாபம் இல்லை. இவ்வேலை எனக்கு மன நிறைவையும் திருப்தியையும் தருது அதால தான் தொடர்ந்து செய்யுரன்,” என்கிறார் 53 வயது நிரம்பிய மலர்விழி சண்முகம். “அது ஒரு கண்ணீர் கதை”.
எனினும், அவர் பத்திக்கை விரும்பவதற்கு மேலதிக காரணங்களும் உள்ளன. ஒரு தாயாக, பத்திக்கின் சௌகரியத்துக்காக அவர் அதனை விரும்புகின்றார்.
“வீட்டில இருந்துக்கிட்டே வீட்டு வேலைகளையும் செய்யலாம், பிள்ளைகள வளர்க்கலாம் அதோட பணமும் உழைக்கலாம்” என்கிறார் அவர் “வெளிய போகத் தேவையில்லை”.
2022 ஆம் முதல் காலாண்டுக்கான அரசாங்கத் தரவுகளுக்கு ஏற்ப பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு 35.4% ஆகக் காணப்படும் நிலையில் அரசாங்கத்தின் ஒரு இடையீடு பெண்கள் மத்தியில் வறுமையை ஒழிக்க உதவும் விடயமாக அமையும். உற்பத்தித் துறையில் 24.8% ஆன பங்கேற்பு மாத்திரமே பெண்களால் வழங்கப்படுகின்றது.
”ஒரு நாடு பொருளாதார ரீதியாக முன்னேறிச் செல்ல உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும்,” என்கிறார் நவரட்ணம், சிறிய அளவுகளில் பத்திக் உற்பத்தியில் ஈடுபட்டு இழப்புகளைச் சந்தித்துள்ள பெண்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவ வேண்டும் என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
பத்திக் மற்றும் கைத்தறி உற்பத்திக்கு பொறுப்பான தொழிற்துறை அமைச்சின் கருத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு குளோபல் பிரஸ் பல தடவைகள் முயற்சித்த போதும் அவர்களிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இவ்விடயங்கள் அனைத்துக்கும் மத்தியிலும், சித்ரா தனது நம்பிக்கையைக் கைவிடவில்லை. ”எங்கட நாடு பழைய நிலைக்கு திரும்பனும் அதுதான் சந்தோசம்,” என்கிறார் அவர்.
அவ்வாறு பழைய நிலைக்கு திரும்பும் போது, தனது சிறிய பத்திக் கடையை இன்னும் விரிவாக்கி இரண்டு அல்லது மூன்று விதவைப் பெண்களுக்கு அங்கு வேலை வழங்க அவர் விரும்புகின்றார்.
“இந்தத் துறை வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது,” என அவர் கூறுகின்றார்.
தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்பு குறிப்பு
GPJ இன் அதீக் சம்சுதீன் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தார்.