யாழ்ப்பாணம், இலங்கை — ஓரளவு வறுத்த சோளம் போன்ற வாசனை தரும் தேங்காய் எண்ணெய் மற்றும் சம்பு புல் ஆகிய இரண்டும் கலந்த நறுமணம் இரத்தினம் ஸ்ரீகாந்தனின் வீட்டில் பரவியிருந்தது. 53 வயதான அவர் மும்முரமாக தேங்காய் மட்டைகளை விரித்து உலர வைக்கிறார். அவரது வீட்டிற்குப் பின்னால் அவரது தேங்காய் எண்ணெய் ஆலை உள்ளது. அங்கு அவர் எண்ணெய் எடுப்பதற்காக தேங்காயின் சதையை அரைக்கிறார். இந்த நாட்களில் இந்த வீட்டில் இருந்து வெளிவரும் முக்கிய சத்தம் அந்த ஆலையின் இயந்திர சத்தமாகும். ஒரு காலத்தில் இரத்தினமும் அவரது முன்னோர்களும் பாரம்பரிய புற்பாய்களைத் தயாரிக்கப் பயன்படுத்திய தறியை ஒரு பழைய துணி இப்போது மூடியிருக்கிறது. அறையின் ஒரு மூலையில் பூனைவால் புல் குவியல் கிடக்கிறது.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இரத்தினம் வசிக்கும் யாழ் மாவட்டத்தில் உள்ள இராமவில் கிராமத்தில் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புற்பாய்களை நெய்து விற்பனை செய்து வந்தன. கிராமத்தின் பல வீடுகளில் இருந்து தறியின் மெல்லிய சத்தம் நாள் முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இன்று, தனது குடும்பத்திலும், இந்த கைவினைப் பயிற்சி செய்யும் ஒரு சிலரிலும் இரத்தினம் கடைசி ஆளாக இருக்கிறார். பாய் வியாபாரம் நிலையானதாக இல்லாததால் அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் எண்ணெய் தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் அவர் கைவினைப் பொருளில் உணர்ச்சிவசப்பட்டு முதலீடு செய்ததால் இடையிடையே நெசவு செய்கிறார்.
‘பத்து வருசத்துக்கு முதல் இது எனக்கு தொழில்,’ என்று இரத்தினம் பெருமூச்சு விட்டார். ‘ஆனா இப்ப ஏதோ இருக்கும் வரைக்கும், ஏலுமானவரைக்கும் இதச் செய்வம்“
சுமார் 2000 ஆம் ஆண்டு வரை, மக்கள் இந்த கிராமத்திற்கு வந்ததைப் பற்றி இரத்தினம் கூறும்போது, “எங்கட கிராமத்தின்ர அடையாளமே எங்கட தொழில்தான்…. முந்தியெல்லாம் பாய் எண்டு சொன்னாலே எங்கட ஊர்தான்.”
யாழ் மாவட்டத்தில் சிறுபான்மைத் தமிழர்களின் பாரம்பரியத் தொழிலான புற்பாய் உற்பத்தி தற்போது அழியும் தருவாயில் உள்ளதாக வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் செல்வரட்ணம் வனஜா தெரிவிக்கிறார். பூனைவால் புல் இன்னும் சதுப்பு நிலங்களில் ஏராளமாக வளர்கிறது, ஆனால் இத்தொழிலைத் தெரிந்தவர்கள் வேலைக்கு இப்போது யாரும் வருவதில்லை என்று கூறுகிறார்.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார்) 20 குடும்பங்கள் மாத்திரமே இன்னமும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் கைத்தொழில் ஊக்குவிப்பு அதிகாரி பத்மநாதன் ராகவன் தெரிவிக்கிறார்.
காணாமல் போகும் தமிழரின் அடையாளங்கள்
புல் பாய்கள் இலங்கையரின் வாழ்க்கையின் உள்ளார்ந்த பகுதியாகும். அவை உறங்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, அல்லது இரவு விருந்தினரை உட்கார வைக்க பந்திப் பாய்களாக அல்லது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காலை வெயிலில் எண்ணெய் பூசுவதற்கு தடுக்கு பாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இரத்தினம் 8 வயதில் பாய் நெய்தலைக் கற்றுக்கொண்டார். தனது வீட்டில் உள்ள தறியை சுட்டிக்காட்டி, “எங்கட பரம்பரைக் கதையை இந்த தறி சொல்லும். ஏனென்டா, இந்த தறிக்கு வயது 75க்கு குறையாது…” என்றார்.
அவர் தனது இளமையை நினைவுபடுத்தும் போது, ஒரு விவரிக்க முடியாத ஏக்கம் அவரை உயிர்ப்பிக்கிறது. “சம்பு புல்லுகள எங்கட சனம் கொண்டுவந்து தண்டவாளக் கரையில காயப்போடும். புதுப் புல்லின்ர மணம் ரெண்டு, மூன்று நாளைக்கு மணந்து கொண்டேயிருக்கும்.”
முன்பிருந்த வியாபாரம் இப்போது இல்லை என்கிறார் அவர்.
2010 வரை, இரத்தினத்துக்கு மூன்று பாய் நெய்யும் தறிகளும் ஆறு தொழிலாளர்களும் இருந்தனர். இப்போது, அவர் எப்போதாவது ஒரு தறியை மட்டுமே இயக்கி வருகிறார். 2014 இல், சரிவு தவிர்க்க முடியாததாக இருந்ததாக அவர் கூறுகிறார்.
தமிழ் சமூகத்தின் அனைத்து பாரம்பரிய தொழில்களும், அவர்களின் கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களும் படிப்படியாக மறைந்து வருவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் கூறுகிறார். இந்தப் பாய்களை இன்றும் பெரும்பாலான கோவில்களிலும் சில திருமண வீடுகளிலும் காண முடியும் என்கிறார். உலகமயமாக்கல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமாக, மலிவான விலையில், அழகான, தரமான நுகர்வுப் பொருட்களை எளிதில் அணுகக் கிடைப்பதே இந்த வீழ்ச்சிக்கான காரணம் என்கிறார் புஸ்பரட்ணம். “கையால் செய்யப்படும் உள்ளுர் உற்பத்திகளின் தரமும், வருமானமும் குறைவாக இருப்பதனால் நவீன உலகுடன் போட்டியிட முடியாத நிலையில் உள்ளன” என்று புஸ்பரட்ணம் கூறுகிறார்.
வடமாகாண கைத்தொழில் திணைக்களம் பாரம்பரிய கைத்தொழில்களை பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இதற்காக அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்வதாகக் கூறுகிறார்கள். “பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்பாய் உற்பத்தியை ஊக்குவித்தும், தொழிலாளர்களை் இத்தொழிலில் தொடர்ந்தும் இருப்பதற்குமான உதவிகளை வழங்கி வருகின்றோம்” என்கிறார் ராகவன். மூலப்பொருட்கள் பெறுவதற்கும், தையல் இயந்திரங்களை மானிய விலையில் வாங்குவதற்குக் கடன் வழங்குவதோடு, ஒப்பந்த அடிப்படையில் கொட்டகைகள், தறி கருவிகள் வாங்குதல் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்குகிறது. இருப்பினும், மாறிவரும் காலத்திற்கேற்ப தொழிலாளர்களும் மாற வேண்டிய நேரம் இது என்கிறார் ராகவன்.
பரம்பரைத் தொழில்கள் கடந்த காலத்தில் செழித்து வளர்ந்தன. ஆனால் இப்போது, கல்வியின் தரம் அதிகரித்து வருவதால், தந்தையின் அதே வேலையை மகன் செய்ய வேண்டிய தேவையில் இல்லை என்று அவர் கூறுகிறார்.
தறிக்கு பின்னால்
இரத்தினத்தின் இரண்டு மகன்களுக்கும் இந்தத் தொழிலில் விருப்பமில்லை, ஆனால் தந்தையின் மீதான அக்கறையால் மட்டுமே உதவுகிறார்கள். “எல்லாரும் படிப்பு, அரசாங்க வேலை, வெளிநாடு எண்டு இருக்கிறதால இத விரும்புறதில்ல,” என்கிறார் இரத்தினம். “என்ர பிள்ளையளும் பெருசா விரும்புறதில்ல. இடைக்கிடை உதவி செய்வாங்கள். அவங்களுக்கு பொறுமை இல்லை”.
வேலைக்கு ஒரே நேரத்தில் மூன்று வேலையாட்கள் தேவை. இரண்டு பேர் பாய் நெய்யும் போது இருபுறமும் புல்லை வைக்கவும், நெய்ய ஒருவரும் தேவை. ஒரு பாய் நெய்ய குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் மற்றும் ஒரு நாளைக்கு 15 முதல் 20 பாய்கள் வரை நெய்யலாம் என்கிறார் இரத்தினம்.
“2000 ஆம் ஆண்டுகளில ஒரு பாய் அடிக்க ஒராளுக்கு ரெண்டு [இலங்கை] ரூபாய் கொடுத்தம். இப்ப பாய் கணக்கு சம்பளத்துக்கு யாரும் வரமாட்டினம். நாட்கூலி 1500 -2000 வரை [5 முதல் 7 அமெரிக்க டாலர்கள்] கேட்பினம்,” என்று அவர் கூறுகிறார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில், குறுகிய இலை கொண்ட பூனைவால், நூல் மற்றும் நிறச்சாயம் ஆகியவற்றின் விலைகள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளன என்று இரத்தினம் கூறுகிறார். 2000 வரை ஒரு புற்பாய் 30 ரூபாய்க்கு (10 சத அமெரிக்க டாலர்) விற்கப்பட்டது. இப்போது, அவை ஒவ்வொன்றும் 600 முதல் 1,000 ரூபாய் (2 முதல் 3 அமெரிக்க டாலர்கள்) வரை விற்கப்படுகின்றன. இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடி பல வர்த்தகங்களுக்கு மத்தியில் பாய் உற்பத்தியையும் பாதித்துள்ளது. “இப்ப இதால வார ஆதாயம் காணாது,” என்கிறார் இரத்தினம்.
பொழுதுபோக்காளர்கள்
பரம்பரை பரம்பரையாக பாய் பின்னி வருபவர்கள், பாரம்பரிய தொழிலை தவிர்த்து வரும் அதே வேளை, பெண்கள் அதை வருமானம் ஈட்டும் பொழுதுபோக்காக செய்து வருகிறார்கள்.
யாழ்ப்பாண மாவட்டம் மீசாலையைச் சேர்ந்த 54 வயதான விஜயநிர்மலன் யோகேஸ்வரி தனது இரண்டு சகோதரிகளுடன் மூன்று வருடங்களாக வீட்டிலிருந்து பாய்களை உற்பத்தி செய்துள்ளார். விஜயநிர்மலன் சிறுவயதில் பாய் உற்பத்தியாளர்களின் வீடுகளுக்கு கூலித் தொழிலாளியாகச் சென்றதால், அந்தத் தொழிலில் அவளுக்குப் பரிச்சயம் இருந்தது. “வீட்டு வேலைகள முடிச்சிட்டு கிடைக்கிற நேரங்களில செய்யக்கூடிய மாதிரி இருக்கு,” என்று அவள் கூறுகிறாள்.
இரண்டு பிள்ளைகளின் தாயான விஜயநிர்மலன், தனது பிள்ளைகள் இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லை என்றும், அதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறுகிறாள்.
அவரது 21 வயது மகன் விஜயநிர்மலன் லக்ஷன் வெளிநாடு செல்ல விரும்புகிறார். “எனக்கு அம்மா செய்யிற வேலையில பொறுமை இல்ல. குறைஞ்ச வருமானம்தான் அதில வரும்.”
ஆனால் அது மற்றவர்களைத் தடுக்கவில்லை. யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த 36 வயதான பிரபாகரன் சுகந்திகா, COVID-19 தொற்றுநோய்களின் போது பொழுதுபோக்காக தனது கணவருடன் பாய்களைத் தயாரிக்கத் தொடங்கினார். ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்த இது இப்போது ஒரு வணிகமாக மாறியுள்ளது. சுகந்திகா கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு மற்றும் பல பகுதிகளுக்கு தனது பாய்களை விற்பனை செய்து மாதாந்தம் 20,000 முதல் 25,000 ரூபாய் (66 மற்றும் 83 டாலர்கள்) வரை சம்பாதிக்கிறார். அரசாங்கம் தேவையான பொருட்களை வழங்கி வருவதுடன் தன்னை ஊக்குவிக்க கண்காட்சிகளை நடத்துகிறது என்று அவர் கூறுகிறாள்.
“வருமானம் குறைவு எண்டாலும் உள்ளுர் உற்பத்தியை எங்கட நாட்டில ஊக்குவிக்கோணும் எண்ட ஆசை இப்ப வந்திட்டுது“ என்கின்றாள் சுகந்திகா.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.
மொழிபெயர்ப்பு குறிப்பு
இக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர், ஷிஹார் அனீஸ், ஜிபிஜே.