வவுனியா, இலங்கை — ஒரு காலத்தில் மாடுகளின் இரைச்சலினால் நிரம்பிய கொட்டகை அமைதியாக உள்ளது. தரையில் வெயிலினாலும் பாவிக்கப்படமாலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கால்நடைகள் அங்கு இல்லை – இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நெல் விவசாயிகள் நிமித்தமாக கால்நடை வளர்ப்போர்களுக்கு ஏற்பட்ட தீவன நெருக்கடி இழப்புகளால் பிலேந்திரன் மரியசீலன் டிசம்பரில் தனது 50 மாடுகளை விற்று தனது 30 வருட தொழிலை மூடிவிட்டார்.
“நான் இன்றைக்கு இருக்கிற இந்த நிலைமைக்கு இந்த மாடுகள் தான் காரணம்” என்று பிலேந்திரன் கூறுகிறார். “நான் என்ட மகன் மகள் ரெண்டு பேரையும் படிப்பிப்பதற்கு அதுதான் எனக்கு உதவியது.”
வவுனியா மாவட்டத்தில் பிலேந்திரன் போன்ற கால்நடை வளர்ப்போர், ஒரு காலத்தில், கைவிடப்பட்ட வயல்களில் உள்ளூர் இனங்களை மேய்த்து, இறைச்சிக்காக விற்பனை செய்து, இலாபகரமான வியாபாரத்தை நடத்தி வந்தவர்கள், தற்போது படுவீழ்வான தள்ளுபடியில் தங்கள் மந்தைகளை விற்பனை செய்கிறார்கள். மேய்ச்சல் நிலங்களில் நெல் நிரம்பியிருப்பதால் கால்நடைகளுக்கு உணவளிக்க முடியாத நிலை உள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டு நடவுப் பருவத்தில் வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் 25% அதிகமாக பயிர் செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கால்நடை வளர்ப்போர், புல்லுள்ள திட்டுகளைக் கண்டுபிடிக்க, மாடுகளை தினமும் பல கிலோமீட்டர்கள் நடத்தி செல்ல வேண்டும் என்றும், மாடுகள் பச்சை நிறத்தை எங்கு பார்த்தாலும் அவைகள் அவ்விடத்திற்கு விரைந்து சென்று – பொதுவாக பயிர் உள்ள வயல்களுக்கு சென்று – அவற்றின் உரிமையாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. பொதுவான மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கித் தருமாறு அபிவிருத்தியை மேற்பார்வை செய்யும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உள்ளூர் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“நிலைமை இவ்வாறு தொடருமாக இருந்தால் இங்கு மாடுகளே இல்லாமல் போய்விடும். விவசாயிகள் மாடுகளை விற்றுவிடுகிறார்கள்.” என்கிறார் செட்டிகுளத்தில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் கால்நடை வைத்தியர் கிருபானந்தகுமாரன் சிவபாதசுந்தரலிங்கம்.
கடந்த டிசம்பரில் ஒரு நாள் காலை, பிலேந்திரன் தனது மாட்டுத் தொழுவம் காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் திரும்பி பார்த்தபோது, உடைந்த வேலியைக் கண்டார். சிறிய மற்றும் மெலிந்த அவருடைய கால்நடைகள் அனைத்தும் அவருடைய அயல் வீட்டுப் பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தன. இதனால் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு, பிலேந்திரன் இலங்கை ரூபாய் 75,000 ஐ (250 அமெரிக்க டொலர்கள்) பயிர் இழப்புக்ககாக அந்த விவசாயிக்கு கொடுக்க வேண்டியிருந்தது.
“ஒரு வேளை ஒழுங்காக பசியாறாத காரணத்தினால் அவை வயலினுள் புகுந்திருக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அவர் தனது மாடுகளை 3 மில்லியன் ரூபாய்க்கு (10,036 டொலர்கள்) மற்றொரு கால்நடை வளர்ப்பாளருக்கு விற்றார் – பெரும்பாலான வேளைகளில் அவர் ஏற்றுக் கொள்ளும் விலையை விட இது 40% குறைவானதாகும்.
அவர் அளவிடற்கரிய இழப்பை உணர்கிறார். மாட்டுச் சாணம், பால் மற்றும் இறைச்சிக்கான மாடுகளை விற்று மாதம் 70,000 ரூபாய் (234 டொலர்கள்) சம்பாதித்து வந்தார். ஒரு காலத்தில் கால்நடைகளுடன் கழித்த அவரது நாட்கள் இப்போது அமைதியாக வீணாகின்றன. இந்த வணிகம் ஒரு காலத்தில் அவரது தந்தையுடையதாக இருந்தது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு 2009 இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டுப் போர் காலகட்டம் முழுவதும் அவர் கால்நடைகளை வளர்த்து வந்தார். போர் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக 1989 இல் குடும்பம் மடு நகருக்குச் சென்றபோது, கால்நடைகளும் அவர்களுடன் சென்றதாக பிலேந்திரன் நினைவு கூர்ந்தார்.
வவுனியாவில் கால்நடை வளர்ப்புக்கு அண்மைக்காலம் வரை சில உள்ளீடுகளே தேவைப்பட்டதாக அரசாங்க கால்நடை வைத்தியர் சிவபாதசுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். ஏனெனில் வவுனியாவில் உள்ள கால்நடைகளில் 94% உள்ளூர் கால்நடைகள் எனவும் அவற்றிற்கு வீட்டிற்குள் உணவளிக்கப்படுவதில்லை என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவை சிறியவை, நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டவை மற்றும் உள்ளூர் காலநிலையில் நன்றாக இருக்கும். அவை அதிக பால் வழங்குவதில்லை மற்றும் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கால்நடை வளர்ப்போர் பெரும்பாலும் நூற்றுக்கணக்கான மாடுகளை வைத்திருக்கிறார்கள், போரின் போது விவசாயிகள் கைவிட்ட வயல்களில் அவை மேய்கின்றன. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வவுனியாவில் விவசாயிகள் 2023 ஆம் ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்பிலேயே நெல் நடவு செய்தனர்.
“அந்த இடங்களில் மாடுகள் மேய்ந்து இனப்பெருக்கம் செய்தன” என்கிறார் சிவபாத சுந்தரலிங்கம்.
ஆனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை மீட்டெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு, அவர்கள் போரின் போது செய்ததை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிக நிலப்பரப்பில் பயிரிட்டுள்ளனர். நுகர்வோர் விலைக் குறியீட்டால் சுட்டிக்காட்டப்பட்ட நுகர்வோர் விலைகள் 2022 இல் 53% அதிகரித்து, 2022 பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து அரிசியின் விலை 31% அதிகரித்ததால், மக்கள் அதிக நெல் மற்றும் பயிர்களை வளர்க்கத் தொடங்கினர். அரசாங்கமும், உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க கைவிடப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்ய மக்களை ஊக்குவிக்கிறது.
குளங்களும் புனரமைக்கப்படுவதால் மேய்ச்சல் நிலங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார் சிவபாதசுந்தரலிங்கம். வவுனியாவில் 1,469 குடும்பங்கள் 10க்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்ட மந்தைகளைக் கொண்டுள்ளன.
“அரசாங்கத்தை பொறுத்தவரை சில பொதுவான இடத்தை மேய்ச்சல் தரையாக ஒதுக்கீடு செய்யலாம்,” என்று அவர் பரிந்துரைக்கிறார்.
பண்ணையாளர்கள் இக் கருத்தை வலியுறுத்துகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களின் போது பலர் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கூட்டங்களில் கலந்துகொண்ட இரண்டாம் தலைமுறை பண்ணையாளர் தர்மலிங்கம் தவலிங்கம் கூறுகிறார். ஆனால் அரசாங்கம் இதைக் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபனிடம் இதைப் பற்றிய கருத்தை பலமுறை கோரிய போதும் பதிலளிக்கவில்லை.
வியாபாரம் தற்போது போன்று மிகவும் கடினமாக இருந்த காலத்தைத் தன்னால் நினைவுகூர முடியவில்லை என்கிறார் தர்மலிங்கம். அவர் தனது 89 உள்ளூர் கலப்பின மாடுகளுக்கு உணவளிக்க போராடுகிறார். அவர் அவற்றை மட்டுமே மேய்க்கிறார், இந்த இனம் திறந்த மேய்ச்சல் நிலங்களில் புல் சாப்பிட விரும்புகிறது.
“மாடுகளுக்கு மேயிறதுக்கு தனியா ஒரு இடம் இல்ல. வர வர மாடுகளுக்கான மேச்சல் பிரச்சனை மோசமா போயிட்டு இருக்கு,” என்று அவர் கூறுகிறார். “நான் இந்த வருஷத்தோட மாடுகளை முழுமையா விக்கலாம் என்றும் யோசிக்கிறேன்.” எனக்கு தெரிஞ்சு மூன்று பேர் கிட்ட மாடு வித்துட்டாங்க.”
பெரும் போகத்தில், அவர் தனது மாடுகளை மேய்க்க இரண்டு ஆண்களுக்கு மாதம் இலங்கை ரூபாய் 150,000 (500 டொலர்கள்) கொடுக்கிறார்.
இவ்வாறு அவர் முயன்ற போதிலும், நவம்பர் 2023 முதல் 15 கன்றுகள் இறந்துள்ளன – 1 மில்லியன் ரூபாய் (3,345 டொலர்கள்) வரை இழப்பு ஏற்பட்டது.
ஒரு வயதான மாட்டை 200,000 ரூபாய்க்கு (669 டொலர்கள்) விற்க முடியும் மற்றும் ஒரு கன்றுக்குட்டியின் மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்க முடியும் என்றாலும், அவர் இப்போது தனது கால்நடைகளுக்கு உணவளிக்க முடியாததால் அவற்றை இளம் பிராயத்தில் விற்கிறார்.
ஜனவரி மாதம், மேய்ச்சலுக்கான நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், தர்மலிங்கத்தின் மாடுகளை மேய்க்கும் செல்லத்துரை ஜெயகாந்தன் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். காலைச் சூரியன் சுட்டெரிக்கின்றது, மோட்டார் கார்கள் காற்றைக் கிழித்து வேகமாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், சாலையோரங்களில் மிகவும் குறைவாக இருந்த புல்லை மாடுகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவைத் தேடி தினமும் கிட்டத்தட்ட 70 கிலோமீட்டர்கள் (44 மைல்கள்) நடக்கப் பழகியதால் சில நொண்டிக்கொண்டு நடந்து செல்கின்றன.
செல்லத்துரை 12 ஆண்டுகளாக தர்மலிங்கத்தின் மாடுகளை மேய்த்து வருகின்றார். நிலங்கள் வேகமாக வயல்களாகவும் வீட்டுத் தோட்டங்களாகவும் மாறி வருவதாகவும், அங்கு தனது மாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார். ” அவைகள் பசுமையான வயல்களுக்குள் நடக்காதபடி கவனமாக கண்காணிக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
ஜனவரியில், ஒரு மாடு மந்தைக்கு முன்னால் சென்றபோது, செல்லத்துரை மெதுவாக அவளுக்கு அறிவுரை கூறினார். அவள் செவி சாய்கின்றாள், அவள் பிறந்ததிலிருந்து அவரை அறிந்திருக்கிறாள்.
“ஹேய் ஹேய் லட்சுமி மெதுவா போங்க.” என்று அவர் கூறுகிறார். “ஸ்பீடா போனா களைச்சு போயிடுவீங்க இன்னும் எவ்வளவு தூரம் போகணும்.”
தயாழினி இந்திரகுலராசா இலங்கையின் குளோபல் பிரஸ் ஜேர்னலின் வவுனியா நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்பு குறிப்பு
இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர், ஜோசபின் ஆண்டனி, ஜிபிஜே.