Sri Lanka

துஷ்பிரயோகத்தில் இருந்து செயல்வாதம், இலங்கையில் ஒரு ட்ரான்ஸ் பெண்ணின் பயணம்

அன்ரனி குயின்ரஸ் மேற்கொண்ட கடுமையான போராட்டத்தின் பின்னரே அவளை அவளது குடும்பம் ஏற்றுக்கொண்டது. அவளைப் போலுள்ள ஏனையோருக்கு இந்தப் பாதை கடினமாக இருக்கக் கூடாது என்பதற்காக அவள் தற்போது போராடுகின்றாள்.

Read this story in
One Trans Woman’s Journey From Abuse to Activism in Sri Lanka

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

தனது அடையாளத்தை தனது குடும்பம் மறுத்ததன் பின்னர் தனது அயலவர் ஒருவரின் வீட்டில் ஒரு இல்லத்தை தான் அடைந்ததாக கூறுகின்றாள் அன்ரனி குயின்ரஸ் ஏஞ்சல். இந்த அயலவர் பின்னர் அவளின் வளர்ப்புப் பாட்டியாக மாறினார்.

யாழ்ப்பாணம், இலங்கை — ஒரு சில வருடங்களுக்கு முன்னர் அன்ரனி குயின்ரஸ் ஏஞ்சலின் சிகையலங்காரம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்பட்டது. “எனக்கு தலைமுடி வளர்க்க நல்ல விருப்பம்,” என்கிறாள் அந்த ட்ரான்ஸ் பெண். “ஆனா வீட்ட எல்லாரும் முடியை வெட்டு, என்ன பொம்பிளையள போல வளக்கிற எண்டு பேசிக்கொண்டே இருப்பினம்,” என்கிறாள் ஏஞ்சல்.

இந்நாட்களில் அன்ரனி குயின்ரஸின் தாயார் அவளின் தலைமுடியை பெருமையுடன் வாருவதுடன் அவளுக்கு சாரியையும் அணிவிக்கின்றார். அதேவேளை அவளின் சகோதரி அவளின் உடைகளைத் தைக்கின்றாள். “இவை அனைத்தும் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்ததற்கான ஒரு அடையாளமாகவுள்ளது,” என்கிறாள் அவள்.

சுவர்களால் மூடப்பட்ட ஒரு வீட்டில் ட்ரான்ஸ்ஜென்டர் மக்கள் இவ்வாறான வெற்றிகளை அடைவது இலங்கையில் அரிதானது. பாலியல் மற்றும் பால்நிலை சிறுபான்மைகளை அந்நாட்டின் அரசியலமைப்பு வெளிப்படையாக பாதுகாப்பதில்லை, அத்துடன் ஒரே பால் திருமணங்கள் அங்கு இன்னும் தண்டனைக்குரிய குற்றமாகக் காணப்படுகின்றது. இதனுடன் இணைந்ததாகக் காணப்படும் சமூக அங்கீகாரம் இல்லாத நிலை அவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் தொந்தரவினால் பாதிப்புறும் ஏதுநிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது. இறுதியாக தனது குடும்பத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் அதிர்ஷ்டம் நிறைந்தவராக அன்ரனி குயின்ரஸ் காணப்படுகின்றாள், எனினும் நாட்டில் உள்ள ஏனையோர் தமது வீடுகளுக்குள் இன்னும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் தமது சொந்த குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

தனது அடையாளத்துக்கான போராட்டப் பயணத்தில், தனது சொந்த வீட்டில் இருந்து பல வீடுகளுக்கு மாறும் நிலை அன்ரனி குயின்ரஸுக்கு ஏற்பட்டது. சில வேளைகளில், ஒரு அயலவரின் வீடு அவளின் இல்லமாக மாறியது. சில வேளைகளில் ஒரு வேறுபட்ட நகரில் வாழும் நிலை தோன்றியது. இயல்பு அல்லாத பால்நிலைகள் மற்றும் பாலியல் அடையாளங்களின் அங்கீகாரத்துக்கான ஒரு மொழிநடை தற்போது ஆரம்பித்துள்ள ஒரு நாட்டில், அன்ரனி குயின்ரஸ் மற்றும் ஏனைய ட்ரான்ஸ் செயற்பாட்டாளர்கள் அவளையும் அவளைப் போன்றவர்களையும் கொண்டாட மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தளத்தை வடக்கின் யாழ்ப்பாணத்தில் அமைக்க முயற்சித்து வருகின்றனர். 2019 இல் அவள் யாழ் திருநர் வலையமைப்பு என்ற தொண்டர்களால் இயக்கப்படும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தாள். இவ்வலையமைப்பு வளங்களை வழங்குதல், சமூகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அத்துடன் கொள்கை மாற்றத்தை வலியுறுத்தல் என்பவற்றின் மூலம் ட்ரான்ஸ்ஜென்டர் மக்களுக்காக பரப்புரை மற்றும் சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த வலையமைப்பு இயங்குதளத்தின் மூலம் ட்ரான்ஸ்ஜென்டர் மக்களின் வாழ்வை மேம்படுத்தல் மற்றும் அவர்கள் இவ்வுலகை ஆராய்வதை இயலுமாக்கல் என்பவற்றை மேற்கொள்ள அன்ரனி குயின்ரஸ் எதிர்பார்த்துள்ளாள்.

அவளின் சொந்தப் பயணம் யாழ்ப்பாணத்தின் குருநகர் பிரதேசத்தில் ஆரம்பமானது. தனது எட்டாவது வயதில் அன்ரனி குயின்ரஸ் வித்தியாசமான உணர்வுகளை உணர ஆரம்பித்தார். பாடசாலையில், பெண்களின் இருக்கைகள் அவளை ஈர்க்க ஆரம்பித்தன. இரவு நேரங்களில் அனைவரும் உறங்கச் சென்ற பின்னர், அவள் பெண்களின் உடைகளை அணிந்தார். சில வேளைகளில் தனது சகோதரியின் உடைகளை மறைவாக எடுத்துச் சென்று தனது நண்பர்களின் வீடுகளில் வைத்து அணிந்தாள்.

ஆரம்பத்தில் இந்த நடத்தையை அவளின் குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக அவளின் தந்தை அவளது தாயை தண்டித்தார். “எனக்கு அடிச்சத விட என்ர அம்மாவப் போட்டு அடிப்பார்,” என்கிறாள் அன்ரனி குயின்ரஸ். வீட்டுக்கு வெளியேயும் இதையொத்த நிராகரிப்பையே அவள் எதிர்கொள்ள நேரிட்டது. அயலவர்கள் இழிவுபடுத்தும் பட்டப்பெயர்களை சூட்டி அழைத்தனர்.

இவ்வாறான அனுபவங்கள் அரிதானவை அல்ல. அன்ரனி குயின்ரஸின் சிறுவர் பராய அனுபவங்களைப் போன்ற அனுபவங்கள் குறிப்பிடத்தக்க உளவியல் வடுக்களை ஏற்படுத்துவது வழமையாகும் என்கிறார் ஒரு சுயாதீன பால்நிலை மற்றும் தொடர்பாடல் ஆலோசகரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் என்பவற்றின் வருகை தரு விரிவுரையாளருமான கிருத்திகா தருமராஜா. இலங்கையில் காணப்படும் சமூக விழுமியங்கள், கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை இந்நிலைக்கான காரணமாக அவர் முன் வைக்கின்றார். “ட்ரான்ஸ்ஜென்டர் மக்கள் பற்றிய முழுமையான பார்வை எம்மிடம் இல்லை,” என்கிறார் அவர். “அவர்கள் வீட்டில் இருந்து துரத்தியடிக்கப்படும் நிலையில் [பிறரால் எவ்வாறு] அவர்களை ஏற்க முடியும்?” என்ற கேள்வியையும் அவர் முன் வைக்கின்றார்.

கிருத்திகாவைப் பொறுத்தவரை, ட்ரான்ஸ்ஜென்டர் உரிமைகளை நோக்கிய பயணத்தில் குடும்பங்கள் அம்மக்களை அங்கீகரிப்பது ஒரு முக்கியமான பகுதியாக அமைகின்றது. குடும்பங்கள் ட்ரான்ஸ்ஜென்டர் மக்களை வெறுத்து தனிமைப்படுத்தும் வேளை, அவர்கள் பாரிய அபாயத்துக்குள் தள்ளப்படுகின்றனர். எவ்வாறாயினும், குடும்பங்கள் அவர்களை அங்கீகரிப்பது சமூகத்தில் நேர்மறையான செல்வாக்கினை ஏற்படுத்தும்.

இலங்கையில் ஒரு சில ட்ரான்ஸ்ஜென்டர் மக்களே தமது குடும்பங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் என அன்ரனி குயின்ரஸ் கூறுகின்றாள் “அனேகமான மக்கள் அவர்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது கூட இல்லை,” என அவள் கூறுகின்றாள். “என்ன இருந்தாலும், அவர்கள் அனைவரும் உங்களின் பிள்ளைகளே. குடும்பங்கள் தமது LGBTQ உறுப்பினர்களை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அவர்களை புரிந்துகொள்ளாவிட்டால், வெளியில் உள்ள எவரும் அவர்களை புரிந்துகொள்ள மாட்டார்கள்,” என அவள் மேலும் கூறுகின்றாள்.

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

தனது வளர்ப்பு பாட்டியின் வீட்டில் சுதந்திரமாக வாழும் உணர்வை அடைந்ததாகக் கூறுகின்றாள் அன்ரனி குயின்ரஸ் ஏஞ்சல். பாட்டி ஏஞ்சலை அவரது பழைய பெயர் கூறியே இன்னும் அழைக்கின்ற போதும் அது தனக்கு கவலையை தரவில்லை என்கிறாள் ஏஞ்சல். அங்கு தனக்கு கிடைக்கும் அன்பே முக்கியமானது எனக்கூறுகின்றாள் அவள்.

அன்ரனி குயின்ரஸுக்கு ஒன்பது வயதான போது தனது அயல் வீட்டில் வசித்த ஒரு பெண்ணை பார்க்கச் செல்ல ஆரம்பித்த போது அவளுக்கு அவ்வீட்டில் ஆறுதல் கிடைக்க ஆரம்பித்தது. சில காலத்தின் பின்னர் அப்பெண்ணின் பிள்ளைகள் தமது வாழ்க்கைகளை முன்னெடுக்க தாயிடம் இருந்து பிரிந்து சென்றனர் அத்துடன் அப்பெண்ணின் கணவரும் காலமானார். அவர் அன்ரனி குயின்ரஸை தனது வீட்டுக்குள் எடுத்ததுடன் அவளின் வளர்ப்புப் பாட்டியாக மாறினார். “ஏஞ்சல் தனது சிறு பராயத்தில் எமது வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த போது அவள் மீதான என் அன்பு அதிகரித்தது. எமது வீட்டில் இளம் சிறுவர்கள் எவரும் இருக்கவில்லை, அத்துடன் வீட்டில் காணப்படும் சிறிய வேலைகளைச் செய்ய அவள் எனக்கு உதவினாள்,” என்கிறார் வளர்ப்புப் பாட்டி.

ட்ரான்ஸ்ஜென்டர் பிரச்சினைகள் பற்றி அவரின் வளர்ப்பு பாட்டி பெரிதாகப் புரிந்துகொள்ளாத போதும், அந்த புதிய வீட்டில் தான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்ததாக கூறுகின்றாள் அன்ரனி குயின்ரஸ். காலாவதியான அவளது ஆண் பெயரைக் கூறியே அன்ரனி குயின்ரஸை இன்று வரை அழைக்கின்றார் வளர்ப்புப் பாட்டி. அது அன்ரனி குயின்ரஸை சங்கடத்துக்கு உள்ளாக்கவில்லை, அத்துடன் அதனை பாட்டிக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை என அவள் உணர்கின்றாள். அங்கு அவள் பெறும் கவனிப்பே அவளுக்கு முக்கியமானதாக உள்ளது. “வெளியில் உள்ள எவராவது என்னை கேலி செய்தால், பாட்டி அங்கு [சென்று] அவர்களுடன் சண்டையிடுவார்,” என்கிறாள் அன்ரனி குயின்ரஸ்.

2018 ஆம் ஆண்டு, 17 வது வயதில் தனது வீட்டில் இருந்து மிகத் தூரத்தில் உள்ள கொழும்புக்கு இடம்பெயர்ந்தாள் அங்கு அவள் ஒரு செய்திப்பத்திரிகை நிறுவனத்தில் தேநீர் தயாரிப்பாளராக வேலை செய்தாள். அங்கு அவளுக்கு ஒரு சுதந்திரமான சூழல் கிடைத்தது. அங்கு பெண்கள் டீ-சேர்ட்கள் மற்றும் ஜீன்ஸ்களை அணிவது அவளும் அவ்வாறு உடையணிவதற்கு தூண்டுகோலாக அமைந்தது. மேலும், பால்நிலை அங்கீகாரத்துக்கான சான்றிதழை பெறுவதற்கான தொடர் செயன்முறை பற்றியும் அவள் அங்கு அறிந்து கொண்டாள். ட்ரான்ஸ்ஜென்டர் மக்கள் தமது பிறப்புச் சான்றிதழில் காணப்படும் பெயர் மற்றும் பால்நிலை என்பவற்றை மாற்றியமைக்க உதவும் ஆவணம் ஒன்றை சுகாதார அமைச்சு வழங்குகின்றது. “நான் இத்தனை காலமும் அழுத கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைச்சதப் போல் சேர்டிபிகேட் கிடைச்சது,” என்கிறாள் அன்ரனி குயின்ரஸ். “இதில என்ர பெயர் ஏஞ்சல் எண்டு வந்திச்சு”, என அவள் மேலும் கூறுகின்றாள்.

2019 ஆம் ஆண்டு தனது நண்பர்களின் உதவியுடன் இந்தியாவில் பால் மாற்று சத்திரசிகிச்சைக்கு அன்ரனி குயின்ரஸ் உட்படுத்தப்பட்டாள். “அந்த நாளுக்காக எத்தனையோ நாட்கள் ஏங்கியிருக்கிறன்,” என அவள் கூறினாள். “என்ர வாழ்க்கையின்ர ஒரு இலட்சியம். உண்மையில வார்த்தைகளால சொல்லவே முடியாது.” என அவள் மேலும் கூறினாள்.

இலங்கையில் சமுதாயத்தில் ட்ரான்ஸ்ஜென்டர் மக்கள் பாரபட்சத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு ஊடகங்களில் அவர்கள் சித்தரிக்கப்படும் விதமும் பகுதியளவில் காரணமாக அமைகின்றது என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையில் ஒரு விரிவுரையாளராக கடமையாற்றும் அனுதர்சி கபிலன். உதாரணமாக, திரைப்படங்களில் அவர்கள் பாலியல் தொழிலாளர்களாக மாத்திரமே காண்பிக்கப்படுகின்றனர். “சமூகமும் அவர்களை அதே விதத்திலேயே பார்க்கின்றது,” என அனுதர்சி கூறுகின்றார். மிகவும் சிக்கல்தன்மை மிக்க வகைகளிலும் ட்ரான்ஸ்ஜென்டர் மக்கள் சித்தரிக்கப்படுவது ஆரம்பமாகியுள்ள போதும் திரைப்படங்கள் இது தொடர்பில் மாறாநிலைப் படிமங்களை வலுப்படுத்துவது இன்னும் காணப்படுகின்றது.

மதம் இன்னொரு காரணியாக அமைகின்றது. “இலங்கையில், மத போதனைகளின் அடிப்படையில், புதுமையர்களை (குயர் நபர்கள்) மக்கள் பாவத்தின் ஒரு வெளிப்படுத்தலாகவே நோக்குகின்றனர்,” என்கிறார் கபிலன். அரசாங்கத்தின் பால்நிலை அங்கீகார சான்றிதழ் முன்னேற்றத்துக்கான ஒரு சைகையாக அமைந்த போதும், ட்ரான்ஸ்ஜென்டர் மக்களை பாதுகாக்கும் உறுதியான சட்டங்கள் மற்றும் ஒரு சமூக மாற்றம் என்பவற்றின் தேவையை அனுதர்சி சுட்டிக்காட்டுகின்றார்.

தனது அடையாளத்தை தழுவிக்கொள்ள யாழ்ப்பாண ட்ரான்ஸ்ஜென்டர் வலையமைப்பு தனக்கு உதவியதாகக் கூறுகின்றாள் ஒரு ட்ரான்ஸ்ஜென்டர் பெண்ணான மகேந்திரராஜா மதுபாலா. “என்னைப் போன்ற சமூகத்துக்கு ஒரு குரல் உள்ளதை அத்துடன் எமக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரு நிறுவனமும் உள்ளதை அறிந்துகொண்டது மிகவும் நல்ல விடயமாகும்,” என அவள் கூறுகின்றாள். “கொரோனா பெருந்தொற்றின் போது நான் மிகவும் சிரமப்பட்டேன். யாழ்ப்பாணம் ட்ரான்ஸ்ஜென்டர் [திருநர்] வலையமைப்பு எனக்கு உணவுப் பொதிகளை வழங்கியது,” என அவள் கூறினாள். தனது ட்ரான்ஸ்ஜென்டர் சகோதரிக்கு அழகுக்கலை வியாபாரம் ஒன்றை தொடங்குவதற்கு அவசியமான பொருட்களை வலையமைப்பு வழங்கி உதவியதாக அவள் மேலும் தெரிவித்தாள்.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

ஏஞ்சலின் குடும்பம் ஆரம்பத்தில் அவளின் ட்ரான்ஸ்ஜென்டர் அடையாளத்தை ஏற்கவில்லை, எனினும் பின்னர் நிலைமை மாற்றமடைந்தது. “ஏஞ்சல் தற்போது எனது மகள். அவள் எவ்வாறு இருக்க விரும்புகின்றாளோ அவ்வாறே இருக்கட்டும்”, என்கிறார் அவளின் தாயாரான அன்ரனி குயின்ரஸ் யூகலிஸ்ரா ஜெயமலர்.

தனது குடும்பம் மற்றும் வளர்ப்புப் பாட்டி வாழும் யாழ்ப்பாணத்தில் அன்ரனி குயின்ரஸ் இந்த வலையமைப்பை செயற்படுத்தி வருகின்றாள். தான் கொழும்பில் இருந்து திரும்பிய பின்னர் தனக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை பற்றி குடும்பத்துக்கு தெரிவித்ததாக அவள் குறிப்பிடுகின்றாள் அந்த சமயத்தில் போது தனது குடும்பம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கின்றாள்.

தனது குடும்பத்துடன் இணையும் வேளை விடயங்களை இலகுவாக்குவதில் அன்ரனி குயின்ரஸின் அத்தான் ஒரு முக்கிய வகிபாகத்தை கொண்டிருந்தார். அவர் கொழும்பில் வாழ்ந்தவர் என்பதால் ட்ரான்ஸ்ஜென்டர் மக்களின் துயரங்கள் பற்றி அறிந்தவராக அவர் காணப்பட்டார். “அவருக்கு என்னைப் பற்றிய புரிந்துணர்வு இருந்தது,” என அன்ரனி குயின்ரஸ் குறிப்பிட்டாள். “அவளை எல்லோரும் ஆம்பிள பிள்ளையின்ர பேரில கூப்பிடாம அவளுக்கு விரும்பின மாதிரி ஏஞ்சல் எண்டு கூப்பிடுங்கோ,” என அவர் கூறியதாக அன்ரனி குயின்ரஸ் மேலும் கூறினாள்.

அதன் பின்னர் பெருந்தொற்று ஏற்பட்டு அது உலகத்தை முடக்கியது. அன்ரனி குயின்ரஸின் குடும்பம் மெதுவாக அவளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. தனது தலைமுடி மிகவும் நீளமாக வளர்ந்து விடும் என அஞ்சிய அவள் அதனை வெட்டினாள். முன்னர் அவள் தலைமுடியை நீளமாக வளர்த்தமைக்காக அவரைத் திட்டிய குடும்பம் தற்போது ஏன் முடியை வெட்டுகின்றாய் எனக் கேட்டது. “அப்ப எனக்கு நல்ல சந்தோசம்,” என அவள் கூறினாள்.

அன்ரனி குயின்ரஸை அவளாகவே தான் தற்போது ஏற்றுக்கொள்வதாக அன்ரனி குயின்ரஸின் தாயாரான அன்ரனி குயின்ரஸ் யூகலிஸ்ரா ஜெயமலர் கூறுகின்றார். “எனக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். எனினும் தற்போது எனக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். என்ன நடந்தாலும் அவர்கள் என் பிள்ளைகள். ஏஞ்சல் இப்போது எனது மகள். அவள் எவ்வாறு இருக்க விரும்புகின்றாளோ அவ்வாறே இருக்கட்டும்,” என்கிறார் ஜெயமலர்.

தனது குடும்பத்தின் பயணத்தை தற்போது அன்ரனி குயின்ரஸினால் புரிந்து கொள்ளவும் தனது குடும்பத்தை மன்னிக்கவும் முடிகின்றது. எனினும் தனது சமூகத்தில் தன்னைப்போல் உள்ள ஏனையவர்கள் குறித்து அவள் கவலை கொள்கின்றாள். “எப்போதும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். திடீரென நான் என்னை மாற்றியதால் சமூகத்தில் உள்ளவர்களும் உடனெ மாற வேண்டும் என நினைப்பது தவறு. என்னுடன் சமூகத்தில் உள்ள மக்களும் மாற வேண்டும். மெதுவாக மாறட்டும். இன்னும் காலங்கள் இருக்கின்றன,” என அவள் கூறுகின்றாள். “நான் யாருக்கும் என்னைப் பற்றி விளங்கப்படுத்துவது இல்லை. அது என்னுடைய வேலையும் இல்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

2019 இல், அன்ரனி குயின்ரஸ் ஏஞ்சலின் அனுபவம் யாழ்ப்பாணம் ட்ரான்ஸ்ஜென்டர் வலையமைப்பை உருவாக்க அவளுக்கு ஊக்கமளித்தது, அவ்வலையமைப்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏனைய ட்ரான்ஸ் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என நம்புகின்றாள் ஏஞ்சல்.

Related Stories

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்பு குறிப்பு

இன் அதீக் சம்சுதீன் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தார்.