யாழ்ப்பாணம், இலங்கை – பருவ மழைக்காலத்தில், மதிவதனி சுபாஷ்கர் முழங்கால் அளவு தண்ணீரிலுள்ள ஒரு வீட்டில் குடும்ப வாழ்க்கையை நடத்துகிறார். “மழைக்காலங்களில் யாருமே எங்களைப் பார்க்க வரமாட்டார்கள்,” என்று அவர் கூறுகிறார். “மழைநீர் மட்டுமல்லாமல் கழிவு நீரும் எங்கள் பகுதிக்குள்ளேயே நுழைந்து மழைக்காலத்தில் வெள்ளம் எங்கள் வீடுகளை சூழ்ந்துவிடும்.”
சுபாஷ்கர் வட இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கடலோரப் புறநகர்ப் பகுதியான நாவாந்துறையில் உள்ள சாபிநகர் என்ற கிராமத்தில் 63 குடும்பங்களுடன் வசிக்கிறார். 2010 ஆம் ஆண்டு தனது வீட்டிற்குச் சென்றதிலிருநுது அவர் வெள்ளத்தை சமாளித்தாலும் இரு குழந்தைகளின் தாயான அவளுக்கு வெளியேறுவது ஒரு தேர்வல்ல. சுபாஷ்கர் அந்த நிலத்தை தனக்கு சொந்தமானதாக பொய் கூறிய ஒருவரிடமிருந்து வாங்கியதாக கூறுகிறார்.
நாவாந்துறையில் அத்துமீறல்காரர்களாக அரசாங்கம் கருதும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அவளும் அவளது குடும்பத்தினரும் தனியார் காணியில் வாழ்கின்றனர். அவர்கள் தற்காலிக கட்டிடங்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ஏனெனில் அவர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் போது அரசாங்க உதவிக்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அத்துடன் வலுவான பொருட்களால் அவற்றை மீண்டும் கட்டுவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சுபாஷ்கர் சாபிநகரில் பிறந்து வளர்ந்தார், ஆனால் உள்நாட்டுப் போரின் போது அவளும் அவளுடைய குடும்பமும் யாழ்ப்பாணத்திலிருந்து தென்கிழக்கே 115 கிலோமீட்டர் (சுமார் 71 மைல்) தொலைவில் உள்ள முல்லைத்தீவு நகரத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்க விரும்பிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையே 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் நடைபெற்றது. மோதல் நூறாயிரக்கணக்கான மக்களை இடம்பெயர்த்தது; இந்தப் போரின் போதான இறப்பு எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அடிக்கடி இப்போர் 80,000 முதல் 100,000 உயிர்களைக் காவுகொண்டதாக மேற்கோள் காட்டியுள்ளது.
34 வயதான சுபாஷ்கர், 2009 இல் திருமணம் செய்துகொண்டபோது போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினார். இதன்போது நிரந்தர வீடு ஒன்றைக் கட்டுவதற்கு போதுமான பணத்தை சேமிக்கும் நோக்கத்துடன் நிலத்தை வாங்கி தற்காலிக குடியேற்றத்தை அமைத்தார். ஏனைய கிராமக் குடும்பங்களும் நில உரிமையாளர்கள் என்று தம்மை பொய்யாகக் கூறிக் கொண்டவர்களிடமிருந்து வாங்கிய நிலத்தில் வீடுகளைக் கட்டினர். இப்போது நாவாந்துறை வடக்கு மற்றும் தெற்கில் கடற் கரையோர மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் 455 பேர் அத்துமீறி வாழ்வதாகக் கூறப்படுகிறது.
நீண்ட காலமாக நிலவி வரும் நிலப்பிரச்சினையால் குடியிருப்பாளர்களுக்கு அடிப்படைச் சேவைகளான சுகாதாரம் மற்றும் ஓடும் தண்ணீர் போன்றவை இல்லை. தனியார் நிலத்தை ஆக்கிரமித்ததால், நிலைமையை தீர்க்க அரசு ஆதரவு கிடைக்கவில்லை.
சுபாஷ்கர் தன் வீட்டையும், தான் பிறந்த கிராமத்தையும் விட்டு வெளியேற நினைத்தாலும், மீண்டும் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு தன் குடும்பத்திடம் பணம் இல்லை என்கிறார்.
அவரது பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால், அவரது 12 மற்றும் 7 வயதுடைய மகன்கள் வெள்ளநீரின் வழியாக வெறுங்காலுடன் தங்கள் பாட்டியின் உலர்ந்த வீட்டிற்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் செருப்புகளை வைத்திருக்கிறார்கள். இரு சகோதரர்களும் அவற்றை அணிந்துகொண்டு பாடசாலைக்குச் செல்கிறார்கள். “வருடந்தோறும் இதுவே எங்களுடைய நிலைமை,” என்று கண்ணீருடன் கூறுகிறார் சுபாஷ்கர்.
வருடாந்திர வெள்ளம் சவாலான வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், டெங்கு, நுளம்புகளால் பரவும் வைரஸ் நோய்களின் சாத்தியத்தையும் அதிகரிக்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீர் நுளம்புகளின் உற்பத்திக் கூடமாக இருப்பதால், மழைக்காலத்தில் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
நாவாந்துறை பிரதேசத்தின் ஊடகங்களுடன் பேசுவதற்கு தனக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தினால் பெயர் வெளியிட விரும்பாத பொது சுகாதார அதிகாரி ஒருவர், கடந்த ஆண்டுகளில் வெள்ளம் அபாயத்தை எதிர்நோக்கும் பகுதிகளில் உள்ள மக்கள் பருவ மழைக்காலம் வந்தவுடன் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள கோவில்களில் அல்லது பாடசாலைகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது இது பரிந்துரைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
“வெள்ள நிலைமைகளின் போது அதிகரித்த டெங்கு நோய், வயிற்றுளைவு, தோல் வியாதிகள் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. வருடந்தோறும் எனது பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 80 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
22 மில்லியன் சனத்தொகையில் பாதிப் பேர் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஒரு சிறிய தீவான இலங்கை “காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியது” என உலகளாவிய அறிவு இணைய முகப்பான கிளைமட்லிங்க்ஸ்இல் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.
புவி வெப்பமயமாதலின் பாதிப்புகள் மற்றும் வெள்ளத்தை சமாளிக்க தேவையான உள்கட்டமைப்புகள் இல்லாமை நிலைமையை மேலும் மோசமாக்கும் என யாழ் பல்கலைக்கழகத்தின் மூத்த புவியியல் விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறுகிறார்.
புவி வெப்பமடைதலின் விளைவுகள் இலங்கையில் தெளிவாகத் தெரிகிறது, இது கடந்த ஆண்டு 24 மில்லிமீட்டர் (0.9 அங்குலம்) மழைவீழ்ச்சியை அதிகரித்தது, இதனால் வெள்ளம் மேலும் கடுமையாக இருந்தது என்கிறார்
“உயரும் கடல் மட்டம் மற்றும் இப்பகுதியின் தாழ்வான தரைகள் காரணமாக வெள்ளம் கடலுக்கு செல்ல முடியாது,” என்று பிரதீபராஜா கூறுகிறார். “குறிப்பாக நாவாந்துறை பிரிவு பகுதிகளில் வெள்ளம் வடிய ஆறு முதல் ஒன்பது நாட்கள் ஆகும். இதனால் இங்கு வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது,” என்றார்.
இதுவரை நாவாந்துறையில் சர்ச்சைக்குரிய நிலத்தில் வசித்த 56 குடும்பங்கள் தங்களுடைய முன்னாள் வீடுகளுக்கு தென்கிழக்கே கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் (74 மைல்களுக்கு மேல்) தொலைவில் உள்ள வசந்தபுரத்தில் நிரந்தர கல் வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். போரினால் அழிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டு, மோதல் முடிவுக்கு வந்து ஒரு வருடத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் புனர்வாழ்வுத் திட்டம் II மூலம் வசந்தபுரம் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டது.
சாபிநகரில் உள்ள வீடு தமது பயிர்கள், வேலை செய்யும் இடங்கள், கூட்டுக் குடும்பங்கள் மற்றும் தமது குழந்தைகளின் பாடசாலைக்கு அருகாமையில் இருப்பதாக சுபாஷ்கர் கூறுகிறார்.
“அரசாங்கம் மீள்குடியேற்றம் ஏற்படுத்தி தந்தாலும் நாங்கள் வேறிடங்களுக்கச் செல்ல மாட்டோம்,” என்று அவள் கூறுகிறாள். “நாம் தெரியாமல் பணம் கொடுத்து காணி உரிமையாளர்கள் என நம்பி தவறான நபர்களிடம் காணிகளை வாங்கி ஏமாந்து விட்டோம். அதைத் தெரிந்தே அரசாங்கம் பேசாதிருந்தது. நாங்கள் இவ்விடங்களை விட்டு வெளியேறத் தயாராக இல்லை.“
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நிர்வகிக்கப்படும் கிராம சேவையாளர் என அழைக்கப்படும் இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்க மாவட்ட முகவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
சாபிநகரில் வசிக்கும் உள்ளூர் சனசமூக நிலையத்தின் செயலாளராக பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தாயான 24 வயது நளினி நிலக்ஷனும் வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார்.
“எங்களுக்கு அரசாங்கத்தால் மீள்குடியேற்றம் வெளியிடங்களில் ஏற்படுத்தித் தந்தாலும் நாம் இவ்விடத்தை விட்டு வெளியேற மாட்டோம்” என்கிறார் நிலக்ஷன். “ஏனெனில் பாடசாலைகள் வைத்திய மகப்பேற்று நிலையங்கள், கோவில்கள் என யாழ்ப்பாண நகரத்திற்கு அண்மையில் இருப்பதனால் எல்லா வகையான சேவைகளையும் இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதைவிட எங்களில் சிலர் வருமானம் ஈட்டக்கூடிய தென்னை பயிர்களை வைத்திருக்கின்றோம் இவற்றையெல்லாம் விட்டு எங்களால் போக முடியாது.”
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்புக் குறிப்பு
லோஹித் குமார், ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை தமிழிலிருந்து மொழிபெயர்த்தார்.