இணுவில், இலங்கை – சூரியன் மறையும் நேரம். கிருஸ்ணா சுதர்சனின் இளம் மகன் அருகில் விளையாடிக் கொண்டிருக்கிறார், அவரது கணவர் இன்னும் வேலையில் இருந்து திரும்பவில்லை. கிருஸ்ணா சுதர்சன் அவர்கள் வீட்டிற்கு அருகில் உணவுக்கேற்ற இலை வகைகளைச் சேகரிக்கின்றாள்.
அவள் விரிவடையும் வயிற்றை கவனமாக வளைத்து குனிகிறாள் – அவளுடைய இரண்டாவது குழந்தை ஆகஸ்ட் மாதத்தில் பிறக்கவிருக்கிறது – ஆனால் தனது அசௌகரியத்தை புறக்கணிக்கிறாள். ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு பரிந்துரைக்கப்படும் பால், முட்டை, கீரை மற்றும் பிற உணவுகளின் விலை ஜனவரி முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது; பொது மருத்துவமனைகளில் மகப்பேறுக்கு முற்பட்ட பரிசோதனையில் முன்னர் கிடைத்த இலவச இரும்புச் சத்துக்கள் இனி கிடைக்காது; அவளால் தனியார் மருந்தகங்களில் ஊட்டச்சத்துகளை வாங்க முடியாது. பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் மக்காச்சோள அடிப்படையிலான ஊட்டச்சத்து நிரப்பியான திரிபோஷா கூட இனி கிடைக்காது.
‘என்ன செய்யிறது’ என்கின்றார் சுதர்சன். அவளது இரும்புச் சத்து மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார். ‘இப்போதுள்ள நாட்டு நிலைமையால் என்னால் அதிக விலை கொடுத்து சந்தையில் கீரை வகைகளைப் பெற முடியாது’
ஆரோக்கிய வளர்ச்சி ஏற்பாடு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு அணுகலில் முன்னேற்றங்கள் மூலம் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதங்களை குறைக்க இலங்கை கடுமையாக உழைத்துள்ளது. 1950 இல், இலவச சுகாதாரப் பாதுகாப்பு தேசியமயமாக்கப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, புதிதாகப் பிறந்தவர்களில் 10% பேர் தங்கள் முதல் பிறந்தநாளைக் கடந்து வாழவில்லை; 2020 இல், முதல் பிறந்தநாளுக்கு பிறகான உயிர் பிழைப்பு விகிதம் 99% ஐ எட்டியது. ஆனால் நாடு பொருளாதாரக் கொந்தளிப்பில் ஆழமாக மூழ்கி வருவதால் – பாராளுமன்றத்தின் சபாநாயகரின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அவரது வீட்டைத் தாக்கிய பின்னர் ஜனாதிபதி ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். பொது சுகாதார நிபுணர்கள் இந்த முன்னேற்றங்கள் தலைகீழாக மாறும் என்று எச்சரிக்கின்றனர். பாதுகாப்பான, ஆரோக்கியமான கர்ப்பத்திற்குத் தேவையான உணவுகள், ஊட்டச்சத்துகள், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவை கட்டுப்படியாக முடியாததாகவும் அணுக முடியாததாகவும் மாறிவிட்டன.
ஜூன் மாதம், யுனிசெப் என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், 122,000 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பணம் அல்லது பணச் சிட்டை உதவியை வழங்குவதற்கான நிதியுதவி உட்பட டாலர் 25.3 மில்லியன் நிதி திரட்டும் ஆதரவை இலங்கைக்கு வழங்கியது. ‘அத்தியாவசிய சுகாதார சேவைகள் அனைத்தும் மருந்துப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துவிட்டது, இந்த பாதிப்பு பல மாதங்களுக்கு தொடரும்’ என்று யுனிசெப் அறிக்கை கூறுகிறது.
பல தசாப்தங்களாக, இலங்கையர்கள் மருந்துகளை அரசாங்க மருத்துவமனை மருந்தகங்களில் இருந்து இலவசமாக அல்லது தனியார் மருந்தகங்களில் இருந்து மலிவு விலையில் பெறக் கூடியதாக இருந்தது. ஆனால், மார்ச் மாதத்தில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனைத்து மருந்துகளுக்கும் 29% விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது, அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் 60 மருந்துகளுக்கு விலை 40% த்தால் உயர்த்தப்பட்டது.
சிசேரியன் மற்றும் உருப்பெற்றகரு மற்றும் பிறந்த சிசுக்களுக்கான சத்திரசிகிச்சைகளுக்கான இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் உபகரணங்கள் மிகவும் விலை உயர்ந்ததாகவும், கொள்வனவு செய்வது கடினமாகவும் உள்ளதாக கொழும்பைச் சேர்ந்த சமூக வைத்தியரான முரளி வல்லிபுரநாதன் உறுதிப்படுத்துகிறார். மின்வெட்டு காரணமாக, குளிர்பதனம் தேவைப்படும் மருந்துகளை தூக்கி எறிய வேண்டிய நிலை உள்ளது, என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கை மருத்துவ சங்கம் கோரிய தேவை நிரப்பீடு நன்கொடைகளின் பட்டியலை சுற்றனுப்புவது உட்பட வளர்ந்து வரும் நெருக்கடிக்கு அதிக கவனம் செலுத்துமாறு மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார சங்கங்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
போலிக் அமிலம், விற்றமின் சி, இரும்புச் சத்து மாத்திரைகள், கல்சியம் உள்ளிட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்துகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் வியாபாரம் மந்தமடைந்துள்ளதாக யாழ் மருந்தக உரிமையாளர் பாலசுப்ரமணியம் மணிகண்டன் கூறுகிறார். கறுப்புச் சந்தை விற்பனையாளர்கள் பொருட்களை வாங்கி பதுக்கி வைத்துவிட்டு, அதைவிட அதிக விலைக்கு விற்பதாக அவர் புகார் கூறுகிறார்.
‘நாட்டினது பொருளாதார நிலைமையினால், சில மருந்து வகைகள் முழுமையாகவே இல்லாமலுள்ளது. பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள், சர்க்கரை நோயாளர்கள், புற்று நோயாளர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினர்களுடைய மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது.’ என்கின்றார். மேலும், வழமையாக மாதமொன்றிற்கு இரண்டு தடவைகள் மருந்துக் கொள்வனவில் ஈடுபடுவதுண்டு. ஆனால் தற்கால நிலைமையினால் மருந்துகளை ஒரு தடவை பெற முடிகின்றது எனவும் கூறுகின்றார்.
மே மாதம், 53,000 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் உடனடித் தேவையுடைய கிட்டத்தட்ட 122,000 குழந்தைகள் உட்பட இலங்கையர்களுக்கான மருத்துவத்திற்காக யுனிசெப் மூலம் ஜப்பான் டொலர்l 1.5 மில்லியனை நன்கொடையாக வழங்கியது. அப்போதிருந்து, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஆசிய அபிவிருத்தி வங்கி, விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலிருந்து உதவி மற்றும் கடன்களுக்கான உறுதிமொழிகளும் வந்துள்ளன.
இலங்கையின் வருடாந்த மருந்து கொள்வனவு செலவு 268 மில்லியன் டொலர்கள் என சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள கையிருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு உதவி 2024 வரை நீடிக்க போதுமானதாக இருக்க வேண்டும், ஆனால் ‘ஆகஸ்ட் வரை எங்களுக்கு கடினமான காலம் உள்ளது’ என்று அவர் கூறுகிறார், மேலும் தற்போது எங்களின் முன்னுரிமை மலிவு விலையை விட அனைத்து மருந்துகளையும் மக்களுக்கு கிடைக்க வைப்பதாகும்’
உலக உணவுத் திட்டம் மற்றும் யுனிசெப் ஆகியவற்றுடன் சோளம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனால் நாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான திரிபோஷவை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகள் இலங்கையை மீட்க உதவக்கூடும், ஆனால், உணவு, மருந்து மற்றும் பிற சுகாதாரப் பராமரிப்பு தேவைகளுக்கான இறக்குமதியை குறைவாக சார்ந்திருக்க, நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவம், ஊழல் குறைப்பு மற்றும் நீண்ட கால முதலீடுகள் தேவை என யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியரான செல்வரத்தினம் சந்திரசேகரம் கூறுகிறார்.
‘மரத்தை நாட்ட முன்பு கனியை ருசி பார்க்க வேண்டும்’ என்பது பொதுவான பழமொழி’ என்று அவர் கூறுகிறார். ‘நாங்கள் பெரிய அளவிலான பண்ணைகள், தோட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான வணிக முயற்சிகளை உருவாக்க வேண்டும்.’
ஊட்டச்சத்து குறைபாடும் அதிகரித்து வரும் கவலையாக உள்ளது. 2021 இல் இலங்கையில் யுனிசெப் நடத்திய ஆய்வில், 43% குடும்பங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பிருந்ததை விட குறைவாகவே உண்பதாகவும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை உணவு உதவிக்கு தகுதி பெற்ற கிட்டத்தட்ட 80% குடும்பங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக உதவியைப் பெறவில்லை என்றும் கண்டறியப்பட்டது. இந்தச் சவால்களை எதிர்த்துப் போராட, முன்னாள் நிதி அமைச்சர், தனது 2022 வரவுசெலவுதிட்ட உரையில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவு முத்திரை திட்டத்தை 10 மாத உதவியிலிருந்து 24 மாத உதவியாக விரிவுபடுத்தினார். ஆனால், பொருளாதார நெருக்கடி நீடித்து வருவதால், இத்திட்டம் நடைமுறைக்கு வராமல் உள்ளதுடன் ஏற்கனவே இருந்த திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் மற்றும் இலங்கையின் தேசிய திட்டமிடல் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டுக் கணக்கெடுப்பின்படி, 80% க்கும் அதிகமான குடும்பங்கள் மலிவான உணவுகளை உண்கின்றன அல்லது உட்கொள்ளும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துவது, ஊட்டச்சத்து குறைபாட்டின் உயர் விகிதங்களைத் தூண்டியுள்ளன.
வல்லிபுரநாதன் கூறுகையில், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தங்களைக் காட்டிலும் உணவளிப்பதை முதன்மைப்படுத்துவதால், அவர்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகளை அதிகம் அவதானித்ததாகக் கூறுகிறார். 2021 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இலங்கையில் 7 இல் 1 பெண் கர்ப்ப காலத்தில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 இல் 1 குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும் எனவும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் இப்போது பார்ப்பது வெறும் ஆரம்ப நிலையே, இந்நிலைமை தொடருமாயின் சுகாதாரத்துறை மேலும் மோசமாகலாம். அடுத்து நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினையாக மந்தபோசனை இருக்கின்றது’ என்கின்றார் வல்லிபுரநாதன். ‘இந்த பொருளாதார நெருக்கடி எதிர்காலத்தில் நடுத்தர வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்களை மேலும் பாதிக்கலாம்.’
இணுவிலைச் சேர்ந்த பாலர் பாடசாலை ஆசிரியையான தர்சினி அரிகரனும் (36) அரச மரக் கூட்டுத்தாபனத்தில் முகாமைத்துவ உதவியாளரான அவரது கணவரும் ஜூலை மாதம் மூன்றாவது குழந்தையை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தர்சினியின் முழு மாத வருமானமான 10,000 இலங்கை ரூபாயை (டொலர் 27.86) அவளுக்குத் தேவையான மருந்து மற்றும் பொருட்களுக்காகச் செலவழித்து வருகின்றனர் என்று தர்சினி கூறுகிறார்.
“தற்சமயம் கர்ப்ப காலத்தில் எனக்கு சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் ஏற்பட்டிருப்பதால் வருமானத்தை மீறிய செலவைினையே பார்க்க முடிகின்றது“எனக் கூறுகின்றார்.
அவளது கடைசியாக நடைபெற்ற மகப்பேறுக்கு முற்பட்ட பரிசோதனையில், அவளது கரு எடை குறைவாக இருந்ததால், அதிக தானியங்களை சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த வகையான உணவுகள் விலை உயர்ந்தவை, ஆனால் அரிகரன் சிறிய அளவில் வரவுசெலவுத் திட்டப்பட்டியல் போட முயற்சிப்பதாக கூறினார்.
சுதர்சனின் குடும்பத்திற்கு, 2015 ஆம் ஆண்டின் கர்ப்பிணிப் பெண்களுக்கு 10 மாதங்களுக்கு உணவு உதவியாக மாதம் 2,000 ரூபாய் (டொலர் 5.58) வழங்கும் அரசுத் திட்டம் ஒரு உயிர்நாடியாக இருந்தது. ஆனால் பணவீக்கம் காரணமாக, அவர் தனது கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாத காலகட்டத்தில் அதே தொகைக்கு குறைவான உணவுப் பொருட்களைப் பெற்றார் – மேலும் அவரது மூன்றாவது மூன்று மாத காலகட்டத்தில் நுழைந்ததிலிருந்து, திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
‘நான் எனக்குத் தேவையானதை வாங்குவதா, மூத்த பிள்ளைக்குத் தேவையானதை வாங்குவதா அல்லது சமைத்து உண்ணும் உணவுப் பொருட்களை வாங்குவதா என்று தெரியவில்லை’ என கண்ணீர் மல்க கூறினார்.
அவரது கணவருக்கு மேலதிக வேலை கிடைக்கவில்லை, மேலும் அவரது இரும்புச் சத்து குறைபாட்டில் மாற்றமில்லை. எரிபொருள் பற்றாக்குறை போக்குவரத்தை கடினமாக்கியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் மூத்த பிள்ளை மற்றும் அவரது புதிய உடன்பிறப்புக்கான வளங்களை ஒன்றிணைக்க அவளது பெற்றோருடன் இன்னும் சில வாரங்களில்செல்ல முடிவு செய்துள்ளனர் .
‘நான் இப்போது என் பெற்றோருடன் இருக்கிறேன், அவர்கள் என் குடும்பத்திற்கு உணவளிக்கிறார்கள்,’ என்று அவள் கூறுகிறாள்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்புக் குறிப்பு
ஜொசப்பின் அந்தனி, ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.