மயிலிட்டித்துறை வடக்கு, இலங்கை – அதிகாலை சூரிய ஒளி ஊடுறுவும் வேளையில் முத்துதுரை இன்பராசா, தண்ணீரிலிருந்து விலக்கி வரிசையாக உள்ள மீன்பிடி படகுகள் நிறைந்த கடற்கரையை சென்றடைகிறார்.
இன்பராசா, 43, கிழக்கு காங்கேசன்துறையிலுள்ள தனது இல்லத்திலிருந்து 7 கிலோமீற்றர் (4 மைல்கள்) பயணித்து வந்துள்ளார். விரைவில் அவருடன் மற்ற மீனவர்களும் இணைந்து தமது படகுகளை அவிழ்த்து தண்ணீரில் இழுப்பார்கள். இவ்வாறு வேலை செய்யும் வேளையில் யாரவது தம்மை அணுகுகின்றார்களா என சுற்றும்முற்றும் கண்ணோட்டம் விடுகின்றனர்.
அநேக நேரங்களில், மீனவர்கள் அவ்விடத்தை விட்டுச் செல்ல வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இலங்கையின் வடக்கு கடற்கரையின் இப்பகுதி பரம்பரை மயானக்காணியெனவும், அதன் தெய்வீக பண்புக்கு மாறாக மீனவர்கள் அதை பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், ஜனவரி 2017ல் இந்த இயற்கை இறங்கு துறையானது அப்பகுதி மீனவர்களுக்காக அரசாங்கத்தினால் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டது. இன்பராசா மற்றும் ஏனைய மீனவர்கள், உள்நாட்டுப் போரில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாக, இம் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டனர்.
மயிலிட்டித்துறை வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மீன் பிடிக்கும் திறன் கற்ப்பிக்கப்பட்டதுடன் படகுகளை வாங்குவதற்கான அரச மானியங்களும் கடன்களும் வழங்கப்பட்டன.
அத் தருணத்திலிருந்து உள்ளூர்வாசிகளுக்கும் மீனவர்களுக்குமான முரண்பாடுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. தற்போது, வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மத்தியஸ்தம் வகித்தாலும் இப் பிரச்சினைக்கான கலந்தாலோசனைகளில் முன்னேற்றமற்ற நிலை உள்ளது.
மீனவர்களை பயிற்றுவிக்க முன்னர் அப்பகுதியில் முன்னர் பழக்கத்தில் இருந்த மரபுகளை அறிந்து கொள்ள அரசாங்கம் முயற்சி செய்யாது விட்டு விட்டது என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இன்பராசாவும் ஏனைய மீனவர்களும் அரசாங்கம் பிறிதொரு இடத்தை வழங்கினால், தங்களது மீன்பிடித்துறையை இடம் மாற்றம் செய்யத் தயாராக உள்ளதாக கூறுகின்றனர். இதுவரை அது நடக்கவில்லை.
1983 முதல் 2009 வரை இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் கிட்டத்தட்ட 800,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப் போரானது 1990ல் யாழ்ப்பாணத்தில் உச்சகட்டத்தை அடைந்தது. மக்களை நலன்புரி மையங்களுக்கு சென்று தங்குவதற்கும் அல்லது தமது குடும்பத்துடன் வேறு இடத்தில் வாழுவதற்கும் வழி வகுத்தது.
அதே வருடத்தில், தற்போது மீன்பிடி இறங்குதுறை அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த மயிலிட்டிதுறை வடக்கை சேர்ந்த மக்கள், இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் முகமாக தமது கிராமங்களை விட்டு சென்றனர். அவர்கள் உறவினருடன் அல்லது வாடகை வீடுகளில் குடியிருந்தனர் என அப்பகுதியின் நீண்டகால குடியிருப்பாளரான, 70 வயது நிரம்பிய கனகலிங்கம் குணபாலசிங்கம் கூறுகிறார்.
மோதல்கள் நிறைவடைந்த பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்காக அரசாங்கத்தினால் பாரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகள், நிரந்தர வசிப்பிடங்களை மக்களுக்கு கொடுக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்டன.
2015ல், தற்போது மயிலிட்டித்துறை வடக்கு அமைந்துள்ள இடத்தில், தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட 1,100 ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டன. தனிப்பட்ட காணி உரிமைகளை கொண்ட குடியிருப்பாளர்கள் தமது பாரம்பரிய வீடுகளில் மீள்குடியேறினர். 2019ல், மேலும் 53 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
குணபாலசிங்கம் தானும் மற்றும் ஏனைய குடும்பங்களும் மயிலிட்டித்துறை வடக்கிற்கு 2018ல் திரும்பி வந்ததாக கூறுகிறார்.
மொத்தமாக, 2,460 மக்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவில் 2015 முதல் 2019 இடைப்பட்ட காலப்பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டனர்.
இன்பராசாவும் மற்ற மீனவர்களும் மற்றும் அவர்களது குடும்பங்களும் தனிப்பட்ட காணிகளை யுத்தத்திற்கு முன்னர் கொண்டிருந்தவர்களல்;;ல் பலர் இடம் பெயரும் வேளையில் சிறுவர்களாக இருந்தார்கள். அவர்கள் யாவரும் யாழ். மாவட்டத்தின் குடியிருப்பாளர்களாக இருந்தார்கள். மீள்குடியேற்றத்திற்கான நேரம் வந்த போது அவர்கள் இப்பகுதிக்கு திரும்பினார்கள்.
காங்கேசதுறையின் கிராமப்புற மீன்வள அமைப்பில் தற்போது காங்கேசன்துறை, ஊறணி மற்றும் தையிட்டியை சார்ந்த மயிலிட்டித்துறை வடக்கின் 188 மீனவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
‘இப்போதுதான் இப்படி இரண்டு வருடங்களாக தான் நாங்கள் சமாதானமா வாழுறோம்’ என மூன்று தசாப்தங்களாக நீடித்த போரினால் தாம் நலன்புரி மையங்களில் வாழ்ந்ததை நினைவு கூர்ந்து இன்பராசா கூறுகிறார். ‘ஆனால், இப்போது எங்கள மீன் பிடிக்க தடை செய்யறது எங்கள வேதனை படுத்துகிறது.’
தனது சகல சேமிப்புகளையும் முதலீடு செய்து வள்ளம், வலை மற்றும் மோட்டார் படகு வாங்குவதற்காக இலங்கை ரூபாய் 500,000 (சுமார் 2,830அமேரிக்க டாலர்கள்) கடன் வாங்கியதாக கூறுகிறார். ஏனைய மீனவர்களும் அதே நிலைமையில் உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், அப் பிரதேசத்தின் காணிச் சொந்தக்காரர்களின் நடைமுறை தொடர்பாளாராக உள்ள குணபாலசிங்கம், மக்களுக்கு ஆவளை இந்து மயானக்காணியை பாதுகாக்க உரிமையுள்ளது என்கிறார். 1931ம் ஆண்டு முதல் மயானக் காணியாக இருந்துள்ளதுடன் அப் பிரதேசத்தின மிகப் பழைய இந்து மாயனமாகவும் கருதப்படுகின்றது.
யுத்தம் நிறைவுற்ற பின்னர் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்புகின்றனர். அடக்க நடைமுறைகள் மயிலிட்டித்துறை வடக்கின் மக்களின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது.
‘எங்களுக்கு எங்கட மயானம் தேவைதானே,’ என குணபாலசிங்கம் கூறுகிறார்.
இச் சர்ச்சையில் வேறு முரண்பாடுகளும் உள்ளன. யுத்தத்திற்கு முன்னர் தனது அயலவர்களைப் போன்று தானும் ஒரு பயன் நிறைவான மீனவராக இருந்ததாக குணபாலசிங்கம் கூறுகிறார். புதிய மீனவர்கள் மீனை துப்புரவு செய்து கொண்டும் மற்ற சில்லறை வேலைகளை செய்தும் நாட்கூலிகளாக இருந்தார்கள்,
‘ஆனால், இப்ப புதுசா தொழில் பழகிட்டு எங்களுக்கு துறைமுகம் தேவையென்கிறார்கள்,’ என குணபாலசிங்கம் கூறுகிறார்.
உள்ளூர் அரசாங்க நிறுவனத்தின் தலைவரும் மற்றும் இச் சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதற்காக முக்கிய பங்கு வகிக்கும் சோமசுந்தரம் சுகிர்தன், மீள்குடியேற்றமானது சரியாக திட்டமிடப்படவில்லை என ஒப்புக் கொள்கிறார்.
‘இப்போது எப்படி இந்தப் பிரதேசம் படகுகள் இறங்குதுறையாக அடையாளங் காணப்படலாம்?’ என வினவுகின்றார்.
மயானக்காணியைச் சுற்றி மதில் கட்டி தருவதாகவும் அக்காணியை மீனவர்களும் பயன்படுத்தலாம் என தான் பரிந்துரைத்ததாகவும் ஆனால் மீனவர்கள் அதற்கு இணங்கவில்லை எனவும் சுகிர்தன் கூறுகிறார்.
இரு பக்கத்தினரும் மேற் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என சுகிர்தன் கூறுகிறார்.
இந்து சமயத்தின் சாதி அமைப்பின் எதிர்பார்ப்புகளின் காரணமாக, இச் சர்ச்சையானது சிக்கலாக உள்ளதாக இன்பராசா தானும் மற்ற மீனவர்களும் இக் கிராமத்தின் காணிச் சொந்தக்காரர்களை விட சாதியில் குறைவானவர்களென்று கூறுகிறார். வரலாற்று ரீதியாக புதிய மீனவர்களின் கடந்த தொழில் நடைமுறையை குறித்து குணபாலசிங்கம் கூறுவது உண்மை. இன்பராசா, அவரது தகப்பன் மற்றும் பாட்டன் சாதி உயர்ந்தவர்களின் வீடுகளில், வயல்களில் மற்றும் மீன்பிடி படகுகளில் வேலை செய்தவரகளாவர்.
அரசாங்கத்தின் நலன்புரி மையங்களில் வாழ்ந்தமை இன்பராசவுக்கும் மற்றவர்களுக்கும் புதிய திறன்களை கற்றுக் கொள்ள வாய்ப்புகளை அளித்துள்ளன. எனினும், மயிலிட்டித்துறை வடக்கின் மக்கள், சாதியில் குறைந்தவர்கள் தமது மயானக்காணியின் அருகில் வேலை செய்வதை விரும்பவில்லை.
இன்னுமொரு மீனவரான சந்திரமோகன் பார்த்தீபன், மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்காக, மீனவர்கள் பல இலட்சங்களை கூட்டாக முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றார்.
‘ஜீவாம்சமா அல்லத அற்றுப்போறதா எது முக்கியம்?’ ஏன கோபத்துடன் வினவுகின்றார்.
தானும் மற்ற மீனவர்களும் ஒரு துண்டு கடற்கரையைவிட மேலான காரியத்திற்காக போராடுவதாக இன்பராசா கூறுகிறார். இது எமது வாழ்வாதாரம், எமது குடும்பங்களின் எதிர்காலம் இதில் தங்கியுள்ளது.
‘நாங்கள் படிக்கவில்லதான், ஆனால் எமது பிள்ளைகளையாவது படிக்கவைக்க வேண்டும். இதுவே எனது கனவாக இருக்கின்றது.’
இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே.