கல்வியங்காடு, இலங்கை – இரத்தினசபாபதி பொன்னையா தனது வீட்டிலுள்ள மர அலுமாரிகளை திறந்து அரைத்த மூலிகைகளையும் இயற்கை எண்ணெய்களையும் அடைத்து வைத்துள்ள போத்தல்களை இறாக்கைகளிலிருந்து எடுக்கின்றார்.
கையில் போத்தல்களுடன், மேசையருகில் அமர்ந்து பெரிய புத்தகமொன்றை திறந்து ஒற்றைகளை திருப்பி அதிலுள்ள மூலிகை வைத்தியங்களும், நோய்களை குறித்த குறிப்புகளையும் மற்றும் மூலிகைச் செடிகளின் விளக்கப்படங்களையும் சில விடயங்களையும் தெரிந்து கொள்ளுவதற்காக தேடுகின்றார். சில பக்கங்கள் அவரது கையெழுத்தில் உள்ளன. ஏனையவை அச்சிடப்பட்டுள்ளன.
புத்தகத்திலுள்ள தகவல்கள் ஓரு காலத்தில் அதிகமாகவும் மற்றும் துல்லியமான விபரங்களுடனும் இருந்ததாக இலங்கையில் தற்போதும் பிரபலமாக உள்ள பல் நூற்றாண்டுகளாக பழமை வாய்ந்ததான பாரம்பரிய மூலிகை வைத்தியத்தை பின்பற்றும் ஆயள்வேத வைத்தியரான பொன்னையா கூறினார்.
சம்பந்தமான போன்று, பல குடும்பங்கள் காய்ந்த பனையில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் மூலமாக தமது மருத்துவ தொழிலின் இரகசியங்களை பல தலைமுறைகளுக்கு கையளித்து வந்தனர். கல்வியங்காட்டிலுள்ள தமது வீட்டில் பொன்னையா ,குறிப்பிட்ட ஆயள்வேத சிகிச்சைகளை குறித்த 50 முதல் 75 வரை தனித்தனியான ஆவணங்களை கொண்ட 50 கற்றை ஓலைச்சுவடிகளை வைத்திருந்தார். ஒரு கற்றை, எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளிப்பதை குறித்தும் மற்றுமொன்று இதயம் சம்பந்தான வியாதிகளுக்கான சிகிச்சைக்களுக்கான அறிவுறுத்தல்களையும் கொண்டிருந்தன. இரத்தக் கோளாறுகளுக்கான தனியான கற்றையும் இருந்தது.
அந்த ஓலைச்சுவடிகள் அவரது மிக மதிப்புமிக்க உடைமைகளாக இருந்தன.
ஆனால் ஒக்டோபர் 1995ல், பொன்னையா அவர்கள் வசித்த இடத்திற்கு சமீபமாக இலங்கையின் வடக்கில் நடந்த உள்நாட்டு போர் மோசமான நிலையை அடைந்து இலங்கை இராணுவம் யாழ் நகரை முற்றுகையிட்டது. 50 நாட்களாக, ஆயிரக்கணக்கான படையினர் அந் நகரை கனரக பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களினூடாக தாக்கினார்கள். படையினரின் ஆக்கிரமிப்பின் காரணமாக பொன்னையாவும் அவர் குடும்பத்தினரும் தம்மால் விரைவாக சேகரிக்க கூடிய பொருட்களுடன் தப்பியோடினார்கள் – உடைகள், பணம் மற்றும் நகைகள் ஆறு மாதங்களுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் திரும்பிய போது, அவர்களின் வீடு சூறையாடப்பட்டு இருந்ததுடன் பலத்த குண்டு தாக்குதலுக்கும் ஆளாகியிருந்தது.
‘முதலாவதாக நான் எனது அறையைப் பார்த்தேன்’ என பொன்னையா கூறுகின்றார். அந்;த அறையானது அவரது சிகிச்சை அளிக்கும் அறையாக பயன்படுத்தப்பட்டது. ‘இங்கே தான் நான் எனது சொத்தாக கருதும் ஓலைச்சுவடிகளை வைத்திருந்தேன்.’
ஆனால், அவர் அறையில் நுழைந்த வேளையில் தனது உடைந்த அலுமாரிகளுக்கு மத்தியில் ஓலைச்சுவடிகள் தீப்பிடித்தும் சிதறடிக்கப்பட்டும் இருந்ததை கண்டார். ஒற்றை அலுமாரி எந்த வித சேதமுமற்று இருந்தது. அதனுள், கிட்டத்தட்ட ஒவ்வொன்றும் 45 ஒலைச்சுவடிகளை கொண்ட மூன்று கட்டுகள் இருந்தன.
‘அறையிலிருந்த எல்லா ஓலைச்சுவடிகளையும் அதன் பெறுமதியை அறிந்தோ அல்லது அறியாமலோ இராணுவத்தினர் தீ மூட்டியிருந்தார்கள்’ என்கிறரார் அவர்.
யாழ். மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பனை ஓலைச்சுவடிகள் இழக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள அநேக குடும்பங்கள் தமது குடும்பப் பதிவுகள், தனிப்பட்ட ஜாதகங்கள், ஜோதிட விளக்கப்படங்கள் மற்றும் காணி உரிமைப் பத்திரங்கள் என அவர்களின் சொந்த ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருந்ததாக யாழ் பல்கழகத்தின் வரலாற்று பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராஜா கூறுகின்றார். அதே வேளையில் ஒலைச்சுவடிகள், இந்து மத முறைமைகளைம், புராணக் கதைகள் மற்றும் மந்திர முறைகள், யாழ்ப்பாணத்தின் சட்டங்கள் மற்றும் சட்ட ஆவணங்கள், வரலாற்று பதிவுகள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் கவிதைகளை உள்ளடக்கிய சமுதாயத்தை சார்ந்த தகவல்களை கொண்டவையாகும்.
அவைகள் எளிதாக உருவாக்கப்பட்டவை அல்ல.
ஓலைச்சுவடிகளாக பயன்படுத்த, பனையோலைகளின் வெளிப்புற இழை அடுக்குகளை அகற்றுவதற்காக முதலாவதாக வேக வைக்கப்பட வேண்டும். சூரிய வெப்பத்தில் அவை காய விடப்பட்ட பின்னர், ஓலைகள் ஒரே அளவில் வெட்டப்பட வேண்டும். விசேடமாக செய்யப்பட்ட எழுத்தாணி மற்றும் கறுப்பு மையினால் எழுதப்படுவதற்காக இயற்கை எண்ணேய்கள் பூசப்பட்டு பதப்படுத்தப்பட வேண்டும். இம் முழுச் செயல்முறையும் 10 முதல் 15 நாட்கள் வரை எடுக்கக் கூடும்.
ஓலைச்சுவடிகள் ஒரு குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டதும் ஒரு தலைமுறையிலிருந்து மறு தலைமுறைக்கு ஒப்படைக்கப்படுவதாகும் என கிருஷ்ணராஜா கூறுகின்றார்.
பல காணமற் போனலும் ஆயிரக்காணக்கானவைகள் யுத்த நிறைவுக்கு பின்னர் மக்கள் தமது வீடுகளை மீளக் கட்டும் போது கண்டுபிடிக்கப்பட்டன. சில சேதமடைந்திருந்ததாக கிருஷ்ணராஜா கூறுகின்றார். ஆனால், நல்ல நிலைமையில் காணப்பட்ட ஏனையவை, ஓலைச்சுவடிகளை காப்பாக வைத்திருப்பதற்கான விருப்பத்தை தூண்டின – அவை பொதிந்து வைத்திருந்த தகவல்களானது – மீண்டும் இழந்து போகமல் இருப்பதற்காக. ஆரத்தியா சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் கொக்குவிலுள்ள தனது சிறிய காரியாலயத்தில் மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்களாலான துப்புரவாக்கும் கரைசலில் தனது தூரிகையை அமிழ்த்தி அதை மென்மையாகா ஓலைச்சுவடிகளில் தடவி மேலெழும்பும் அழுக்குகளை பஞ்சினால் துடைக்கின்றார்.
சத்தியமூர்த்தி நூலக நிறுவனத்தில் கள ஆய்வாளராக பணியாற்றுகின்றார். நூலக நிறுவனமாது ஆன்லைன் டிஜிட்டல் நூலகமாக, இலங்கையின் தமிழ் மொழி ஆவணங்களை எண்ணிமயப்படுத்தவதன் மூலமாக பாதுகாக்கும் நிறுவனமாக செயற்படுகின்றது. 2005ல், இந் நிறுவனமானது அதன் உறுப்பினர்களை கிராமம் கிராமமாக அனுப்பி ஒலைச்சுவடிகளை குடும்பங்கள், கோயில்கள் மற்றும் நூலகங்களிலிருந்து சேகரித்தது.
ஓலைச்சுவடிகள் மிக மோசமான நிலைகளில் இருப்பதுடன் அவை பல விதமான அச்சுகளிலும், பூஞ்சை மற்றும் அடுக்கடுக்கான அழுக்குடனும் உள்ளவை என சத்தியமூர்த்தி கூறுகின்றார். சில ஓலைச்சுவடிகள் சில மணி நேரங்களில் சுத்தப்படுத்தப்படுகின்ற வேளையில் சிலவற்றை எண்ணிமயப்படுத்தப்படுத்துவதற்காக பல நாட்களை செலவழித்து சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. மற்றும் சுத்தப்படுத்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் குழுவினர் ஓலைச்சுவடிகளைத் தருவதற்கு இணங்க வைக்க வேண்டியுள்ளது.
ஆனால், அவர்களின் பணி பலனளித்துள்ளது.
2018ம் ஆண்டு ஆரம்பத்தில், ஐந்து உறுப்பினரைக் கொண்ட குழுவினர், சத்தியமூர்த்தி உள்ளடங்கலாக எண்ணிமயப்படுத்தும் பணியினை ஆரம்பித்தனர். அவ்வாண்டில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலிருந்து முப்பத்தையாயிரம் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டதாகவும் அவற்றில் 30,000 எண்ணிமயப்படுத்தப்பட்டதாகவும் சத்தியமுர்த்தி கூறுகின்றார்.
‘இந்த ஓலைச்சுவடிகள் 200 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டவை ஆதலால் எங்களது குழுவினர் ஓலைச்சுவடிகளை மிகக் கவனமாகக் கையாளுகின்றனர்,’ என அவர் கூறுகின்றார்.
பிரித்தானிய நூலகத்தின் ஆவணக்காப்பக செயல்முறை திட்டத்தின் நிதி உதவியுடன், இந் நிறுவனம் ஓலைச்சுவடிகள் காப்பக திட்டத்தை, பிரத்தியேகமாக குடும்பங்கள் மற்றும் சிறு குழுக்கள் வைத்திருந்த பனைஓலை சுவடிகளை சேகரிக்கவும், எண்ணிமயப்படுத்தவும் மற்றும் ஆன்லைனில் அணுகவும் 2018ல் ஆரம்பித்தது.
தமது பணியினை இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் செயற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக சத்தியமூர்த்தி கூறுகின்றார். அவர்களின் பணிகள் வளர்ச்சி அடையும் வேளையில் இன்னும் அதிகமான மக்கள் ஓலைச்சுவடிகளை எண்ணிமயப்படுத்த மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க தம்மிடம் கொண்டு வருவார்களென அவர் நம்பிக்கை வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட 115 கிலோமீற்றர்கள் (71 மைல்கள்) தொலைவில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில், 85 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற நெல் விவசாயி ஒருவர் ஒலைச்சுவடிகளை பாதுகாப்பதில், குறிப்பாக இந்து மத சூத்திரங்களை கொண்டவற்றை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளார்.
2009ல் யுத்தத்தின் இறுதி தருவாயில் நடைபெற்ற பாரிய குண்டு தாக்குதல்கள் நிமித்தமாக த.கோயிலார் சிவசாமியும் அவர் குடும்பத்தினரும் புதுக்குடியிருப்பிலுள்ள அவர்களது விட்டிலிருந்து வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள பல பகுதிகளுக்கு தப்பியோடிய பின்னர், இறுதியாக இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள வவுனியாவிலிருந்த அகதிகள் முகமமொன்றில் தங்கினர்.
கண்ணகை அம்மன் மற்றும் ஏனைய இந்து தெய்வங்களை குறித்த கதைகளையும், தேவர்களை குறித்து எழுதிய புகழ் பாக்களையும் மற்றும் புராணங்களையும் இதிகாசங்களையும் கொண்ட ஓலைச்சுவடிகளும் குடும்பத்தினருடைய ஜாதகங்கள் மற்றும் நில பதிவுகளை கொண்ட கிட்டத்தட்ட 150 ஓலைச்சுவடிகள் அவரிடமிருந்து காணமற் போனதாக மதிப்பிடுகின்றார். சில ஓலைச்சுவடிகள் அவருடையதாகவும் சில உறவினர்கள் மற்றும் கிராம வாசிகளிடமிருந்து சேகரித்தவைமாகும்.
2012ல் தனது கிராமத்திற்கு திரும்பிய பின்னர், சிவசாமி அவர்கள் காணமற் போன ஓலைச்சுவடிகளை மாற்றீடு செய்வதற்கும் கிராமத்தில் ஏதேனும் எஞ்சியிருக்கும் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதற்கும் பணியாற்றியுள்ளார். தமது கிராமத்திலுள்ளவர்களிடமிருந்து 20 ஓலைச்சுவடிகளை பெற்றுக் கொண்டுள்ளார். அவற்றில் பல ஜாதகங்கள். அவற்றை துப்புரவாக்கி, சிலதை திரும்பக் கொடுத்துள்ளார். சிலதை கிரமாவாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி தமது வீட்டில் பாதுகாத்து வைத்துள்ளார்.
2016ம் ஆண்டில் அவர் மீண்டும் கண்ணகை அம்மன் குறித்த வரலாறு மற்றும் கதைகளை தனது நினைவில் உள்ள வகையிலும் அவர் செல்லும் ஆலயத்தின் பூசாரி பல்வேறு நூல்களிலிருந்து நினைவு கூர்ந்து கூறும் சமய விரிவுரைகளையும் கொண்டு புதிய ஓலைச்சுவடிகளை எழுத ஆரம்பித்துள்ளார். 30 ஓலைச்சுவடிகளை எழுதியுள்ள அவர் இப் பணியினை வருட இறுதிக்குள் நிறைவு செய்ய முடியுமென நம்பிக்கை கொண்டுள்ளார்.
தனது கிராமத்தின் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினர் தெய்வத்தை குறித்த கதைகளை அறிந்து கொள்ளுவதை உறுதி செய்து கொள்ளும் முகமாக, ஓலைச்சுவடிகளை சிறிய நகரமான வற்றாப்பளையில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு தானம் செய்யப் போவதாக அவர் கூறுகின்றார்.
‘நாம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்திருந்தாலும், உதிக்கும் சூரியனை எம்மால் மாற்ற முடியுமா? அதே போன்று ஓலைச்சுவடிகள் என்பது எம்மில் ஊறிய விடயமொன்று’ என கூறுகின்றார். ‘இவை பழமையானவை என எங்களால் ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைக்க முடியாது.’
இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே.