பருத்தித்துறை, இலங்கை – வலிக்கண்டி வெண்மதி முன்பள்ளி நிலையத்தில் அது கற்பித்தலுக்கான நேரம் இல்லை. ஆனால், அதன் முற்றம் சில செயற்பாடுகளால் ஆரவாரமாக உள்ளது.
இளைஞர்கள் , உள்ளூர் சிறுவர்களுடன் அமர்ந்து, மண் மற்றும் மாட்டு சாணங்களை உருண்டையாக தமது அழுக்கான கைகளால் உருட்டுவதுடன் இன்னும் சிலர் விதைகளை பிரித்தெடுக்க, புளியம் காய்களை விரிவாக திறக்கிறார்கள். அமைப்பின் உறுப்பினர்கள் விதைகள் மற்றும் மண் கலவையை ஒன்றிணைத்து, அவற்றை உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைக்க விடுகிறார்கள்.
பந்து விளையாட்டு வீரர்களைப் போன்று அனைத்து ஆற்றலும் அவர்களிடம் உள்ளது, ஆனால் இந்தக் குழு வேறுபட்ட பணியில் உள்ளது. அவர்கள் விதைப்பந்துகளை உருவாக்குகிறார்கள், அவை காடழிக்கப்பட்ட பகுதிகளை சுதேச தாவரங்களுடன் மீண்டும் அடர்த்தியாக வளர்க்க உதவும். 2009 இல் முடிவடைந்த கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் வடக்குப் பகுதியையும் நாட்டின் பிற பகுதிகளையும் பொருளாதார ரீதியாக உருக்குலைத்தது. தொழில்துறை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஊக்குவித்தது. இது போன்ற குழுக்கள் சுற்றுச்சூழல் விளைவுகளை ஆக்கபூர்வமாக மாற்றியமைக்க முயற்சிக்கின்றன.
இச் செயற்பாட்டில் பங்கேற்கும் தன்னார்வலர்கள், பாடசாலை அமைந்துள்ள வலிகண்டி கிராமம் மற்றும் பருத்தித்துறை நகரம் மேலும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பசுமைச் சுவடுகள் என்ற அமைப்பின் அங்கத்தவர்களாவர்கள்.
பந்துகள் காய்ந்தவுடன், ஆர்வலர்கள் மற்றும் சிறுவர்கள், தாவர வளர்ச்சியை புகுத்தீடு செய்ய விரும்பும் பகுதிகளில் விதைப்பந்துகளை எறிவார்கள். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, பந்துகள் உடைந்து விதைகள் முளைத்து எழும்புகின்றன. பின்னர் மரங்கள் வளரத் தொடங்குகின்றன.
கொரோனா வைரஸ் பற்றிய கவலைகள் குழுக்களின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன, இருப்பினும், உறுப்பினர்கள் இப்போது வீட்டு தோட்டங்களுக்கு விதைகளை வழங்குகிறார்கள்
‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே எங்கள் விருப்பம், கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல, நடைமுறையிலும் கூட,’ என்கிறார் அமைப்பின் தன்னார்வ ஒருங்கிணைப்பாளரான சுசீந்திரகுமார் வசிகரன்.
நாட்டின் உள்நாட்டுப் போர் 2009ல் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் காடழிப்பு ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது, அதன் பின்னர் நகரங்கள் மற்றும் பண்ணைகள் அபிவிருத்தி செய்வதற்கும், சாலைகளை அகலப்படுத்துவதற்கும், தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் காடுகளை அழிக்க வேண்டிய பல மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்தது. அரசாங்கம் இப் பிரச்சினையை ஒப்புக்கொண்டு 2016ஆம் ஆண்டில், இலங்கை காலநிலை மாற்றம் குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்த வேளையில் தேசிய வனப்பகுதியை 29.7% முதல் 32% ஆக உயர்த்துவதாக உறுதியளித்தது.
சிறியதாக தோன்றக்கூடிய இந்த முயற்சி நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும். “விதை பந்து என்பது நாம் இழந்த இயற்கை சூழலை மீட்டெடுக்க வரவேற்கக்கூடிய ஒரு சிறிய நுட்பமாகும்” என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் பிரிவின் மூத்த விரிவுரையாளர் கபிலன் சுந்தரமூர்த்தி கூறுகிறார். “அழிக்கப்படும் பூர்வீக மரங்களை விதை பந்துகளால் காப்பாற்ற முடியும்.”
12 ஆர்வலர்களைக் கொண்ட பசுமைச் சுவடுகள், கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்வதிலும், பனை மரங்களை விதைப்பதிலும், பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து வெளியேற்றுதில் ஈடுபட்டுள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொது கலந்துரையாடல்களையும் நடத்துகிறார்கள்.
இந்த முயற்சியை அதிகாரிகள் ஆதரிக்கின்றனர். பருத்தித்துறை கிராம அதிகாரி கூறுகையில், “எங்கள் கிராமத்தில் மரங்களை வைத்திருக்க நான் அனுமதி அளித்துள்ளேன். “வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனை உருவாக்க இது எளிதான வழி என்று நான் நம்புகிறேன்.”
புளி போன்றே, வேப்பம், நாவல், மரமுந்திரி மற்றும் கொன்றல் போன்ற சுதேச அல்லது நன்கு உறுதியான தாவரங்களிலிருந்து விதைகளை ஆர்வலர்கள் பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் உள்நாட்டில் சேகரிக்கப்படக் கூடியவையும் அவை விதைக்கப்படும் இடங்களில் வளரக்கூடியவையும் ஆகும்.
‘நாங்கள் பேருந்தில் பயணிக்கும்போதும் கூட விதைப்பந்துகளை வீசலாம்’ என்று பசுமைச் சுவடுகளின் மற்றொரு ஆர்வலரான இராமகிருஸ்ண சர்மா கனநாதன் கூறுகிறார்.
வசிகரன் மற்றும் பிற ஆர்வலர்கள் இலங்கையின் இந்தப் பகுதியில் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்த விரும்புகிறார்கள். அதன் அர்த்தம், இன்னும் அதிக விதைப் பந்துகளை எறிவது என்பதாகும்.
‘நாம் இன்று விதைத்த விதைகள் நாளை முளைகளாக நம் கண்ணில் தெரியும்போது வருகின்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை’ என அவர் கூறுகிறார்.
இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி, ஜிபிஜே.