கிளிநொச்சி, இலங்கை — கிராஞ்சிக் கடற்கரையின் அலைகளிலிருந்து சில அடி தூரத்தில் ஒரு பழமையான, சிறிய கோவில் உள்ளது. ஒரு கிழிந்த பதாகை காற்றில் ஊசலாடுகிறது. மடுத்தி பத்திநாதன், 71, அவரது மகன் பத்திநாதன் ஜோஜ் ஜூலியன் மற்றும் இன்னும் சில ஆண்கள், வட இலங்கையில் உள்ள இந்த கடற்கரையில் உள்ள பூவரசமர நிழலில் அமர்ந்து, கடலட்டைப்பண்ணைகள் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு முன்னதான காலத்தை நினைவு கூறுகின்றனர்.
கடலைப் பார்க்கும்போது, ஜூலியன் இந்தக் கடற்கரையில் விளையாடியதும், அவனது பெற்றோர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மீன்பிடித்ததும், தினமும் காலையில் வீட்டை விட்டு வெளியேறி அதிகாலை 4 மணியளவில் கடலுக்குச் சென்றதும் நினைவுக்கு வருகிறது. இன்றுகடலட்டைப்பண்ணைகள் எல்லா இடங்களிலும் மிதக்கின்றன. கடலட்டைப்பண்ணை வைத்திருப்பவர்கள் ஒருபுறமும் அவர்களுக்கு எதிரானவர்கள் மறுபுறமும் என கிராமம் பிளவுபட்டுள்ளது. கடலில், ஜூலியனின் நண்பர்கள், சகோதரர், மற்றும் கிராமத்து மனிதர்கள் சிலரின் பெயர்களில் கடலட்டைப்பண்ணைகளுக்காக நியமிக்கப்பட்ட பகுதிகளில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேலிகள் மீனவர்கள் அடுத்தடுத்த பகுதிகளுக்கு செல்வதை தடுக்கின்றன, தலைமுறைகளாக அவர்கள் கொண்டிருந்த ஒரே வாழ்வாதாரத்திலிருந்தும் அவர்களைத் தடுக்கின்றன. ஒரு காலத்தில் தனக்கும் அவனது பெற்றோருக்கும் சொந்தமான கடல் இப்போது தங்களுக்கு இல்லை என்று ஜூலியன் கூறுகிறார்.
இத் தீவு நாடானது ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி, நசுக்குகின்ற கடன் சுமை, பணம் அனுப்புவதில் வீழ்ச்சி மற்றும் சுற்றுலா பயணங்களில் சரிவு ஆகியவற்றின் விளைவாக – அதன் மிகப்பெரிய வெளிநாட்டு நாணயம் ஈட்டுவதற்காக – அந்நிய செலாவணியை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய முயற்சியின் ஒரு பகுதியாகஅரசாங்கம் கடலட்டைப்பண்ணைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 5,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பாரிய அளவிலான வணிக கடலட்டைப்பண்ணைகள் திட்டத்திற்கான முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அன்னியச் செலாவணியைப் பெற்று மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஆனால் இந்த பண்ணைகளுக்கு அதிக கடல் பரப்பு ஒதுக்கப்பட்டதால், பத்திநாதன் மற்றும் ஜூலியன் போன்ற உள்ளூர் மீனவர்கள், இந்த பண்ணைகள் தங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பதாகவும், இதன் விளைவாக, மீன்பிடி வணிகம் மிகவும் குறைந்துவிட்டதாகவும், சமூக உறுப்பினர்கள் ஒரு வழக்கமான இலங்கை உணவான மீன்களை வாங்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 27 வயதான ஜூலியன், கிளிநொச்சி மாவட்டத்தின் வடக்கில் உள்ள கிராமமான கிராஞ்சியில் கடலட்டைப்பண்ணைகள் பரவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் முன்னணியில் இருந்தவர் ஆவார். அவர்களின் 149 நாள் நீண்ட போராட்டம் மே மாதம் வாபஸ் பெறப்பட்டது, ஆனால் ஜூலியன் கூறுகிறார், போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது – ‘போராட்டத்தின் வடிவம் மட்டுமே மாறியிருக்கிறது’, என்று அவர்
கூறுகிறார். போராட்டத்தைத் தொடர்ந்து , மீன்பிடி அமைச்சின் அதிகாரி ஒருவரால் தந்தை-மகன் இருவருக்கும் மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஆஜராகும்போது , போராட்டம் நடந்து வருவதாக ஜூலியன் கூறுகிறார். அடுத்த விசாரணை செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. பலமுறை முயற்சித்த போதிலும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை.
தோல் போன்ற கடினமான அமைப்பை வெளியிலும் உள்ளே மென்மையானதுமான, கடலட்டைகள் சீனா உட்பட பல ஆசிய நாடுகளில் அருஞ்சுவையுடைய உணவாகும். அங்கு, 2016 ஆம் ஆண்டு ஃபிரான்டியர்ஸ் இன் மரைன் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வில் மேற்கோள் காட்டப்பட்ட தரவுகளின்படி, கடலட்டைகளின் விலைகள் கணிசமாக வேறுபடுகின்றன – உலர்ந்த, மலிவான வகைகளுக்கு ஒரு கிலோவிற்கு 30 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான தரம், சிறந்த தரமான உயர் மதிப்பு இனங்களுக்குஒரு கிலோகிராமுக்கு 450 டொலர்களுக்கும் அதிகமாகவும் மதிப்பிடப்படுகிறது. எனினும், இங்குள்ள சமூகத்தினர் அவற்றை உட்கொள்வதில்லை.
இந்த கடலட்டைப்பண்ணைகள் ஏற்றுமதிக்கு மட்டுமே உதவுகின்றன என்ற உண்மையைத் தவிர, உள்ளூர் மீனவர்கள் இந்தப் பண்ணைகளுடன் தொடர்புடைய பல பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளனர். ‘கடலட்டைப் பண்ணைகளைப் போட்டதால் கடல்நீர் சேகுலேசன் ஆவதில்லை. இப்ப கடல்தண்ணி ஊத்தையா இருக்கிது. அதுமட்டுமில்லை கடலட்டைப் பண்ணைகளில் பாய்ச்சப்படும் அதிகளவான ஒளி காரணமாகவும் மீன்கள் இப்பகுதிக்கு வருவதில்லை’ என்கிறார் ஜூலியன்.
மீனவர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கும் மற்றும் அதற்கான செயல்பாடுகளை ஒழுங்கமைக்கும் அமைப்பான யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு கடற்றொழில் சமாசத்தின் செயலாளராகிய அன்னலிங்கம் அன்னராசா, யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் வடக்கில் அதிக எண்ணிக்கையிலான பண்ணைகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். கிளிநொச்சியின் கரையோரப் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட பண்ணைகள் மற்றும் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதியில் 600 பண்ணைகள் உள்ளன. அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட பண்ணைகள் அதிகம் என்பதால் சரியான தொகை விபரம் எந்த அலுவலகத்திலும் இல்லை என்கிறார். ‘கடலட்டைப்பண்ணைகள் மீன்தொழிலாளர்களுக்கு மட்டும் பாதிப்பில்லை. மீன் சாப்பிடுகின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பு’ என்று அவர் கூறுகிறார். மீனவர்களின் போராட்டத்தை ஆதரித்த அன்னலிங்கம், 10 முதலாளிகள் பிழைப்பதற்காக 100 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்கிறார்.
மீன் குழம்பு, மீன் சொதி அல்லது மீன் பொரியல் என எதுவாக இருந்தாலும், இலங்கை மக்களின் விலங்குப் புரத உட்கொள்ளலில் 50% மீன்களே ஆகும். இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. “மீன்தான் எங்களை வளர்த்துவிட்டது. மீன் இல்லாத சாப்பாடு தொண்டைக்குள் இறங்காது. மீன் சாப்பிட்டால்தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும். சுறுசுறுப்பான பீலிங்காக இருக்கும். ‘ என்று ஜூலியன் கூறுகிறார். கொஞ்ச காலத்திற்கு முன்பு, இங்குள்ள மீனவர்கள் கிராஞ்சி கிராமத்தில் மீன்பிடித்து, அதை ஏற்றுமதி செய்து வந்தனர். ” “ஆனால் இப்ப சமைக்கிறதுக்கும் சாப்பிடுறதுக்கும் பள்ளிக்குடா கடல்ல இருந்து மீனை சைக்கிளில கொண்டுவந்து விக்கிறாங்க,” என்கிறார் ஜுலியன். கிராஞ்சியில் இருந்து 7 கி.மீ (4.3 மைல்) தூரத்திலிருக்கிறது பள்ளிக்குடா.
இலங்கையர்களின் உணவில் மீன் இல்லை என்பது பலரது கற்பனைக்கு அப்பாற்பட்டது. கிராஞ்சியில் பிறந்து வளர்ந்த இரணைமடுவில் வசிக்கும் 30 வயதுடைய பிரியந்தன் டிலக்சனா கூறுகிறார். ‘மீன் சாப்பாடுதான் வேண்டும் என்ற உணர்வு ஒரு தாகம்போல இருக்கும். கடற்கரையில் இருந்துகொண்டே மீனில்லாமல் இருக்கிறமே என்று வெறுப்பாக உணருவேன். இறைச்சி சாப்பிட்டு அந்த உணர்வை ஈடுசெய்ய ஏலாது. ‘கிராஞ்சியில மீனோடும் கடலோடும் வாழ்ந்த நாங்கள் இப்ப அது இல்லாமல் வாழுறம்.’
இந்த பிளவுபட்ட கிராமத்தின் மறுபக்கத்தில் சீனியர் நவரத்தினம் போன்றவர்கள். ‘கடலில் மீன்கள் குறைவது கிராஞ்சியில் மட்டுமில்லை. இரண்டு வருசமாகத் தொழில் இல்லை. அதனாலதான் அட்டைப்பண்ணைக்கு இறங்கினோம்.’ என்கிறார். 2021ஆம் ஆண்டு முதல் கிராஞ்சி மீனவர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் அவர், கடலட்டைப்பண்ணைகளை அதிகரித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த போவதாகக் கூறுகிறார்.
பத்திநாதனும் ஜூலியனும் வெளியே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், நவரத்தினம் கடலில் நின்று வலைகளைச் சரிசெய்கிறார்.
மீனவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமல்ல, தங்கள் கடலின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள். ‘முதல்ல செய்த பண்ணைகள் கைவிடப்பட்டு கடலடியில வலைகள் கிடக்கு. இதெல்லாம் கடலை குப்பையாக்கிற வேலைதானே’ என்கிறார் ஜூலியன்.
கடற்றொழில் அமைச்சின் அனுமதியின் பின்னர் கடலட்டைப்பண்ணைகளுக்கு அனுமதி வழங்கும் அமைப்பான இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு பிராந்திய உதவியாளர் நிரூபராஜ் பாலச்சந்திரன், செப்டம்பர் 2021 மற்றும் டிசம்பர் 2022 க்கு இடையில் இந்த பண்ணைகளில் 70% அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார். அப்போது ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடுதான் கடலட்டைப்பண்ணைகள் வேகமாக உருவாகக் காரணம் என்கிறார். மனித நடமாட்டம் மற்றும் பண்ணைகளில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் விளக்குகள் மீன்கள் கரைக்கு வரும் இயற்கைச் செயல்முறையை பாதித்துள்ளது என்பது உண்மை என்கிறார் பாலச்சந்திரன். ஆனால், இந்தப் பண்ணைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி, “இந்தப் பண்ணைகள் தற்காலிகக் கட்டமைப்புகள். உண்மையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அதையும் தேவைக்கேற்ப கையாளலாம். ‘ என்கிறார்
சில இளம் மீனவர்கள் தங்களுடைய உபகரணங்களை விற்றுவிட்டு கடலையும் விட்டுவிட்டு வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால் ஜூலியன் தனது தந்தை ஏழு குழந்தைகளையும் வளர்த்து இங்கு நன்றாக படிக்க வைத்தார் என்றும் “இந்த கடல் எங்களை வளப்படுத்தியுள்ளது,” என்றும் கூறுகிறார். “அவரது தொழில் செய்யும் இடத்தை விட்டு வெளியேறுவது எங்களை விட அப்பாவுக்கு ஒரு பெரிய முடிவு. தூங்க மாட்டார். இதைப் பற்றி மாத்திரம்தான் அவர் பேசுகிறார்.”
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரத்தை மையமாகக் கொண்ட வெற்றிச்செல்வி சந்திரகலா, குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்பு குறிப்பு
இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர், ஜோசபின் ஆண்டனி, ஜிபிஜே.